விவிலிய விளக்கம்:
அன்பின் ஆழம்
- அருள்பணி . ச. இ. அருள்சாமி
மனித பண்பின் முதலிடம் அன்பு. மனித வாழ்வின் மாண்பு பிறக்குமிடமும் அன்புதான். “அன்பு இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை” என்கிறார் பவுல் அடிகளார் ( 1 கொரி 13:2). இந்த அடிப்படை பண்பைப் பற்றி புதிய ஏற்பாட்டு நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை இங்கு தொடர்ந்து காணலாம்.
அன்பு என்பதற்கு புதிய ஏற்பாட்டு நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, “அகப்பாவோ” (Agapao) என்ற வார்த்தை. இவ்வார்த்தையின் தொடர் புதிய ஏற்பாட்டு நூல்களில் 360 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. “அகாப்பாவோ” என்ற வினைச்சொல் 143 முறையும் “அகாப்பே” என்ற பெயர் சொல் 116 முறையும் “அகப்பேதோஸ்” என்ற பெயர்சொல் 61 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புதிய ஏற்பாட்டு நூல்களில், யோவான் புத்தகங்களில்தான் (நற்செய்தி, திருமடல்கள், திருவெளிப்பாடு) இவ்வார்த்தை குழுமம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 106 முறை.
புதியஏற்பாட்டு நூல்கள் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள “அகபா” (Ahaba) என்ற எபிரேய வார்த்தையின் பொருளை “அகாபே” என்ற வார்த்தையில் மொழி பெயர்த்திருக்கின்றனர். கிரேக்க இலக்கியங்களில் அன்பைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள “ஏரோஸ்” (Eros), “பிலியா” (Philia) என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டு நூல்களில் ஒரு சில இட்ங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புதிய ஏற்பாட்டு நூல்களில், “அன்பு” என்ற வார்த்தை மனிதருக்கு இடையில் காணப்படும் அன்பு உறவை குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதரல்லாத பொருள்கள் மீது மனிதர் கொள்ளும் உறவினை “அன்பு” என்ற வார்த்தையால் குறிக்கப்படவில்லை.
அன்பு என்பது மற்றவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மதிப்பையும், அவர்களை நயமோடு ஏற்றுக் கொள்வதையும் குறித்து காட்டியது. நற்செய்தி நூல்களில் ஒவ்வொன்றிலும் மற்றும் உள்ள கடிதங்கள், திருவெளிப்பாடு ஆகிய நூல்களில் அன்பு என்பது எந்தெந்த பண்புகளின் சூழலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து காணலாம்.
இயேசு “தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை ” என்றார் ( யோவா 14:13)
( ஆதாரம் Exegetical Dictionary of the New Testament, Vol - 1, p. 8-12)
ஒடிசா மாநிலத்தில் நடந்த உருக்கமான நிகழ்ச்சியை 25/ 09/ 2016 செய்திதாளில் படித்தேன். ஊர் பெயர் கலாநந்தி. 75 வயது பெண். கானாக் சத்பதி. இறந்துவிட்டார்கள். அவர்களுக்கு நான்கு பெண்கள். நால்வரும் திருமணமாகி விதவை யானவர்கள். இறந்த தாயை அடக்கம் செய்ய, ஊர் மக்களின் உதவியை கேட்டிருக்கிறார்கள். ஒருவரும் வரவில்லை. எனவே, நான்கு பெண் பிள்ளைகளும்,
இறந்த தாயை கட்டிலில் வைத்து, சுடுகாட்டிற்கு தூக்கி சென்றார்கள். சிதையில் வைத்து எரிப்பதற்கு விறகு இல்லாத நிலையில் தங்கள் குடிசைகளை பிரித்து அவைகளின் கூரைகளையும் கழிகளையும் வைத்து உடலை கொளுத்தியிருக்கிறார்கள். ஏழ்மையில் எழுந்த அன்பு அது.
No comments:
Post a Comment