தவக்காலம் 4 ஆம் வாரம்
11 - 3- 2018
2 குறி 36: 14-16.19-23; எபே 2: 4-10; யோவா 3: 14-21
நம்பிக்கை வாழ்வைத் தரும், வெற்றியைத் தரும். ஆனால் நம்பிக்கை என்பது என்ன? என்பது பற்றி இன்றைய வாசகங்கள் விளக்குகின்றன. இன்றைய நற்செய்தி பகுதி, நிக்கோதேமுஸ் என்ற யூதருடன் இயேசு உரையாடிய பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. தன் அன்பை வெளிப்படுத்த தன் மகனையே இறைவன் நம்பிக்கையாளருக்கு அளிக்கிறார். இதனால் நம்பிக்கையாளர்கள் அழிவதில்லை. ஆபிரகாம் தன் மகனை இறைவனுக்குப் பலியிட முன் வருகிறார் (தொ.நூ 22: 1-13) ஆனால் இறைமகன் தன் மகனான இயேசுவின் தியாகத்தினால் தன்மீது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு அன்புக் காட்டுகிறார்.
இறைவனின் தியாக அன்பை புரிந்து ஏற்றுக் கொள்ளாதவர்கள் தீர்ப்பு பெற்று விட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அன்பிலும் தியாகத்திலும் நம்பிக்கை வைக்காதோர் அழிவை சந்திக்கின்றனர். முதல் வாசகத்திலும் இஸ்ரயேல் மக்கள் உண்மையற்ற வர்களாய், இறைவனின் வார்த்தைகளைப் புறக்கணித்து வாழ்ந்தார்கள் என்றும், இதனால் ஆண்டவரின் சினம் அவர்கள் மேல் வீழ்ந்ததென்றும், அதற்கு தண்டணையாக பாபிலோனுக்கு அடிமைகளாக எடுத்துச் செல்லப்பட்டார்கள் என்றும் விவரிக்கப் பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாரசீக அரசன் சைரசீன் வழியாக அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். எனவே அவர்களின் நம்பிக்கையின்மைக்கு தண்டனையும், இறைவன் இரக்கத்தினால் அவர்களுக்கு விடுதலையும் கிடைக்கிறது.
இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் கடவுளின் கருணையினால் மக்கள் வாழ்வு பெறுகின்றனர் என்கிறார். ‘நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே’ (எபே 2:8) என்கிறார். அதே நேரத்தில் இறைவனின் அருளையும் நம்பிக்கையையும் இணைத்துக் கூறுகிறார் பவுல் அடிகளார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப் பட்டுள்ளீர்கள் (எபே 2:8 ).
இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் ஓர் அருமையான வாக்கியம் வருகிறது, ‘நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப் பட்டிருக்கிறோம்’ ( எபே 2: 10)
இத்தவக்காலத்தில் சோதனைகள் மீது வெற்றி கொண்டு புது மனிதர்களாக மாற்றம் பெற்று, இப்போது நமது நம்பிக்கையில் உறுதி பெற வேண்டும். தியாகம் செய்யும் அன்பினால் நம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம்.
தியாகம் செய்யும் மனது மனிதருக்கு எளிதாக வருவதில்லை. மற்றவர்கள் நமக்காக தியாகம் செய்வதை விரும்புகிறார்கள். ஒருவர் சற்று வசதியுடையவர். அடிக்கடி சுற்றுலா செல்வார். வெளிநாடுகளுக்குக் கூட பெரும் செலவழித்து சுற்றுலா செல்வார். அவர்களின் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர், பிள்ளைகள் அமர பெஞ்ச் செய்து தரும்படி அவரிடம் கேட்டார். எங்களுக்கு வசதியில்லை என்று பதிலளித்தார். அந்த சற்று வசதியுள்ளவர். பிள்ளைகளின் படிப்புக்காக சற்று தியாகம் செய்ய முன் வரவில்லை அவர்.
தண்டாமல் ஈவது தாளாண்மை தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை அடுத்தடுத்துப்
பின்சென்றால் ஈவது கால்கூலி பின்சென்றும்
ஈயான் எச்சம் போல் அறு. - ஒளவையார்.
கேட்கமால் கொடுப்பது பெருமை, கேட்டுக் கொடுப்பது குறைந்த பெருமை. பலமுறைக் கேட்டு கொடுப்பது தர்மத்தின் கால்பகுதி, கேட்டும் கொடுக்காதவர், கழிவினை போன்றவர் என்று அவர் உறவை விட்டு விடுக என்கிறார் ஒளவையார். நம்பிக்கையால் தியாகம் நம் வாழ்வில் துளிர்விடும்
No comments:
Post a Comment