விண்ணேற்புப் பெருவிழா
28 - 05 - 2017
அருட்பணி. டேவிட் ராஜேஸ், குடந்தை
தி.ப 1 : 1-11 , எபே 1 : 17-23 மத் 28: 16-20
இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்தால் மாட்சியும், மகிமையும், விண்ணக இன்பமும் உண்டு
விண்ணகத்தில் மாட்சிமை, மகிமை, வாழ்த்தொலி, ஒளிமயம், தூயவர்களின் புகழ்ச்சி, முழக்கம், தந்தையாகிய கடவுளுக்கு இவ்வாறெனில், மண்ணகம் வந்து, மனித உரு எடுத்து இறை தந்தையின் பேரன்பை வாழ்ந்து காட்டிய இறைமகனுக்கு அந்த மாட்சிமையும், மகிமையும் இன்றைய விண்ணேற்பு விழாவில் முழுமையடைகிறது.
இத்தாலிய சிற்பி மைக்கேல் ஆஞ்சலா, தன் சிற்பங்களை நுணுக்கமாகச் செய்வார். அவரின் கொள்கை, நுணுக்கம்தான் நிறைவுக்கு அழைத்து செல்லும் என்பதாகும். இயேசுவின் விண்ணேற்பு, நிறைவின் நிகழ்ச்சி.
இயேசுவின் விண்ணேற்பு நிகழ்ச்சி சுருக்கமாக விவரிக்கப்பட்டி
-ருந்தாலும் அதில் பல ஆழ்ந்த கருத்துகள் உள்ளன. மேகம் ஒன்று அவரை மேலே எடுத்து சென்றதாக வாசிக்கின்றோம். விவிலிய பாரம்பரியத்தில் மேகம் என்பது இறைமாட்சியை குறிக்கும் சொல். கடவுள் மோசேயை சந்தித்து, சீனாய் மலையில் உடன்படிக்கை செய்து கொண்ட போது அங்கே மேகம் வந்து தங்கியதாக வாசிக்கின்றோம் (விப 19:6), ஏன் 40 ஆண்டுகள் பாலைவன பயணத்தில் இஸ்ராயேல் மக்களைப் பகலில் ஒரு மேகமும், இரவில் நெருப்புத்தூணும் வழிநடத்தின ( விப 13:2, 14:19). இயேசு உரு மாறிய போது, கூட, மேகம் அவரை மூடிக்கொண்டது ( மத் 17:5). அது மட்டுமல்ல, இயேசு மீண்டும் இரண்டாம் முறை திரும்பி வரும் போது, தான் மேகங்களில் வரப்போவதாகவும் அவரே கூறியுள்ளார் ( மத் 26:64) . ஆகவே இயேசுவின் விண்ணேற்பு ஒரு வகையில் அவர் உயிர்ப்பில் பெற்ற மகிமையின், மாட்சிமையின் முழுமையாகும்.
இந்த மாட்சிமையால், மகிமையில், மயக்கி விட்ட கிறிஸ்தவர்களாக இருந்துவிடப் போகிறோமா? ஏனென்றால் சீடர்கள் இயேசுவின் விண்ணேற்றத்தைக் கண்டு வானத்தை அன்னாந்து பார்த்து கொண்டே இருந்தார்கள். அப்பொழுது, அவர்களுக்குத் தோன்றிய வெண்ணாடை அணிந்த இருவர் என்ன கூறினர்? ‘கலிலேயரே ஏன் வானத்தை அன்னாந்து பாத்துக் கொண்டே நிற்கிறீர்க?’ என்றனர். இயேசு அடைந்த மாட்சியிலும், மகிமை யிலும் மதியங்கி இருக்க நாம் அழைக்க படவில்லை. மாறாக நமக்கு என்று வகுக்கப்பட்ட பணி ஒன்று இருக்கிறது. அது இயேசுவுக்கு சாட்சிகளாய் இருத்தல். இயேசு விண்ணேற்றம் அடையும் போது, சீடர்களுக்கு கட்டளை இட்டது இதுவே. திரைபடத்தில் பார்க்கின்றோம் அல்லது நம்முடைய வாழ்க்கையிலும் சில நேரங்களில் நடக்கின்றது. இறக்கும் தருவாயில் இருக்கும் நம் தந்தையோ, தாயோ அவர்களுடைய கடைசி ஆசையை சொல்லும் பொழுது, அதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். அதை நிறைவேற்றியும் விடுவோம். அதே போல இயேசு விண்ணகத்திற்கு செல்லும் முன் அவர் தன்னுடைய சீடர்களுக்கு கொடுக்கும் பணியை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். எனவே ‘நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். நான் கொடுத்த கட்டளைகளை கடைபிடிக்கும்படி கற்பியுங்கள். நான் உலகம் முடியும் வரை உங்களோடு இருப்பேன்’ என உறுதியளிக்கிறார். எனவே இயேசுவின் பணி முடிந்தது, திருச்சபையின் பணி துவங்கிவிட்டது.
விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாடும் நமக்கு, அவர் கொடுத்தது அவருடைய அதிகாரத்தையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய உடனிருப்பு என்கிற வாக்குறுதியும். எனவே இயேசுவின் வல்லமையை பெற்று கொண்ட நாம் அவருக்கு சாட்சிகளாய் இருப்போம்.
மண்ணுலகில் இறுதி எல்லை வரை நீங;கள் என் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்று சொன்ன நம் ஆண்டவரின் பாதையை உண்மையாக்குவோம்.
No comments:
Post a Comment