Pages - Menu

Sunday, 3 April 2016

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு             10 - 04 -2016

தி. ப 5 : 27ஆ - 32, 40 ஈ - 41
தி வெ 5 : 11 - 14
யோவா 21 : 1 - 19

இன்றைய நற்செய்தியில் இயேசு ஆண்டவர் மீண்டும் சீடர்களை தன் பணிக்கு அழைத்தார். இயேசுவின் பாடுகளையும், மரணத்தையும் கண்டு பயந்து ‡ இதற்காகவா, இவருக்காகவா இவரைப் பின்தொடர்ந்தோம் என எண்ணி ஒருவேளை சீடர்கள் தம் பழைய மீன் பிடித்தொழிலுக்கே திரும்பிவிட்டனர். அத்தொழிலில் அவர்கள் உணர்ந்தது இயேசுவின் பிரசன்னத்தில் எல்லாம் கைகூடும். இயேசுவை விட்டு செய்யும் தொழிலில் வெற்றி கை கூடவில்லை என்பதை உணர்த்துகிறது.

இயேசுவை விட்டு அவர்கள் இரவுக்குச் சென்றார்கள், இருளுக்குச் சென்றார்கள். இருளில் தம் மீன்பிடித் தொழிலைத் தொடங்கினர். இரவும், இரவின் இருளும் பாவ நிலையைக் குறிக்கின்றன. பேதுரு இயேசுவை மறுதலித்து பாவம் செய்தவர். மற்றவர்கள் தம் உயிருக்குப் பயந்து இயேசுவை விட்டு ஓடியதால் பாவம் செய்தனர். எனவே பாவநிலையில்  தம் தொழிலைத் தொடங்கினர்.

மறுநாள் காலை இயேசு அவர்களுக்குத் தோன்றினார். அதாவது இருள் விலக ஒளி உதயமானது. இயேசு தோன்றிய போது அவர்களைத் தண்டிக்க முன்வரவில்லை. மாறாக கருணையோடு காட்சி கொடுத்தார். தன் உயிர்ப்பின் பிரசன்னத்தை உறுதி செய்தார். வலைகளை வலதுபுறம் வீசச்சொன்னார். அப்படியே செய்தனர். வலைகிழிய மீன்கள் கிடைத்தன. இயேசுவின் வார்த்தைப்படி வாழ்ந்தால் திருச்சபை பெருகும் என்பதை இந்த மீன்பிடிப்பு உணர்த்தியது. இல்லாத இடத்திலிருந்தும் மீன்களை பெருகச் செய்தவர் உயிர்த்த ஆண்டவர். திருச்சபை இல்லாத இடத்திலும் ஏற்படுத்தப்படும் என்பதை உணர்த்தினார். இதற்கு பேதுருவின் தலைமைத்துவம் தேவைப்பட்டது. இரு சிறுவர்கள் பேசிக் கொண்டனர். என் மீது உனக்கு அன்புண்டா? இருக்கு. அப்படின்னா எனக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடு. ஐஸ்கிரீம் பரிமாறப்பட்டது. இருவரும் மகிழ்ந்தனர். ஒருசில மணி நேரங்களுக்குப் பின் அவர்களுக்குள் ஒரு கோழிச்சண்டை எழுந்தது. அதே சிறுவன், என்மீது உனக்கு அன்பில்லையா? இல்லை. அப்படின்னா நான் வாங்கிக் கொடுத்த ஐஸ்கிரீமை திருப்பிக் கொடு என்றான். ஐஸ்கிரீமில்தான் இவர்களின் அன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அன்பு, உடலின் தேவைகளைச் சார்ந்த அன்பு இது ஈரோஸ் என கிரேக்க மொழியில் அழைக்கப்படுகிறது.

இயேசு பேதுருவை என்னை அன்பு செய்கிறாயா? என்று மும்முறை கேட்டார். மூன்று முறையும் பேதுரு இயேசுவை அன்பு செய்வதாக உறுதியளித்தார். மூன்று முறை என்பது முழுமையும், உறுதிப்பாட்டையும் விளக்குகிறது. அன்பு என்பது உணர்வது மட்டுமல்ல, அது வெளிப்படுத்தப்படுவது. அன்பு வெளிப்படுவது மட்டுமல்ல, அது வாழ்ந்து காட்டப்படுவது. இதை கிரேக்கத்தில் பிலோஸ் என்று அழைப்பர். வாழ்ந்து காட்டப்படும் போது உயிரையும் கொடுக்க வல்ல தியாகத்தில் ஊறியிருக்கும் அன்பை கிரேக்கம் அகாப்பே என்று அழைக்கிறது.


அன்பில் தோய்ந்தவர்கள் மட்டும்தான் மேய்ப்பர்களாக இருக்க முடியும். எனவே இயேசு பேதுருவின் அன்பின் வெளிப்பாட்டை ஏற்றதும் அவருக்கு மேய்ப்புப் பணியை ஒப்படைத்தார். அன்புள்ளம் கொண்டவர்கள்தான் பிறரைத் தேடமுடியும். பிறரை வழிநடத்த முடியும். தலைமைப் பொறுப்பில் அமர முடியும். பேதுருவின் அன்புக்கு ஆண்டவர் கொடுத்த பரிசு பொறுப்பு  தலைமைப் பொறுப்பு - மேய்ப்புப் பணி. இந்த அன்புக்கு பல முகங்கள் உண்டு ; மன்னிக்கும் முகம், அரவணைக்கும் முகம், சகித்துக் கொள்ளும் முகம், பிறரின் நலனுக்கு தன்னையே சிதைத்துக் கொள்ளும் முகம் இன்னும் பல.
ஒவ்வொருவருக்கும் பிறரை வழி நடத்தக்கூடிய பொறுப்பு உண்டு. பெற்றோர் குழந்தைகளை, நண்பர் நண்பரை, ஆசிரியர் மாணவர்களை, அலுவலர் பணியாளர்களை, இதுபோன்ற எல்லாரும் ஒருவகையில் பிறருக்கு அன்புகாட்ட அழைக்கப்பட்டுள்ளனர். அன்பிலே வாழ்வோம், அன்பை விதைப்போம், அன்பை அறுவடை செய்வோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post