Pages - Menu

Tuesday, 5 April 2016

வேதியரிடம் கேளுங்கள் - 10, நல்லை.இ.ஆனந்தன்

ஆலோசனை நேரம்
வேதியரிடம் கேளுங்கள் - 10
நல்லை.இ.ஆனந்தன்

திரு. அலெக்சாண்டர், குளத்தூர் :

1. வீட்டில் அம்மாவுக்கும், மனைவிக்கும் எப்போதும் சண்டை. எப்படி தீர்ப்பது?

உங்களைக் கருவில் சுமந்தவர் உங்கள் அம்மா. உங்கள் கருவைத் தன் வயிற்றில் சுமந்தவர் உங்கள் வீட்டுக்கார அம்மா (அதாவது மனைவி). எனவே, இருவருமே முக்கியமானவர்கள். அவர்களிடையே எழும் முக்கிய பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் நீங்களாக இருக்கும் பட்சத்தில் தயவுசெய்து உங்களை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். அம்மாவுக்குரியதை அம்மாவுக்கும், மனைவிக்குரியதை மனைவிக்கும் கொடுங்கள். பிரச்சனைகள் தானாகத் தீர்ந்துவிடும்.

திருமதி. அமலாதேவி, கொடைரோடு :

2. வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது நல்லது என நினைக்கிறீர்கள்?


உங்கள் கேள்வியில் சிறிய பிழை உண்டு. இந்த முறை தேர்தலில் எந்த கட்சியும் தனித்து நிற்காது. ஆகவே, கேள்வியினை எந்த கூட்டணிக்கு ஓட்டுப் போடுவது நல்லது என்று கேட்டிருந்தால், நானும் பதில் சொல்ல முயற்சி செய்திருக்கலாம்.

திருமதி. ராணிச்சந்திரா, உடுமலைப்பேட்டை :

3. அன்னை மரியா மாதாவா? தாயா?


மா என்றால் பெரிய என்பது பொருள். தா என்றால் தருபவர். பெரிய காரியங்களை இயேசுவிடமிருந்து பெற்றுத் தருவதால் அவர் மாதாதான். தா என்றால் கொடு என கேட்பது. ஈ என்றால் ஈதல் ‡ கொடுப்பது. எனவே கேட்டவுடனே தருவதால் அவள் தாய். எனவே அன்னை மரியா மாதாதான். தாய்தான்.


செல்வி. இதயா, திருப்பூர் :

4. எனக்கு எதிரிகள் பெருகிக் கொண்டே வருகிறார்கள். என்ன செய்வது?


எதிரிகள் என்று யாருமே பிறப்பதில்லை. நாம்தான் எதிரிகளைப் பிறப்பிக்கின்றோம். நமக்குப் பிடித்ததைச் சொன்னால், செய்தார்கள் எனில் நண்பர்கள் என்கிறோம். அவ்வாறு செய்யாவிடில் எதிரிகள் என நாம்தான் முத்திரை குத்துகிறோம். எல்லோரும் நல்லவரே என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும். தன்னைக் காட்டிக் கொடுக்கத் துடித்தவனையும் நண்பா என்று அழைத்தவர் இயேசு. கிறிஸ்து இயேசுவின் மனநிலையே உங்களிலும் இருப்பதாக.

திரு. இராபர்ட், மணப்பாறை :

5. மாதா தொலைக்காட்சி பார்ப்பதுண்டா?

உண்டு. நல்ல முயற்சி. அருமையான நிகழ்ச்சிகள். பொதுநிலையினருக்கு இன்னும் தாராளமாக இடமளித்தால் அபார வளர்ச்சி நிச்சயம்.

திருமதி. மார்க்கிரேட், விழுப்புரம் :

6. மனிதருக்கு வியாதிகள் வரக் காரணம் என்ன? சுலபமாக சுகம்பெற ஏதாவது வழி உண்டா?

மனிதருக்கு 4449 வியாதிகள் வருவதாக இதுவரையிலும் கணக்கிட்டுள்ளார்கள். காரணங்கள் பல. அவற்றுள் சில: 1. சுகாதாரக் குறைவு, 2. சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு, 3. நம்மில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள். 4. பிறரை மன்னிக்காத தன்மை, 5. குற்றப்பழி உணர்வுகள், 6. புறக்கணிப்புகள், 7. அடங்காத கோபம், மனக்கசப்பு, 8. சில தீய பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளாதது, 9. வயது முதிர்ச்சி, 10. உணவுக் கட்டுப்பாடு இல்லாதது. சுலபமாக சுகம்பெற ஒரே வழி... மனதில் உள்ள பேய்களை விரட்டியடியுங்கள். நோய்கள் தானாக ஓடிவிடும். மருந்தில்லாத மருத்துவம் இது ஒன்றுதான்.

திரு.பாக்கியராஜ், வேலூர் :

7. இசையில் யார் பெரியவர்? இசைப்பவரா? அல்லது ரசிப்பவரா?

மனிதருக்கு இரு கண்கள் போல இசைக்கு இருவருமே மிக மிக முக்கியமானவர்கள். இசைப்பவரால் இசைக்கவும் முடியும், ரசிக்கவும் முடியும். ஆனால் ரசிப்பவரால் சில நேரங்களில் இசைக்க இயலாத நிலையில் இருக்கக்கூடும். அதுசரி, நீங்கள் (ஆலயத்தில்) இசைப்பவரா? ரசிப்பவரா?

இதயம் கனிந்த ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

Ads Inside Post