பணிவு என்னும் இனிய பாதை
- 1 புதிய வாழ்வியல் தொடர்
- அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியான மையம்.
1. விண்ணகத்தின் திறவுகோல் பணிவே
ஒரு நாள் இராயப்பர் மிகவும் கவலையுடன் கடவுளைச் சந்தித்தார். “ஆண்டவரே, மோட்சத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. சாத்தான் ஏதோ சதிவேலை செய்து எல்லாரையும் அவன் பக்கம் திருப்பி விடுகிறான். நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்” என்று வேண்டினார். கடவுள் இராயப்பரிடம், “இராயப்பரே! ஒன்று செய்யுங்கள். அவனிடம் சென்று சில நாட்கள் தங்கி அவனுடைய சித்து வேலைகளை எல்லாம் கற்று வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
இராயப்பர் சாத்தானை சந்திக்கச் சென்றார். இராயப்பரை பார்த்தவுடன் சாத்தானுக்கு அதிர்ச்சி. அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “வாருங்கள் இராயப்பரே! தாங்கள் என்னிடம் வருவதற்கு ஏதாவது முக்கியக் காரணம் இருக்க வேண்டுமே?” என்றுக் கேட்டான். இராயப்பர், “ஆமாம். எனக்கு நீ ஓர் உதவி செய்ய வேண்டும். உனக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் தருகிறேன். நீ எவ்வாறு கோடிக்கணக்கான மக்களை உம் பக்கம் இழுக்கிறாய்? என்ற இரகசியத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார். சாத்தான் அவரிடம், “இராயப்பரே, தங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். சரி, எவ்வளவு தங்கம் தருவீர்கள்?” என்று கேட்டான். “நூறு மூட்டை தருகிறேன்” என்றார் இராயப்பர். “100 மூட்டையா?” என்று கேட்டுவிட்டு சிரித்தான் சாத்தான். “சரி, அதற்கு தகுந்த ஓர் இரகசியம் சொல்கிறேன். மனிதர்களை பொய் சொல்ல வைப்பேன். அதுவே அனைத்து பாவங்களுக்கும் காரணமாக அமைந்துவிடும்” என்றான். சாத்தானுக்கு இன்னும் அதிகமாக பொன் தேவைப்படுகிறது என்பதை இராயப்பர் உணர்ந்து கொண்டார். “சரி, 1000 மூட்டை தங்கம் தருகிறேன்“ என்றார் இராயப்பர். “சரி, அதற்கு தகுந்தாற்போன்று மற்றொரு இரகசியம் சொல்கிறேன். மனிதரிடத்தில் கெட்ட எண்ணத்தை விதைப்பேன். அவர்கள் அடுக்கடுக்காக பாவம் செய்வார்கள்” என்றான். இராயப்பர், “சரி, உனக்குத் தேவையான பொன் தருகிறேன். முழுமையாகக் காரணத்தைச் சொல்“ என்றார் இராயப்பர். சாத்தானோ “இராயப்பரே, எனக்குத் தேவையான பொன்னை உங்களால் தரமுடியாது. ஏனென்றால் என் பேராசை அப்படி. சரி, உங்கள் காரியத்திற்கு வருகிறேன். மனிதரை எளிதில் என் வழியில் கொண்டுவர நான் இதைத்தான் செய்கிறேன். அவர்கள் மனதில் ஆணவத்தை விதைப்பேன். அதன் பிறகு அவர்கள் அனைத்து பாவங்களுக்கும் அடிமையாகி விடுவார்கள். சரி, நான் இதனை இலவசமாக உங்களுக்கு சொல்கிறேன். ஏன் தெரியுமா? ஆணவம் உடையவர்கள் அத்துணை விரைவில் அதை கைவிட மாட்டார்கள்” என்று சொல்லி எகத்தாளமாய் சிரித்தான்.
விண்ணகத்தில் உள்ள புனிதர்களில் சிலர் உலகில் வாழ்ந்தபோது தானதர்மம் செய்யாமல் இருந்திருக்கலாம். அவர்களுடைய ஏழ்மை அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
விண்ணகத்தில் உள்ள புனிதர்களில் சிலர் உலகில் வாழ்ந்தபோது தவமுயற்சியை மேற்கொள்ளாமல் இருந்திருக்கலாம். அவர்களுடைய உடல்நலக் குறைவு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் விண்ணகத்தில் உள்ள புனிதர்களுள் எவரும் உலகில் வாழ்ந்தபோது தாழ்ச்சியை, பணிவை கடைபிடிக்காமல் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் தாழ்ச்சி, பணிவு இல்லாமல் எந்த நல்லப் பண்பும் அவர்களிடத்தில் இடம் பெற முடியாது.
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே! எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும், மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்றார் இயேசு (மத் 11 : 28 ‡ 29).
இயேசு, அவரது பள்ளியில் பாடம் பயில அழைக்கிறார். எதற்காக அழைக்கிறார்? அவரைப் போல வல்ல செயல்களை செய்வதற்காக அல்ல. அவரைப் போல அதிகாரம் கொண்ட போதனையை கற்றுக் கொள்வதற்காக அல்ல. மாறாக, அவரிடத்தில் உள்ள கனிவை, சாந்தத்தை, பணிவை, புனிதத் தாழ்ச்சியை அணிந்து கொள்வதற்காக அழைக்கிறார்.
நம் வாழ்வின் பாதையை இனிமைப்படுத்தும் தாழ்ச்சியை, பணிவை கற்றுக் கொள்ள இயேசுவோடு சேர்ந்து பயணம் செய்வோமா?
No comments:
Post a Comment