மனமாற்றம் - சிறுகதை
திருமதி. சந்தோம் லியோ, விரகாலூர்
வினோத் மற்றும் பிரவீன் இருவரும் அவரது பெற்றோருக்கு செல்லப்பிள்ளைகள். எல்லா பெற்றோரையும் போலவே தனது பிள்ளைகள் இருவருக்கும் தேவையான சொத்து, வீடு, நல்ல படிப்பு அனைத்தையும் நிறையவே கொடுத்தார்கள். வினோத் மற்றும் பிரவீன் தினமும் கோவிலுக்கு சென்று வருபவர்கள். கடவுளுக்கும், பெற்றோருக்கும் கீழ்ப்படிந்து வாழ்பவர்கள்.
அப்படி ஒரு சுகமான வாழ்க்கை வாழ்ந்த அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆசை ஆசையாய் பெற்றோர்கள் நடத்தி வைத்தனர். காலம் செல்ல செல்ல கூட்டுக்குடும்பத்துக்குள் விரிசல் எழ ஆரம்பித்தன. பாகம் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட பாகத்தில் பிரச்சனை அதிகமாயின. திருமணத்திற்கு முன்பு அண்ணன் தம்பியாக இருந்தவர்கள் பிறகு விரோதிகளைப் போல் ஆனார்கள். பெற்றோர் மீது கொண்ட மதிப்பும் மரியாதையும் சொத்தின் மீது கொண்ட ஆசையினால் எல்லாம் மாயமாகிவிட்டன.அவர்களுடையப் பெற்றோர் தனித்து விடப்படுவார்கள் என்றுத் தெரிந்துதானோ என்னவோ அவர்களுக்கு என்றே முதியோர் இல்லத்தின் வாசல் திறக்கப்பட்டபடியே இருந்தன. மனம் கசிந்து, அங்கு சென்று வாழ்ந்தனர். பிள்ளைகள் பெற்று கஷ்டப்பட்டு வளர்த்து, அவர்கள் ஒரு வாழ்வை வாழத் தொடங்கும் பொழுது அந்த வாழ்வின் அர்த்தத்தையும், உண்மையினையும் அறியாமல் பிள்ளைகள் வீணாவதை எண்ணி பெற்றோர் மனம் குமுறி இறைவனிடம் பிராத்தனை செய்கின்றனர். வயது முதிர்ந்தவர்கள் என்பதாலும், பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தினாலும் பிரிவைத் தாங்க முடியாமல் முதியோர் இல்லத்தில் அவர்கள் இறந்து விடுகின்றனர். செய்தி அறிந்த வினோத்தும் பிரவீனும் வருத்தப்பட்டார்கள். ஆனாலும் சொத்தின் மீது கொண்ட ஆசையினால் அவர்கள் மனம் மாறவில்லை. வினோத்தும் பிரவீனும் மனதில் வஞ்சனை உள்ளவர்கள் என்றாலும் தினமும் விவிலியம் வாசித்து ஜெபமாலை சொல்லும் வழக்கம் உண்டு.
ஒருநாள் வினோத் கோவிலுக்கு செல்கிறான். மாலை திருப்பலி. வழியில் இருந்த பிச்சைக்காரர்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.முதியோர் இல்லத்தில் இருப்பதைவிட இப்படி பிச்சையயடுப்பது சந்தோமாக இருக்கிறது. எப்படியும் நாலுபேர் உதவி செய்கின்றனர். நாலுபேர் அன்பான ஆறுதலான வார்த்தைகள் சொல்கிறார்கள் என்றனர். நம்மை வளர்த்த பெற்றோர்கள் பிச்சைக்காரரை விட கேவலமாக தானே இருந்திருப்பர் என்று வினோத் நெஞ்சில் குத்து விடுகிறது.
அன்று இரவு வினோத்தின் மனைவி மேரி, விவிலியத்தை எடுத்து வாசிக்கிறாள். அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம் “நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே! உமக்கு கட்டளைகள் தெரியும் அல்லவா? விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச் சான்று சொல்லாதே, உன் தாய் தந்தையை மதித்து நட” (லூக் 18: 18 - 20). இப்படி வசனங்களை வாசிக்கும்போது வினோத்தின் இருதயம் சுக்கு நூறானது என் கடவுளின் கட்டளையை மீறி, என் தாய் தந்தையரை தனிமையில் விட்டு, அவர்கள் இறப்பிற்கும் நான் காரணமாகிவிட்டேன், இந்த சொத்திற்காகவும், பணத்திற்காகவும் என் நல்ல குணங்களையும் என் அன்பு சகோதரனின் அன்பினையும் நான் இழந்து நிற்கின்றேனே! என்று மனம் வருந்தி அழுகின்றான். அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. உங்களுடைய சகோதரர் சகோதரரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துக்கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள் ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, “ நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்” (லூக் 17: 3-4) . என்ற வசனத்தின் மீது கொண்ட விசுவாசத்தினால் தனது தம்பி பிரவீனிடம் சென்று, தம்பி, சொத்துக்களை உன் விருப்பம் போல் எடுத்துக்கொள். நீ கொடுப்பதை நான் சந்தோமாக பெற்றுக்கொள்கின்றேன். இயேசு சொன்னதுபோல் நான் மனம் மாறி வந்துள்ளேன். என்னை மன்னித்து விடு பிரவீன் என்று முழுமனதோடு மன்னிப்பு கேட்கிறான். வசனம் புரிந்தவன் என்பதாலும் கடவுளை அறிந்தவன் என்பதாலும் இருவரும் ஒருவரை ஒருவர் மன்னித்து சமாதானமாய் சென்று தனது தாய் தந்தையின் இறப்பிற்கு நாமே காரணமாகிவிட்டோமே! என்று மனம் வருந்தி அழுகின்றனர்.
வருந்திய மனத்துடன் இந்த கல்லறைத் திருநாளில், ஒரு முடிவு செய்கின்றனர். நம் தாய் தந்தையர் ஆசைப்பட்ட படி அவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும், விட்டுக்கொடுத்து வாழ்தலையும், சமாதானத்தையும், கடவுளுக்கு கீழ்ப்படிந்து வாழ்பவர்களாகவும் இனி நம் வாழ்வை மட்டுமல்ல நம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவ்வழியே வளர்ப்போம். அவர்களுக்காக ஜெபிப்போம் என்று சந்தோமாய் வாழ்வை தொடர்கின்றனர்.
No comments:
Post a Comment