Pages - Menu

Friday, 26 February 2016

ஞாயிறு மறையுரை தவக்காலம் 4 - ஆம் ஞாயிறு 06 - 03 - 2016 - அருள்தந்தை.சி. குழந்தை, காணியிருப்பு

ஞாயிறு மறையுரை
தவக்காலம் 4 - ஆம் ஞாயிறு
06 - 03 - 2016

- அருள்தந்தை.சி. குழந்தை, காணியிருப்பு 

யோசு 5 : 9அ, 10 - 12
2 கொரி 5 : 17 -21
லூக் 15 : 1 - 3, 11 - 32


தன் தவறுகளை உதறுபவனே உத்தமன்

அந்தத் தாய்க்கு மகள் என்றால் கொள்ளைப் பிரியம். தவமிருந்து பெற்ற மகள் அல்லவா அவள். படிப்பில் மகள் கெட்டிக்காரி. விளையாட்டில் கெட்டிக்காரி. உரையாடல்களிலும், உறவுகளை வளர்ப்பதிலும் கெட்டிக்காரி. தாயின் மகிழ்ச்சியை எடை போட முடியவில்லை. மகளை அடாது அன்பு செய்வாள். விடாது வாங்கிக் கொடுப்பாள். இல்லை என்று சொன்னால் பிள்ளையின் உள்ளம் உடைந்து போகுமாம். மகளின் வாழ்வில் வளர்ச்சிக்குப் பதிலாக தளர்ச்சி தாளம் போடத் தொடங்கியது. வீழ்ச்சி, வீணை வாசிக்கத் துணிந்தது. படிப்பில் மட்டம், பேச்சில் மட்டம். விளையாட்டில் மட்டம். வேலைகளில் மட்டம். இவ்வாறு மட்டங்கள் தலைகாட்டத் தொடங்கின. இவற்றிற்கு காரணம் என்ன எனச் சிந்திக்கத் தொடங்கினாள் தாய். காரணம் பளிச்செனப்பட்டது. ஆம் அந்தத் தாய் தன் மகளின் பிறந்தநாளுக்கு வாங்கிக் கொடுத்த விலையுயர்ந்த ஸி.சி.ம் தொலைக்காட்சிப் பெட்டியும், ஆப்பிள் ணூ தொலைப்பேசியும்தான். அந்த இரண்டையும் தீயிலிட்டு நெருப்புக்குத் தீனியாக்கினாள் தாய்.

கலிங்கத்து அசோகன் தன் தவறான போரின் விளைவுகளைக் கண்டு மனம் வருந்தியதால் சாதாரண அசோகன் மகா அசோகனாக மாறினான். பவுலடியாரும் தன் தவறுகளை உணர்ந்து உதறித் தள்ளியதால் கவுல், பவுல் ஆனார்; பவுல் புனிதர் ஆனார். இன்றைய நற்செய்தியில் இளைய மகன் தன் தவறுகளை உணர்ந்து உதறித் தள்ளியதால் சீரோவாக இருந்தவன் ஹீரோவாக மாறினான். பிறந்த வீட்டிலும், வளர்ந்த நாட்டிலும் அனாதையானவன் தன் தவறுகளை உதறியதால் வீட்டுக்கு வாரிசாக ஏற்றுக் கொள்ளப்பட்டான் நாட்டின் நற்குடிமகனாக அங்கீகாரம் பெற்றான். இளைய மகன் எடுத்தது தவறான முடிவுகள் : பொருளின் மீது ஆசை கொண்டான். பெண்ணின் மீது ஆசை கொண்டான். புகழின் மீது ஆசை கொண்டான். விளைவு, பன்றிகளோடு பன்றியாகக் கருதப்பட்டான். ஆனாலும் அவன் தன் தவறுகளை உணர்ந்து உதறித் தள்ள முடிவு எடுத்தான். தன்னுடைய குறைகளையே கொள்கைகளாகக் கொள்ளவில்லை. தன் தவறுகளைத் தத்துவங்களாகக் கருதவில்லை. தான் செய்தவைகள் ஞாயம் என்று எண்ணவில்லை. ஞாயம் என்று பேசவும் இல்லை. மாறாக தவறுகளை உணர்ந்தான். மனம் மாறினான். இந்த மனமாற்றம் மெட்ட நோயா என்று கிரேக்க மொழியால் சொல்வப்படுகிறது. மெட்ட நோயா என்றால் மனம் கசிந்து உருகுதல் எனப் பொருள்படும்.

இந்த மனமாற்றத்தால் இளைய மகன் இழந்த உரிமைகளை, உறவுகளை மீண்டும் பெற்றான். தந்தையும் அவகைத் தாராளமாக மன்னித்து ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டு இறை இரக்கத்தின் ஆண்டு. உவமையில் வந்த தந்தையின் இரக்கம் பரம தந்தையின் இரக்கத்தைப் பிரதிபலிக்கிறது. நாமும் நம் பாவங்களை உணர்ந்து இறைவனிடம் திரும்புகிற போது அவரும் தாராளமாக நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்.

முதல் வாசகத்தில், மனம் மாறிய இஸ்ரயேலர் பாஸ்கா விழாவைக் கொண்டாடத் தகுதி பெற்றனர். ஒரு வகையில் இஸ்ரயேல் மக்களும் இளைய மகனைப் போன்றவர்கள்தாம். பலமுறை தவறுகள் செய்தனர். தடம் புரண்டனர். ஆனாலும் இறை இரக்கம் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டது. இளைய மகனுக்கு விருந்து படைக்கப்பட்டதுபோல் திருந்திய இஸ்ரயேல் மக்களுக்கு பாஸ்கா விருந்து காத்திருந்தது. 2ஆம் வாசகத்திலும் பவுலடியார் மிக அற்புதமாக அறிவித்தார். “பழையன கழிந்து புதியன புகுந்தன. இவை யாவும் கடவுளின் செயலே” என்று (2 கொரி 5 : 17)

நாம் எடுக்கும் முடிவுகள் சரியானவையாக இருக்க வேண்டும். தவறுகளை ஞாயப்படுத்தக் கூடாது. தவறு செய்வது இயற்கை. தவறு செய்வதே இயற்கை அல்ல. தவறு செய்வது செய்வது இயற்கை என்றால் திருந்துவதும் இயற்கையாக இருக்க வேண்டும். திருந்தும்போதுதான் பவுலடியார் 2ஆம் வாசகத்தில் குறிப்பிட்டது போல நாம் இறைவனோடும், பிறரோடும் ஒப்புரவாக முடியும். ஒப்புரவாவோம், உயர்வடைவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post