Pages - Menu

Friday, 10 February 2017

தூய இருதய மருத்துவமனை நூற்றாண்டு விழா

பேராயரின் மறைவு

மதுரை உயர் மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் மேதகு.பீட்டர் பெர்னாண்டோ 31‡12‡2016 அன்று இறைவனில் துயில் கொண்டார். இவருக்கு வயது 77. தூத்துக்குடி மறைமாவட்டத்தில் பிறந்த அவர் புனாவில் அகில இந்திய இறைஅழைத்தல் நிலையத்தின் இயக்குனராகவும், திருச்சி ‡ தூய பவுல் குருமடத்தின் அதிபராகவும், தூத்துக்குடியில் வாரிசு ஆயராகவும், திருச்சி  மறைமாவட்ட பரிபாலகராகவும் இறுதியாக 2014 வரை மதுரை உயர் மறைமாவட்டப் பேராயராகவும் பணியாற்றினார். இவர் ஓர் உளவியலார். 02‡01‡2017 அன்று தூத்துக்குடியில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


தூய இருதய மருத்துவமனை
நூற்றாண்டு விழா

29-12-2016 வியாழன் மாலை 5 மணிக்கு குடந்தை, முத்துப்பிள்ளை மண்டபத்திலுள்ள தூய இருதய  மருத்துவமனையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. 1916இல் தொழுநோயாளர்களுக்காக ஒரு சிறு குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட இம்மருத்துவமனை இப்போது, தொழுநோய்ப் பிரிவோடு, பொது மருத்துவமனையாகவும் விளங்குகிறது. அருள்பணி.விச்சாட்டோ, றீனினிணூ அருள்சகோதரிகள், பிரிட்டோ, கரோலின் ஆகிய மூவரால் இந்த மருத்துவமனை தொடங்கப்பெற்றது. இதில் கரோலின் தொழுநோயாளர்களுக்காக பணி செய்ததால் தொழுநோய் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார். அருள்பணி. ராயலு அவர்கள் 50 ஆண்டுகள் (1936 ‡ 1986) இம்மருத்துவமனை வளர பணி செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களும், குடந்தை ஆயர் எஃப்.அந்தோனிசாமி அவர்களும் தலைமை தாங்கினர். திருப்பலிக்குப் பின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இம்மருத்துவமனை தன் பணியில் சிறந்து வளர வாழ்த்துகிறோம்.

நம் மாதா தொலைக்காட்சி

நம் மாதா தொலைக்காட்சி

( திருமதி. ஆசா, )

நம் இல்லங்கள் தோறும் இறையாட்சியை பரப்ப வந்திருக்கும் மாதா தொலைக்காட்சியை தினந்தோறும் பார்க்கும் நேயர் என்ற முறையில் மாதா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்வது எனது கடமை.

திருப்பலியுடன் துவங்கும் காலை நிகழ்ச்சி. ஆலயம் சென்று திருப்பலி ஒப்புக்கொடுக்க முடியாத பலருக்கு, இது அருங்கொடை. திருப்பலி மதியம், மாலை மற்றும் நற்கருணை ஆராதனை பலவுமே இல்லத்தரசிகளுக்கும்,நோயுற்றோருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு.

திருப்பலியை தொடர்ந்து வருவது கடவுள் வணக்கம். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திரு. விவேக் மற்றும் கல்பனா, அருமையாக நிகழ்ச்சியை வழங்குகிறார்கள். அடுத்ததாக, அழகான ஆலய தரிசனம் . நாம் காணாத பல ஆலயங்களை அழகாக இனிமையான பாடலுடன் பார்க்கும்போது, இறையருள் நம் இல்லத்தில் இறங்குவது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. தொடர்ந்து தினம் ஒரு திருப்பாடல். இன்றைய புனிதர் பற்றிய வரலாற்றை அருள்தந்தை ரவி வழங்குகிறார்கள். புனிதர்களைப் பற்றி பல வரலாற்றை, இதன் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. பிறகு டாக்டர். மகாதேவன் அலோபதி மருத்துவம் பற்றியும், நம்ப ஊறு வைத்தியம் பற்றி டாக்டர்.மதுரம் சேகர் அவர்களும் அருமையான மருத்துவக் குறிப்புகளைத் தருகிறார்கள். நல்வழி காட்டும் திரு. இளசை சுந்தரம், மதுக்கூர் இராமலிங்கமும் அருமையான மனிதர்கள்.

தினம் ஒரு குட்டிக்கதைகளை சொல்லிச் கதைகேளு நிகழ்ச்சியில் குடந்தை ஆயர் சிறுவர்கள் மனதை கொள்ளை கொள்கிறார். விழாக்கோலம் நிகழ்ச்சியில் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் நேயர்களின் மனதை மகிழ்விக்கிறார்கள்.

‘கடவுள் வணக்கம்’ அந்த நாளின் சிறப்புகளோடு ஆரம்பித்து நிகழ்ச்சி முழுவதும் அதைப்பற்றிய கருத்துக்களை சொல்வது வெகு சிறப்பு.

ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘வத்திக்கான் டாப் 10’ உண்மையில் “டாப் தான்”.

9 மணிக்கு ஒலிபரப்பாகும் நலமா? நீங்கள் நலமா? நேயர்களோடு  உள்ளன்போடு  உறவாடும்  உயிர் நிகழ்ச்சி.

திரு .மதுரை இளங்கவினும், திரு. கனகராஜும் நடத்தும் நிலா முற்றத்தின் மூலம் பல எழுத்தாளர்களைப்பற்றி அலசி ஆராயும் நிகழ்ச்சி படைப்பாளர்களுக்கு ஒரு உந்துதலை கொடுக்கும் என்பது உண்மை.

‘வந்ததும் தந்ததும்’ நிகழ்ச்சியில், நிகழ்ச்சிகளைப்பற்றி ஆய்வு விவரிக்கப்படுகிறது. குறைகளையும் குறிப்பிட்டு, அதை களையும் வழிகளையும் குறிப்பிட்டு, மேற்கொண்டால் மாதா தொலைக்காட்சி பொலிவுறும் என்பதில் ஐயமில்லை.

ஜெபதேவைக்கு நேயர்களிடமிருந்து விபரம் கேட்டு அவர்களுக்காக ஜெபிப்பதும் மாதாவுக்கு மகிமை சேர்ப்பிக்கும் என்பதில் ஐயமில்லை.

பணிவு என்னும் இனிய பாதை 9. கீழ்ப்படிவோம்!

பணிவு என்னும் இனிய பாதை

9. கீழ்ப்படிவோம்!

 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியாள மையம்

பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பெரிய பண்ணை வைத்திருந்தார். அவருக்கு ஒரே மகன். அவனை விவசாயக் கல்லூரியில் படிக்க வைத்தார். மகனும் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்.

பணக்காரர் மகனுக்கு ஒரு சோதனை வைக்க விரும்பினார். எனவே தன் மகனிடத்தில், நம் பண்ணையில் கிழக்கே இருக்கும் பத்து ஏக்கரில் சோளம் விதை என்றார். அவன் விவசாயக் கல்லூரியில் பயின்றதை நினைவிற் கொண்டு மண்ணை நன்கு சோதனை செய்துவிட்டு அங்கு சோளம் நன்கு விளையும் என்று உணர்ந்து சோளம் விதைத்தான். சில நாட்கள் கழித்து அந்த பணக்காரர் மகனிடத்தில் மேற்கே இருக்கும் பத்து ஏக்கரில் கரும்பு நடு என்றார். மகன் மீண்டும் மண் பரிசோதனை செய்தபிறகு அந்த மண் கரும்பிற்கு ஏற்றது என்று அறிந்து கரும்பு நட்டான். மீண்டும் அந்த பணக்காரர் தன் மகனை அழைத்து வடக்கே உள்ள பத்து ஏக்கரில் எள் பயிரிட சொன்னார். மகனும் சளைக்காமல்  மண் பரிசோதனை செய்து அந்த நிலம் எள்ளிற்கு ஏற்றது என்று தெரிந்து எள் பயிரிட்டான். பணக்காரர் மீண்டும் மகனை அழைத்து தெற்கில் உள்ள பத்து ஏக்கரில் கடலை பயிரிட சொன்னார். மகன் மண்ணை பரிசோதித்தான். மண் கடலைக்கு ஏற்றதல்ல என்று அறிந்தான். உளுந்து பயிரிட்டால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என் அறிந்து உளுந்து பயிரிட்டான்.

சரி, உங்களுக்கு ஒரு கேள்வி. அந்த மகனின் கீழ்ப்படிதலுக்கு எவ்வளவு மார்க் கொடுப்பீர்கள்? 75 மார்க். இல்லை, பூஜ்யம் தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவன் தன் தந்தையின் சொற்களில் பூஜ்யம் சதவீதம்தான் நம்பிக்கை வைத்திருந்தான். அந்த மகனின் அறிவார்ந்த நடவடிக்கைகளை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் இன்னும் ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் அந்த மகனுக்கு தந்தையிடம்  உள்ள நம்பிக்கை குறைவாக இருந்ததால்தான் அவரிடம் கீழ்ப்படிவதற்குமுன் சோதனையில் ஈடுபட்டான்.

இந்த உலகில் வாழ்வது ஓர் அழகான கலை. அந்த கலையில் ஒன்றுதான் மற்றவர்களின் சொற்களுக்கு செவிமடுப்பது. மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பது. மற்றவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது. பழைய காலத்தில் குருமட பயிற்சியின் போது ஒரு சோதனை வைப்பார்களாம். ஒரு செடியை தலைகீழாக நடவேண்டும் என்று சொல்வார்களாம். தலைகீழாக நட்டால் குருமடத்தில் நீடிக்கலாம். அல்லது குருமடத்தை விட்டு அனுப்பி விடுவார்களாம். (இது எவ்வளவு  உண்மை என்று தெரியவில்லை).

அது சரிங்க, நாம் ஏன் மற்றவர்களின் சொற்களுக்கு கீழ்ப்படிய மறுக்கிறோம்? அதற்கு முதல் காரணம், மற்றவர்களை நமக்கு மேலாகக் கருதுவதில்லை. மற்றவர்களுக்கு என்னத் தெரியும்? என்ற எண்ணம் நம்மில் மேலோங்கி இருப்பதால்தான். நான் பத்தாவது படிக்கும் போது, ஒருமுறை பேருந்தில் பயணம் செய்தேன். பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்றது. எல்லோரும் இறங்கிய பின்பு பஸ் கிளம்பியது. அந்த சமயத்தில் நான் வெளியே எச்சில் துப்பினேன். அப்போது எனக்கு பின்னே அமர்ந்திருந்த ஒரு பெரியவர் தம்பி, பஸ் ஓடும்போது எச்சில் துப்புவதை தவிர்க்கலாமே! என்று மிகவும் தன்மையாக சொன்னார். ஆனால் நானோ பஸ் நின்றபோதுதானே துப்பினேன் என்று என்னையே நியாயப்படுத்தினேன். அதைப் போல சில சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளன. நான் நியாயப்படுத்திய நிகழ்வுகளை நினைத்து பின்பு வருந்தியுள்ளேன். அதைப் போலவே இப்போது நான் இருக்கின்ற பொறுப்பில் எனக்குக் கீழே இருப்பவர்களிடம் சில தவறுகளை சுட்டிக்காட்டும் போது அவர்கள் செய்யும் பெரிய தவறு (எனக்குக் கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தும் தவறுதான்) அவர்கள் தங்களை நியாயப்படுத்துவதுதான். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை அவர்கள் கோணங்களிலிருந்து பார்க்கத் தவறும்போது, நம்மையே நாம் நியாயப்படுத்த விரும்புகிறோம். யார் என்ன சொன்னாலும் அதிலே சிறிதளவாவது உண்மை இருக்கும் என்று நம்புவோம். அதனால் அதனை கடைபிடிக்க முயற்சி செய்வோம்.

இரண்டாவதாக மற்றவர்களின் சொற்களுக்கு  நாம் கீழ்ப்படிய மறுக்கும் மற்றொரு காரணம் நாம் தவறு செய்யவே மாட்டோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கைதான். சார், கொஞ்சம் நில்லுங்க, நீங்கள் மட்டும்தான் நீங்கள் நினைப்பதெல்லாம் சரி, நீங்கள் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். (மற்றவர்கள் நீங்கள் செய்யும் தவறுகளை பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்). இந்திய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் சில நேரங்களில் என்னை ஆச்சரியப்படுத்தும். அபத்தம் என்று 90% பேர் நினைப்பதை அழுத்தமாக சொல்வார்கள். நாம் தவறு செய்ய இயலாதவர்கள் என்று நினைத்தால் நம்மைவிட அறியாமையில் உள்ளவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதைப் போல நம் முடிவுகள், தீர்ப்புகள் எப்பொழுதும் சரியாக இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால், உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். எனவே பிறர் சொல்லும் சொ;ற்களில் உள்ள உண்மையை, நியாயத்தை உணர்ந்து கொள்ள முன்சார்பு எண்ணங்களை தவிர்த்து கொஞ்சம் இறங்கி வாருங்கள். பிறகு பிறரின் சொற்களை, கொள்கைகளை, கட்டளைகளை ஏற்றுக் கொள்வது அவ்வளவு கடினமாக இருக்காது.

மூன்றாவதாக, நீங்கள் கீழ்ப்படிதலை காட்ட வேண்டிய ஒரு முக்கியமான நபர் இருக்கிறார். அவர்தான் நம்மை படைத்த, நம்மை பராமரிக்கிற, நம்மை பார்க்கிற தேவன். அவர் நம் மனச்Vட்சியின் வழியாக, இறைவார்த்தையின் வழியாக, சில நிகழ்வுகளின் வழியாக நமக்கு வழிகாட்டுகிறார். கடினமான இதயத்தை கைவிட்டு, தன்னல வாழ்வை தள்ளி வைத்துவிட்டு, சில அர்ப்பணங்களையும், தியாகங்களையும் மேற்கொண்டு இறைவனின் தூண்டுதல்களுக்கு செவிமடுப்போம். கீழ்ப்படிவோம். அப்பொழுது நம் வாழ்வு மேன்மை பெறும். இனிமை பெறும். (தொடரும்).

Saturday, 4 February 2017

பொதுக்காலம் 8ஆம் ஞாயிறு 26-02-2017

பொதுக்காலம் 8ஆம் ஞாயிறு      26-02-2017

எசா 49 : 14 - 15    1 கொரி 4 : 1 - 5,  மத் 6 : 24 - 34

நிறைய சம்பளம் வாங்கும் அலுவலர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார். காரணம், தன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருப்பவர் வாங்கியிருக்கும் பென்ஸ்காரை போல தானும் வாங்க முடியவில்லை என்ற ஏமாற்றம்தான். வறட்சியின் காரணமாக தற்போது பல விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். காரணம் கவலை.

இன்றைய நற்செய்தியில் இயேசு மனிதனின் நிதர்சன தேவைகளை நிராகரிக்கவில்லை. ஆனால் அத்தேவைகள் அனைத்தும் அவர்களின் முதன்மை தேவைகளாக மாறாத வண்ணம் எச்சரிக்கையாய் இருக்க அழைப்பு விடுக்கின்றார். உலகமயமாக்கலின் மிகப்பெரிய வெற்றி இதுதான். எது அத்தியாவசியம் இல்லையோ அதை நம்மையும் மீறி அத்தியாவசியமாக நினைவில் ஏற்றுவது. உதாரணமாக ஒரு காலத்தில் செல்போன் இல்லாமல் வாழ்ந்தோம். இப்போது அதுதான் வாழ்க்கை என்கின்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளோம். ஒரு காலத்தில் விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று இருந்த நினைவு, இன்று அது மழுங்கப்பட்டிருக்கிறது. தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் இருக்கவேண்டிய தொலைவை உணர்த்தக்கூடிய ஒரு நற்செய்தியாக இன்றைய நற்செய்தி பகுதி அமைந்திருக்கிறது. உணவு, உடை, உறைவிடம் என்ற முக்கியமான இன்றியமையாத தேவைகளையே இறைவன் வானத்து பறவைகளுக்கு இலவசமாக கொடுக்கின்றார் என்றால், அவற்றைவிட மேலான நமக்கு கொடுக்க மாட்டாரா?

கவலை வேண்டாம்

பறவைகள் போல வாழ்க்கை என்பது கவலைகள் மறந்த வாழ்க்கையாகும். கவலைப்படுவதனால் எவன் ஒருவன் தன் உயரத்தில் ஓர் அங்குலம் கூட்ட முடியும் என்கின்ற வார்த்தைகளில் உள்ள வாழ்வின் தெளிவை புரிந்து கொண்டாலே போதும். தேவைகளையே மனதில் கொண்டு  உலகத்தில் சீடர்கள் பயணம் செய்வார்கள் எனில், கடவுளுக்கு பணி செய்யும் மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். இந்த நிலை செல்வத்திற்கு அடிமையாகும் நிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும். ‘முழுமையாக விடுதலையை அனுபவிக்க கடவுள் ஒருவருக்கு மட்டும் ஊழியம் செய்தால்போதும்’ என்பதுதான் இயேசு கற்றுத் தரும் பாடம்.

றைபராமரிப்பு

இன்றைய மூன்று வாசகங்களுமே கடவுளின் அனுக்கிரக கருணையை நமக்கு நினைவூட்டுகின்றது. கடவுளை படைப்பாளியாகவும், தந்தையாகவும் நம் வாழ்வின் யதார்த்தங்களுக்கு அர்த்தத்தை கொடுப்பவராகவும் கண்டு பாவிக்க அனுபவிக்க கொடுக்கப்படுகின்ற சவால்களை தொட்டு காட்டுகின்றது. இன்றைய வாசகங்கள். இறைபராமரிப்பு பற்றிய பதிவுகள் விவிலியத்தின்  மூன்று இடங்களில் வருகின்றது (யூதித் 9 : 5, சாஞா 14 : 3, 6 : 17, சஉ 5 : 5). கடவுள் அனைவரையும், அனைவரது மீட்பையும் விரும்புகின்றார் என்பதை இறைபராமரிப்பு செய்தி நமக்கு சுட்டிக்காட்டுகிறது. கடவுள் பாவிகளின் இறப்பை அல்ல, மாறாக அவர்களின் பாவம் இல்லா மறுவாழ்வையே விரும்புகின்றார். நம்முடைய செயல்களுக்கு ஏற்பவும், குணங்களுக்கு ஏற்பவும், சிந்தனைகளுக்கு ஏற்பவும் நமக்கு பரிசளிக்கின்றார். கடவுள் ஒருவர் மட்டுமே தீயனவற்றை நன்மைதனத்தால் நிரப்ப முடியும்.

நாம் மேலானவர்கள் :

கடவுளின் மேல் நம்பிக்கை வைத்து வாழ்க்கை நடத்துபவரும், தனது நம்பிக்கையை சிதறாமல் பார்த்துக் கொள்பவரும் கடவுளின் பார்வையில் மேலானவர்களாக கருதப்படுகிறார்கள். தென்றலுக்கும், புயலுக்கும், வாழ்விற்கும், சாவிற்கும் இடையே கடவுள் மீது மட்டில்லா நம்பிக்கையை பதித்து வாழ்பவர்கள் மேலானவர்கள். கடவுளின் பார்வையில் மேலானவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. மனித பலவீனம் சில நேரங்களில் நம்மை அதற்கு இட்டுச் செல்கின்றது. விவிலிய மாமனிதர்களின் வாழ்வையும் பயம் கவ்வுவதை பார்க்கின்றோம். மோசே‡ விப 34 : 30, யோசுவா ‡ யோசு 4 : 14, சாமுவேல் ‡ 1 சாமு 12 : 1). புதிய ஏற்பாட்டின் இறைபராமரிப்பின் தூதுவர் இயேசு கிறிஸ்து தரும் செய்தி  ‘பயப்படாதே’ என்கின்ற செய்திதான். மாற்கு 5 : 36; 6 : 50, மத் 17 : 7;  28 ; 10, லூக் 1 : 13, 30; 2 : 10).

நம்முடைய  நினைவுகளையும், எண்ணங்களையும், கனவுகளையும் சிதைக்க முடிந்தவருக்கு மட்டுமே அஞ்சுங்கள் என்பதுதான் செய்தி. நம்முடைய நம்பிக்கையை சிதைப்பவருக்கும், மகிழ்ச்சியை எடுப்பவருக்கும் பயம் கொள்ள வேண்டும். நம் நம்பிக்கை, மகிழ்ச்சி, பயம், அனைத்தும் இறைவன்பால் இருக்கின்ற போது ஞானம் நிறைந்தவர்களாய், கவலையில்லாதவர்களாய் இறைவனுக்கு சேவை செய்ய முடியும், தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம் (நீமொ 9 : 10).

நம் வாழ்வு, நாமும் இறைவனும் சேர்ந்து செய்யும் நெய்யும் பணியைப் போல. ஆனால் நிறத்தை தேர்ந்தெடுப்பது நம் கையில் இருப்பதில்லை - கோரி.   

பொதுக்காலம் 7ஆம்ஞாயிறு 19-02-2017



பொதுக்காலம் 7ஆம்ஞாயிறு   19-02-2017

லேவி 19 : 1 ‡ 2, 17 - 18;   1 கொரி 3 : 16 - 23,  மத் 5 : 38 - 48

1994 இல் ரூவாண்டா நாட்டில், அந்நாட்டு ஜனாதிபதி சென்ற விமானம், எதிர் குழுவினரால் ராக்கட் வீசி வீழ்த்தப்பட்டது. இதனால் ஜனாதிபதியின் இனத்தவர் எதிர் இனத்தவரான டுட்சி இனத்தவர் 10 லட்சம் பேரை கொன்றனர். சுமார் 2.5 லட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

பழிக்குப்பழி வாங்கும் விலங்கியல் குணம் நம் எல்லோரிடமே  உள்ளது.
மற்றவரை அழிக்கும் இயல்புக்கள் நம்மிடம் உள்ளது. அதிலிருந்து எழுந்ததுதான் பழிக்குப்பழி செய்யும் சட்டமும், திட்டமும். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்கின்ற யூத சட்டம் பழைய ஏற்பாட்டிலே மூன்று இடங்களில் குறிப்பிடப்படுகின்றது (வி ப 21 : 24, லேவி 24 : 20, 19 : 21). சிலர் இந்த சட்டத்தை இரத்ததாகம் கொண்ட சட்டம் என்றும் ஈவு இரக்கமற்ற சட்டம் என்றும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இரக்கத்தின் துவக்கமே இந்த சட்டங்களில் இருந்துதான் துவங்குகிறது எனலாம். பழிக்குப்பழி என்கின்ற இந்த சட்டம் வரைமுறையின்றி சில இடங்களில் நிறைவேற்றப்பட்டது. ஒருவர் தவறு செய்தால், அவர்களுடைய இனமே, கிராமமே அழிக்கப்பட்டது. இந்த கொடூர செயல்பாடு நாளடைவில் மாற்றப்பட்டது.

ஒருவர் மற்றவரின் கண்ணை காயப்படுத்தினால் அடுத்தவர் கண் மட்டுமே எடக்கப்படவேண்டும். அது மட்டுமல்லாமல், தண்டனைக்குரியவர் மட்டுமே பாதிக்கப்படுவர். குற்றம் செய்தவர் குடும்பத்தினருக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை. ஆனால் இயேசு இச்சட்டத்தையும் தாண்டி செயல்படுவதுதான் இரக்கத்தின் செயல் என்று 5 : 39இல் குறிப்பிடுகின்றார். இங்கு இயேசு நான்கு வகையான செயல்பாடுகளை முன் வைக்கின்றார்.

ஒன்று : ஒருவர் உன் வலக்கன்னத்தில் அறைந்தால்....
பொதுவாக உலகில் உள்ள மனிதர்களில் 90% பேர் வலக்கை பழக்கம் உடையவர்கள். ஒரு மனிதரை எதிரே நிற்க வைத்து அறைந்தால்கூட அவரது இடக்கன்னத்தில்தான் அறைய முடியும். வலக்கன்னத்தில் அறைய வேண்டும் எனில் ஒரு மனிதர் தனது கரத்தின் புறப்பகுதியைப் பயன்படுத்த வேண்டும். யூத சமுதாயத்தில் அறை கொடுப்பது  என்பது இழிவான, ஏற்றுக்கொள்ள முடியாத, அவமானமிக்க செயல். அதுவும் புறம் கையால் என்றால் வெகு அவமானமிக்க செயல். இயேசு சொல்வது பழிவாங்கும் வழக்கை விட்டொழிக்க வேண்டும் என்பதே. அளவு இல்லாமல் அன்பு செய்வது என்பது, தான் காயப்பட்டாலும், பிறர் காயம் அடைய கூடாது என்கின்ற மனநிலையாகும். இரண்டாவது : ஒருவர் சட்டையை கேட்டால், மேல் அங்கியையும் சேர்த்து.... ஒருவர் பந்தயத்தில் தன்னுடைய சட்டையை இழந்தால், அவனுடைய மேலாடையையும் எதிராளி கேட்பான் எனில், அன்று இரவு இழந்தவர் தூங்குவதற்கு போர்த்திக் கொள்ள வென்றவர் அந்த மேலங்கியை கொடுக்க வேண்டும் என்பது யூத சட்டம். அதாவது வென்றவரக்கு மேலங்கி மேல் முழு உரிமை இல்லை என்பதுதான். ஆனால் இய¼சுவின் எதிர்பார்ப்பு இதையும் மிஞ்சுகிறது. இயேசுவின் பொருட்டு துன்பத்தை அனுபவிப்பவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற சூழ்நிலையிலும் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார்.

மூன்றாவதாக : ஒரு மைல் தூரம் நடக்கச் சொன்னால், அவருடன் இரண்டு ....

யூதர்களை உரோமையர்கள் ஆட்சி செய்த காலத்தில், உரோமையர்கள் யூதர்களை ஒரு மைல் தூரம் சுமைகளை தூக்க செய்வதற்கு அதிகாரம் பெற்றிருந்தனர். ஒருவர் கேட்டதற்கு மேலாகவும் செய்ய தயாராக இரு;க்க வேண்டும் என்பது இயேசுவின் சீடத்துவத்தின் முக்கிய பாடம். ஒரு தாழ்ச்சி நிறைந்த சேவகனை போல் பிறருக்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவும் கரங்கள் கொண்டவர்களாக இருங்கள் என்பதே அழைப்பு.

நான்காவது : உங்களிடம் கேட்பவருக்கு கொடுங்கள், கடன் கேட்பவருக்கு முகம் கோணாதீர்கள் .... 5 : 42
ஏழு வருடத்திற்கு ஒருமுறை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது (இச 15 : 7 ‡ 11). கடன் வாங்குபவர்கள் இதை மிகவும் விரும்பினார்கள். கடன் கொடுப்பவர்களுக்கு இது லாபகரமான சட்டம் இல்லை. கடன் கொடுப்பதற்கு பெரும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் எப்போது ஒருவர் தேவையில் உழல்கிறாரோ அவருக்கு பெருந்தன்மையோடு உதவி செய்ய வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். இயேசுவின் நாட்களில் பணம் பெற விரும்பும் கடனாளிகள் தங்கள் உணவிற்காக, பிழைப்பிற்காக பணத்தை கடன் பெற்றனர். இத்தகையோரிடத்தில் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று இயேசு அழைப்பு விடுக்கின்றார்.

பாராபட்சம் இல்லாமல் இருக்கும் தந்தையை போல் பாரபட்சம் காட்டாத சீடர்களால் மட்டுமே, எதிரிகளையும் அன்பு செய்யக்கூடிய ஆற்றலும் அன்பும் கிடைக்கும்.

பழிவாங்க துடிக்கும் போது, இரண்டு கல்லறை குழிகளை தோண்டிவிடு. ஒன்று உன் எதிரிக்கு. மற்றொன்று உனக்கு
- டக்லஸ் ஹோர்ட்டன்.

கண்ணுக்கு கண் என்ற சட்டம் உயிர்பெற்றால்  உலகில் எல்லோருமே கண் இழந்தவராய் நிற்பர் - காந்தி.


பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு 12-02-2017

பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு   12-02-2017

சீராக் 15 : 15 - 20 ,   1 கொரி 2 : 6 - 10,  மத் 5 : 17 - 37

மத்தேயுவின் நற்செய்தி இன்று ஜெருசலேம் அழிவிற்கு பிறகு இருந்த சூழ்நிலையை பிரதிபலிக்கின்றது. நற்செய்தி முழுவதும் இயேசு சட்டத்தின் நிரந்தர உறுதித்தன்மையை எடுத்தியம்புகின்றார். ஆனால் புதுவகையான புரிதலோடு அதிகாரத்தோடு கொடுக்கின்றார். சில இடங்களில் பழைய சட்டங்களை அழித்துவிடுகிறார். (விவாகரத்து, பழிக்குப்பழி). சில இடங்களில் மேலும் கடமையை சேர்த்து கூறுகிறார் (கொலை, விபச்சாரம், ஆணைகள்). சில இடங்களில் வளைந்து கொடுக்கக்கூடிய செய்தியாக கூறுகிறார் (ஓய்வுநாள்). எல்லாவற்றிற்கும் மேலாக இறைவாக்கினர்கள் மற்றும் சட்டங்கள் எல்லாம் சார்ந்திருக்கக் கூடிய இரட்டை கட்டளைகளை இயேசு தருகின்றார். 1. இறையன்பு மற்றொன்று 2. பிறரன்பு.

இயேசு கிறிஸ்துவின் மலைப்பொழிவை புரிந்து கொள்ளாமல் இந்த மாபெரும் நற்செய்திப் பகுதியைப் புரிந்து கொள்வது சிறிது கடினமான காரியம். தான், சட்டத்தை அழிக்க வரவில்லை. சட்டத்தை சீர்திருத்தவும், நிறைவேற்றவும் வந்தேன் என்றுரைக்கின்றார். யூதர்களுக்கு சட்டம் மிகமிக முக்கியமானது. ஏனெனில் அது இறைவனால் மோசே வழியாக மக்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதை நம்பினார்கள். ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன் என்கிற வார்த்தைகள் சட்டத்தின் நிரந்தர நீடிய இயல்பை அதிகரிக்கின்றது. கட்டளைகளை கடைபிடித்து கற்பிக்கிறவரே இறைவன் அருகில் இருப்பவர் என்ற கருத்தை விளக்கிக்காட்டி, பல கட்டளைகளை சுட்டிக்காட்டி அவைகளை எப்படி வாழ வேண்டும் என்று விளக்குகிறார்.

இயேசு வாழ்ந்த, வாழப்போகின்ற வாழ்க்கையை தீர்மானமாக கூட இவற்றை நாம் எடுத்துக் கொள்ளலாம். கொலை, விபச்சாரம், காணிக்கை, விவாகரத்து, இச்சை நிறைந்த பார்வை என அனைத்தையும், புதிய கண்ணோட்டத்தோடு புதுப்பிக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக இறுதியாக பேச்சு வழக்கில் இன்றியமையா சட்டமாக, உங்கள் பதில் ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை என்றிருக்கட்டும் என்று சொல்லி பேச்சு முறையையும் வரையறை செய்கின்றார்.

இயேசு கிறிஸ்து புதிய சட்டங்களை, பழைய சட்டங்களை வைத்து தருவதால் விவிலிய அறிஞர்கள் இயேசுவை புதிய மோசேவாக பார்க்கின்றார். இயேசுவின் இந்த சீர்த்திருத்தம் திருச்சட்டங்களை முழுமையடைய செய்கின்றது. இயேசுவினுடைய புதிய கண்ணோட்டம் முதல் வாசக குறிப்புகளடங்கிய சீராக்கின் வாக்கியங்களுக்கு பொருத்தமானதாக இருக்கின்றது.

இயேசுவின் வழிகாட்டுதல் என்பது, சட்டங்களை பின்பற்றி வா என்று அழைப்பது அல்ல. மாறாக, என்னை பின்பற்றி வா என்னை பிரதிபலித்துவா என்னுடைய ஒளியில் வா என்பதாகும். நம்மை ஒளிர்விக்கின்ற உண்மையான ஒளி இயேசு கிறிஸ்துவே (யோவா 1 :9). அவரே முதலும் முடிவும். என்றென்றும் வாழ்பவரும் அவரே (திருவெளி 1 : 17 ‡ 18). எனவே கிறிஸ்து விவிலியத்தின் விளக்கம். இவ்வாறு இயேசுகிறிஸ்துவே திருச்சட்டத்தின் முழுமையாகவும், நிறைவாகவும் விளங்குகின்றார்.

துணைநலம் ஆக்கம் தரும் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும் (குறள் 651)
எதனையும் சிறப்பாக செய்தல் எல்லா நலன்களையும் தரும் என்கிறார் வள்ளுவர்.

பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு 5 - 2 - 2017,

ஞாயிறு தரும் இறைவார்த்தை

பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு      5 - 2 - 2017

எசா 58 : 7 - 10, 1 கொரி 2 : 1 - 5, மத் 5 : 13 - 16

மலைப்பொழிவில் இயேசு பேறுகளுக்கு அடுத்தாற்போல் தன் சீடர்களை உப்பு, ஒளி ஆகியவைகளுக்கு ஒப்பிட்டு பேசுகிறார். 

கிறிஸ்துவ வாழ்வு, தனக்காக மட்டுமல்ல, அது மற்றவர்களுக்கு பயனளிப்பதற்காகவும் அமைந்திருக்க வேண்டும் என்ற கருத்தை கூறுவதற்காகத்தான், இயேசு, தன் சீடர்களை உப்பு, ஒளி என்ற பொருள்களுடன் ஒப்பிட்டு பேசுகிறார்.
உப்பு : 
இயேசு கிறிஸ்து  உப்பையும், ஒளியையும் தன் சீடர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்புகளாக பல்வேறு இடங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் சொல்லியிருந்தாலும்கூட மத் 5 : 13 கூறுவதன் நோக்கம், சீடத்துவத்தில் உப்புதன்மை இன்றியமையாத் தன்மையாக இருப்பது தான். மத்திய கிழக்கு பகுதியில் முதல் நூற்றாண்டில் உப்பை இரண்டு காரணங்களுக்காக பயன்படுத்தினர்.

1. பதப்படுத்தும் வசதிகள் இல்லாத காரணத்தால் உப்பை உணவை வீணாகாமல் பாதுகாக்க பயன்படுத்தினர். குறிப்பாக இறைச்சி பண்டங்கள் பாலைவனப்பகுதியில் எளிதில் வீணாகிவிடும் என்பதால் உப்பை பயன்படுத்தினர். இயேசுவில் நம்பிக்கை கொண்டோரும் ஏறக்குறைய உப்பின் பாதுகாப்பு தன்மையைப் போல, தீமையிலிருந்து உலகையும், உலகம் சார்ந்த மனிதர்களையும் பாதுகாக்கும் காரணிகளாக இருக்க வேண்டும்                                                                     (தி. பா 14 : 3; உரோ 8 : 8).
இரண்டாவதாக  உப்பு : 

தான் இருக்கின்ற உணவிற்கு சுவையை ஊட்டக்கூடியதாக இருக்கின்றது. இதைப் போலவே இயேசுவின் சீடராக வாழ விரும்பும் எவரும், தான் இருக்கும் சமுதாயத்தை சுவைமிக்கதாகவும், ஆவியாரின் வழிகாட்டுதலில் செயல்படும் குழுமமாகவும் மாற்ற வேண்டும். பகைமை உள்ள இடத்தில் சமாதானத்தைக் கொடுக்கவும், சோகம் உள்ள இடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், வெறுப்பு உள்ள இடத்தில் கடவுளை நிலைநாட்டவும், தீயவற்றை நன்மையால் நிரப்பவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒளி :

கிறிஸ்துவோடு இணைந்து பயணிப்பவர்களின் நற்செயல்கள் அனைத்தும் ஒளியைப் போல பிறர் கண்ணுக்கு பிரகாசமாக ஒளிரவேண்டும் என்பதுதான் ஒளியின் உவமை கூற்று. தன் கடமையை செய்பவரின் பலன், மலைமேல் இருக்கும் நகராகவும், மரக்காலின் மேல் வைக்கப்பட்ட விளக்கு போலும், அனைவருக்கும் வெளிச்சம் தரும். இருளில் படர்கின்ற ஒளி, இருள் தன்மையை போக்குவதுபோல, பாவம் நிறைந்த மனிதர் வாழ்வில், நம்பிக்கையாளர்களின் நட்பு இருளில் ஒளியை போன்றதாக அமையும்.

உங்களில் நற்செயல்களை பிறர் காண்பாரானால், கண்டிப்பாக விண்ணகத்தில் உள்ள தந்தையை அவர்கள் போற்றிப் புரிந்துகொள்வார்கள். கனியை கொண்டு மரத்தை அறிவது போல, கிறிஸ்தவனின் செயலைக் கொண்டு கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும்.


மாற்கு 9 : 50இல் உப்பின் தன்மை மறைந்து போவது குறிப்பிடப்படுகிறது. இது சமாதானத்தில் குறைபாட்டால்தான் ஏற்படுகிறது. உப்பு தன்மையை தன்னகத்தே கொண்டு, ஒருவரோடு ஒருவர் சமாதானத்தோடு வாழும்போது சுவையான வாழ்வு நம்மால் வாழ முடியும். லூக் 14 : 34 ‡ 35. உப்பின் மறுமுனை செய்தியாக கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய மறுக்கின்ற போதும், சிலுவையை சுமந்து,  இயேசுவை முழுமனத்தோடு பின்தொடர மறுக்கின்ற போதும் உப்பு தன்மை தோல்வியை சந்திக்கின்றது எனலாம்.

கிறிஸ்தவ வாழ்வு, சிறிய காரியங்களை பெரிய அளவில் செய்வதுதான் என்பதை இன்றைய முதல் வாசகம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. நம் ஒளியான வாழ்வு, கிறிஸ்தவ வாழ்வுக்கும், வெளி உலக வாழ்விற்கும் நடக்கின்ற மாபெரும் போராட்டம். இழப்பை எண்ணாமல் ஒளியை காக்க முயற்சித்தால் பிறருக்கு பயனுள்ள எளிமையான, கீழ்ப்படிதலுள்ள, ஒழுக்கமான கிறிஸ்தவ வாழ்வை உப்பாகவும், ஒளியாகவும் நம்மாலும் வாழ்ந்துக் காட்ட இயலும். பெற்றோர், ஆசிரியரின் முன்மாதிரிகையான செயல்பாடுகள்தான் மாணவர்களின் மனதில் நிலைத்திருக்கின்றன. நம் நற்செயல்களால் மற்றவர்களுக்கு நல்வழி காட்டுவோம். 

உங்கள் ஒளியை மற்றவர்கள் பார்க்க மறுத்தாலும் 
ஒளியின் வெப்பத்தையாவது அவர்கள் உணர செய்யுங்கள் 
- ரொனால் ரீகன்.

நல்லமுன்மாதிரிகை, நல்ல அறிவுரையை விட இரண்டு மடங்கு வல்லமைவாய்ந்தது - சிசரோ.



Ads Inside Post