மே மாத புனிதர்கள்
சகோ. G. பவுலின் மேரி FSAJ
மே 3 புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு திருத்தூதர்கள்
பிலிப்பு பெத்சாயிதாவில் பிறந்தவர். முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராயிருந்து, பின்பு கிறிஸ்துவைப் பின்பற்றியவர். யாக்கோபு, ஆண்டவரின் உறவினர் அல்பேயுவின் மகன். எருசலேம் திருச்சபையை தலைமையேற்று நடத்தியவர். புதிய ஏற்பாட்டில் உள்ள திருமுகம் ஒன்றும் இவரால் எழுதப்பட்டுள்ளது. கடுந்தவ வாழ்வை மேற்கொண்டார். யூதர் பலரை திருமறைக்குக் கொண்டு வந்தார். கி.பி. 62‡ ஆம் ஆண்டில் மறைசாட்சியாக இறந்தார்.
மே 8 புனித குயின்டின் ( 287)
இவர் இயேசுவை ஆழ்ந்து அன்பு செய்தார். அதனால் அவரது நற்செய்தியை எங்கும் பரப்ப விரும்பினார். எனவே நாட்டையும், உலக மகிமைகளையும் விட்டு பிரான்ஸ் சென்று மறைப்பணி செய்தார். ஜெபம், தவமுயற்சிகள், உழைப்பு ஆகியவற்றால் பலரை மனந்திருப்பினார். அரசு அதிகாரி ஒருவர் இவரைப் பிடித்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினான். இவரோ நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். மரணதண்டனை இவருக்குக் கொடுக்கப்பட்டது. இவர் துணிவுடனும் பொறுமையுடனும் வேதனைகளை சகித்து உயிர் துறந்தார்.
மே 12 புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு, பங்கிராஸ் மறைசாட்சிகள்
நெரேயு, அக்கிலேயு இருவரும் சகோதர்கள். இருவரையும் மனந்திருப்பியவர் புனித இராயப்பர். இருவரும் இராணுவ வீரர்கள். டொமிற்றில்லா என்ற பெண்மணி கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணித்தாள். அவுரேலியன் என்பவன் மூவரும் கிறிஸ்தவர்கள் என்று அதிகாரியின் முன் குற்றம் சாட்டினான். 100 ‡ ஆம் ஆண்டில் இவர்கள் இயேசுவுக்காக கொல்லப் பட்டனர். பங்கிராஸ் பிரீஜியா நாட்டில் அரசக் குடும்பத்தில் பிறந்தவர். 14 ‡ ஆம் வயதில் இவர் உரோமைக்கு வந்தார். இவரை கைது செய்து அதிகாரியின் முன் கொண்டு சென்றார்கள், பொய்த் தேவதைகளுக்கு இவர் பலியிட மறுத்தமையால் இவரைக் கொன்றார்கள்.
மே 18 புனித முதலாம் யோவான் திருத்தந்தை, மறைசாட்சி
இவர் இத்தாலியில் தங்கனிப் பகுதியில் பிறந்தவர். கி.பி. 523 ‡ இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். தியதோர் அரசரின் தூதுவராகக் கொன்ஸ்தாந்திநோபிளுக்கு மாமன்னர் யுஸ்தினிடம் சென்றார். அங்கிருந்து திரும்பியவர், தூது சென்றதின் விளைவைக் கண்டு, கடும்சினம் கொண்ட அரசரால் கைது செய்யப்பட்டு, இராவன்னா சிறையில் தள்ளப்பட்டு, அங்கேயே 526 ‡இல் மே ‡ 18 ஆம் நாள் இறந்தார்.
மே 25 பாசிநகர் புனித மகதலா மரியா கன்னியர் (கி.பி. 1566-1607)
இவர் பிளாரன்சிஸ் கி.பி. 1566‡ ல் பிறந்தார். இறைப்பற்றுடன் கல்வி கற்று, கார்மேல் சபைக் கன்னியராகி இறைவேண்டலும், ஒறுத்தலும் நிறைந்த மறைந்த வாழ்வு நடத்தினார். திருச்சபையின் மறுமலர்ச்சிக்காக தளராது இறைவேண்டல் செய்து வந்தார். தன் உடன் கன்னியரை உத்தம நன்னெறியில் வழிநடத்தினார். இறைவனிடமிருந்து பல்வேறு கொடைகள் பெற்றுச் சிறப்பெய்தினார். 1607 ‡ ல் மே ‡ 25 ஆம் நாள் பிளாரன்ஸ் நகரத்திலேயே இறந்தார்.
மே 27 புனித கான்டர்பரி அகுஸ்தீன் ஆயர்
இவர் உரோமையில் பிறந்தார். முதல் கிரகோரியார் என்னும் பாப்பு திருச்சபையை வழி நடத்தி வந்தார். பிரிட்டனில் வாழ்ந்த மக்கள் கிறிஸ்தவ மறையை பின்பற்ற விரும்புவதாக பாப்பு அறிந்து, உரோமையில் உள்ள புனித அந்திரேயாவின் துறவு மடத்திலிருந்து அகுஸ்தீன், திருத்தந்தையால் கி.பி. 597‡இல் நற்செய்தி அறிவிப்பதற்காக, இங்கிலாந்து அனுப்பப் பெற்றார். கென்ட் பகுதிக்குத் தலைநகரான கான்றர்பரிக்கு ஆயராக்கப்பட்டு பலரை மனந்திருப்பினார். இலண்டன், மார்க், போன்ற ஒரு சில திருச்சபைகளை இவர் தொடங்கி வைத்தார். ஏறத்தாழ 605‡இல் உயிர் துறந்தார்.
மே 30 புனித ஜோன் ஆப் ஆர்க் (1412 1431)
இப்புனிதரை பிரான்ஸ் நாட்டில் தொமரெமி என்னும் கிராமத்தில் 1412 ‡ இல் பிறந்தார். சிறுவயதிலேயே புனித மிக்கேல், புனித கத்தரீன், புனித மார்கரீத் இவர்களது குரல்களைக் கேட்டாள். 1428‡ இல் அந்த குரல்கள் உடனே போய், பிரான்ஸ் நாட்டு மன்னருக்கு உதவி செய். அவர் தம் நாட்டை திரும்பப் பெற துணை செய் என்று கட்டளையிட்டன. பல எதிர்ப்பின் இடையிலும் ஒர் இராணுவத்தின் உதவியால் 1429-இல் ஆர்லியன்ஸ் நகரைக் காப்பாற்றினாள். இன்னொரு நகரைக் காக்க செய்த போரின் போது இவளைப்பிடித்து ஆங்கிலேயரிடம் கையளித்தார்கள். இவள் தனது சொற்களால் நடுவர்களை திகைக்கச் செய்தாலும், இவளைச் சாவுக்கு தீர்ப்பிட்டு 1431‡ல் சுட்டு எரித்தனர்.
மே 31 தூய கன்னிமரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
இவ்விழாவில் 4 நிகழ்ச்சிகளைக் கொண்டாடு கிறோம்.
1. கன்னிமரியாள் தன் உறவினளான எலிசபெத்தை சந்திக்கச் சென்றது.
2. திருமுழுக்கு யேவான் கன்னிமரியாவின் வாழ்த்தினைக் கேட்டு, அன்னை வயிற்றில் துள்ளியது
3. துய ஆவியால் ஏவப்பட்டு, எலிசபெத் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே என பாராட்டியது. ஏறக்குறையை 3 மாதத்திற்குப் பின் மரியா வீடு திரும்பியது.
4. என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப்போற்றுகின்றது என்னும் உயரிய பாடலை மரியாள் இசைத்தது.
No comments:
Post a Comment