Pages - Menu

Wednesday, 3 May 2017

மூலிகை ஊமத்தை

மூலிகை  ஊமத்தை

ஆடுதுறை இயற்கை மருத்துவம் - ம. இராச ரெத்தினம்

இதை வெளிப்பூச்சு மருந்தாகவும், மேல் பற்று போடுவதற்கும் மற்றும் பலவித வெளிக்கு தடவும் மருந்தாகவே பயன்  படுத்திக் கொள்ள நமக்கு பெரிதும் உதவுகிறது.

உபயோக முறைகளில் சில 
ஊமத்தை  இலையை நல்லெண்னை விட்டு வதக்கி இளஞ் சூட்டுடன் வீக்கமுள்ள இடங்கள், வாதவலிகள், கைகால் மூட்டுகளில், வீக்கமுள்ள இடங்கள் ( நரித்தலை வாதம்) கால், கை, சேருமிடங்களில் உண்டாகும் நரிக்கட்டுகள், வாய்வு கட்டிகள், அண்ட வாய்வு,  வீக்கங்களில் வலி, தாய்ப்பால் கட்டி கொண்டதால் வலி ஆகிய நோய்களில் ஒற்றடம் கொடுத்துவர அவை தணியும். காலை, மாலை இருவேளைகள் செய்தால் போதும். இது குறிப்பாக வீக்கங்களை கரைப்பதிலும், வாய்வு வலிகளை போக்குவதிலும், பெல்லடோனா என்னும் நவீன மருந்துக்கும் மேலனதாகும். சிலவில்லாமல் எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியது. சீதள சம்மந்தமான  காது வலிகள் திடீரென்று  வந்து  உபாதை தாளாமல்  துடிப்பவர்கள் ஒர் இரும்புக் கரண்டியில் இதன் இலைச்சாறும் நல்லெண்ணெயும் சமமாக விட்டு காய்ச்சி, கை பொறுக்கும் அளவு சூட்டுடன் 4 துளி காதில் விட வலி பறந்து ஓடி விடும். செய்து பாருங்கள்.

நாய் கடி வி­ம் தீர
  நாய்கடிக்கு, ஊமத்தன் இலை, நாயுருவி இலையைப் போலவே உபயோகமாகிறது.  நாய்கடித்த ரணங்கள் சலித்துக் கொண்டு ஆறாமல் இருப்பதற்கு ஊமத்தன் இலைகளை தண்ணீர் விடாமல் அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி வைத்து கட்டிவர அவை ஆறும்.
 உடம்பில் ஏறிய நாய்கடி வி­ம் முறிய, இலையின் சாற்றை 2 முதல் 4 துளிக்கு அதிகமாகாமால் நல்ல வெல்லம் கலந்து தினம் இரண்டு  வேளை கொடுக்க தீரும். ஆனால் மூன்று நாளைக்கு மேல் கொடுக்க வேண்டாம். இந்த மூன்று நாளும் கடும் பத்தியம் அதாவது பகலில் தயிர்சாதம் இரவில் பால்சாதம் உப்பு போடாமல்  சாப்பிட்டு  வர வேண்டும்.

ரணங்கள்  ஆற  பச்சை எண்ணை
                    ஊமத்தன்  இலையை இடித்து சாறு பிழிந்து கொண்டு 1/ 2  படி சாறு , 1/2 படி தேங்காய் எண்ணெய் கலந்து  1/ 2 பலம் மயில்
 துத்தம்  தூள் செய்து  கலக்கி அடுப்பில் வைத்து சிறு தீயாக வைத்து காய்ச்ச வேண்டும். சாறு சுண்டியபின்  எண்ணெய் முறியாதபடி பதமாக  காய்ச்சி இறக்கி ஆறியபின், ஒரு புட்டியில் பத்திரப்படுத்தவும். இந்த எண்ணெய்  பச்சை பசலேன்று இருக்கும். ஆகவே இதற்கு  பச்சை எண்ணெய் என்றே பெயர் வைத்து விடுங்கள். இது சகலவிதமான ரணங்கள், அடி, காயம், சிறு புண்கள், ஆறாத  நாள்பட்ட ரணம்,  சதை வளரும் புண், புரைகள் ஆகியவைகளுக்கு புண்களை வேப்பம்பட்டை கஷாயத்தால் சுத்தம் செய்து, பின் பஞ்சு எடுத்து  பச்சை எண்ணை நனைத்து ரணத்தின் மேல் வைத்து கட்டி வர யாவும் ஆறிப்போகும். இதை  உள்ளுக்கு உபயோகிக்கக்  கூடாது.
மூலிகை  ஊமத்தை

 புழுஆடுதுறை இயற்கை மருத்துவம் ‡ ம. இராச ரெத்தினம் வெட்டு நீங்கி ரோமம் முளைக்க

            ஊமத்தான் காய்:  பிஞ்சாக இருக்கும் போது ஒன்று கொண்டு வந்து  அதை ( எச்சில்) உமிழ்நீருடன் சேர்த்து நன்றாக மைபோல்  அரைத்து, புழு வெட்டு  என்ற மயிர் விழந்து சொட்டையாகி மழ மழ என்ற இடங்களில் தடவி வர மீண்டும் அந்தந்த இடத்தில் முளைக்க ஆரம்பிக்கும். இதன் காயை கண்டால் கடின சித்தமுடையவர்களின்  மனம் துணுக்குனும். இளகிய மனம் படைத்தவர்கள் அச்சம்  கொள்வார்கள். இந்த காயின் மேல்  பட்டு வரும் காற்றை சுவாசிக்க பேய், பில்லியம், சூனியம் வைப்பு ஆகியவைகள் விட்டு விலகிப் போகும். மாந்தரீகர்களுக்கும் பார்வை சேஷ்டை விலக, திருஷ்டி கழிப்பு சுற்றி எடுக்க, இதன் காய் மிக முக்கியமாக உபயோகமாகின்றது.

ஆஸ்மா புகைத்தூள்
                   ஊமத்தன் இலை, பூ, விதை மூன்றையும் 5 பலம் எடுத்து  ஒரு வாய் அகன்ற ( சட்டி) மண் பாத்திரத்தில் அரைக்கால் படி   பசும்பால் விட்டு  அதன் வாயை ஒரு மெல்லிய துணிடியக் கட்டி அதன்மேலே ஒரு  சட்டியை மூடி அடுப்பில்  வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். இது பிட்டவியல் எனப்படும். பின்பு வெயிலில் நன்றாக காய வைத்து, ஒன்றிரண்டாக இடித்து தூள் செய்து , ஒரு புட்டியில்  அடைத்து வைத்துக் கொள்ளவும். சுவாச காச (ஆஸ்துமா) நோயாளிக்கு எதிலும் தீராமல் எந்தவிதமான இன்சக்­ன் மருந்துகளும் பயனற்றுபோய், சுவாச இறைப்பினால் மரணவஸ்தை பட்டுக் கொண்டு இருக்கும் சமயம், ஒரு பீடியை எடுத்து  அதில் உள்ள புகையிலை  யாவும் கீழே கொட்டி விட்டு புட்டியில் எடுத்து வைத்த இந்த தூளை  அதற்குள் நிரப்பி   பற்றவைத்து புகையை பீடிபோல பிடிக்க செய்ய, எமனுடன் வாதாபிக் கொண்டிருக்கும், ஆஸ்துமா நோயாளியின் பிராணன் பூலோகத்துக்கு திரும்பும் என்பதில் ஐயமில்லை.
.

அன்பின் ஆழம்

விவிலிய விளக்கம்:
   அன்பின் ஆழம்         

  - அருள்பணி . ச. இ. அருள்சாமி

மனித பண்பின் முதலிடம் அன்பு. மனித வாழ்வின் மாண்பு பிறக்குமிடமும் அன்புதான். “அன்பு இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை”  என்கிறார் பவுல் அடிகளார் ( 1 கொரி 13:2). இந்த அடிப்படை பண்பைப் பற்றி புதிய ஏற்பாட்டு நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை இங்கு தொடர்ந்து காணலாம்.

அன்பு என்பதற்கு புதிய ஏற்பாட்டு நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள  கிரேக்க வார்த்தை, “அகப்பாவோ”  (Agapao) என்ற வார்த்தை.  இவ்வார்த்தையின் தொடர் புதிய ஏற்பாட்டு நூல்களில் 360 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. “அகாப்பாவோ”  என்ற வினைச்சொல் 143 முறையும் “அகாப்பே”  என்ற பெயர் சொல் 116 முறையும் “அகப்பேதோஸ்”  என்ற  பெயர்சொல் 61 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

புதிய ஏற்பாட்டு நூல்களில், யோவான் புத்தகங்களில்தான் (நற்செய்தி, திருமடல்கள், திருவெளிப்பாடு) இவ்வார்த்தை குழுமம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 106 முறை.

புதியஏற்பாட்டு நூல்கள் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள “அகபா”  (Ahaba) என்ற எபிரேய வார்த்தையின் பொருளை  “அகாபே”  என்ற  வார்த்தையில் மொழி பெயர்த்திருக்கின்றனர். கிரேக்க இலக்கியங்களில் அன்பைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள “ஏரோஸ்”  (Eros), “பிலியா” (Philia)  என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டு நூல்களில் ஒரு சில இட்ங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  

புதிய ஏற்பாட்டு நூல்களில், “அன்பு” என்ற வார்த்தை மனிதருக்கு இடையில் காணப்படும் அன்பு உறவை குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதரல்லாத பொருள்கள் மீது மனிதர் கொள்ளும் உறவினை “அன்பு”  என்ற வார்த்தையால் குறிக்கப்படவில்லை.

அன்பு என்பது மற்றவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மதிப்பையும், அவர்களை நயமோடு ஏற்றுக் கொள்வதையும் குறித்து  காட்டியது. நற்செய்தி நூல்களில் ஒவ்வொன்றிலும் மற்றும் உள்ள கடிதங்கள், திருவெளிப்பாடு ஆகிய நூல்களில் அன்பு என்பது எந்தெந்த பண்புகளின் சூழலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து காணலாம்.

இயேசு  “தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை ”  என்றார் ( யோவா 14:13) 
 ( ஆதாரம் Exegetical Dictionary of the New Testament,  Vol - 1, p. 8-12) 

ஒடிசா மாநிலத்தில் நடந்த உருக்கமான நிகழ்ச்சியை 25/ 09/ 2016  செய்திதாளில் படித்தேன். ஊர் பெயர் கலாநந்தி. 75 வயது  பெண். கானாக் சத்பதி. இறந்துவிட்டார்கள். அவர்களுக்கு நான்கு பெண்கள். நால்வரும் திருமணமாகி விதவை யானவர்கள். இறந்த  தாயை அடக்கம் செய்ய, ஊர் மக்களின் உதவியை கேட்டிருக்கிறார்கள். ஒருவரும் வரவில்லை. எனவே, நான்கு பெண் பிள்ளைகளும், 
 இறந்த தாயை கட்டிலில் வைத்து, சுடுகாட்டிற்கு தூக்கி சென்றார்கள். சிதையில் வைத்து எரிப்பதற்கு விறகு இல்லாத நிலையில் தங்கள் குடிசைகளை பிரித்து அவைகளின் கூரைகளையும் கழிகளையும் வைத்து உடலை கொளுத்தியிருக்கிறார்கள். ஏழ்மையில் எழுந்த அன்பு அது.    

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்

 நற்கருணை என்னும் திருவிருந்து

- திரு.குமார் ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., விரகாலூர்

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் உயிர் மூச்சாய் திகழும் ஒப்பற்ற அருள் அடையாளம்  நற்கருணை. மனித இனத்தைக் கிறிஸ்துவோடு இணைப்பதுவும் நற்கருணையின் நோக்கம். நற்கருணையின் தியாகப் பலியிலே நாம் பங்கு பெறும் போது, மீட்பு  அனைவர்க்கும் கிடைக்கிறது என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான் நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவை  மையமாகக் கொண்டுதான் திருச்சபையானது ஒரே மக்கள் குலமாக, ஒரே ஆலயமாக, கடவுளின் ஒரே குடும்பமாக, அதாவது தூய, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருச்சபையாக வளர்கிறது.  வாழ்வு தரும் உணவு நானே என்னிடம் வருபவருக்குப் பசியே இராது (யோவான் 6:35)  உணவும், தண்ணீரும் நமது  உடலின் பசியையும் தாகத்தையும் தணிக்க வல்லவர் இயேசு கிறிஸ்து ஒருவரே ஆவார்.
கிறிஸ்து மனிதர்களை மீட்பதற்காகப்பட்ட வாதைகள் பெரியவை. மனுக்குலத்தின் மீட்பு நிறைவேற வேண்டிதான் அடையப் போகின்ற துன்பங்களைப்  பொருட்படுத்தாது முன்னிரவுப் (பெரிய வியாழன்)  பொழுதில் தம் பன்னிரண்டு சீடர்களுடன் ஒரு வீட்டில் திருவிருந்து செய்தார். அப்பொழுது சீடர்கள் மனத்தில் பதியுமாறு பல நல்லுரைகளை அருளினார். அதன் பின் திருச்சபையின்  திருச்சாதனங்களில் ஒன்றான புதிய உடன்படிக்கைச் சின்னமாக திருவிருந்தை அளித்தார். பேரின்ப பெருவீட்டை அருள, மனித  குமாரனாகப் பிறந்த இயேசு, தமது கையினால் அப்பத்தை எடுத்து, அதைப்பிட்டு, நன்றி செலுத்தி, தன் சீடர்களுக்குக் கொடுத்து அது அவர்களுக்காக ஒப்புக் கொடுக்கப்படும் தமது உடல். தம்மை நினைவு கூறும்படி உண்ணுங்கள் எனக் கூறி மீண்டும் சுவையுள்ள திராட்சை இரசத்தை எடுத்து அதை ஆசீர்வதித்து அனைவரும் குடியுங்கள் என்று கூறி அது தமது புதிய உடன்படிக்கைக்காகச்
சிந்தப்படும் தம்முடைய இரத்தமென்றும், பாவமன்னிப்பு அதனால் உண்டாகுமென்றும் தமது தந்தையாகிய  இறைவனுடைய  வீட்டில்  
அனைவரும் வந்து சேரும்வரைத் தாம் அதைப் பானம் பண்ணுவதில்லை என்று கூறினார்.  இப்பொருள் அமைந்த  பாடல்கள் 
இதோ,பொங்கு பரமானந்த நமக்கருள வந்த மனுப்புதல்வர் தாமே

 செங்கரத்தா லப்பமெடுத்ததைப் பிட்டுத் தோத்தரித்துச் சீடரிக் கிந்
துங்களுக்காய் 
மரணத்துக் கொப்பி விக்குமெனதுடல்  தென்னையுன்ணித் தங்கிட 

நீரிந்த வகையியற் றியயனக் கருணையோடு சாற்றிப்  பின்னும்  
 ( இரட்சணிய யாத்திரிகம் - 8)

இனிமைதரு பழரசபாத் திரமேந்தி  ஸ்துதி செலுத்தியிதிலே 

நீங்கள்அனைவரும் பருகுமின் மற்றிது புதிய உடன்படிக்கை 

சுமையச் சிந்திப் எனதிரத்தம் பாவமன்னிப் பிதனாலே யுண்டாகு 

மிதியப்பாண்டுதனை நுகரேஎன பரம தந்தை யிராஜ்ஜியந் தனினீர் சாருமட்டும்.
( இரட்சணிய யாத்திரிகம் - 38)

என  நற்கருணை  திருவிருந்து  பற்றி  இரட்சணிய யாத்திரிகம் குறித்துள்ளது. இத்திருவிருந்தினைக் கிறிஸ்துவத் திருச்சபை தூய கூட்டுறவு, நற்கருணை என வழங்குகின்றது.

இதனைக் குறித்து மேலும் திருச்சபையின் உறுதியாக வழங்கி வரும் ஞானவரம் நிறைந்த அருள் சதானங்கள் இரண்டு. அதில் ஒன்று திருமுழுக்கு, மற்றொன்று  நற்கருணை என்னும் திருவிருந்தாகும். திருமுழுக்கு  பெறுகின்றவர்கள் கிறிஸ்துவின் மந்தையாகிய திருச்சபையில் முதலாவதாக சேருகின்றார்கள். பாவம் அற்றவராகிய இயேசு பெருமான், தம்முடைய இரத்தத்தைச் சிந்தி  தமதுயிரையும் விட்டார். இதை மனத்தில் தியானித்து   உருகி விசுவாசத்தில் ஊன்றி நிற்க நற்கருணையைப் பயபக்தியுடன் உட்கொள்ள வேண்டும்.

முந்துறை ஞானஸ்நானமடைவீர் திருச்சபை புகுவோர் 

முறையினின்றுபந்தமனு காதபரா பரன்மதலை எம்முடை 

பாவந்தாங்கினு சிந்தினர் செங்குருதியுயிர் விருத்தன ரென்றுள 

நினைந்து சிந்தையன் பால்நைந்துருகி 

விசுவாசத் துன்றி நிற்பச் நற்கருணை நயந்துட் கொள்ளில்  
 ( இரட்சணிய யாத்திரிகம் - 39)

 கிறிஸ்து இத்திரு விருந்தளித்த பின்னர் தமது தந்தையை நோக்கில் செபம் செய்வதற்காகச் சீடர்களுடன் ஒலிவ மலையிலுள்ள கெத்சமனே என்னும் சோலைக்குச் சென்றார். இரட்சணிய யாத்திரிகம் தருக்க ரீதியில் இச்செயலை இணைத்து நினைத்துப் பார்க்கின்றது. ஆதிமனிதனாகிய ஆதாம், ஏதேன் என்னும் சோலையில்  கீழ்ப்படியாமையாகிய பாவத்தினைச் செய்து மனுக்குலம், முழுமையும் பாவக்கறை படியுமாறு செய்தான். அவன் அச்சோலையில் விளைத்த பாவத்தை மற்றொரு சோலையாம் கெத்சமனேயில் தந்தையின் சித்தத்திற்குக் கீழ்ப்படிதல்  என்ற செயலைச் செய்து இரண்டாம் மனிதனாகிய இறைவன் இயேசு மனுக்குலத்தின்  பாவக்கறையை நீக்கினார். முதல் மனிதனின் கீழ்ப்படியாமையில் விளைந்த பாவம் இரண்டாம் மனிதன் இயேசுவுடன் கீழ்ப்படிதலால் அகன்றது. ஏனெனில் தோன்றிய பாவம் கெத்சமனேயில் நீங்கிற்று. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்குத் தம்மை ஒப்புக்கொடுத்ததே பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்ததாகும். பாவமற்றவராகிய கிறிஸ்து உலகத்தின் பாவத்தை தம்மேல் ஏற்றுக்கொண்டு  பாவமானார். கெத்சமனே தோட்டத்தில் அவர் அடைந்த ஆன்ம வேதனையையும் பிற நிகழ்ச்சிகளும் புனித விவிலியத்தில் கூறியுள்ளவாறே இரட்சணிய யாத்திரிகம் விவரிக்கின்றது.
  

திருச்சபைச் செய்திகள்

திருச்சபைச் செய்திகள்


9/4/17  எகிப்தில்  குருத்து ஞாயிறன்று இரண்டு  கிறிஸ்தவ ஆலயங்களில் வெடிக்குண்டு தாக்குதல்  நடந்திருக்கிறது.   முஸ்ஸம் தீவிரவாத இயக்கம் இக்கொடுர செயலை செய்திருக்கிறது.                       
தாந்தா என்ற ஊர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது.  இங்கு     வழிபாடு நடந்துக் கொண்டிருக்கும் போது குண்டு வெடித்தது. 27 பேர்   இறந்தனர்.  78 பேர் காயம் அடைந்துள்ளனர்.  2 மணி நேரம் கழித்து, அலெக்சாந்திரியா நகரில் மார்க் பேராலயயத்தில், தற்கொலை குண்டு தாக்குதலால்,  இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 16 பேர் இறந்தனர். இவ்வாலயம் காப்திக் வழிபாட்டுமுறை சபையினர் தலைமையிடம். இங்குள்ள ஆயர்   காப்திக் சபையினர் திருத்தந்தை ( போப் ) என்று அழைக்கப்படுகிறார். 



 21/3/17      - ஜெருசலேமில், இயேசுவின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு 22/3/17 முதல் மக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. புதுப்பிக்கும் பணியை கிரேக்க பொறியாளர்கள் 9 மாதங்களில் செய்து முடித்துள்ளனர். இப்புதுப்பிக்கும் பணியின் போது 4ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டன் அரசனால் பதிபிக்கப்பட்ட சலவைக் கல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.                        
தகவல் -The Hindu  21/3/17   பக் .20

விவிலிய விடுகதைகள்

 விவிலிய விடுகதைகள்

 மாற்கு நற்செய்தி  1 முதல் 8 முடிய

 1.   கடவுளுக்கு காணிக்கையாயிற்று
      அவை கொ வில் துவங்கி  ன்னில்  முடியும்
      உறவும் முறிந்தது. அதன் பெயர் என்ன?
                 
2.   ஆஸ்பத்திரி சென்றேன்,
      ஆஸ்தியை தொலைத்தேன்
      ஆறீராண்டு பாடுபட்டேன்
      அவரின் உடையைத் தொட்டேன்
      ஆனந்தமாய் குணமடைந்தேன்,  நான் யார்?
                       
3.   குரலொன்றுக் கேட்டது, தண்ணீரில் நின்றது
      பறந்து ஒன்று வந்தது, அவை என்ன?
 
4.   நாங்கள் பலர்
      என் பெயர் ஐந்தெழுத்தில் உள்ளது.
      கூட்டமாக வந்தோம் ‡ அந்தக்
      கூட்டத்திற்குள் போகவிடும் என்று
5. தூய்மை நேர்மை கொண்ட, புறா சிறையில்
      அதற்கு  அஞ்சிய அண்டக் காக்கா
விழா கொண்டாடுது,      அது , இது எது?
                         
6. எட்டுக்கால்கள் நடக்க ,
  வழியை மக்கள்  அடைக்க
  ஒட்டைப் பிரித்து இறக்க
    பரமன் வார்த்தைக் கேட்டு
    பட்டென்று படுக்கையை எடுத்து
    பணிவோடு போனான்,  இவன் யார்?

 7. சுங்கத் துறையில் இருப்பன்
      என் தந்தையின் பெயர் நாலெழுத்து
      எனது பெயர் இரண்டெழுத்து
      என்னை அழைத்தவர்க்கு
      விருந்து வைத்தேன். நான் யார்?
      தந்தை, அழைத்தவர் பெயர் கூறு.    
                 
8. தலையில்லாதவன், தூங்கிய தலைவரின்
      தலையை சுமந்தவன். யார் அவன்? தலைவர்?
                 
 9. அதிசயக் குளத்திலே அற்புதக் குருவி
        வாலினால் நீரை வற்றக் குடிக்குது
        வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை
        வெளியாகாமல் ஒளிந்திருப்பது  ஒன்றுமில்லை
        அது  எந்த   உவமை?
                     
 10.   உலகெங்கும் சுற்றுவேன்
என்னைக் கண்களால் காண இயலாது
அவர் என்னை அடக்கினார்
நான் அடங்கிப் போய் அமைதியானேன்
நான் யார்? அவர் யார்?
             
11. அவளோ அறியாப் பிள்ளை
      வயதோ பன்னிரண்டு
      கை கொடுத்து தெய்வம்
      உயிர் கொடுத்தது,   அது? இது? எது?
                       
12.   நான் ஒரு கிரேக்கப் பெண்
        பெனிசிய இனத்தை சார்ந்தவள்
        வேண்டினேன் அவரிடம், நீங்கியது  அது? எது?
                 
13.   எச்சரிக்கை :  எச்சரிக்கை
        அந்தப் புளிப்பு மாவை குறித்து
      அவர்கள் இருவகையினர், யார் அவர்கள்?

14. விதையோ விதை    சிறியதான விதை
        இறையாட்சியின் விதை
        மடிந்து முளைத்து வளர்ந்து விரிந்து
       பறவைகட்கு புகலிடம்,  அது என்ன விதை ?
15.   முழந்தாள் படியிட்டவனிடம்
        இரு கரங்கள் நீட்டி
        இரக்கத்தை செயலில் காட்டி
        தொட்டு அவரிடம்  நான் விரும்புகிறேன்
        நோய் நீங்குக என்று யார் யாரிடம் கூறினார்?
         
  16. இவர் தலைமைக்குருவாய் இருந்தபோது
        தைரியசாமி ஒருவர்
        இறை இல்லத்திற்குச்  சென்று
        குருக்கள் உண்ணும் அர்ப்பண அப்பங்களை
      எடுத்து வந்து தன் பசியையும்
      பிறர்   பசியையும் போக்கிய உத்தமரு யாரு
  தலைமைக் குரு யார்?
           
 17. அவருக்கு கடுங்காய்ச்சல்
        படுத்தப் படுக்கை
        துன்பத்தைக் கண்டனர் சீடர்கள்
        இயேசுவிடம் சொல்லினர்
        கைபிடித்து தூக்கினார்
காய்ச்சலோ பறந்துப் போனது,
      பணிவிடை செய்தார். யார் உறவினர் இவர்?
                     
18. நான்காம் காவல் வேளை
        கடல்மீது ஒரு உருவம் நடந்தது
      அவர்களோ பேய் என்று அலறினர். அவரோ
        துணிவோடிருங்கள். அஞ்சாதீர் என்றார்
        அவர்கள் யார்? இவர் யார்?
                   
 19. அடிகாட்டில் வந்தனர்
        நடுமாட்டில் சென்றனர்
        நுனி சீடர்கள் கையில் மணிக்கொத்துகள்
        குறை கூறினர் அவர்களைப் பார்த்து
        யார் இவர்கள்?
       
20. பூவில் பிறக்கும், நாவில் இனிக்கும்
        அது அன்னவர்க்கும் அன்றாட உணவு
        பாலை நிலத்தின் ஒரு குரலுக்கு இனிமை
        வழங்கும் குரல் வலிமை அது எது? அவர் யார்?

மே மாத புனிதர்கள்

மே மாத புனிதர்கள்
சகோ.   G. பவுலின் மேரி FSAJ 

மே 3 புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு திருத்தூதர்கள்

           பிலிப்பு பெத்சாயிதாவில் பிறந்தவர். முதலில் திருமுழுக்கு யோவானின்  சீடராயிருந்து, பின்பு கிறிஸ்துவைப் பின்பற்றியவர். யாக்கோபு, ஆண்டவரின் உறவினர் அல்பேயுவின் மகன். எருசலேம் திருச்சபையை தலைமையேற்று நடத்தியவர். புதிய ஏற்பாட்டில் உள்ள திருமுகம் ஒன்றும் இவரால்  எழுதப்பட்டுள்ளது. கடுந்தவ  வாழ்வை மேற்கொண்டார். யூதர் பலரை திருமறைக்குக் கொண்டு வந்தார். கி.பி. 62‡ ஆம் ஆண்டில் மறைசாட்சியாக இறந்தார்.

மே 8 புனித குயின்டின் ( 287)

        இவர் இயேசுவை ஆழ்ந்து அன்பு செய்தார். அதனால் அவரது நற்செய்தியை எங்கும் பரப்ப விரும்பினார். எனவே நாட்டையும், உலக மகிமைகளையும் விட்டு பிரான்ஸ் சென்று மறைப்பணி செய்தார். ஜெபம், தவமுயற்சிகள், உழைப்பு ஆகியவற்றால் பலரை மனந்திருப்பினார். அரசு அதிகாரி ஒருவர் இவரைப் பிடித்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினான். இவரோ நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். மரணதண்டனை இவருக்குக் கொடுக்கப்பட்டது. இவர்  துணிவுடனும் பொறுமையுடனும் வேதனைகளை சகித்து உயிர்  துறந்தார்.

மே 12 புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு, பங்கிராஸ் மறைசாட்சிகள்

          நெரேயு, அக்கிலேயு இருவரும் சகோதர்கள். இருவரையும் மனந்திருப்பியவர் புனித இராயப்பர். இருவரும் இராணுவ வீரர்கள். டொமிற்றில்லா   என்ற பெண்மணி கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணித்தாள். அவுரேலியன் என்பவன் மூவரும் கிறிஸ்தவர்கள் என்று அதிகாரியின் முன் குற்றம் சாட்டினான். 100 ‡ ஆம் ஆண்டில் இவர்கள் இயேசுவுக்காக கொல்லப் பட்டனர். பங்கிராஸ் பிரீஜியா நாட்டில் அரசக் குடும்பத்தில் பிறந்தவர். 14 ‡ ஆம் வயதில் இவர் உரோமைக்கு வந்தார். இவரை கைது செய்து அதிகாரியின் முன் கொண்டு சென்றார்கள், பொய்த் தேவதைகளுக்கு இவர் பலியிட மறுத்தமையால்  இவரைக் கொன்றார்கள்.

மே 18 புனித முதலாம் யோவான் திருத்தந்தை, மறைசாட்சி

          இவர் இத்தாலியில் தங்கனிப் பகுதியில் பிறந்தவர். கி.பி. 523 ‡ இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். தியதோர் அரசரின் தூதுவராகக் கொன்ஸ்தாந்திநோபிளுக்கு மாமன்னர் யுஸ்தினிடம் சென்றார். அங்கிருந்து திரும்பியவர், தூது சென்றதின் விளைவைக் கண்டு, கடும்சினம் கொண்ட அரசரால் கைது செய்யப்பட்டு, இராவன்னா சிறையில் தள்ளப்பட்டு, அங்கேயே 526 ‡இல்  மே ‡ 18 ஆம் நாள் இறந்தார்.

மே  25 பாசிநகர் புனித மகதலா மரியா  கன்னியர் (கி.பி. 1566-1607)

        இவர் பிளாரன்சிஸ் கி.பி. 1566‡ ல் பிறந்தார். இறைப்பற்றுடன் கல்வி கற்று, கார்மேல் சபைக் கன்னியராகி இறைவேண்டலும், ஒறுத்தலும் நிறைந்த மறைந்த வாழ்வு நடத்தினார். திருச்சபையின் மறுமலர்ச்சிக்காக தளராது இறைவேண்டல் செய்து வந்தார். தன் உடன் கன்னியரை உத்தம நன்னெறியில் வழிநடத்தினார். இறைவனிடமிருந்து பல்வேறு கொடைகள் பெற்றுச் சிறப்பெய்தினார். 1607 ‡ ல் மே ‡ 25 ஆம் நாள் பிளாரன்ஸ் நகரத்திலேயே இறந்தார்.  

 மே 27 புனித கான்டர்பரி அகுஸ்தீன் ஆயர் 

           இவர் உரோமையில் பிறந்தார். முதல் கிரகோரியார் என்னும் பாப்பு திருச்சபையை வழி நடத்தி  வந்தார். பிரிட்டனில் வாழ்ந்த  மக்கள் கிறிஸ்தவ மறையை பின்பற்ற விரும்புவதாக பாப்பு அறிந்து, உரோமையில் உள்ள புனித அந்திரேயாவின் துறவு மடத்திலிருந்து அகுஸ்தீன், திருத்தந்தையால் கி.பி. 597‡இல் நற்செய்தி அறிவிப்பதற்காக, இங்கிலாந்து அனுப்பப் பெற்றார். கென்ட் பகுதிக்குத் தலைநகரான கான்றர்பரிக்கு ஆயராக்கப்பட்டு பலரை மனந்திருப்பினார். இலண்டன், மார்க், போன்ற ஒரு சில திருச்சபைகளை இவர் தொடங்கி வைத்தார். ஏறத்தாழ 605‡இல்  உயிர் துறந்தார்.

மே 30 புனித ஜோன் ஆப் ஆர்க் (1412  1431)

       இப்புனிதரை பிரான்ஸ் நாட்டில் தொமரெமி என்னும் கிராமத்தில் 1412 ‡ இல் பிறந்தார். சிறுவயதிலேயே புனித மிக்கேல், புனித கத்தரீன், புனித மார்கரீத் இவர்களது குரல்களைக் கேட்டாள். 1428‡ இல் அந்த குரல்கள் உடனே போய், பிரான்ஸ் நாட்டு மன்னருக்கு உதவி செய். அவர் தம் நாட்டை திரும்பப் பெற துணை செய் என்று கட்டளையிட்டன. பல எதிர்ப்பின் இடையிலும் ஒர் இராணுவத்தின் உதவியால் 1429-இல் ஆர்லியன்ஸ் நகரைக் காப்பாற்றினாள். இன்னொரு நகரைக் காக்க செய்த போரின் போது இவளைப்பிடித்து  ஆங்கிலேயரிடம் கையளித்தார்கள். இவள் தனது சொற்களால் நடுவர்களை திகைக்கச் செய்தாலும், இவளைச் சாவுக்கு தீர்ப்பிட்டு 1431‡ல்  சுட்டு எரித்தனர்.

மே  31 தூய கன்னிமரியா எலிசபெத்தைச் சந்தித்தல்

இவ்விழாவில் 4 நிகழ்ச்சிகளைக் கொண்டாடு கிறோம்.

1. கன்னிமரியாள் தன் உறவினளான எலிசபெத்தை சந்திக்கச் சென்றது.
2. திருமுழுக்கு யேவான் கன்னிமரியாவின் வாழ்த்தினைக் கேட்டு, அன்னை வயிற்றில் துள்ளியது 
3. துய ஆவியால் ஏவப்பட்டு, எலிசபெத் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே என பாராட்டியது. ஏறக்குறையை 3 மாதத்திற்குப் பின் மரியா வீடு திரும்பியது.
4. என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப்போற்றுகின்றது என்னும் உயரிய பாடலை மரியாள் இசைத்தது.

Tuesday, 2 May 2017

நான் எழுத்தாளன் ஆனேன்...

நான் எழுத்தாளன் ஆனேன்... 
- லெயோ ஜோசப் 


கச்சேரி  தயார் செய்து வைத்திருந்தோம். ய்r. ஜார்ஜ் வந்தார். கூடவே ஜெர்மனியிலிருந்து ஒருவரும் வந்திருந்தார். ஃபாதர் ஞானப்பிரகாசத்தைக் கூப்பிட்டு, “பக்கத்திலிருக்கும் ஊர் எதிலாவது  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்” என்று கூறினார். 
         
 அவர் மலையடிப்பட்டியில்  ஏற்பாடு செய்தார். மாலையில் எல்லாரும் வேனில் புறப்பட்டோம். ஒவ்வொரு நடனத்துக்கும் இடையில் நகைச்சுவையாக பேசுவேன்.  மக்கள்  எல்லோரும் சிரிப்பபார்கள்.
“ஏன் எல்லோரும் சிரிக்கிறார்கள்?” என்று ஜெர்மன்காரர் கேட்பார்.  Fr. ஜார்ஜ் நான் பேசியதற்கு விளக்கம் சொல்லுவார். அப்படியானால் எங்கள் நாட்டிலும் இந்நிகழ்ச்சியை நடத்துங்களேன். முக்கிய பகுதிகளில்  நான் ஏற்பாடு செய்கிறேன்”  என்றார்.  இன்னொரு அம்மையார் வந்தார்கள். அவர்கள், “மற்ற பகுதிகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்கள். முடிந்தது, ஜெர்மனிக்கு கலைக் காவிரி நடனக்குழு போவது உறுதியாயிற்று.    இப்போது நான்  குழுவுடன் போவதா, வேண்டாமா என்பதில் பிரச்சனை எழுந்தது. நான் நன்றாக நடிப்பேன் என்பதால், 

நான்  குழுவுடன் போக வேண்டுமென்பது பலரது விருப்பம். ஆனால், அச்சகத்திலும் ஒருவர் இருக்க வேண்டும். ஃபாதர்  Fr. . ஜார்ஜ் சொன்னார். “லீமாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால், ஒவ்வொரு சந்தேகத்தையும் ய்r.  ஸ்தனிஸ்லாசைக் கேட்டுச்  செய்ய வேண்டும். அவர் சற்று தூரத்தில் இருக்கிறார். ஆனால், லியோ ஜோசப் என்றால் கவலையே இல்லை. இயேசு காவியம் முழுவதும் அவருக்குத் தெரியும். எதிலாவது சந்தேகம் என்றால் அவரே சரி செய்துக் கொள்வார். 2 வாரத்துக்கு ஒரு தடவை அவர் குடும்பத்தை வந்து  பார்த்து விட்டுப் போகட்டும்” என்றார். அப்படியே முடிவாயிற்று. அவர்கள் ஜெர்மனிக்குப் போனார்கள். நான் அச்சகத்துக்குப் போனேன்.
 
கண்ணதாசன் அமெரிக்காவுக்குப் போனார் ஜெனரல் செக்அப்புக்காக. அவரது குழந்தை விசாலி அப்போது ஐந்து வயது சிறுமி. அவரது போட்டோவைப் பாக்கெட்டில் வைத்து, கண்ணதாசன் அடிக்கடி பார்த்துக் கொள்வாராம்.    யார் அந்தச் சிறுமி? உடனே வரவழையுங்கள் என்று டாக்டர்கள் கூறி விட்டார்களாம். 3- வது மனைவியும் உடனே புறப்பட்டுப்  போனார்களாம். Fr.  ஜார்ஜ் அமெரிக்காவுக்குப் போனார். இயேசு காவியத்தில் அதுவரை அச்சாகியிருந்த பாரங்களை ஒரு புத்தகமாக எடுத்துப்  போனார். கண்ணதாசனைப்  பார்த்துத் அச்சாகி யிருந்த பாரங்களைக் காண்பித்தாராம். கண்ணதாசன் 
தலையசைத்தாராம். “ஹிந்தியில்மொழிபெயர்க்கிறேன் என்கிறார்கள். அனுமதிக்கலாமா?” என்று  Fr. ஜார்ஜ் கூறியிருக்கிறார். கண்ணதாசன் தலையை ஆட்டினாராம். தமிழ்நாட்டைச் சேர்ந்த குருவானவர் ஒருவர் நோயாளியுடன் பேசுவதை மருத்துவமனை யின் தலைமை சகோதரி   கவனித்திருக்கிறார். அவர் Fr. ஜார்ஜிடம் விசாரித்திருக்கிறார்.
       
 “அவர் தமிழ்நாட்டின் பெரிய பொயட். இயேசுவின் வரலாற்றைக் கவிதையாக எழுதியிருக்கிறார்” என்று Fr.  ஜார்ஜ் கூறியிருக்கிறார். உடனே ஒரு சிலுவையை தலைமாட்டில் மாட்டியிருக்கிறார் சகோதரி.  அதன் பிறகு அவரைக் கவனிக்கும் பொறுப்பை சகோதரி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

 கண்ணதாசன்  திடீரென்று மரணமடைந்தார். அங்குள்ள டாக்டர்களே சொன்னார்களாம், “இப்படி திடீரென்று போவார் என்று தெரிந்திருந்தால் கொஞ்ச நேரம் பேச வைத்திருக்கலாம்”என்று.  தமிழகமே துயரத்தில் ஆழ்ந்தது.

      Fr. ஸ்தனிஸ்லாசும், சந்திரமோகனும், நானும், டிராயிங் மாஸ்டரின் துணையுடன் ஒரு மலர் வளையத்தின் நடுவே, “இயேசு   காவியம்” என்றெழுதி, கண்ணதாசனின் காலடியில் வைத்தோம்.

அமெரிக்காவிலிருந்து கேபிள் வந்தது, பாடி மேல் கெமிக்கல் அப்ளை செய்திருக்கிறோம். பல மாதங்களுக்குக் கெடாது. யாராவது தொட்டு விட்டால் உடனே சோப்புப் போட்டு கையைக் கழுவி விடுங்கள் என்று.
( இன்னும் சொல்வேன் )   

Ads Inside Post