Pages - Menu

Monday, 17 July 2017

ஜுலை மாதப் புனிதர்கள்

ஜுலை மாதப் புனிதர்கள்
 அருட்சகோதரி.G. பவுலின்மேரி FSAG  

ஜுலை -3 புனித தோமா - திருத்தூதர்


தோமாவின் நம்பிக்கைக் குறைவு உயிர்த்த கிறிஸ்துவின் முன் மறைந்து போனது. ‘என் ஆண்டவரே, என் கடவுளே’ என்று திருச்சபையின் பாஸ்கா நம்பிக்கையை அறிக்கையிட்டார். நற்செய்திகளில் உள்ள சில குறிப்புகளைத் தவிர, இவரின் வாழ்க்கையைப் பற்றி எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. தோமா இந்திய மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டு வந்தார் என்ற ஆழ்ந்த பாரம்பரியமுண்டு. ஜுலை 3இல் திருத்தூதரின் சடலம் எடெசாவுக்குக் கொண்டு வரப்பட்டதாக நினைவுகூர்ந்து கி.பி.6 ஆம் நூற்றாண்டு முதல் இவரை நினைத்து விழா கொண்டாடி வருகின்றனர்.

ஜுலை - 6 புனித மரியகொரற்றி - கன்னியர், மறைசாட்சி

இப்புனிதை இத்தாலியில் அன்கோனா என்னுமிடத்தில் கி.பி 1890 இல் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தம் இளமைப்பருவத்தை வறுமையில் கழித்தார். வீட்டு வேலைகளில் அன்னைக்கு உதவியாயிருந்தார். இயல்பாகவே இறைபற்றுடையவர். இறைவேண்டலில் விடாமுயற்சி உடையவர். 1902இல் ஜுலை 6 ஆம் நாள் தன்னைக் கெடுக்க வந்தவனிடமிருந்து தம் கன்னிமையைக் காத்துக் கொண்டார். பாவம் செய்வதிலும் சாவது மேல் எனத் துணிந்ததால், கத்தியால் பலமுறை குத்தப்பட்டு இறந்தார்.

 ஜுலை - 11 புனித ஆசீர்வாதப்பர் (480-542)

இத்தாலி நாட்டில் உம்பிரியாப் பகுதியில் நோர்சியா என்னும் இடத்தில் கி.பி.480இல் பிறந்தார். உரோமையில் கல்வி கற்றார். உலகத்தை துறந்து சுபியாக்கோ என்னும் மலையில் இருந்த ஒரு குகையில் தவம் செய்வதும், ஜெபித்தும் வாழ்வு நடத்தினார். இதைக்கண்டு பலர் சீடராயினர். அவர்களுக்கு ஒரு மடத்தை துவங்கி சட்டங்களையும் இயற்றித் தந்தார். மோந்தே கஸினோ என்னுமிடத்தில் ஒரு மடம் துவங்கினார். அவர் எழுதிய சட்டங்கள் புகழ் பெற்றன. 24 திருத்தந்தையர்களையும், 5000 க்கும் மேற்பட்ட புனிதர்களையும் இவரது சபை திருச்சபைக்கு தந்திருக்கிறது. இவர் நற்கருணை உட்கொண்டு பீடத்தின் முன்னின்று கரங்களை உயர்த்தி ஜெபித்துக் கொண்டிருந்த வேளையில் உயிர் துறந்தார். 

 ஜுலை - 16 புனித கார்மேல் அன்னை

கார்மேல் மலையிலே புனித கன்னிமரியாளின் நினைவாக முதல் ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டது. 1251இல் கார்மேல் சபையின் பெரிய தலைவரான புனித சீமோன்ஸ்தோக் என்பவருக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் மரியன்னை காட்சி கொடுத்ததாக பாரம்பரியம். அக்காட்சியில் நம் விண்ணக அன்னை உத்தரியத்தைக் காண்பித்தாள். இதை அணிபவர்களுக்கு விண்ணகக் கொடைகளையும், தனது பாதுகாப்பையும் அளிப்பதாக அன்னை உறுதி கூறினாள். ஒரு குரு உத்தரியத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும். உத்தரியத்தை வெறுமனே அணிந்தால் போதாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டும். இன்று கார்மேல் சபையினரின் மிக முக்கியமான விழாவாகும்.

ஜுலை - 22 புனித மதலேன் மரியாள்

          கலிலேயா நாட்டிலுள்ள மக்தலா என்னும் ஊரைச் சேர்ந்தவள். நற்செய்தி யில் காணும் பாவியான பெண்ணும், இயேசுவின் சிலுவையின் அடியில் நின்றவளும் இவளே. இயேசு தனக்குச் செய்த உதவிகளுக்கு நன்றியாக, சாகும்வரை அவருக்கு சேவை செய்து வந்தாள். உயிர்த்த இயேசுவைக் காணும் வரை அவள் ஓய்வெடுக்க வில்லை. “அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்? நான் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வேன்” என்ற வார்த்தைகள் அவளின் அன்பைக் காட்டுகிறது. இவளை யூதர்கள் நாடு கடத்தினார்கள். இவள் சில சீடர்களுடன் பிரான்ஸ் நாட்டை அடைந்தாள் என்று பாரம்பரியம் கூறுகின்றது.

ஜுலை - 25 புனித யாகப்பர் -திருத்தூதர் 

         கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் செபதேயு, சலோமே இவர்களின் மகனாகப் பிறந்தார். யாகப்பரையும் அவரின் தம்பி யோவான் இருவரையும் இயேசு அழைத்தார். வலைகளையும், தந்தையையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் சென்றார்கள். பேதுருவுக்கு புதுமையாக ஏராளமான மீன்கள் அகப்பட்ட போதும்,  திருமுழுக்கு யோவானின் சீடரான போதும், பேதுருவுவின் மாமியாரை குணப்படுத்திய போதும், இன்னும் பல நேரங்களில் இயேசுவின் அருகிலிருந்தார். “இடியின் மக்கள்” என்று ஆண்டவர் இவர்கள் இருவருக்கும் பெயரிட்டிருந்தார். பரிசுத்த ஆவியை பெற்றப்பின் ஸ்பெயின் நாட்டில் நற்செய்தி அறிவித்து எருசலேமுக்குத் திரும்பினார். 44இல் ஏரோது அகிரிப்பாவால் தலை வெட்டப்பட்டு இறந்தார் என்பது பராம்பரியம்.

 ஜுலை - 26 புனித சுவக்கின் அன்னம்மாள் - தூய மரியாளின் பெற்றோர்

               புனித அன்னம்மாள் பெத்லகேமில் பிறந்து, நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கின் என்பவரை மணந்தாள். இருவரும்  தாவீது அரசரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் பின்பு மரியாள் பிறந்தாள். 3 வயது ஆனதும் தேவலாயத்திற்குச் செல்லும்படி அவளை கடவுள் அழைத்தார். தியாக குணம் படைத்த பெற்றோர் குழந்தையை அர்ப்பணம் செய்தார்கள். தொடக்கத்திலிருந்தே அன்னம்மாளுக்கு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. 4 ஆம் நூற்றாண்டில் புனித சுவக்கீன் நினைவாக எருசலேமில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. சுவக்கீன் என்றால் ஆண்டவரின் தயாரிப்பு என்றும், அன்னா என்றால் இறைவனது அருள் என்றும் பொருள்படும்.

ஜுலை - 31 புனித லொயோலா இஞ்ஞாசியார் (மறைப்பணியாளர்)

    இப்புனிதர் ஸ்பெயினில் கன்டாபிரியாப் பகுதியில் லொயோலா என்னுமிடத்தில் கி.பி.1491 ஆம் ஆண்டில் பிறந்தார். அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இராணுவத் திலும் பணியாற்றி னார். பின்பு சண்டையில் கால் உடைந்து போன வேளையில் இறைவனிடம் மனந்திரும்பி, பாரீஸ் நகரில் இறையியல் படித்து முடித்தார். தம்முடன் சில தோழர்களையும் கூட்டிச் சேர்த்தார். பின்பு உரோமையில் இவர்களை ஒரு சபையினராக (இயேசு சபை) அமைத்தார். இப்புனிதர், நூல்கள் எழுதியும் சீடர்களைப் பயிற்றுவித்தும் மிக நற்பயனுள்ள திருத்தூதுப்பணி புரிந்தார். திருச்சபையின் சீரமைப்பில் இவரின் சீடர்கள் சிறப்பான பங்கெடுத்தார்கள். 1556 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் இப்புனிதர் உரோமையில் உயிர் நீத்தார்.

பொதுக்காலம் 17 ஆம் வாரம் 30-07-2017

பொதுக்காலம்  17 ஆம் வாரம்
30-07-2017

1 அரச 3:5,7-12;    உரோ 8:28-30;  மத் 13:44-32
         
2007 ஆம் ஆண்டு 1839இல் செய்யப்பட்ட முதல் கேமராவை 4 கோடியே 65 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுத்திருக்கிறார்கள்.  1963 இல் எனக்கு 12 வயது ஒருமுறை என் தந்தை 100 ஐ கொடுத்து, பக்கத்திலுள்ள பெரிய ஊரில் பொருள்கள் வாங்கி வர அனுப்பினார். அந்த கடையில் புதிதாய் அழகான டைம்பீஸ் வைத்திருந்தார்கள். அதனை விற்பதற்காக அல்ல. தங்களின் கடைக்காக வாங்கியிருந்தார்கள். எனக்கு அந்த டைம்பீஸ் மிகவும் பிடித்து விட்டது. எனவே மற்றப் பொருள்களை வாங்காமல் அந்த கடிகாரத்தை வாங்கி வந்தேன். என் தந்தைக்கும் என் தாய்க்கும் அந்த கடிகாரத்தை மிகவும் பிடித்து விட்டது. மற்ற பொருள்களை வாங்காமல் நான் வாங்கி வந்ததைப் பாராட்டினார்கள். மகிழ்ந்தார்கள். பிறகு அதனை நல்ல விலைக்கு விற்றோம்.

              இன்றைய நற்செய்தியில், தான் கண்டுபிடித்த புதையலை ஓடிச் சென்று மகிழ்ச்சியுடன் தமக்குள்ள யாவற்றையும் விற்றுவிட்டு, புதையல் உள்ள நிலத்தை வாங்கிக் கொள்கிறார். அதே போன்று, நல்ல முத்தைக் கண்ட வியாபாரியும், தனக்கு உள்ள யாவற்றையும் விற்றுவிட்டு அந்த முத்தை வாங்கிக் கொள்கிறார். இந்நிகழ்ச்சிகளில் நாம் காண்பது, பெரிய நன்மையைப் பெறுவதற்கு சிறிய நன்மைகளை விட்டுக் கொடுக்கின்றார்கள். இந்நிகழ்ச்சிகளைப் போன்றது விண்ணரசு என்கிறார் இயேசு. விண்ணரசு அனைத்திலும் உயர்ந்தது. அதற்கு முதலிடம் தர வேண்டும் என்கிறார். செல்வந்தரான ஒரு வாலிபர் இயேசுவைப் பின்பற்ற விரும்பியபோது, உனது செல்வங்களையயல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு என்னை பின்செல் என்றார் (லுக் 18.22-24).

முதல் வாசகத்தில், சாலமோன் இறைவனிடம் உலக செல்வங்களை விட மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தாரும் என்று வேண்டினார். இறைவனும் மகிழ்ந்து அந்த வரத்தை அளித்தார்.

இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்று விளக்குகிறார். இறைவனிடம் சேர்பவர்கள் உயர்ந்த நிலையினை பெற்றுக் கொள்கிறார்கள்.        உலகச் செல்வங்கள்தான், நம்மை மிகவும் கவர்ந்திழுக்கின்றன. அதற்குதான் முதலிடம் தருகிறோம். விண்ணரசின் மதிப்பீடுகளை நம்முன் வைத்தால், விண்ணக மகிழ்வை இப்போதே நாம் அனுபவிப்போம்.

அண்ணன், தம்பி இருவர். இவர்கள் வேறுபட்ட பண்புள்ளவர்கள். அண்ணன் பொருள்கள் சேர்ப்பதிலே ஒரே கண்ணும் கருத்துமாயிருந்தார். உறவுகளையயல்லாம் மறந்தார். தம்பி தாராள எண்ணத்துடன்  மற்றவர்களுக்கு உதவி செய்து வந்தார். கடைசியில் அண்ணனின் சொத்துக்களைப் பிரித்துக் கொள்வதில் பிள்ளைகள் போட்டி போட்டுக் கொண்டு, அண்ணனை அநீதி செய்து விட்டதாக ஒதுக்கி வைத்தார்கள். யாருடைய உதவியுமின்றி அனாதையைப் போல் இறந்தார். தம்பி, எந்தக் குறையும் இல்லாமல் உறவகளுடன் மகிழ்ந்து, வாழ்ந்து, வாழ்வை நிறைவு செய்தார்.

இறைவனுக்கே முதலிடம் என்று சேக்கிழார் இவ்வாறு பாடுகிறார்.

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் 
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை 
குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார்.

பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு 23-07-2017

பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு
 23-07-2017 
 சாஞா 12:13,16-19;   உரோ 8: 26-27; மத் 13: 24-43 

விடை காண மிகக்கடினமான கேள்வி  ஒன்று உண்டு. கடவுள் எல்லாம் வல்லவர். அப்படியிருக்க தீமைகள் ஏன் உலகில் நிலவுகின்றன? என்பதுதான் அந்தக் கேள்வி. இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு கூறிய உவமையில், ஊழியர்கள், நிலக்கிழாரிடம் சென்று ஏன் களைகள், வயலில் தோன்றியுள்ளன? நாம் நல்ல கோதுமையை மட்டும் தானே தெளித்தோம் என்கின்றனர். களைகளை உடனே அழிக்கலாமா? என்கின்றனர். நிலக்கிழார், பொறுமையாக இருங்கள். களைகளைக் கடைசியில் சேர்த்து எரிக்கலாம் என்கின்றார். உலகில் நிறைய தீமைகளைச் சந்திக்கின்றோம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்று, ஊழல் என்று எண்ணற்ற ஊழல்கள். 

ஒருவர் கூறினாராம், ‘இரண்டு உலகப் போர்கள் ஏற்பட்டு பெரிய அழிவுகளை ஏற்படுத்தின. இப்போதுதான் உலகம் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது’ என்றாராம். விபரம் தெரிந்த ஒருவர் கூறினாராம். இது அமைதியின் காலம் அல்ல. மூன்றாவது உலகப் போருக்கு உலகம் தன்னை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவும், இர´யாவும் இரண்டாம் உலகப் போரில் தயாரித்த ஆயுதங்களை, ஏழை நாடுகளுக்கு விற்றுக் கொண்டிருக்கின்றன. ஏழை நாடுகள் தங்களுக்குள் சண்டையிட அமெரிக்காவும் இர´யாவும் துVண்டி விடுகின்றன.

    இந்தியாவில் இந்த ஆண்டு 2017- 2018இல் பாதுகாப்புப் படைகளுக்கு 3.59 லட்சத்துக் கோடி. நமது வருமானத்தில் 2.9 சதவிகிதம் செலவழிக்கப்படுகிறது. நம் நாட்டில் நடக்கும் ஊழலினால் 36400 கோடி இழப்பாகியிருக்கிறது என கணக்கிடப்பட்டிருக்கிறது. 
    உலகில் நிலவும் தீமைகளால் மனிதர் பாதிக்கப்படுகின்றனர். தீமைகளை எதிர்த்து நிற்க வேண்டும். தீமைகளை வன்முறையால் அழிக்க வேண்டும் என்பது சிலரின் கருத்து. இயேசு சகிப்புத் தன்மையுடன் வாழ வேண்டும் என்கிறார்.

         நமக்கு ஏற்பில்லாதவைகளை தீமைகள் என்கிறோம். எல்லோரிடமும் மற்றவருக்கு ஏற்பில்லாதவை நிறையவே உண்டு. குடும்பங்களில் ஏற்பில்லாத நிலையில்தான், கசப்புகள் வன்முறைகள் உண்டாகின்றன.

    முதல் வாசகத்தில், இறைவன் பொறுமை உள்ளவராகவும், சகிப்புத்தன்மை உள்ளவராகவும் விளக்கப்படுகிறார். ‘நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு  வழங்குகிறீர். மிகுந்த பொறுமையோடு ஆள்கின்றீர்’ என்று சாலமோனின் ஞானநுVல் கூறுகிறது. இரண்டாம் வாசகத்தில், ‘துய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காக பரிந்து பேசுகிறார்’ என்று பவுல் அடிகளார் கூறுகிறார்.

        நமக்குத் தீமை செய்தவரை பழிக்குப்பழி வாங்கும் உணர்வுதான் நம்மிடையே பொதிந்து நிற்கிறது. அதனைத் தாண்டி மற்றவர்களைப் புரிந்துக் கொண்டு, சகிப்புத்தன்மையுடன் வாழ்வது கடினமானது. 

வள்ளுவர், பொறுமை பெரிய வல்லமையுடைத்து  என்கிறார்.

இன்மையுள் இன்மை விருந்தொரால்
வன்மையுள் வன்மை மடவார் பொறை.

பொறுமை என்பது பொறுத்திருத்தல் மடடுமல்ல
பொறுத்திருக்கிற நேரத்தில் எப்படி

செயல்படுகிறீர்கள் என்பதுதான் பொறுமை என்கிறார் -ஜாய்ஸ் மேயர்.
 பொறுமை கசக்கும் ஆனால் அதன்  கனி இனிக்கும் - ஸீன் ஸாக்ருசோ.

பொறுமை எல்லா நிலையிலும் அவசியம்,  முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.  அவசரப்பட்டு முட்டையை உடைப்பதால் முட்டையின் குஞ்சினைப் பெற முடியாது.   - அர்னால்டு - கிளாசோ. 

பொதுக்காலம் 15 ஆம் வாரம் 16-07-2017

பொதுக்காலம் 15 ஆம் வாரம்
 16-07-2017
எசா 55:10-11;   உரோ 8:18-23;  மத் 13:1-9

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். 
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.

என்ற பாடலை பாட கேட்டிருக்கிறோம். மனிதரும் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம் என்று சொல்லலாம். இன்றைய நற்செய்தியில் இருவித பொருள் கொள்ளலாம். விதை தெளிக்கப்படுகின்றது. விதை பலவிதமான நிலங்களில் விழுகிறது. வழியோரம், பாறை, முள்புதர், நல்லநிலம் ஆகியவை. நல்ல நிலத்தில் விழுந்தது மட்டும் நிறைந்த பலன் தருகிறது. மற்ற நிலத்தில் விதை முளைத்து பலன் தர முடியாமல் போகிறது. 

விதை வளர்வது, நிலத்தைப் பொறுத்தது எனலாம். இப்போதெல்லாம், மண்ணின் தன்மையைப் பார்த்து அதற்கேற்ற பயிர் செய்ய விவசாய அறிஞர்கள் ஆலோசனைக் கூறுகின்றனர். இறைவனுடைய வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையோடு அணுக வேண்டும். அதுதான் நல்ல நிலம். திருமணத்திற்குமுன்  ‘சம்திங், சம்திங்’, திருமணத்திற்குப் பின் ‘நத்திங், நத்திங்’ என்பது போல, தடுமாற்ற மனநிலையும் (வழியோரம்),  குரங்குபிடி உடும்பு பிடியான, பிடிவாதமான நிலையும், (பாறை). சேராத இடந்தனில் சேர்ந்து வாழும் மனநிலையும் (முள்புதர்) இறைவார்த்தை வளர்வதற்கு ஏற்றவையல்ல.

நல்லநிலம் என்பவர்கள் இறை வார்த்தையைக் கேட்டு புரிந்து கொள்பவர்கள். இதற்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குபவர் மரியன்னை! ‘இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி செயல்படுகிறவராகத் திகழ்ந்து இயேசுவின் தாய் ஆனார் (லூக் 8:21). மார்த்தாவின் சகோதரி மரியாவும், இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார் (லூக் 10:39).

முதல் வாசகத்தில், மழையும் பனியும் மண்ணில் வீழ்ந்த பிறகு அது பயனளிக்காது திரும்பாது என்று எசாயா நூலில் வாசிக்கிறோம். திப 19:20இல் இவ்வாறு ‘ஆண்டவரின் வார்த்தை ஆற்றல் பொருந்தியதாய் பரவி வல்லமையுடன் செயல்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது. ‘ஆண்டவரின் வார்த்தைப் பரவியது’ என்ற குறிப்பையும் (திப 6:7; 12:24;13:49) திருதூதர்பணிகளில் பார்க்கிறோம். ஆக இறைவார்த்தை தன்னிலேயே வல்லமையுள்ளது. இரண்டாம் வாசகத்தில் வருங்காலத்தில் வெளிப்படப்போகும் மாட்சி எதற்கும் ஒப்பிட முடியாத பெருமையுடைத்து என்று விளக்குகிறார் பவுல்அடிகளார்.
பொதுத்தேர்வு நடந்துக் கொண்டிருந்தது. ஒரு மாணவன் காப்பியடித்துக் கொண்டிருந்தான். மேற்பார்வை செய்த ஆசிரியர் ஒரு கத்தோலிக்கர் (லூக் 16:10) இல் வருகிற வசனத்தை சொல்லி விட்டுசென்று விட்டார். மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.
அந்த ஆசிரியர் பணிமுடிந்து ஓய்வு பெற்று விட்டார். தனக்கு வங்கியில் கடன்வாங்க வங்கிக்குச் சென்று, வங்கி மேலாளரிடம் சென்றார். அந்த ஆசிரியரைப் பார்த்ததும் வங்கி மேலாளர் ஓடிவந்து ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கினார். ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. வங்கி மேலாளர் கூறினார், ‘ஐயா, நான்தான் தேர்வில் காப்பியடித்தவன். அதனைப் பார்த்ததும், பைபிள் வார்த்தைகளை சொன்னீர்கள்’ ‘சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பர்’ என்றீர்கள். அந்த வார்த்தைகள் என் மனதை மாற்றி விட்டன. அது முதல் நேர்மையாக நடந்து இப்போது இந்த பெரிய பதவியைப் பெற்றிருக்கிறேன். இதோ பாருங்கள், நீங்கள் சொன்ன வார்த்தைகளை அச்சடித்து அங்கு மாட்டியிருக்கிறேன் என்றார்.

இறைவார்த்தை வல்லமையுள்ளது. 
வாழ்வை மாற்ற வல்லது.

Tuesday, 4 July 2017

பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு
 09-07-2017,              
அருட்பணி. ச.இ. அருள்சாமி
 செக் 9:9-10;  உரோ 8:9,11-13;  மத் 11:25-30

நம் வாழ்வில் எவ்வளவோ போராட்டங்கள், சுமைகள் நம்மை சந்திக்கின்றன. இவைகளிலிருந்து விடுபடுவது  எப்படி என்று தெரியாமல் பல நேரங்களில் தடுமாறி போய்விடுகிறோம். உதாரணமாக பிள்ளைகளை வாழ்க்கையில் அமர வைக்க பெற்றோர்கள் பெரிய போராட்டத்தைச் சந்திக்கிறார்கள். 
கடன் சுமைத் தாங்காமல் குடும்பமே தற்கொலை செய்துக் கொள்ளும் செய்திகளை நிறையவே பார்க்கிறோம். இந்த போராட்டங்களெல்லாம் அடிப்படையாக மன அழுத்தத்தில்  போய் சங்கமமாகின்றன. இந்த  மன அழுத்தம், உடல் நோய்களிலும்  விடிவு காண்கின்றன. ஒருவருக்கு உடல் முழுவதும் சரியான அரிப்பு பல மருத்துவர்களைப் பார்த்து பல  மருத்துவ சோதனைகளைச் செய்தார்கள். எல்லாம் சரியாயிருக்கிறது. கடைசியாக  அந்நோயின் காரணம், அவளின் மகள், தன் கணவனுடன் வாழாமல் தன்னிடம் வந்திருக்கிறாள். அதனால் வந்த மன அழுத்தம், உடல் அரிப்பில் விடிவுக் கண்டது. 
இன்றைய நற்செய்திப் பகுதியில், இயேசு கூறுகின்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பார்க்கிறோம்.      ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்’ என்கிறார். இயேசுவின் காலத்தில்  ‘அம்ஆரஸ்’ என்று அழைக்கப்பட்ட சாமாணிய மக்கள் இருந்தார்கள். அவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், ஏழைகள், சமுதாயத்தின் பெருங்குடி மக்களால் ஒதுக்கி  வைக்கப்பட்டவர்கள். அவர்களைப் பார்த்துத்தான், பெரும்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே என்கிறார் இயேசு. இளைப்பாறுதல் தருவேன் என்பது ஓய்வு நாளிலிருந்து வரும் இளைப்பாறுதல், ‘என் நுகத்தை ஏற்றுக்கொண்டு’  என்ற சொற்றொடரில் வரும் ‘நுகம்’ என்பது பரிசேயர் மற்ற தலைவர்கள் முன் வைக்கும் பாரமான சட்டங்கள்.  ஆனால் இயேசு தரும் நுகம், எளிதானது. அன்பென்ற நுகம்.

முதல்வாசகத்தில், ‘உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றி வேந்தர்; எளிமையுள்ளவர்’ என்றும் ‘குதிரைப் படையை அறவே ஒழித்து விடுவார். போர்க் கருவியான வில்லும் ஒடிந்துபோகும்’ என்றும் குறிப்புக்களைப் பார்க்கிறோம். இறைவன் வன்முறைக்கு எதிரானவர் என்ற கருத்தினை இங்குக் காணமுடியும்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், ‘நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள். ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால் நீங்கள் வாழ்வீர்கள்’ என்று கூறுகிறார். பல நேரங்களில் வீணான சுமைகளை, நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். 

சிகரெட் குடிப்பதை விட, இப்போது பான்பராக் போடும் கலாச்சாரம் பரவி வருகிறது. பான்பராக்  அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும், இரகசியமாக வாங்கி அதனைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாள் இரயிலில் பயணம் செய்யும் போது, இளைஞர் ஒருவர் பான்பராக் போட்டுக் கொண்டு, நிமிடத்திற்கு ஒருமுறை எச்சிலை வெளியே துப்பிக் கொண்டிருந்தார். இதனால் இரயிலின் வெளிதகரங்கள் எச்சிக்கரையாகியது. அதற்குமேல், அவரின் உடல்நலம், புற்றுநோய்க்காக தயாராகியது எனலாம். 

இயேசுவின் வழியில் சென்றால் உடல் உள்ள சுமைகளுக்கு விடிவுக் காணலாம்.                 

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு
 02-07-2017,             
அருட்பணி. ச.இ. அருள்சாமி
 2அரச 4:8-11,14-16;   உரோ 6:3-4,8-11;  மத் 10:37-42        

மக்கள் திருப்பலியை அர்ப்பணிக்கிறார்கள். அதற்காக தற்போது ரூ100/- நன்கொடையாகத் தருகிறார்கள். மக்கள் நிறைய திருப்பலிகளை அர்ப்பணித்தால், அந்த பங்கிற்கு நல்ல வருமானம் என்பார்கள். அதுவல்ல உண்மை. திருப்பலிக்கு கொடுக்கப்படும் நன்கொடை, குருக்களின் பராமரிப்பிற்காக அளிக்கப்படுகிறது. குருவானவர் ஒரு நாளைக்கு ஒரு திருப்பலியின் நன்கொடையை பெற்றுக் கொள்வார். திருத்தலங்களில் மக்களால் கொடுக்கப்படும் திருப்பலிகள் குருக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். குருக்கள் தாங்கள் திருப்பலி நன்கொடைப் பற்றி ஒரு நோட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆண்டிற்கொரு ‡முறை ஆயர் அதனை  பார்வை யிடுவார். திருச்சபை சட்டம்  946, திருப்பலிக்கு அளிக்கப்படும் நன்கொடை திருச்சபையின் நலனுக்காக அளிக்கப் படுகிறது. இதில் அருள்பணியாளர் களின் பராமரிப்பு அடங்கும் என கூறியுள்ளது. இவ்வாறு திருப்பலிக்கு மக்கள் அளிக்கும் நன்கொடை, அவர்களின் தியாகத்தையும் குறித்துக் காட்டும். 
இன்றைய நற்செய்திப் பகுதியில் இறையடியார்களை ஏற்றுக் கொள்பவர்கள் இயேசுவையே ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும், இறையடியார்களுக்கு உதவுபவர்கள் அதற்கேற்ற கைமாறு பெறுவர் என்றும் இயேசு கூறுவதை கேட்கிறோம். திருஅவை, திருஅவையின் மக்களாலேயே பராமரிக்கப்படுகிறது. இயேசுவிற்கு பெண்கள் பலர் தங்களின் உடைமைகளைக் கொண்டு அவருக்கு பணிவிடை செய்தார்கள் என்ற குறிப்பைப் பார்க்கிறோம் (லூக் 8:1‡3).  பவுல் அடிகளார், திருப்பணியாளர்கள், தங்கள் பணிக்கேற்ற ஊதியத்தைப் பெற தகுதியானவர்கள் என்கிறார். நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார் (1 கொரி 9:14). அதே நேரத்தில் பவுல், என்னுடைய தேவைகளுக்காகவும், என்னோ ‡டிருந்தவர்களின் தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன (திப 21:34) என்று கூறுகிறார்.
தற்போது வெளிநாட்டு உதவிகள் வெகுவாகக் குறைந்து விட்டன. நமது திரு அவையில், பங்குகளின் தேவைகளை நாமே நிறைவு செய்ய வேண்டும். அதுதான் மனநிறைவையும், கடவுளின் அருளையும் பெற்றுத் தரும்.  தற்போது, பங்குப் பேரவைகள் அமைந்து, மக்கள் மிக்க ஈடுபாட்டுடன் செயல்படுவதைப் பார்க்கிறோம். சிலர் தாராள சிந்தனைக் கொண்டு உதவி செய்கிறார்கள். ஒரு பங்கில் புதிதாக ஆலயம் கட்டினார்கள். மக்களின் உதவியை பங்குத்தந்தை நாடினார். ஏழை விதவை ஒருவர், என்னால் முடிந்தது என்று ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக தந்திருக்கிறார். அதே பங்கில் வசதி படைத்தவர்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று மட்டும் உதவி தந்துள்ளார்கள்.  திருஅவைக்கு உதவி அளிக்கும் போது பலர் பயன்பெறுகிறார்கள். அதனால் கடவுளின் ஆசீர் அவர்களுக்கு நிறைய கிடைக்கிறது. முதல் வாசகத்தில், எலிசா இறைவாக்கினருக்கு உதவி செய்து வந்த பெண்ணிற்கு, குழந்தை வரம் கிடைக்க ஆசீர்வதித்தார்.
குருமட மாணவர்களைப் பயிற்றுவிக்கவும் நிறைய பொருள் செலவு ஆகின்றது. குருமாணவர்களை தத்தெடுத்து அவர்களின் பயிற்சிக்கான செலவை பலர் ஏற்று கொள்கின்றனர். இஸ்பெல் ஆட்லர் கூறுகிறார், ‘பிறருக்கு உதவி செய்து யாரும் ஏழையானதில்லை’ என்கிறார். ‘உலகம் உனக்கு செய்வதை விட உலகிற்கு நீ அதிகமாக செய்யும்போதுமதான் வாழ்வில் வெற்றி பெறுகிறாய்’ என்கிறார் யஹன்றிபோர்ட்.
இரண்டாம் வாசகத்தில் ‘கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம்’ என்கிறார் பவுல் அடிகளார்.                                                     
திருஅவைக்காக நாம் செய்யும் தியாகங்கள், இயேசுவின் சிலுவை தியாகத்தில் பங்குக் கொள்ளுதலாகும். இறையடியார்களை மதிப்போம். அவர்களுக்கு ஆதரவு தருவோம். அதனால் இறைவனின் ஆதரவை நிறைவாகப் பெறுவோம். திருப்பணியாளர்களுடன் உறவுக் கொண்டால் ஞானம் (தெளிவு) பிறக்கும் என்கிறார் திருமூலர்.
தெளிவு குருவின் திருமேனி கண்டால் 
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே (திருமந்திரம் 183)

வெற்றி உங்கள் கையில், அருட்திரு. எஸ். ஜான் கென்னடி

வெற்றி உங்கள் கையில்
அருட்திரு. எஸ். ஜான் கென்னடி

 கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒலித்த வார்த்தை “TET”  (Teachers Eligibility Test) (ஆசிரியர்  தகுதித்தேர்வு).  ஒருவர்  D.TEd மற்றும்  B.Ed முடித்திருந்தாலும்  TED தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் ஆவதற்கான தகுதியை அவர் பெறுகிறார்.  “தகுதி” என்கிற வார்த்தை ஆசிரியப் பணி செய்வதற்காக மட்டுமல்லாமல் எந்த துறையில் வேலைக்கு சென்றாலும் தகுதி என்பது முக்கியமான ஒன்றாக அமைகிறது. குழந்தைகள் Pre KG, LKG, UKG என்கிற நிலைக்கு படிக்கச் செல்லும்போது  தகுதி தேவைப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பதற்கும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பதற்கும், தகுதி தேவைப்படுகிறது. கல்லூரி படிப்பை தொடர்வதற்கும், வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் தகுதி என்பது இன்றியமையாத ஒன்று. பதவி உயர்விலும் தகுதி என்பது  தேவையானதாக இருக்கிறது. இப்படி தகுதி என்பது நம் வாழ்வில் எல்லா நிலைகளிலும் தேவைப்படுகிறது. தகுதி என்ற மூன்றெழுத்தில்  மூன்று முத்தான வாழ்க்கை தத்துவம் அமைந்துள்ளது.

த’என்பது தன்னம்பிக்கையை குறிக்கிறது.
கு’என்பது  குறிக்கோளை  குறிக்கிறது.
தி’என்பது திறமையை குறிக்கிறது.

ஒருவர் தன்னம்பிக்கையோடு குறிக்கோளை நோக்கி தேவையான அளவு திறமையோடு பயணித்தால் வெற்றியை பெறலாம். ஆகவே வெற்றியை அடைய தகுதி மிக மிக முக்கியமானதாகும். அமெரிக்கா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்திய நாட்டிற்கு வருகை தந்தபோது நிருபர்கள் அவரிடம் “பலர் உங்களோடு புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள். நீங்கள் யாருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டபொழுது,  “இந்திய நாட்டின்  இளைஞர்களை ஒட்டுமொத்தமாக தூக்கி பிடித்து வழிநடத்தும்  A.P.J அப்துல்கலாம் அவர்களோடு எடுக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.  பாருங்கள்! இந்திய மக்களின் மனதில் இடம்பிடித்த மறைந்த மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் தகுதிதான் பில்கிளிண்டனை இவ்வார்த்தைகளை  சொல்லவைத்தது.  கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபொழுது அப்துல்கலாமை பார்த்து ஒரு மாணவன் கேட்ட கேள்வி,  “வாழ்வில் வெற்றிபெற என்னசெய்ய வேண்டும்?”. அதற்கு அப்துல்கலாம் சொன்ன பதில் “If you want to be successful, don’t chase success. Chase EXCELLENCE, success will automatically follow you” வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கான தகுதியின் உச்சத்தைத் தொட்டால், தானே ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும். ஆம் தகுதியை வளர்த்துக்கொண்டால் வெற்றி தானாக தேடி வரும். மதுரை தமிழ்ச்சங்கம் சிறுவர்களுக்கான கவிதைப்போட்டி ஒன்றை நடத்தியது. அதல் மூன்றாம் பரிசுக்கு கிடைத்த கவிதையின் வரிகள் இதோ,

 “செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”.  நீங்கள் கவிஞரை கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம்! மூன்றாம் பரிசை பெற்றவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். முதல் பரிசு, இரண்டாம் பரிசு பெற்றவர்கள் பற்றி இப்போது யாரும் பேசுவது இல்லை. யாருக்கும் தெரியாது. ஆனால் பாரதியார் மூன்றாம் பரிசைப்பெற்றாலும் தனது தகுதியை வளர்த்துக்கொண்டார். நம் உள்ளங்களைக் கொள்ளைக்கொண்டார்.  வெற்றியையும் தக்கவைத்துக் கொண்டார். சில சமயங்களில் நமக்கு ஒரு சந்தேகம் எழலாம். தகுதி இல்லாதவர்கள் வெற்றி பெறுகிறார்கள், தகுதி உள்ளவர்களால் வெற்றிபெற முடியவில்லையே என்று. ஆனால் உண்மை என்னவென்றால் தகுதியில்லாதவர்கள் வெற்றி பெறலாம்.  ஆனால் அதை தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை. தகுதி உள்ளவர்களால் மட்டுமே வெற்றியை தக்கவைத்துக் கொள்ளமுடியும். அனைத்து வெற்றியாளர்களின் வாழ்வை சீர்தூக்கிப்பார்த்தால் இந்த உண்மை புலப்படும். அன்பு வாசகர்களே! நீங்களும் உங்கள் வாழ்வில் தகுதியை வளர்த்துக்கொண்டு வெற்றியை தக்கவைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்!.

Ads Inside Post