Pages - Menu

Friday, 28 October 2016

பாடங்களின் இமயம், இறப்பு

பாடங்களின் இமயம், இறப்பு 

குடந்தை பங்கின் கல்லறை, மறைமாவட்ட மேய்ப்பு பணி அலுவலகம் அருகே உள்ளது. நான் அடிக்கடி காணும் காட்சி, மக்கள், அடிக்கடி இறந்தவரின் கல்லறைகளுக்குச் சென்று, இறந்தவர்களை நன்றியுடன் நினைவுக் கூர்ந்து அவர்களுக்காக செபிக்கிறார்கள். நம்முடன் இணைந்து வாழ்ந்து பிரிந்தவர்களை நினைக்கும்போது வாழ்வின் வெறுமை வெளிச்சத்திற்கு வருகிறது.

கவிஞர் வைரமுத்து, “உங்களால் தாங்கமுடியாதது எது?” என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் தருகிறார். “தாங்க முடியாதது, பழகியவர்களின் மரணம். தத்துவாகும் போது மரணம் எளிது. சம்பவமாகும்போது கொடிது. துடித்து போகிறேன். நினைவுகள் என்னும் ஆணிகளால் மாற்றி மாற்றி அறையப்படுகிறேன்” என்கிறார். ஜெயந்தி பாலகிருஷ்ணன் என்பவர், மூடர், முட்டாள் என்ற வார்த்தைகளுக்கு வேறுபாடு காட்டி விளக்குகிறார். “மூடர் என்றால், எதைப் பற்றியும் தெரியாமல் இருப்பவர், அறிவு வேண்டாம் என்று இருப்பவர். ஆனால் முட்டாள் என்பவர் தப்பு, தப்பா புரிஞ்சிக்கறவங்க. உண்மையான பதில் எது? என்று தெரியாமல் குழம்பிகிட்டு இருக்கிறவங்க” என்ற விளக்கமளித்து, இதற்கு ஒரு கதையைக் கூறுகிறார். பணம் சேர்ப்பதிலேயே வெறியாக இருந்த கஞ்ச வியாபாரியிடம் மரணம் வருகிறது. “உடனே உன்னை எடுத்துக் கொள்ள போகிறேன்” என்கிறது. “ஐயோ இவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறேனே. அனுபவிக்க சில காலம் கொடு” என்றான். “அதற்கு வாய்ப்பில்லை, உடனே புறப்படு” என்கிறது மரணம். “இரண்டு வினாடிகளாவது கொடு, என் கருத்தை எழுதிவைத்துவிட்டு வருகிறேன்” என்கிறான். இப்பொழுது எழுதுகிறான், “ஓடி ஓடி உழைத்து சேர்த்ததை ஒருமுறை கூட பார்க்க முடியாமல் என்னை மரணம் அழைத்து சென்றுவிட்டது” என்று எழுதி முடிக்கிறான். மரணம் அவனை கவ்விக் கொண்டது.

ஒரு முனிவரிடம் ஒருவர் சீடராக விரும்பினார். முனிவரிடம் அதற்காக கேட்டபோது, “ஒரு பத்து அடங்க சடங்கில் பங்கெடுத்து விட்டு பிறகு இங்கு வா” என்றாராம். என்னை பொறுத்தவரை மரணம், நம் குறைவான நிலையை கொத்திக் காட்டும் பறவை. மனிதர், அந்த முட்டாள் வியாபாரியைப் போல. மனிதரின் நிலையாமையை உணர்வதில்லை.

டிக் ஷார்ப்பிஸ் என்ற அறிஞர் கூறுகிறார், “இறப்பு, மனிதா, நீ நிதானத்தை கடைபிடி என்று எடுத்துக்கூறும் இயற்கையின் ஆசிரியர்” என்கிறார்.

இயேசு, “மனிதரின் வாழ்வு நிலைத்தது. எனவே களைக்க வேண்டாம். மனிதருக்கு உயிர்த்த வாழ்வு உண்டு” என்கிறார். புதுமையான கருத்து இது “என்னில் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்கிறார் (யோவா 11 ; 25). ஆனால், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே” என்றும் கூறுகிறார். எனவே இயேசுவில் இணைந்தவர்தான், இறப்பினும் வாழ்வு பெறுகிறார். இறந்தபின்னும் வருகின்ற வாழ்விற்கு. இவ்வுலக வாழ்வு முதல்பாகம். “இறையாட்சி கண்ணுக்கு புலப்படும் முறையில் வாரது. இதோ இங்கே, அல்லது அதோ அங்கே! என சொல்லமுடியாது. ஏனெனில் இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்கிறார் இயேசு (லூக் 17 ; 20 - 21).

எனவே தான், பவுல் அடிகளார், மரணம் தருகின்ற வீண் பயத்தை விரட்டியடிக்கிறார். “சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?” என்கிறார்.

நம்மில் ஒவ்வொருவரிடமும் புதைந்திருக்கும் இறப்பு, எளிமையையும், பணிவையும் பிறப்பிக்க வேண்டும். மன்னிப்பையும், இனிமை பண்பையும் அழைத்து வரவேண்டும்.

நம்மை விட்டு பிரிந்த நம் உறவுகள் நமக்கு பாடமான முன்னோடி. அவர்களை இம்மாதத்தில் சிறப்பாக நினைப்போம். அவர்களின் நினைவில் நனைவதோடு, வாழ்வின் பெருமையை உணர்வோம். நற்செய்கைகளால் நிலைவாழ்வோடு இணைவோம்.

Thursday, 6 October 2016

இறையடியார் லூர்து சேவியர் சவரிராயன் அவர்களின் புனிதர் பட்ட ஆயத்தப்பணிகள்

இறையடியார் லூர்து சேவியர் சவரிராயன் அவர்களின் புனிதர் பட்ட ஆயத்தப்பணிகள்

-அருள்பணி.செ.இன்னோசென்ட், 
வேண்டுகையாளர்

அன்புள்ள வாசகர்களே!  குடந்தை மறைமாவட்டம் பூண்டி அன்னையின் திருத்தலத்தில் உழைத்து இறைவனடி சேர்ந்த அருள்பணி. வி.எஸ்.லூர்து சேவியர் அவர்களை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் முதல் படியாக, உரோமையிலுள்ள புனிதர் பட்டம் வழங்க பரிந்துரைக்கும் பேராயம் அருள்தந்தை அவர்களை 04.04.2016 அன்று இறையடியார் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது. நமது இறையடியாரை புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகளை தொடர்ந்து நடத்த அனுமதியும் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நம் இறையடியார் லூர்து சேவியர் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தபோதும், அவரது மறைவுக்குப்பின்னும், இறைமக்கள் இறையடியாரின் பரிந்துரையால் இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளை, புதுமைகளை சேகரித்து வருகிறோம். நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது சாட்சியங்களை கடிதம் மூலமாக அனுப்பி வருகிறார்கள். பூண்டி அன்னைத் திருத்தலத்திற்குச் சென்று நேரடியாக பதிவும் செய்து வருகிறார்கள். அவைகளில் ஒரு சிலவற்றை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு இதழிலும் வெளியிடுவதில் பெருமைக் கொள்கிறோம்.

அதைப் போன்ற நன்மைகளை நீங்களும் பெற்றிருந்தால், உங்களது சாட்சியங்களை கடிதம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பூண்டி அன்னையின் திருத்தலத்தில் பதிவு செய்யலாம். பல புதுமைகளை பூண்டித்தாயின் வழியாக இறைவனிடமிருந்து பெற்றுத்தந்த நம் இறையடியார் லூர்து சேவியர் அவர்களிடம் வெண்டிக்கொள்ளலாம். உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி. இப்பணிக்கு தங்களின் மேலான பொருளுதவியை திருத்தலத்திற்கு அனுப்பலாம்.

என் உயிர் ஓர் வரலாற்று சாட்சி

எனது பெயர் அ.அருள்மேரி என்னும் செபஸ்தியம்மாள். நான் தஞ்சை மறைமாவட்டம் புதுக்கோட்டை பங்கில் உள்ள வடக்குப்பட்டி என்னும் கிளைப்பங்கில் 1956இல் வெள்ளிக்ழமை அன்று தந்தை: சவரிமுத்து, தாய்: அன்னம்மாள் என்ற தம்பதியருக்கு பிறந்த முதல் பெண்குழந்தை. நான் பிறந்த 6‡வது மாதத்தில் என் பெற்றோர் என்னைத் தூக்கிக் கொண்டு ஓரியூர் புனித அருளானந்தர் கோவிலுக்கு சென்றார்கள். எனக்கு செபஸ்தியம்மாள் என்ற ஞானஸ்நான பெயரை புதுக்கோட்டையில் பெற்றிருந்தாலும், செம்மண் புனிதர் அருளானந்தரின் நினைவாக அருளாயி அம்மாள் என்றே என்னை அழைத்திட ஆசைப்பட்டு இவ்வழக்கப்பெயரை ஓரியூரில் வைத்தார்கள். நாங்கள் குடும்பமாக மாட்டுவண்டியில் சென்றிருந்தோம். ஓரியூரிலிருந்து திரும்புகையில் மாட்டுவண்டியில் உள்ள சக்கரத்தின் அச்சு முறிந்ததால், அவ்வண்டியை அங்கே விட்டுவிட்டு கால்நடையாகவே என் பெற்றோர் என்னை சுமந்துகொண்டு வடக்குப்பட்டி வந்து சேர்ந்தார்கள். இந்நிகழ்வுக்கு பின் ஒருசில தினங்களில் என் தாய் அம்மை நோயினால் இறந்துபோனார்கள். என் தந்தையோ பிறப்பிலிருந்தே கால் ஊனமானவர். என் தாயின் இறப்புக்குப்பின் என்னை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். என் தாயின் பிரிவுக்குபின் இரண்டு வாரத்தில் எனக்கு வாந்தியும், பேதியும் ஏற்பட்டதால் நான் இறக்கும்தருவாயில் இருந்தேன். ஊனமான என் தந்தை திருச்சி பெரிய அரசு மருத்துவமனையில் நான்கு மாதம் வைத்துக் காப்பாற்ற முயற்சித்தார். அங்கு மருத்துவர்கள் இந்த குழந்தை பிழைக்காது என வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள். என் தந்தையோ சிங்கப்பூரில் இருபது வருடத்திற்கு மேலாக சம்பாதித்த பணத்தைகொண்டு தனியார் மருத்துவமனையிலும் செலவு செய்து என்னை காப்பாற்ற முயற்சித்தார். என் அம்மா வெள்ளிக்கிழமை இறந்ததாலும், நான் வெள்ளிக்கிழமை பிறந்ததாலும் பலமுயற்சிகள் எடுத்தும் அவர் சந்தித்தது தோல்வியே. ஆறு, ஏழு மாதமான இந்த பொம்பள புள்ளையை தாய்ப்பால் இல்லாமல் எப்படி காப்பாற்ற முடியும். இந்தப்புள்ளை இறந்தால் அது அப்படியே போகட்டும். இனிமேல் செலவு செய்யாதே என என் உறவினர்கள் கூறினார்கள். அப்போது திருச்சி உறையூரில் அற்புதசாமி என்பவர் வசித்துவந்தார். என் தந்தையின் உறவினரான அவர், எதார்த்தமாக என் அப்பாவிடம், ‘ஏனப்பா இப்படி கஷ்டப்படுற? பூண்டியில் லூர்து சேவியர்ன்னு ஒரு சாமியார் இருக்காரு. அவருகிட்ட போய் ஒரே ஒரு முறை மந்திரிச்சிட்டு வா. அதுலயும் சரியாகலைன்னா விட்டுடு. தயவுசெய்து உன் புள்ளையை தூக்கிக்கிட்டு போ’ என்றதும், என் அப்பா மிகுந்த நம்பிக்கையோடும், சந்தோ­த்தோடும் என்னை சுமந்து கொண்டு பூண்டிக்கு உடனே வந்தார். அங்கிருந்த புனித தந்தையை நேரடியாக சந்தித்து பின்வருமாறு கூறினார். ‘சாமி, என் மனைவி இந்த புள்ளையை பெததுட்டு ஆறு, ஏழு மாசத்துலேயே செத்துட்டா. தாயில்லா இந்த புள்ளைக்கு வாந்தி, பேதி நிக்கல, டாக்டருங்க, இந்த புள்ளை பொழைக்காதுன்னு சொல்லிட்டாங்க. நீங்கதான் சாமி காப்பாத்தனும். மந்திரிச்சி கொடுங்க சாமி’ என்றதும், நகைச்சுவை தன்னை இயற்கையாகவே கொண்ட தந்தை. லூர்து சேவியர் என்னை பார்த்துவிட்டு, அடடா உன் புள்ளை ‘பொழைக்காதுய்யா, செத்துப்போக போதுய்யா, நீ என்னய்யா செய்யப்போற?’ என்று கூறினார். இதைக்கேட்ட என் தந்தையோ தலையில் அடிச்சிக்கிட்டு, ‘நான் என்ன பண்ணுவேன் சாமி, என் பொண்டாட்டியும் இல்லை. இப்ப புள்ளையும் இல்லையா’ என அழுதுபுலம்பினார். இதைக் கண்ட தந்தை. லூர்து சேவியர், சிரித்த முகத்தோடு, என் கையையும், என் தந்தையின் கையையும் பிடித்துவிட்டு, ‘உன் புள்ளை சாகாதுய்யா, இப்ப என்னய்யா ஆறு, ஏழு மாசம் தானய்யா ஆவுது. நோய் சரியாயிடும்ய்யா, கவலைப்படாம புள்ளையை தூக்கிக்கிட்டு போ, இதுக்கு சாவு இப்ப இல்லைய்யா’ என்று மந்திரித்துவிட்டு அனுப்பி வைத்தார். சந்தோ­த்தோடு என் அப்பா வடக்குப்பட்டி போனார். இன்று எனக்கு ஐம்பத்தொன்பதிலிருந்து அறுபது வயதாகப்போகிறது. என் வாழ்க்கை பயணத்தில் பல நோய்கள், தடைகள், பிரச்சனைகள், ஆபத்து விபத்துக்கள். இந்த போராட்டத்தில் இதுவரை அவர் வழியாக பூண்டி மாதா எனக்கு செய்த நலன்களுக்கு நன்றி. அருள்தந்தை. லூர்து சேவியர் ஓர் புனித தந்தை என்பதற்கு என் உயிர் ஓர் வரலாற்று சாட்சி. பூண்டி அன்னைக்கும் புதுமை தந்தைக்கும் நன்றி!

இப்படிக்கு
அருளாயி,க/பெ. பால்ராஜ், சின்னராணிபட்டி, வத்தலைக்கோட்டை (அஞ்சல்), குளத்தூர் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம்,

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்

- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
விரகாலூர்
குரு தரிசனப்படலம் தொடர்ச்சி :
விண்ணகத்தின் சிறப்பு

விண்ணகத்தில் எல்லாம் வல்ல இறைவனே ஆட்சி செய்கின்றார். அங்கு தூய்மை, அறம், அருள் முதலியவை சிறந்து விளங்குகின்றன. இறைவனுடைய மாட்சியால் அந்நாடு செழித்து விளங்குகின்றது. அந்நாட்டிலிருந்து அருளாகிய மேகம் கிளம்பி அன்பாகிய கடலில், அமுதமாகிய நீரை எடுத்துக் கொள்ளும். அது தெய்வத்தன்மை பொருந்திய  ஒப்பற்ற அருள் மழை பொழியும். நன்மை தரும் வெள்ளம் பெருகி வாழ்வளிக்கும் கங்கையாறாய் அந்நாட்டில் ஓடும். அந்த நதி மிக உயர்ந்த இமயமலையிலிருந்து இறங்கி தூய கற்பக மலரை ஏந்தி இரு கரைகளில் சிறந்த மேலான ஞானமணிகளை ஒதுக்கி, உலகம் செழிக்குமாறு பெருக்கெடுத்து ஓடியது. தந்தை, மகன், தூயாவி என்னும் மூன்று சிகரங்களிலிருந்து தோன்றி குற்றமில்லாத அறிவாகிய உணவுப்பொருள்களை விளையச் செய்து, அதை  உண்ணுமாறு உணவைத் தந்து கறைபடிந்த பித்தளை உலகை, தூய்மை விளங்கும் பொன்னுலகமாக்கி, மேன்மை பொருந்திய ஒழுக்கத்தை எக்காலமும் உடையதாக இருக்கும்.

“அருண்முகில் கிளம்பி யன்பி னார்கலி யமுதமொண்டு
திரமலி தருர ட்சண்ய திவ்விய சிகரி போர்த்துப்
பொருவருங் கருணை மாரி பொழிந்த புண்ணியமா நீத்தம்
ஒருமக மாகி ஜீவ கங்கையா யுலாய தன்றே”

இந்த ஆறு, திருமறைக்கு ஒப்பானாதாய் உள்ளும் வெளியும் தெளிவுடையதாய் குற்றங்களாகிய மரங்களை முறித்துத்தள்ளி நன்மைதரும் சிறந்த நெற்பயிர் வளரச் செய்து செழுமையை உண்டாக்கி பேரின்பக் கடலுள் சென்றுசேரும் தன்மையை உடையதாகும்.

இந்த ஆறு, இயேசுபெருமானின் அருளைப் போல விளங்குகின்றது. குளிர்ந்த அருளையுடையதாய், உயிருக்கு ஆதரவான வடிவம் பெற்றதாய், விண்ணிலிருந்து இறங்கிவரும் புதுமை அடைந்து, கட்டளைபடி நல்லொழுக்கம் கொண்டு உலகமக்கள் வாழ அன்பு பூண்டு உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றது.

இந்த ஆறு இம்மானுலேரின் இரத்தத்தைப் போன்றது. மனிதருடைய வாழ்வின் குற்றங்களின் அழுக்கைக் கழுவி, தூய்மையான உணவாகி, தாகம் தணிக்கும் தண்ணீருமாகி எப்பொழுதும் அறிவு வாழ்வை வளர்த்து, நற்பேறு அடைதலாகிய வாழ்வைத் தந்து பயன்படுகின்றது. மேலும் ஐந்து வகையான நிலங்களின் வேறுபாடுகளை நீக்கி, மருத நிலமாக வளப்படுத்தி அறத்தைப் பாதுகாத்து உயர்வு தாழ்வு இல்லாமல், மண்ணுலகில் எங்கும் சமமாய் நடத்தும் ஆற்றல் மிகுந்த இறைவனின் ஆணையைப் போன்றது. விரிந்த விண்ணில் தோன்றி, பல யுகங்களாக அசைந்து, நின்று அழிந்து, புறவுலகில் தோன்றும் பற்பல கோடிக்கணக்கான வியர்க்கத்தக்க வேறுபாடுகளின் வாழ்வு, கங்கையாற்றின் நீர்க்குமிழ்களைப் போன்று அழகாய் மிகுந்து காணப்படும்.

“புண்ணிய நதிதீ ரத்துப் பொருவரு மருத வைப்பில்
நண்ணிய பயிர்வ ருக்கந் தருக்குலம் பிறவு நல்கும்
எண்ணரும் பயனையீட்டி யிறைவனைப் பரவித் துய்த்துக்
கண்ணகன் றிருநா டெங்குங் கடிவிழாக் கொள்ளுமன்றே”

மிகுந்த வனத்தையுண்டாக்கி, நிலையான வாழ்வுதரும் கங்கையாறு எல்லா இடங்களுக்கும் பிரிந்து சென்று குளம், மடு, தடாகம் முதலியவற்றைக் குறைவில்லாமல் நிரப்பி உண்மை பொருந்திய மருத நிலத்தின் களங்கத்தை நீக்கி, இதயமென்னும் வயல்களில் சென்று சேர்ந்தது. இறைவனுடைய நிலத்தை வளப்படுத்தும் உழவர்கள், ஏரினால் நிலத்தை உழுது, இறைவனை வணங்கி, விதைகளை விதைத்து, நீரைப் பாய்ச்சி எப்போதும் பயிர் வளத்தை உண்டாக்குவர். பிறவிப் பாவமும், நாம் அன்றாடம் செய்யும் பாவங்களாகிய புதிர்களை திருமறையாகிய வாளைக் கொண்டு வேரோடு வெட்டிச் சாய்ப்பர். நன்மை தரும் தூய நீர்க்கால்வாய்களைக் கொண்டு காட்டு நிலங்களை மருத நிலங்களாக மாற்றிப் பயன்படுத்துவர்.

“ஜீவநீர்த் தடங்க டோறுஞ் செழும்புணல் குடைவோ ரீட்டம்
தாவருங் கழனி தோறுந் தருமச்செஞ் சாலி யீட்டம்
பூமலர் பொய்கை தோறும் புதுமதுத் திவலையீட்டம்
மீவரு மெழிலி தோறும் வேந்தனோர் கருணையீட்டம்”

நம்பிக்கை ஏராகவும், ஆர்வம், ஊக்கம் ஆகிய இரண்டையும் எருதுகளாகவும், கடமையே எருதுகளை இணைக்கும் நுகத்தடியாகவும், ஒரே சிந்தையே அவற்றைக் கட்டும் கயிராகவும், இறைவனுடைய திருவார்த்தையை நன்றாக உழுது மனமாகிய வயலை வளமாக்கி திருப்பணி செய்வர். களைப் பரித்து பயிரைப் பாதுகாப்பர். மேன்மை பொருந்திய திருநாடெங்கும் உழவரின் உழைப்பினால் நெற்பயிரில் கருத்தோன்றி கதிர் முற்றி விளைந்து மிகுந்த இன்பத்தை உண்டாக்கும்.

வீரர்கள் தேனை உண்டு மகிழ்வர். மக்கள் மகிழ்ந்து நிழலில் அமர்ந்து இறைவனின் பண்புகளையும், பெயர்களையும் நெஞ்சம் நெகிழ்ந்து உள்ளம் உருகிப்புகழ்ந்து இசைப்பாடுவர். கரும்பு கணுக்களை விட்டு வளர்ந்து இனிய சுவை மிகுந்த பாகினைத் தரும். இறைமக்கள் இன்புற்று அனுபவிப்பர்.

விண்ணுலகில் உள்ள விண்நகரைச் சுற்றிலும் மலையரண், மதிலரண், நீரரண் உண்டு. இந்நகரின் கோபுர வாயிலில் செந்நிறக்  சிலுவைக்கொடி, தேடி வரும் வாடிய மக்களை வருக வருகவென வரவேற்கும். இறைவனைப் போற்றும் வாழ்த்தொலி இந்நகரெங்கும் கேட்கும். பல வண்ணங்களுடைய மாளிகைகளும், வாழ்வு தரும் நீர் நிலைகளும் அங்கு உண்டு. இறைவனுடைய மாட்சியே அங்கு ஒளியாய் விளங்கும். அங்கு இன்பத்தைத் தவிர துன்பம் என்பதே இல்லை. இறைவனுடைய அருள் செல்வம் திருக்கூட்டத்தினரின் நட்புறவு, இறைவனைப் போற்றும் இசையயாலி, இத்தகைய பேரின்பச் செல்வங்கள் அங்கு உண்டு.

அந்நகரத்தில் இறை தூதர்களும், தூய ஆவியின் கூட்டமும் இறைவனின் ஆணையின்படி ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடன் பணி செய்யும் கூட்டமும் இயங்கும். இறைவனை தூயவர், தூயவர், தூயவர் என்னும் மும்முரசு ஒலியும் இறைவனை வானவர் வாழ்த்தும் ஒலியும், பாடல் ஒலியும், யாழின் ஒலியும் அந்நகரில் எங்கும் கேட்கும். இங்குள்ள ஆற்றில் குளிப்பவர் மரணமில்லா வாழ்வைப் பெறுவர். இறைவனுடைய அருள் செல்வம், இறைமைந்தனின் திருக்காட்சி, அறிவுத் தெளிவினைத் தரும் தூய ஆவியின் தொடர்பு, இறைவனைப் புகழ்ந்துபாடும் பாடகர்களும், பாடல்களும் அந்நகரில் உண்டு. (தொடரும்)

Wednesday, 5 October 2016

நான் எழுத்தாளன் ஆனேன்

நான் எழுத்தாளன் ஆனேன்

- லெயோ ஜோசப்
12. பெயர் மாற்றம் பொன்விழா

நாடகம் எழுத ஆரம்பித்தேன். சகோதரர் யஹன்றி மாலை நாலு மணியளவில் அறைக்கே காபி கொண்டு வந்துவிடுவார். இரவு சாப்பாட்டுக்கு என்னை அழைத்துப் போய்விடுவார். சகோதரர்களுடன் சாப்பாடு, எனக்கு மட்டும் பால்.

ரெக்டர் அவ்வப்போது நாடகத்தைப் படித்துப் பார்ப்பார். திருத்தங்கள் சொல்வார். அவர் சொல்லும் திருத்ததங்கள் அத்துணை பொருத்தமாக இருக்கும். மூன்று நாட்களில் நாடகத்தை எழுதி முடித்து விட்டேன். நாடகத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கிராண்ட் ரிகர்சல், என்னையும் அழைத்திருந்தார்கள். ஒரு பேடும், பேப்பர்களும் கொடுத்து விட்டார்கள். நான் குறைகளை சொல்ல வேண்டும். நடிகர்கள் திருத்திக் கொள்வார்கள்.

நாடகம் முழு வெற்றி பெற்றது. சகோதரர் யஹன்றி எனக்கு 50 ரூபாய் கொடுத்தார். நாடகத்துக்காக 100 ரூபாய் கொடுப்பதாக முடிவு செய்திருந்தார்களாம். நாடக ஆசிரியரையும், என்னையும் மேடையில் ஏற்றி கெளரவிப்பதாக இருந்தார்களாம். முழு நாடகத்தையும் சைக்ளோஸ்டைல் செய்து விற்பனைக்கு வைத்திருந்தார்களாம். அவர் அதை ஆட்சேபித்திருக்கிறார். இதனால் இருவரையும் மேடையேற்றவில்லை.

நான் புனித சின்னப்பர் குருத்துவக் கல்லூரியின் ஆஸ்தான நாடக ஆசிரியர் ஆகிவிட்டேன். அதன்பிறகு நாலைந்து ஆண்டுகளுக்கு நான்தான் நாடகம் எழுதிக் கொடுத்தேன்.

பிலோமினாள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சிஸ்டர் பெல்லா போனில் அழைத்தார்கள். போனேன் ‘எங்க சபை ஆரம்பத்துல ‘வியாகுல மாதா சபை’ என்ற பெயரில்தான் தொடங்கியது. திருச்சி, எடத் தெருவைச் சேர்ந்த 5 பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் ‘மரியின் ஊழியர் சபை’ எனப் பெயர் மாற்றம் அடைந்தது. இப்போது பெயர் மாற்றப் பொன்விழா கொண்டாடப் போகிறோம்’.

‘அதுக்கு ஒரு நாடகம் வேணும். நீங்கதான் நல்லா நாடகம் எழுதுவீங்களே! இங்க சிஸ்டர் கொரோனா, சபை வரலாறு ஒன்று எழுதியிருக்காங்க. அது புத்தகமா எங்ககிட்ட இருக்கு. அத உங்ககிட்ட தரோம். நீங்க அத நாடகமாக எழுதித் தரணும்’ என்றார்.

‘ஆமா, நான் நாடகம் எழுதுவேன்னு யாரு உங்ககிட்ட சொன்னது?’ என்று கேட்டேன்.
‘நாங்கதான் செமினரி நாடகத்துக்கு வந்தோம்ல!’ என்று சிரித்தார்.
‘சரி சிஸ்டர், யாரு நடிக்கப் போறாங்க?’
‘எங்க நாவிஸ்ங்கதான். நீங்கதான் பயிற்சியளிக்கணும். எங்க நோவி´யேட் காஜா பேட்டையில இருக்கு. தினமும் போய் பயிற்சி குடுக்கணும். முடியுமா?’ என்று கேட்டார்.

‘சரி!’ என்றேன். தினசரி வேலை முடிந்ததும் நோவி´யேட்டுக்குப் போவேன். எந்தெந்த கேரக்டர்களில், யார் யாரைப் போடுவது என்று அவர்களே முடிவு செய்து வைத்திருந்தார்கள். அதனால், என் வேலை சுலபமாகி விட்டது. பயிற்சியளிப்பேன். இரவு சாப்பாடு அங்கு தான். வீட்டுக்கு வந்து விடுவேன்.

ஒரு மாதம் ஓடிவிட்டது. எல்லோரும் நன்றாகப் பயிற்சியடைந்து விட்டார்கள். செமினரியன்களுக்காக ஒரு நாளும், பொது மக்களுக்காக ஒருநாளும் ஆக இரண்டு நாட்கள் நாடகம் நடைபெற்றது. நாடகத்தில் சில புதிய முயற்சிகளைக் கையாண்டிருந்தோம்.

மாடியில் சில பேர் பேசுவதாக ஒரு காட்சி. மாடிக்குப் படிகள் ஏதும் கிடையாது. கைப்பிடிச் சுவர் மாதிரி ஒரு செட்டப் செய்திருந்தோம். சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள்; கதாநாயகி வந்து பேச்சில் கலந்து கொள்வார். நான் ஏற்கனவே கதாநாயகியாக நடிக்கும் பெண்ணிடம் சொல்லியிருந்தேன். உட்கார்ந்து, கொஞ்சங் கொஞ்சமாக எழுந்து வரவேண்டும் என்று. அவரும் அப்படியே செய்தார்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, மாடிப் படியில் ஏறி வருவது போன்றே இருந்தது.                              
 (இன்னும் சொல்வேன்

தூய்மை வாழ்க்கையால் துன்பத்தை துரத்துவோம்

தூய்மை வாழ்க்கையால் துன்பத்தை துரத்துவோம்

- பேராசிரியர். ச. சாமிமுத்து, திருச்சி

உலகில் எல்லோருடைய வாழ்க்கையிலும் இன்ப, துன்பங்கள், வெற்றி தோல்விகள் இருக்கத்தான் செய்கின்றன. இரவும், பகலும் போல இவை மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கும். இது மனித வாழ்க்கையில் உள்ள எதார்த்தம். இப்படி அமைந்துள்ள நம் வாழ்க்கையில், மனிதர் வாழவேண்டிய முறை அறிந்து, அப்படித்தான் வாழவேண்டும்.

மனிதனுடைய மனம் ஒரு குரங்கு போன்றது என்று கூறுவர். குரங்கு ஒரு நிலையில் இல்லாமல் கிளைக்குக் கிளை தாவித் திரிவதைப் போல் மனமும் நல்லது, கெட்டது, என்பவற்றிலே, நேரத்திற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, தாவித்தான் பார்க்கும். ஆனால், மனிதனுடைய மனம் குரங்கினுடைய ஐந்தறிவினைப் போன்றது அன்று. மனிதனுடைய மனம் என்பது அவனுக்கே உரிய ஆறாவது அறிவாகும். “மாவும், மாக்களும் ஐயறிவினவே மக்கள் தாமே ஆறறிவுயிரே”, என்பது தொல்காப்பியம், ஆய்ந்து கூறும் உண்மையாகும்.

“ஆறறி வதுவே அவற்றொடு மனனே”, என்பது தொல்காப்பிய நூற்பா. மனிதனுக்கே உரிய மனம், அவனுக்கே உரிய ஆறாவது அறிவாகும். அதைத்தான் நாம் பகுத்தறிவு என்று சொல்லுகின்றோம். நல்லதன் நலனும் தீயதன் தீதும் பகுத்தறிகின்ற அறிவுதான் பகுத்தறிவு.

மனிதன், தன் மனத்தைப் போகின்ற போக்கில் போகவிடுவது அவன் பெற்றிருக்கும் பகுத்தறிவுக்கு இழுக்காகும். எனவே, நம் எண்ணம், சொல், செயலை நன்றியின்பால் உய்ப்பதுதான் செலுத்துவதுதான், நல்லறிவின் - பகுத்தறிவின் தன்மை.
“சென்ற விடத்தால் செலவிடாத தீதொரீஇ 
நன்றின்பால் உய்ப்பது அறிவு”
என்பது, மனித வாழ்வு மேம்படத் திருவள்ளுவர் வகுத்துக் கூறும் வழியாகும்.

மனம் தூய்மையாய் இருப்பின், அது தீமைக்கு இடமளிக்காது. வெளிச்சம் இருக்கும் இடத்தில் இருட்டுக்கு வேலை இல்லை. எனவே, நாம் எண்ணத்தால், சொல்லால், செயலால் தூய்மை உடையவர்களாக இருப்பின், நம் மனமும் தூய்மை உடையதாக இருக்கும். அந்தத் தூய மனத்தில்தான் ‡ உள்ளத்தில்தான் இறைவன் குடிகொள்ளுகின்றான்.

இறைவன் விரும்புவது நாம் அள்ளிக் கொடுக்கும் பொன்னையும், பொருளையும் அல்ல. அள்ளித் தூவும் வெள்ளை நிற மலரையோ அல்லது வேறு எந்த நிற மலரையோ அல்ல. அவன் விரும்புவது நம் தூய உள்ளத்தைத்தான். உள்ளமாகிய தாமரை மலரைத்தான். அதில்தான் அவன் விரும்பி வந்து தங்குகின்றான்.
வெள்ளை மலருமல்ல வேறு எந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
என்பதுதான் ஆன்றோர் அறிந்துரைக்கும் உண்மை.

இறைவன் உண்மை வடிவினன்; நன்மை வடிவினன். அவ்வடிவினன் நம் உள்ளத்தில் குடிகொண்டு இருக்கும்போது அந்த உள்ளத்தினின்று வெளிப்படுவது அனைத்தும், உண்மையானவையாக, நன்மையானவையாகதான் இருக்க முடியும். ஒளியாக இறைவன் இருக்கின்றான். வள்ளலாரும், இறைவனை “அருட்பெரும் சோதி, தனிப்பெருங் கருணை என்கின்றார். பாரதியாரும், உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும்” என்கின்றார்.

மனிதனின் தூய மனம், உண்மை ஒளி தங்கும் இடம். மனத்தின் இயல்பான இப்பண்பைக் குழந்தை இடத்தில் காண்கின்றோம். குழந்தை மனத்தில், கள்ளம் துள்ளுவது இல்லை. வஞ்சம் கொஞ்சுவதில்லை!
‘அறம், மனத்தின் மாசற்ற தன்மையே’ என்பது வள்ளுவரின் சித்தாந்தம். அதனால்தான் “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்” என்றார்.
தூய்மை என்பது நம் மனத்தை - உள்ளத்தைப் பொறுத்தது. நம் உள்ளம் தூய்மையாய் இருந்தால் நம் சொல்லும், செயலும் தூய்மையாய் இருக்கும். இதற்கு ஒரு சான்று என் வாழ்க்கையிலிருந்தே இவண் குறிப்பிட விரும்புகிறேன்.

நான் 1990இல் திருச்சித் தூய வளனார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அதன்பிறகு 1992இல் திருச்சியில் உள்ள தில்லை நகருக்கும் அண்ணாமலை நகருக்கும் இடையில் ஒரு வயல் பகுதியில் இடம் வாங்கி எங்கள் குடும்பத்திற்கு  சொந்தமான வீடுகட்ட ஆரம்பித்தேன். என் வீட்டு இடத்திற்கு அருகில் திரு.பாலசுப்பிரமணியம் என்னும் ஒரு நண்பரும் இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தார். நாங்கள் வீடு கட்டி முடித்த பிறகு, எதிர்காலத்தில் அப்பகுதியில் மற்றும் சிலர் வீடு கட்டுவார்கள் என்று எண்ணியதால், அப்பகுதிக்கு ஒரு பெயர் வைத்துப் பெயர்ப் பலகை வைக்கலாம் என்று முடிவு செய்து நான் நண்பர் பாலசுப்பிரமணியத்திடம் நல்ல ஒரு பெயர் சொல்லும்படி கேட்டேன். இவர் இலட்சுமி நகர் என்று வைக்கலாம் என்றார். இந்தப் பெயரை இங்கு வீடுகட்டும் பலரும் விரும்புவார்கள் என்றார். நான் அதற்கு மறுப்புக் கூறாமல் எந்தச் சமயச்சார்பும் இல்லாத ஒரு பொதுப் பெயராக இருப்பது நல்லது என்றேன். மேலும், நாம் வீடுகள் கட்டும் தெற்கில் உள்ள தில்லை நகர் என்பது தில்லை நடராசரை நினைவுபடுத்துவதாகவும், வடக்கில் உள்ள அண்ணாமலை நகர், திருவண்ணாமலையாரை நினைவுபடுத்துவதாகவும் உள்ளனவே என்றேன். அவர் என்னிடம் ஒரு பெயர் சொல்லச் சொன்னார். நான் காவிரி நகர் என்று வைக்கலாம் என்றேன். அப்பெயரை வரவேற்ற அவர், அதில் ஒரு சிறு மாற்றம் செய்து காவிரிக்குப் பதிலாகக் காவேரி என்று வைக்கலாம் என்றார்.

நான் இதற்கு மறுப்புக் கூறாமல் சரி சிந்தித்துப் பார்ப்போமே என்றேன். உடனே அவர் இரண்டும் ஒரு பெயர்தானே, இதில் என்ன தயக்கம் உங்களுக்கு? என்று கேட்டார். தயக்கம் ஒன்றும் இல்லை. ஆனால், காவேரி என்பது ஒரு சமயச் சார்புடையதாக இருக்கிறது. அதனால்தான் இந்து சமயத்தார் பெண்களுக்குக் காவேரி  என்று பெயர் சூட்டுகின்றார்கள் என்றேன். அவரும் அதைப் புரிந்து கொண்டு அப்படி என்றால் காவிரி என்றே வைப்போம் என்றார். அதன் பிறகு அவர் காவிரி என்றால் ... என்று இழுத்தார். அவருடைய நல்ல உள்ளத்தைப் புரிந்துக் கொண்ட நான் ஐயா, கா+விரி என்றால் சோலை விரிந்த இடம் என்பது பொருள். இதில் எந்தச் சமயச் சாயலும் இல்லை. காவிரி என்பது ஆற்றை மட்டும் அதன் இயற்கைச் சிறப்பை மட்டும் குறிக்கும் சொல் என்றேன்.

அப்போது எங்களுடைய உள்ளங்களில் எந்த ஒரு தன்னலத் தன்மையும் இல்லாமல் தூய, பொதுமை நோக்கத்தின் தன்மையே பளிச்சிட்டது. எதிர்காலத்தில் இப்பகுதியில் வீடு கட்டிக் குடியேறும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பெயரை முன்னிட்டு மனக்கசப்புப் கொள்ள இடமே இல்லை என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்தோம்.

எந்த மன அப்பழுக்கும் இல்லாதவாறு அன்று அந்தப் பெயரை நாங்கள் வைத்ததால், இந்தக் காவிரி நகரில் வீடுகட்டிக் குடியேறிய அனைவரும் ‘மனித நேயமே இறைநேயம்’ என்பதை உணர்ந்து உறவு பாராட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தூய மனப்பாங்கின் பாற்பட்ட வாழ்க்கையால், சமயக் காழ்ப்புணர்ச்சியால் வரும் துன்பத்தைத் துரத்தி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

உலகில் வாழும் நாம், நம் மனத்தைத் தூயதாக வைத்திருந்தால், மன அழுத்தம் இருக்காது. மன மயக்கம், சஞ்சலம் இருக்கமாட்டா. ஆகவே, நம் மனத்தூய்மையைக் கெடுக்கும், பொறாமையையும், ஆசையையும், கோபத்தையும், கடுஞ்சொற்களையும் விட்டுவிட்டால், நம் மனம் - உள்ளம் தூய்மை வாழும் கோவிலாக இருக்கும்.

நாம் வாழும் வாழ்வு, நீதி, நேர்மை உடையதாக, அன்பு, அறமுடையதாக, பழித்துப் பேசாத பண்பு உடையதாக இருக்கும். பிறரிடம், குற்றங் கண்டு, குத்திப் பேசும், இழிகுணங்கள், அற்றதாக இருக்கும்.

எல்லா உயிர்களிடத்தும், நாம் அன்புடையவர்களாகவும், நடுநிலைமை தவறாதவர்களாகவும், அடக்கமும், ஒழுக்கமும் கொண்ட, உள்ளம் படைத்தவர்களாகவும் இருக்கும்போதுதான், நம் வாழ்வு செம்மையானதாக இருக்கும். நாமும் பிறரும் இன்புற்றிருப்போம்.
வாய்மையே வெல்லும்!
தூய்மையை பேரின்பம் நல்கும்!

Friday, 30 September 2016

அக்டோபர் மாத புனிதர்கள்

அக்டோபர் மாத புனிதர்கள்

- அருள்சகோ.G.பவுலின் மேரி FASG
கும்பகோணம்

அக்டோபர் 4     அசிசி நகர்  புனித பிரான்சிஸ் (கி. பி 1181 - 1226)

பிறப்பு : இத்தாலி நாட்டில் அசிசி நகர், 1881

இளமை : செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பிறகு செல்வங்களைத் துறந்து துறவு பூண்டார்.

தனிவரம் : இயற்கையில் இறைவனைக் கண்டு போற்றினார். விலங்கினங்கள் தன் நண்பர்கள் என்று அவைகளுடன் பழகினார். ஏழ்மையை தன் காதலி என்றார். மனிதரின் மாண்பினை உணர்த்த தொழுநோயாளரை கட்டி அரவணைத்தார். தற்போதைய திருத்தந்தை, இவரின் பெயரை தனதாக்கிக் கொண்டு இவரின் ஏழ்மையையும், எளிமையையும் பின்பற்றுகிறார். கிளாராம்மாளும் இவரின் வழியைப் பின்பற்றி தனி சபையை ஏற்படுத்தினார். இவரின் ஏழ்மை எளிமை ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தது. அவர்கள் இவரின் சபையில் சேர்ந்தனர். மூன்றாம் சபை என்ற பிரிவிலும் மக்கள் சேர்ந்து இவரின் வழியைப் பின்பற்றினர்.
இறப்பு : தன் 44வது வயதில் இறந்தார். இயேசுவின் ஐந்து காயம் வரம் பெற்றவர். 
 
க்டோபர் 7    புனித ஜெபமாலை அன்னை

மக்களும், துறவிகளும் பக்தியோடு மாதாவின் ஜெபமாலையை செபித்ததன் பயனாக 1571இல் கிறிஸ்தவர்கள் துருக்கியரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்கள். இதற்கு நன்றியாக வெற்றிகளின் அரசி என்னும் விழா கொண்டாடும்படி திருத்தந்தை 5‡ஆம் பியுஸ் கி.பி.1573இல் ஏற்படுத்தினார். ஜெபமாலையை சொல்லும்போது ஆண்டவரது வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு இவற்றைப்பற்றி சிந்திக்கிறோம். ஜெபமாலையின் தேவ இரகசியங்களைப்பற்றி சிந்திக்கும் நாம் இயேசு, மாதாவைப் போல வாழ முயலவேண்டும். ஜெபமாலையானது நம்மை மரியாளுடன் ஒன்றிக்கிறது.

அக்டோபர் : 9  புனித யோவான் லெயோனார்ட் (1541 - 1609)

இவர் இத்தாலியில் தஸ்கனிப் பகுதியில் கி.பி.1541இல் பிறந்தார். மருந்து செய்யும் கலையைத் கற்றார். ஆனால், அதைக் கைவிட்டுக் குருவாக விரும்பினார். போதிக்கும் திருப்பணி, சிறப்பாக சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுத்தார். 1547இல் இறை அன்னையின் பெயரால், துறவற மறைபபணியாளர்கள் சபை ஒன்றை நிறுவினார். இதனால் துன்பங்கள் பல அடைந்தார். பின்பு திருமறையை பரப்ப மறைப்பணியாளர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தினார். திருத்தந்தையர் பலரின் தீவிர முயற்சியால் இன்று அது வளர்ச்சி கண்டு, உரோமை நிறுவனத்திற்கு அடித்தளம் இட்டவர் என்று கருதப்பட்டார். திருச்சபையின் பற்பல சபைகள் மீண்டும் தங்கள் ஒழுங்கு முறைப்படி செயலாற்ற பரிவன்புடனும், முன்மதியுடனும் பாடுபட்டார். உரோமையில் 1609இல் இறந்தார்.

அக்டோபர் 13  புனித எட்வர்ட் (1004 - 1066)

இவர் இங்கிலாந்து நாட்டில் 40 வயதில் அரசராக முடிசூட்டப்பட்டார். செபித்து, பிறரன்பு செயல்கள் செய்து மக்களைச் சார்ந்து, நீதி, விவேகத்துடன் ஆண்டு வந்தார். எனவே மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்தார்கள். 23 ஆண்டுகளாக நாட்டை ஆண்டார். அநியாயமாக யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. மக்கள் இவரைத் தெய்வமாகக் கருதினார்கள். தம் நாட்டுக்கு வர இருந்த தீமைகளை இவர் முன்னறிவித்தார். பின்னர் நிறைவேறிற்று. திருச்சபையின், நாட்டின் தலைவர்களுக்கும் சாந்தகுணம். நீதி, விவேகம் ஆகிய தேவையான புண்ணியங்களை அருளும்படி மன்றாடுவோம்.

அக்டோபர் 15               புனித அவிலா தெரசாள் (1515 - 1582)

இப்புனிதை ஸ்பெயினில்  அவிலா நகரில் கி.பி.1515இல் பிறந்தார். கர்மேல் கன்னியர் சபையில் சேர்ந்து நிறைவுப் பாதையில் விரைந்து முன்னேறினார். தம் சொந்த சபையைச் சீர்திருத்த முற்பட்டுத் துன்பங்கள் பலவற்றைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டார். இதில் புனித சிலுவை அருளப்பர் உதவியினால் ஆண்களின் கார்மேல் சபையையும் சீர்திருத்தினாள். இடைஞ்சல்கள் அனைத்தையும் வீரத்துணிவோடு மேற்கொண்டார். மிக ஆழ்ந்த போதனை நிறைந்த நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் பயனுள்ளவை எனத் தம் சொந்த அனுபவத்திலேயே கண்டறிந்தார். இவர் ஆல்பா நகரில் 1582இல் இறைவனடி சேர்ந்தார்.

அக்டோபர் 18 புனித லூக்கா நற்செய்தியாளர்

இவர் சிரியாவில் உள்ள அந்தியோக்கியா நகரில் யூதரல்லாதார் குடும்பத்தில் பிறந்தார். திருமறையை முதலில் தழுவியவர்களில் இவரும் ஒருவர். இவர் எழுதிய நற்செய்தியில், எல்லையற்ற இரக்கத்தைக் காட்டும். ஊதாரிப் பிள்ளையின் உவமையை நமக்குத் தருகிறார். இவரின் நற்செய்தியில், சமத்துவம், பெண்களின் சிறப்பு, மன்னிப்பு, ஏழ்மை போன்ற சிறந்த கருத்துக்களைக் காணலாம். திருதூதர் பணிகள் நூலையும் இவர்தான் எழுதினார் என்பது அறிஞர்களின் கருத்து. இவர் ஒரு சிறந்த ஓவியர் என்றும் நம்பப்படுகிறது.

அக்டோபர் 24   புனித அந்தோணி மரிய கிளாரட் (1807 - 1870)

இவர் ஸ்பெயின் நாட்டில் சாலந்தில் கி.பி.1807இல் பிறந்தார். திருநிலைப்பாடு அடைந்து, பல ஆண்டுகள் கத்லோனியப் பகுதி எங்கும் சென்று மக்களுக்குப் போதித்தார். மறைபரப்பும் பணிக்கென்று சபை ஒன்று நிறுவினார். பின்பு கியுபா தீவின் ஆயரானார். மக்களின் மீட்புக்காக மிகத் திறம்பட உழைத்தார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். செபமாலை பக்தியையும், மரியாயின் மாசற்ற இருதய பக்தியையும் இவர் பரப்பினார். ஸ்பெயினுக்குத் திரும்பி வந்து, தொடர்ந்து திருச்சபைக்காகப் பல துன்பங்களைப் பொறுமையுடன் ஏற்றார். பிரான்சிஸ் ஃபான்ப்ராய்ட் என்னுமிடத்தில் 1770இல் இறந்தார்.

அக்டோபர் 26           புனித சிலுவை சின்னப்பர் (1694 - 1775)

இவர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு மீது சிறு வயதிலிருந்தே மிகுந்த பக்தி கொண்டிருந்தார். வேதத்திற்காக உயிரைவிட விரும்பிய இவர் துருக்கியரை எதிர்த்து போரிட இருந்த இராணுவத்தை விட்டுவிலகி, ஒரு புதுசபையைத் தொடங்கினார். சபை உடையை ஒரு காட்சியில் கண்டார். சிலுவையில் உயிர்விட்ட இயேசு மீது பக்தியை எங்கும் பரப்புவதே சபையின் நோக்கம். 50 ஆண்டுகளாக, இவர் கஷ்டங்களைப் பாராமல் இத்தாலிய நாடெங்கும் சென்று போதித்தார். கடவுள் இவருக்கு பல வரங்களைக் கொடுத்தார். எனினும் இவர் தம்மீது வெகு கண்டிப்பாக இருப்பார். ‘நான் பயனற்ற ஊழியன் நான் பாவி’ என்பார்.

அக்டோபர் 28 புனித சீமோன், யூதா ‡ திருத்தூதர்கள்

திருத்தூதர் பட்டியலில் 11ஆம் இடத்தில் உள்ளது சீமோனின் பெயர். இவர் கானாவூரில் பிறந்தவர். தீவிரவாதி என்றழைக்கப்பட்டவர். கடவுளின் சட்டங்களை அனுசரிப்பதிலும், பாவத்தை எதிர்த்துப் போராடுவதிலும், கிறிஸ்துவிடம் மக்களைக் கொண்டு சேர்ப்பதிலும் இவர் ஆர்வத்துடன் உழைத்தார். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் பாரசீக நாட்டில் வேதம் போதித்து, வேதத்திற்காக உயிரைக் கொடுத்தார். புனித யூதாவுக்கு ‘ததேயுஸ்’ என்ற வேறு பெயரும் உண்டு. ‘ததேயுஸ்’ என்றால் ‘தைரியசாலி’ என்று பொருள். இவர் புனித சின்ன யாகப்பருடைய சகோதரர். இயேசுவின் உறவினர். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் யூதேயா, சமாரியா, இதுமேயா, சிரியா, மெசபத்தோமியா, லீபியா ஆகிய இடங்களில் வேதம் போதித்து, ஆர்மேனியா நாட்டில் வேதத்துக்காக கொல்லப்பட்டார் என்பது பாரம்பரியம்.

பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

சா ஞா 11 : 22 - 12: 2;       2 தெச 1 : 11 - 2 : 2:               லூக் 19 : 1 - 10

மனிதர் இறைவன் இசைக்கும் இனிய தாளங்கள். ஆனால் சிலர் தப்புத் தாளங்களாக சூழ்நிலைகளால் சிதைக்கப்பட்டு விடுகின்றனர். தப்புத் தாளங்களை இனிய தாளங்களாக மாற்ற வேண்டும் என்று இயேசு அழைப்புக் கொடுத்தார். அதனையே செயலில் காட்டினார். ‘நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனமாற அழைக்க வந்தேன்’ என்றார் (லூக் 5 : 32). ‘பாவி’ என்பதற்கு கிரேக்க மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை, ‘அமார்த்தலோஸ்’ என்பதாகும். இது ‘அமார்த்தியா’ என்ற வார்த்தையிலிருந்து மருவி வருவதாகும். ‘அமார்த்தியா’ என்றால் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதில் காணும் தோல்வியாகும். ‘குறி தவறுதல்’ என்றும் கூறலாம். புதிய ஏற்பாட்டில் இந்த ‘பாவம்’, ‘பாவி’ என்ற வார்த்தைகள் பாவத்தை தவித்தல்,, மன்னிப்பு என்ற சூழலில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என அறிஞர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக மாற் 1 : 4இல் திருமுழுக்கு யோவான், பாவம் ‡ மன்னிப்பு ‡ மனமாற்றம் இவைகளை குறிப்பிட்டே மக்களுக்கு போதனை செய்தார் (காண் லூக் 3 : 3, தி ப 2 : 38).

இன்றைய நற்செய்தியில் சக்கேயு என்ற தலைமை வரிதண்டுபவர் இயேசுவின் வலையில் வீழ்கிறார். எரிக்கோ நகரில் வினோத பிரியனாக இயேசு யார்? என்று பார்க்க, குட்டையான சக்கேயு அத்திமரத்தில் ஏறுகிறான். நத்தனியேலை அத்திமரத்தின் கீழ் கண்டார் இயேசு. அத்திமரம், சட்டங்களை கற்கின்ற சூழலை கொண்ட மரம் என்பது ஒரு யூத வழக்கு. சக்கேயு அத்திமரத்தின் மீது ஏறுகிறான். இயேசுவை காண்கிறான். புதிய சட்டத்தைக் காண்கின்றான். தனது பேராசையான பாம்பு சட்டையை கழற்றி எறிகிறான். சக்கேயுவுக்கு இறைவாக்கினரைப் போல இயேசுவிடமிருந்து அழைப்பு வருகிறது. ‘சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும், இன்று உமது வீட்டில் தங்க வேண்டும்’. சக்கேயு என்றால் ‘தூய்மை’ என்று பொருள். பாவிகள் என்று கருதப்பட்ட வரிதண்டுபவர்கள் இயேசுவின் நண்பர்களாகிறார்கள் என்ற குறிப்பினை லூக்கா நற்செய்தியில் பல இடங்களில் பார்க்கிறோம். (லூக் 3 : 12 - 13; 5 : 27 - 32; 7 : 29 - 30; 15 : 1 - 2; 18 : 9 - 14).

வரிதண்டுபவர்கள் இயேசுவின் அழைப்பிற்கு பதிலளித்து மனமாறுகிறார்கள். சக்கேயு வரிதண்டுபவர் மட்டுமல்ல, பெரிய செல்வந்தர் என்றும் கூறப்பட்டுள்ளது. இயேசு செல்வந்தர் ஒருவருக்கு நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளும் வழியாக, ‘தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு’ என்றும் அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர் என்றும் அறிவுரை கூறினார். இதனைக் கேட்ட அந்த செல்வர் மிகவும் வருத்தமுற்றார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இயேசு செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்றார் (லூக் 18 : 18 - 27).

சக்கேயு என்ற ஒட்டகமான செல்வந்தன் ஊசியின் காதில் நுழைந்துவிட்டான். ஏனென்றால் தன் சொத்துக்களின் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடவும், தன்னால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு நான்கு மடங்கு ஈடுசெய்யவும் முன்வருகிறார். இவ்வாறு உயர்ந்த ஒட்டகம் சிறிய ஊசியில் நுழைகிறது.

முதல் வாசகத்தில, தவறு செய்பவர்களை இறைவனே சிறிது சிறிதாய் திருத்துகிறார் என்றும், இறைவன் இரக்கம் கொண்டவர் என்றும், மனிதர் மனந்திரும்ப வேண்டும் என்பதை விரும்புகிறார் என்றும் கூறுகிறது.

இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், கடவுள், உங்களை தாம் விடுத்த அழைப்புக்கு தகுதியுள்ளவராக்குவாராக என்றும், ‘உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும் நிறைவுற செய்வாராக’ என்றும் தெசலோனிக்கருக்கு அறிவுரை கூறுகிறார்
.
குறையில்லாத மனிதர் இல்லை. புல்டன் Uன் ஆண்டகை சிறை சாலை ஒன்றை சந்தித்தார். அப்போது அங்கிருந்த கைதிகளைப் பார்த்து கூறினார், நாம் எல்லோரும் ஒன்றுதான். ஒரே வேறுபாடு, நீங்கள் கம்பிகளுக்குப் பின்னால் உள்ளீரகள். நாங்கள் கம்பிகளுக்கு வெளியே உள்ளோம் என்றார்

Ads Inside Post