வடு
சுந்தரி ஆசா, திருச்சி
சிறுகதை
வாழ்க்கைக்காக வழக்கத்தை உடைக்க முடியாதா?
இது என் வீடு, என் சொந்த வீடு என்பதில் எனக்கு அளவில்லாத பெருமை. காம்பவுண்டு முதல் சர்வண்ட் குவார்ட்டர்ஸ் வரை பார்த்து, பார்த்து கட்டிய வீடு. காம்பவுண்டை ஒட்டி அழகான கிறிஸ்துமஸ் டிரீ இரண்டை உயரமாக வளர்த்து அதில், கிறிஸ்துமஸ் அன்று சீரியல் லைட் போட்டு அலங்கரிப்பதில் அலாதி பிரியம். நீங்கள் கிறிஸ்ட்டீனா என்று கேட்கும்போது, நான் சொல்லும் ஒரே பதில் நான் மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டவள். நான் நாத்திகன் இல்லை, மதவெறியனும் இல்லை. நம்மை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை நம்புபவள். அதை தெய்வம் என்று ஏற்றுக்கொண்டவள்.
முன்பக்க பூச்செடிகளும், கொல்லையில் காய்கறி தோட்டமும் அமைத்து என் தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன். என்னோடு இருக்கும் கமலம்மா சமையிலிருந்து, தோட்ட பராமரிப்பு வரை எனக்கு உறுதுணை அவர்தான். ஒருகால் ஊனம், அவளை முடங்கிப்போடவில்லை. என்னோடு சேர்ந்து அவளும் வீராங்கனையாகி விட்டாள்.
அவளுக்கு ஊன்றுகோல் நான், எனக்கு துணை அவள், பத்து வருடமாக என்னோடு அய்க்கியமாகிவிட்டவள். உறவென்று சொல்லிக் கொள்ள பெரிதாக யாரும் இல்லை என்றாலும் பெற்றவர்களை இழந்த பெரும் பாக்கியசாலி.
மன நல மருத்துவர் சுந்தரராஜன் கிளினிக்குக்கு அருகில் எனது வீடு. எம்.ஏ., எம்.பில்., சைகாலஜி முடிந்தவுடன் ஒரு தனியார் கல்லூரியில் மனநல பேராசிரியராக பணிபுரியும் என்னிடம், டாக்டர் சில நோயாளிகளை கவுன்சிலிங்க்கு அனுப்புவது வழக்கம். பக்கத்திலேயே நான் இருப்பது ஒரு சவுகரியமாக இருக்கலாம். அல்லது எனது கவுன்சிலிங்கில் நம்பிக்கை இருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் இந்த தொழில் மனமகிழ்ச்சியை தருகிறது என்பது உண்மை.
மாலை நேரம் ரம்மியமானது. வீட்டின் முன் நான் வளர்த்து வரும் ரோஜாக்களின் அழகே தனி. படை வீரர்களைப் போல் வரிசைக் கட்டி சிமெண்ட் தொட்டிகளில் மலர்ந்திருக்கும் ரோஜாக்களை ரசித்து பார்த்துக் கொண்டே மல்லிகை கொடியிலிருந்து பூக்களை பறித்துக் கொண்டிருந்தேன். நானே பறித்து நானே தொடுப்பதுதான் எனக்கு பிடிக்கும்.
‘அம்மா, இரண்டு பெண்கள் உங்களை தேடி வந்து இருக்காங்க’. அவுங்க, பேண்ட்டாத் தான் இருக்கனும். ‘வாங்கம்மா’, என்று கமலம்மா கூப்பிட, திரும்பி பார்த்தேன். அழகான சிறுவயது பெண். அவளுடன் அவளது தாயாக இருக்க வேண்டும். ஒரு நடுத்தர வயது பெண்மணி. முகம் முழுவதும் சோகம் அப்பிக் கொண்டிருந்தது.
‘வாங்கம்மா, வாங்க’ என்றவுடன் நடுத்தர வயதுப்பெண்மணி, ‘அம்மா எங்களை டாக்டர் சுந்தர்ராஜ் அனுப்பினார்’. ரேவதி மேடத்தை பார்க்கனும்.
‘நான்தம்மா ரேவதி, வாங்க’.
‘கமலா, இவுங்கள கவுன்சிலிங் ரூம்ல உட்கார வை. நான் பூவை சாமிகிட்ட வெச்சிட்டு வந்திடுறேன்’.
‘சரிம்மா, வாங்கம்மா, மேடம் வந்திருவாங்க ரூம்ல வந்து உட்காருங்க’ என்று சொல்லி கமலா அவர்களை சோபாவில் உட்கார வைத்தாள்.
சிறுவயது பெண்ணை அழைத்து வந்திருக்கிறார்கள் என்றால் ஒன்று காதல் விவகாரமான இருக்கும். அல்லது திருமண பந்தத்தில் சிக்கலாக இருக்கும் என்ற எண்ணத்துடன் கவுன்சிலிங் அறைக்குள் நுழைந்தேன். ரோஜா கொத்தை கையில் ஏந்திக் கொண்டு, சிரிக்கும் அழகான குழந்தையின் படத்தை கண்கொட்டாமல் அந்த இளம்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘குழந்தைகள் உனக்கு ரொம்ப பிடிக்குமா?’ என்று அந்த பெண்ணை கேட்டவுடன் ஓ வென்று அழுதுக் கொண்டு எழுந்து ஓட ஆரம்பித்தாள். உடனே அவளது தாயார் பிடித்து இழுத்து வந்து உட்கார வைத்தாள். இதன் காரணம் என்னவாக இருக்கும். அவள் அழுது முடிக்கும் வரை பேசாமல் இருந்தேன். அவளது மனப்பாரம் இறங்கட்டும். வாய்விட்டு சிரிக்கும் போது மன அழுத்தம் குறைகிறது என்றால் வாய்விட்டு அழுது முடிக்கும்போது மனப்பாரம் குறையும் என்பதுதான் கணக்கு. தலை நிறைய பூச்சூட்டி பெரிய குங்குமம் பொட்டும், திருநீறும் பூசி, பட்டுப் புடவையுடன் நகைகளையும் அணிந்து கொண்டு யாரும் டாக்டர் வீட்டுக்கு வரமாட்டார்கள். ஆனால் அலங்காரத்துடன் வித்தியாசமாக வந்திருக்கும் அந்த பெண்ணின் தோற்றம் என்னை சிந்திக்க வைத்தது. இவளது கதைதான் என்ன? என்பது போல் அவரது தாயரை பார்த்தேன். கண்ணைத் துடைத்துக் கொண்டே அவர் ஆரம்பித்தார். ‘மேடம், இவ எங்களோட ஒரே பெண். இஞ்சினியரான பையனுக்கு கல்யாணம் செஞ்சிக் கொடுத்தோம். நாலு வருத்துக்கு பிறகு, இப்பத்தான் இவ கர்ப்பமான அந்த சந்தோசத்தை கொண்டாட மாப்பிள்ளையும் இவளும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போயிட்டு ஹோட்டலுக்கு போயிருக்காங்க. போற வழியில பாலக்கரை மேம்பாலம் கிட்ட வரு மாப்பிள்ளை பைக்ல வரும்போது பஸ் மோதி அந்த இடத்திலேயே மாப்பிள்ளை இறந்திட்டாரு. இவ மயக்கமாயிட்டதால, ஆஸ்பத்திரியில சேர்த்தோம். காரியங்கள் எல்லாம் முடிஞ்சோன இவகிட்ட மெதுவா சொன்னோம். இவ அத நம்ப மாட்டேங்கிறா’. ‘நீங்க அவசர பட்டிருக்கக் கூடாது’. ‘எப்படிம்மா முடியும், எங்க குடும்பம் பராம்பரிய பழக்கமுள்ள குடும்பம். மாப்பிள்ளையோட இறப்புக்கு பிறகு, செய்ய வேண்டிய சடங்கை எல்லாம் செய்யில்லனா குடும்பத்துக்கு கேடாச்சேம்மா’.
‘அம்மா நீங்க இந்த காலத்துல சடங்கு செய்யிலன்னா குடும்பத்துக்கு கஷ்டம் வரும்ன்னு சொல்றது சரியில்ல. சின்ன பொண்ணு சடங்கு சம்பிரதாயங்கல ஒதுக்கி வைக்கலாமே. நிறைய சடங்குகளை ஒதுக்கிட்டோம். முக்கியமாக செய்ய வேண்டியதை செஞ்சுதானே ஆகனும்’. ‘என்ன முக்கியமானது?’ ‘மாங்கலியத்தை கழட்டனுமே, இன்னமும் போட்டுக்க முடியாதே’. அந்த இளம்பெண்ணை திரும்பி பார்த்தேன். அவள் மாங்கலியத்தை டாலர் செயினைப் போடுவது போல் போட்டிருந்தாள். மிரட்சியுடன் அதை இருக்கி பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர், நான் அதை எடுத்து விடுவேனோ என்ற பயத்தில், ‘அம்மா, இதை எடுக்காதீங்க, மாமா இன்னும் உயிரோடுதான் இருக்காரு. வெளியூர் போயிருக்காரு வந்திடுவாரு, என்னை ஏன் இங்க கூட்டிக்கிட்டு வந்தீங்க? வீட்டில் மாமா வந்தார்ன என்னை தேடுவாரு, வாங்க போகலாம்’. என்று தாயாரை பிடித்து இழுத்து கொண்டு ஓட முயன்றாள். ‘பெண்ணோட பேரென்னமா?’ ரேவதி மேடம். ‘ரேவதி நீ பயப்படாதே நீ அதை கழட்ட வேண்டாம். மாமா நல்லாதான் இருக்காரு’. ‘நீங்க அம்மாகிட்ட எடுத்துச் சொல்லுங்க. அவுங்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க’. ‘கவலைப்படாதே ரேவதி, நான் உங்க அம்மாவுக்கு புரிய வைக்கிறேன்’.
‘என்ன மேடம் நீங்க அவளுக்கு சாதகமா பேசுறீங்க. அவ இப்படித்தான் மாமா உயிரோட இருக்காரு. நான் கழட்டமாட்டேன். மாமா ஊருக்கு போயிருக்காங்க. அவங்களுக்கு நான் பூ, பொட்டு வைச்சு நகையயல்லாம் போட்டிருந்தாத்தான் பிடிக்கும். அவுங்க வந்தார்ன என்னை கூட்டிக்கிட்டு வெளியே போவங்க. எனக்கு சின்ன குட்டிப்பாப்பா பொறக்கப் போவுது, நாங்க கொண்டானும்னு சொல்லிக்கிட்டே இருக்கா. எப்பவும் ரூம் கதவ திறக்கிறது இல்லை. இப்பவும் அவுங்க அப்பாவும் மாமனாரும்தான் டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு வந்தாங்க. அவுங்க இரண்டு பேரும் காருல உட்கார்ந்து இருக்காங்க. அவுங்க எதையும் இவக்கிட்ட சொல்லாததால அமைதியா இருக்கா’ ‘கொஞ்ச நாளைக்கு எதையும் கட்டாயப் படுத்தாதீங்க. அவுங்க இயல்பு நிலைக்கு வரலை. யதார்த்தத்தை அவ புரிஞ்சிக்க கொஞ்சம் நாளாகும். அது வரைக்கும் பொறுமையா இருங்க. கொஞ்ச நாளைக்கு இங்க கூட்டிக்கிட்டு வாங்க, அவுங்கள சரிபடுத்திடலாம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ரேவதி குழந்தை போட்டோவுக்கு எதிரில் நின்று கொண்டு மெளவுனமாக பேசிக் கொண்டிருந்தாள். ‘மேடம் இன்னொரு வியம், எங்க குடும்பத்துல எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து இருக்கிறோம்’. ‘என்ன முடிவு?’ ‘ரேவதி இப்ப இரண்டு மாசமா இருக்க இப்ப அவளுக்கு வயது 25 ஆகுது. குழந்தை பிறந்தால் அவளுடைய எதிர்காலம் பாழாயிடும். அவ படிச்சவ. ஒரு வேலைக்கு அனுப்பலாம்ன்னு இருக்கோம். எதிர்காலத்தில் அவ வாழ்க்கையில ஒரு முடிவு எடுக்கும்போது குழந்தை ஒரு தடையாய் இருக்கும். அதனால அதை அழிக்க முடிவு செஞ்சிட்டோம். அவங்க மாமனார், மாமியாரும் ஏத்துக்கிட்டாங்க. நீங்கதான் அவளுக்கு புரிய வைச்சி அவளோட சம்மதத்தோட செய்ய ஆசைப்படுகிறோம்.நீங்க தான் சீக்கிரம் அவளுக்கு புரிய வைக்கனும்’. ‘குழந்தை எப்படி தடையா இருக்கும்மா?’
‘உங்களுக்கு தெரியாதது இல்ல, நடைமுறையில உள்ள சிக்கல்களை நீங்களும் தெரிஞ்சிரிப்பீங்க, நாங்களும் பார்த்து உணர்ந்திருக்கிறோம். பெண்ணோட குழந்தையையும் ஏத்துகிற தெய்வ மனசு எல்லாருக்கும் இல்லை’.
அந்த அம்மா சொல்ல சொல்ல என்னோட கடந்த காலம்தான் என் மனக்கண் முன்னாடி நின்னுச்சி. இந்த அம்மா சொன்ன வார்த்தைகளைதான் என்னோட அம்மாவும், அப்பாவும், உறவுகளும் எனக்குச் சொன்னாங்க. என் கணவர் ரவியை இழந்த நேரத்தில் எனக்கு எதுவும் புரியல. வாழ்க்கையே அஸ்தமிச்சிடுச் சின்னுதான் நினைச்சேன். என்னுடைய எதிர்காலத்துக் காக, ‘நல்ல வாழ்க்கை அமையனும், யதார்த்தத்தை நான் புரிஞ்சிக்கனும்ன்னு, என்னிடம் தினிக்கப்பட்ட முடிவுகள் என் விருப்பத்தோடு நடப்பதாக அரங்கேறியது. ரவியின் வாரிசை பறிக்கொடுத்தேன். எல்லாம் சுயநலம். எல்லோரும் சொன்னார்கள் என்ற கருத்து எத்தனை பொய், எவ்வளவு சுயநலமானது என்று புரியும்போது நான் எடுத்த முடிவுதான் இந்த உறவுகள் இல்லாத வாழ்க்கை. ரவியின் இறப்பிற்கு பின் அவரது அலுவலகத்தில் இருந்து கிடைத்த பணம், பென்ன் ஆகியவற்றை வைத்துக் கொண்டு மேலும் படித்தேன். எனது பெற்றோர் உறவுகளை பிரிந்து ஹாஸ்டலில் சேர்ந்ததற்காக அவர்கள் நடத்திய கண்ணீர் போராட்டத்தை வென்று எனது வாழ்க்கை படியில் ஏறி மேலே நின்று ஒரு பேராசிரியராக அவர்களை திரும்பிப் பார்க்கிறேன்.
‘என்ன மேடம், நாங்க எடுத்த முடிவு சரிதானே?’ சீக்கிரம் நாங்கள் சொன்னதை அவகிட்ட சொல்லி புரிய வெச்சி சீக்கிரமே ஒரு முடிவ எடுக்கிற மாதிரி செய்யுங்கம்மா. இவளோட வாழ்க்கை வீணாப் போறத எங்களால் பார்க்க முடியிலம்மா. ‘நான் இன்னும் கவுன்சிலிங்கை ஆரம்பிக்கவே இல்லை அம்மா. ரேவதிகிட்ட பேசி புரிய வைக்கிறேன்’. நாளைக்கு இதே நேரத்துக்கு வாங்கம்மா. ‘சரிம்மா’. ரேவதி வா. நம்ப வீட்டுக்கு போகலாம்.
‘மாமா உன்னத் தேடுவாரு’ என்று ரேவதியின் கையப் பிடித்து அழைத்துக் கொண்டு போனார். இந்த சமுதாயம் மாறவே மாறாதா? மனைவியை இழந்தவர்களுக்கு குழந்தைகள் இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள பெண்கள் முன்வருகிறார்கள். ஆனால் குழந்தையோடு ஒரு கைம்பெண்ணை ஏற்றுக் கொள்ள எந்த ஆண்மகனும் ஏன் முன் வருவதில்லை. வந்தாலும் விரைவிலேயே சோகத்தில்தானே முடிவடைகிறது. இது ஆணாதிக்க சமுதாயம் பெண்களுக்கென்றே விருப்பு, வெறுப்பு அமுக்கப்படுகிறது. என் குடும்பம், என்னில் எடுத்த முடிவு, என் மனதில் ஏற்படுத்திய புண். நடைமுறையில் ஆறிவிட்டாலும் அது மாறாத வடுவாகத்தானே என் மனதில் பதிந்து விட்டது.
சுயம் இழந்த பெண், இந்தப்பெண் ரேவதியின் வாழ்க்கையில் நான் என்ன முடிவெடுப்பது? எல்லாம் தெரிந்தே, புரிந்தே என் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக எடுத்த முடிவு ரேவதியிடம் சாத்தியமா. அவளிடமும் இந்த மாறாத வடு உருவாகத்தானே செய்யும். இதுதான் எதார்த்தமா? இதுதான் எதிர்காலத்தை நோக்கிய நகர்வா?.
No comments:
Post a Comment