இரக்க ஆண்டில், ஒரு சுருக்கமான சிலுவைப் பாதை
- அ. ஜோசப்சாமி, கும்பகோணம்
1. இயேசுவுக்கு தீர்ப்பு :
தீர்ப்பளிக்க உரிமையுள்ள இயேசு - “என் தீர்ப்பு செல்லும் (யோ 8 : 16)” என கூறியவருக்கு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை, நீ போகலாம். இனி பாவம் செய்யாதே” என இரக்கம் காட்டியவருக்கு, இன்று தீர்ப்பளிக்க உரிமையற்ற மனிதன் தீர்ப்பளிக்கிறான். “என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது குற்றம் சுமத்த முடியுமா? (யோ 8 : 46)” எனக் கூறிய பரிசுத்தருக்கே அந்த தீர்ப்பு.
முன்சார்பு எண்ணங்கள், பிலாத்துவின் தீர்ப்பைப் போன்றதுதான். தவறான கண்ணோட்டம், உறவுகளை சிதைக்கிறது. மற்றவர்களின் நல்ல பண்புகளைக் கண்டு, பாராட்டி அவர்களை வளர செய்வோம். நம்மைப் பற்றி மற்றவர் முன்சார்பு எண்ணத்துடன் செயல்பட்டல், பொறுமையுடன் அவைகளை சந்திப்போம்.
2. இயேசுவின் தோளில் சிலுவை :
எருசலேம் கோவிலில் வியாபாரிகளை கயிறு பின்னி சாட்டையால் விரட்டிய நீதிமானுக்கு (யோ 3 : 14) இன்று சாட்டையடியும், அடிமையின் சின்னமான சிலுவையும் கிடைக்கின்றன. காரணமென்ன? என்றும் நீதி அநீதியால் வதைக்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டவே அநீதியின் அடையாளத்தை தோளில் ஏற்கிறார்.
ஒரு புதுக்கவிதை : என்னைச் சந்திப்பவர் வெற்றியடையாமல் போவதில்லை.
- இப்படிக்கு தோல்வி
வலிகளை சந்தித்துதான் வலிமை பெறமுடியும். சிலுவைகள் தோளில் வரும்போது, சோர்வில் விழுந்திட வேண்டாம். சிலுவைகள் வலுவின் வேர்கள்.
3. முதல் முறை விழுதல் :
நாற்பது நாள் நோன்பிருந்தும் இயேசு உடல் சோர்வில் மயங்கிடவில்லை. “அகன்று போ சாத்தானே (மத் 4 : 10)” என வீரமாக சாத்தனை தள்ளியவர் இன்று தள்ளாடி விழுகிறார். சிலுவையின் பாரம், தீமைகள் கொடுமைகளின் அடையாளம். இயேசு சிலுவையின் பாரத்தால் வீழ்ந்தது, நாம் செய்யும் தீமைகளின் கொடூரத்தின் விளக்கம்.
தோல்வி சிலரைப் பதுக்கும், பலரை செதுக்கும். முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை. முடியுமா என்று சொல்வது அவநம்பிக்கை. முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை. வீழ்வது கொடுக்கும் பாடம் எழுவது.
4. இரக்க பார்வைகளின் சந்திப்பு :
எருசலேம் ஆலயம். “மகனே ஏன் இப்படி செய்தாய்? (லூக் 2 : 48)” என்ற கேள்வி கேட்ட கண்களும், “தந்தைக்கு பணிந்தவரே என் தாய் (லூக் 8 : 21)” என அவரை மகிமைப்படுத்திய கண்களும் சந்தித்தன. இருவரும் பேசவில்லை. காரணம் இது இறைசித்தம் என உணர்ந்த அர்ப்பண இரக்க உள்ளங்கள், உணர்வுகளில் ஒன்றிணைந்து நின்றன. இரண்டு இரக்க உருவங்களின் மீதும் நம் கண்களைக் பதிப்போம்.
ஓர் ஆணின் உடலிலிருந்து உயிரை பிரித்தெடுத்தால். அவன் பிணமாவான். ஒரு பெண் ஒருத்தியின் உடலிலிருந்து உயிரை பிரித்தெடுத்தால் அவள் தாயாவாள். அன்னை மரியா, இயேசுவை பெற்றெடுத்து நம் வாழ்வுக்கு வழியானாள். தாய்மையைப் போற்றுவோம். தாய்மைக்கு தலைவணங்குவோம்.
5. சீமோன் உதவி :
மனிதன் தான் இறைவனிடம் உதவி கேட்பார். இறைமகன் இயேசுவுக்கு சிலுவை சுமக்க உதவி தேவைப்பட்டது. நல்ல சமாரியன் உவமையில் இயேசு கூறிய ஒரு புறவினத்தான் போல் சீமோன் இயேசுவுக்கு உதவுகிறார்.
துயரத்தில் வருந்தும் அன்பர்கள் மீது நம் இரக்க கண்கள் விழட்டும், கரங்கள் அழும்போது கண்ணீர் துடைப்பான். விழும்போது கைகொடுப்பவன். தோற்கும்போது ஊக்கம் கொடுப்பவன். வெல்லும்போது தட்டிக்கொடுப்பவன். சாகும்போது தூக்கி சுமப்பவன் நண்பன். நாம் செய்யும் உதவிகள் விண்ணகத்தைத் திறக்கும் சாவிகள்.
6. திருமுகம் துடைக்கும் பெண் :
ஆண் இனம் மட்டும் தான் நல்ல சமாரியன் ஆக முடியுமா? பெண் ஒருவரும் நல்ல சமாரியன் ஆகிறாள். இயேசுவுக்கு குடிக்க தண்ணீர் தந்து “வந்து பாருங்கள்” யோ 4 : 29) என்று இயேசுவை அறிவித்த சமாரிய பெண் போல இங்கே சிலுவைப் பாதையில் வெரோணிக்கா நிற்கிறாள். இவளின் இரக்கம் நமக்கு முன்மாதிரிகை. துயரப்படுவோரின் கண்ணீர் துடைக்க, மனித நேயம் நம்முள் பிறக்கட்டும்.
ஆறுதலை தருபவர் இறைவன்; அந்த ஆறுதலை மற்றவர்களுக்கு அளிக்கும்போது, தெய்வீக ஆறுதல் ஆற்றில் ஒன்றாகிறோம். ஒருவரின் உணர்வில் ஒன்றாக கலப்பதே ஆறுதலின் பண்பு. துயரங்களில் அயர்ந்து நிற்பவருக்கு அருகில் நிற்போம், நம் துயரங்கள் மாறும்.
7. இரண்டாம் முறை விழும் இயேசு :
இயேசு உவமையில் ஊதாரிமகன் தந்தையை விட்டு பிரிந்தான். ஆனால் மீள எழுந்து, தந்தையை நோக்கி திரும்பினான் (லூக் 15 : 19). இரக்கம் மிக்க தந்தை அவனை ஏற்றார். நாமும் பாவத்திலிருந்து எழ, வர இரண்டாம் முறை விழுந்தவர். எழுந்து நடந்து நமக்கு அடையாளமாகிறார். ஊதாரி மகனே, மகளே எழுந்து தந்தையை நோக்கி நட, இரக்க தந்தை நம்மை ஏற்பார்.
தம் இயலாமையை உணர்ந்தவரே வளர்ச்சியின் பாதையை கண்டுகொண்டவர் ஆவர். தீராத சிக்கல்கள் இல்லை, மறையாத மேகங்கள் இல்லை. யோசுவாவிற்கு இறைவன் சொன்ன வார்த்தைகள், சோர்ந்த நேரங்களில் நம் காதுகளில் ஒலிக்கட்டும். “வீறுகொள், துணிந்துநில், அஞ்சாதே, கவலைப்படாதே. ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும்இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்” (யோசுவா 1 : 9)
8. பெண்களுக்கு இயேசு அறிவுரை :
கனினேய பெண் நம்பிக்கையோடு விடாமல் இயேசுவை நோக்கி மன்றாடினார். பின்சென்றார். “தாவீதின் மகனே இரக்கம் காட்டும்” (மத் 15 : 22) என்றார். அவளின் வேண்டுதலின்படி அவளின் மகன் நலமடைந்து அருள்பெற்றார். இயேசுவின் இரக்க செயல், இங்கு, எருசலேம் பெண்களிடமும் காணப்படுகிறது. இயேசு, ஆறுதலையல்ல துன்புறுவோருக்கு அவர்களுக்கு ஆறுதலை மட்டும் தரவில்லை. இத்துயரநேரத்திலும், நற்செய்தி கூறுகிறார், எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும், உங்கள் உறவுகளின் துயர நிலைகளுக்காகவும் அழுங்கள் என்கிறார். ஆறுதல் தரும் பிறரன்பு, இங்கு நமக்கும் பாடமாகிறது.
வெரோணிக்கா, மற்றொரு சிமியோனாக, இயேசுவின் மனவலியை நீக்க உதவுகிறாள். முகம் அகத்தின் வெளிப்பாடு. இயேசுவின் முகத்தைத் துடைத்து தன் கனிவினை காட்டுகிறாள். மற்றவரின் மனப்புண்களை ஆற்றிடும் கனிவு கண்களாக மாறிட வெரோணிக்காவை போல முன்வருவோம்.
9. இயேசு மூன்றாம் முறை விழுதல் :
பலமுறை இயேசு விழுந்திருப்பார். நாம் சிலுவைப்பாதையில் மூன்றுமுறை மட்டுமே தியானிக்கிறோம். வாழ்நாள் முழுதும் அநீதி வாழ்வில் மூழ்கியிருந்த சக்கேயு மீள எழுந்தான் (லூக் 19 : 9). “இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று” என கூறினார் இயேசு. இந்த சக்கேயுவைப் போல், இயேசுவைப் பார்க்க, வரவேற்க நாமும் எழவேண்டும். அப்போது நம் வீட்டுக்கும் மீட்பு கிடைக்கும்.
எல்லாம் முடிந்துவிட்டது என முடங்க வேண்டியதில்லை. அருகம் புல்லைப் போல, நம் வாழ்வு ஆழ்ந்த வேர் கொண்டது. ஏழுமுறையல்ல, எழுபது முறையும் மன்னிக்க தயாராயிருக்கிறார் கடவுள். தவறுகள், பாவங்கள், நம்மை இழக்கும் நேரங்கள். ஒப்புரவு அருள்சாதனத்தில் இறைவனின் கரத்தினால் மீண்டும் எழுவோம்.
10. இயேசு ஆடை கழற்றபடுதல் :
இயேசுவின் மேலுடையைத் தொட்ட பெண் குணமடைந்தார் (மத் 9 : 22). இதே மேலுடையை நாம் குணமடைய இயேசு இழக்கிறார். மனித இனமே உன் போர்வையான அகந்தை, ஆடம்பரம், பகை உணர்வு, காமம், பாவம் இவைகளை களைந்தால்தான் விண்ணரசுக்குத் தகுதிபெறுவோம். மேலுடையை தொட்ட பெண்ணின் நம்பிக்கை நம்முள் வளரட்டும்.
ஆடம்பரங்கள், தேவையற்ற பாதுகாப்புக்கள். மற்றவர்களின் உடைமைகளை ஆடையாக அணிவதுதான் ஆடம்பரம். நாற்றமெடுத்து அழியபோகும் நம் உடலுக்கு வீண் ஆடப்பரங்கள் தேவையா? என்று சிந்தித்து பார்ப்போம். ஆடம்பரத்திற்கு பதில் பகிர்வின் சிந்தித்து பார்ப்போம். ஆடம்பரத்திற்கு பதில் பகிர்வின் மகிழ்வை உடுத்திக் கொள்வோம்.
11. இயேசுவை சிலுவையில் அறைதல் :
நிலக்கிழார், குத்தகைகாரர்கள் தன் மகனை மதிப்பார்கள் என நினைத்து தன் மகனையே அவரை அனுப்பிய போது, இவன்தான் சொத்துக்கு உரியவன், கொன்று போடுவோம் (மத் 21 : 38 என்ற செயல்பாடு போல், இங்கு, நமக்காக தந்தை அனுப்பிய இயேசுவை கொன்று போட்டனர். நம்மை விண்ணக உரிமை மக்களாக்கவே இரக்கமிக்க இயேசு சிலுவை மரணம் ஏற்றார் (உரோ 5 : 10, எபி 11 : 39).
தன்நலம் பெரிய கொடும் வாள். மற்றவர்களை, குறைக்கும், அழிக்கும் அழிவின் பண்பு. அன்பினால், என்பும் உரியர் பிறர்க்கு, என்று நம் வாழ்வை சிலுவையில் அறைவோம். அதுதான் இயேசுவின் சிலுவை போல மற்றவர்களுக்கு வாழ்வு தரும்.
12. இயேசு சிலுவையில் உயிர்விடுதல் :
திருமுழுக்கு யோவான் நீதி கேட்டவர், அவர் தலை வெட்டப்பட்டார் (மத் 6 : 27). அவரால் வலிமை மிக்கவர் என அறிவிக்கப்பட்டவர் (மத் 3 : 11) இங்கு தம் வலிமையை தாழ்த்தி கொண்டு நமக்காக சிலுவையில் உயிர்விடுகிறார். இவர் உண்மையாகவே நேர்மையாளர் (லூக் 24 : 47) என சிலுவையில் அறைந்தவரே சாட்சியம் தருகிறார். இயேசுவே, எனக்காக நீர் இறந்தீர் என திருப்பலியில் அறிக்கையிடுவதை வாழ்வின் பொருளாக்குவோம்.
பிறருக்காக நம்மை குறைப்பதே சிலுவை மரணம். “இயேசுவே எனக்காக மரித்தீர், நான் மற்றவருக்காக வாழ்கிறேன்”. இதுதான் சிலுவை நமக்குத் தரும் பாடம்.
13. இயேசு திருஉடல் தாய் மடியில் :
குழந்தைçயை அதன் தாய் மரியா வைத்திருப்பதை மூன்று ஞானிகள் கண்டார்கள் (மத் 2 : 11). அதே தாய் மடியில், அதே இயேசு, இப்போது மாற்று சூழலில் அதே பாச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இயேசுவின் உயிரற்ற உடல் பெற்ற தாயின் மடியில். தன் சிலுவை சாவால் உலகிற்கு வாழ்வு தந்த இயேசுவை தன் தாயின் மடியில் ஏந்தி நிற்கும் வீரத்தாயாக நிற்கிறாள். இயேசுவின் தியாகத்தில் தோய்ந்து நிற்கிறாள்.
நான்காம் தலத்தில், சிலுவையின் வழியில் வந்தத்தாய், இங்கு சிலுவையின் நிழலில் நிற்கிறார். இறைவார்த்தையை மனதில் ஏற்று, எளிமையில் அதனை வாழ்ந்து, நம்பிக்கையின் சிகரத்தில் இப்போது நிற்கிறாள். “நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன்” (கலா 6 : 14). அன்னை மரியாவை போல் சிலுவையின் உண்மைகளை மனதில் இருத்தி சிந்திப்போம்.
14. இயேசுவின் அடக்கம் :
மனித வாழ்வின் இறுதிக்கட்டம், அவரின் பூத உடல் மண்ணில் அடக்கம் காண்பதாகும். இயேசுவின் வாழ்வு, அவரின் உடல் அடக்கத்தையும் தாண்டி உயிர்ப்புடன், உலகிற்கும் புத்துயிர் அளித்தது.
உடல் அடக்கத்தை நினைப்பவர் நிச்சயம் அடக்கத்துடனும், பணிவுடனும் வாழ்வார். ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப் கோடியும் அல்ல பல (குறள் 337) இயேசுவின் உடல் அடக்கம், அடக்கமுடைமையை நம்மில் பிறப்பிக்கட்டும்.
15. முடிவுரை : இயேசு உயிர்ப்பு
:
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக வாழ்வோரின் கடவுள் (லூக் 20 : 38) என்ற இயேசுவின் கூற்று நிறைவேறியது. இயேசு இறப்பிலிருந்து உயிர்த்தார். இது இயேசுவின் பெரிய மறை உண்மை. அதே உயிர்ப்பு அவரின் சீடருக்கும் உண்டு. உயிர்ப்பு வெற்றியின் வெளிப்பாடு. சிலுவையில் ஒன்றித்தவர், இயேசுவின் உயிர்ப்பிலும் இடம் பெறுகிறார்.
மகிழ்வுடன் வாழாதவர் கிறிஸ்தவர் அல்லர் என்கிறார் அகுஸ்தினார். நம் முயற்சிகள், தோல்விகளிலும், எதிர்ப்புகளிலும் கலந்து ஓடி, இறுதியாக வெற்றியை சந்திக்கும். இயேசுவின் உயிர்ப்பு வெற்றியின் சின்னம். மேல்நோக்கி பார்த்து மேலான வாழ்வை அணிந்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment