Pages - Menu

Friday, 26 February 2016

ஞாயிறு மறையுரை தவக்காலம் 4 - ஆம் ஞாயிறு 06 - 03 - 2016 - அருள்தந்தை.சி. குழந்தை, காணியிருப்பு

ஞாயிறு மறையுரை
தவக்காலம் 4 - ஆம் ஞாயிறு
06 - 03 - 2016

- அருள்தந்தை.சி. குழந்தை, காணியிருப்பு 

யோசு 5 : 9அ, 10 - 12
2 கொரி 5 : 17 -21
லூக் 15 : 1 - 3, 11 - 32


தன் தவறுகளை உதறுபவனே உத்தமன்

அந்தத் தாய்க்கு மகள் என்றால் கொள்ளைப் பிரியம். தவமிருந்து பெற்ற மகள் அல்லவா அவள். படிப்பில் மகள் கெட்டிக்காரி. விளையாட்டில் கெட்டிக்காரி. உரையாடல்களிலும், உறவுகளை வளர்ப்பதிலும் கெட்டிக்காரி. தாயின் மகிழ்ச்சியை எடை போட முடியவில்லை. மகளை அடாது அன்பு செய்வாள். விடாது வாங்கிக் கொடுப்பாள். இல்லை என்று சொன்னால் பிள்ளையின் உள்ளம் உடைந்து போகுமாம். மகளின் வாழ்வில் வளர்ச்சிக்குப் பதிலாக தளர்ச்சி தாளம் போடத் தொடங்கியது. வீழ்ச்சி, வீணை வாசிக்கத் துணிந்தது. படிப்பில் மட்டம், பேச்சில் மட்டம். விளையாட்டில் மட்டம். வேலைகளில் மட்டம். இவ்வாறு மட்டங்கள் தலைகாட்டத் தொடங்கின. இவற்றிற்கு காரணம் என்ன எனச் சிந்திக்கத் தொடங்கினாள் தாய். காரணம் பளிச்செனப்பட்டது. ஆம் அந்தத் தாய் தன் மகளின் பிறந்தநாளுக்கு வாங்கிக் கொடுத்த விலையுயர்ந்த ஸி.சி.ம் தொலைக்காட்சிப் பெட்டியும், ஆப்பிள் ணூ தொலைப்பேசியும்தான். அந்த இரண்டையும் தீயிலிட்டு நெருப்புக்குத் தீனியாக்கினாள் தாய்.

கலிங்கத்து அசோகன் தன் தவறான போரின் விளைவுகளைக் கண்டு மனம் வருந்தியதால் சாதாரண அசோகன் மகா அசோகனாக மாறினான். பவுலடியாரும் தன் தவறுகளை உணர்ந்து உதறித் தள்ளியதால் கவுல், பவுல் ஆனார்; பவுல் புனிதர் ஆனார். இன்றைய நற்செய்தியில் இளைய மகன் தன் தவறுகளை உணர்ந்து உதறித் தள்ளியதால் சீரோவாக இருந்தவன் ஹீரோவாக மாறினான். பிறந்த வீட்டிலும், வளர்ந்த நாட்டிலும் அனாதையானவன் தன் தவறுகளை உதறியதால் வீட்டுக்கு வாரிசாக ஏற்றுக் கொள்ளப்பட்டான் நாட்டின் நற்குடிமகனாக அங்கீகாரம் பெற்றான். இளைய மகன் எடுத்தது தவறான முடிவுகள் : பொருளின் மீது ஆசை கொண்டான். பெண்ணின் மீது ஆசை கொண்டான். புகழின் மீது ஆசை கொண்டான். விளைவு, பன்றிகளோடு பன்றியாகக் கருதப்பட்டான். ஆனாலும் அவன் தன் தவறுகளை உணர்ந்து உதறித் தள்ள முடிவு எடுத்தான். தன்னுடைய குறைகளையே கொள்கைகளாகக் கொள்ளவில்லை. தன் தவறுகளைத் தத்துவங்களாகக் கருதவில்லை. தான் செய்தவைகள் ஞாயம் என்று எண்ணவில்லை. ஞாயம் என்று பேசவும் இல்லை. மாறாக தவறுகளை உணர்ந்தான். மனம் மாறினான். இந்த மனமாற்றம் மெட்ட நோயா என்று கிரேக்க மொழியால் சொல்வப்படுகிறது. மெட்ட நோயா என்றால் மனம் கசிந்து உருகுதல் எனப் பொருள்படும்.

இந்த மனமாற்றத்தால் இளைய மகன் இழந்த உரிமைகளை, உறவுகளை மீண்டும் பெற்றான். தந்தையும் அவகைத் தாராளமாக மன்னித்து ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டு இறை இரக்கத்தின் ஆண்டு. உவமையில் வந்த தந்தையின் இரக்கம் பரம தந்தையின் இரக்கத்தைப் பிரதிபலிக்கிறது. நாமும் நம் பாவங்களை உணர்ந்து இறைவனிடம் திரும்புகிற போது அவரும் தாராளமாக நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்.

முதல் வாசகத்தில், மனம் மாறிய இஸ்ரயேலர் பாஸ்கா விழாவைக் கொண்டாடத் தகுதி பெற்றனர். ஒரு வகையில் இஸ்ரயேல் மக்களும் இளைய மகனைப் போன்றவர்கள்தாம். பலமுறை தவறுகள் செய்தனர். தடம் புரண்டனர். ஆனாலும் இறை இரக்கம் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டது. இளைய மகனுக்கு விருந்து படைக்கப்பட்டதுபோல் திருந்திய இஸ்ரயேல் மக்களுக்கு பாஸ்கா விருந்து காத்திருந்தது. 2ஆம் வாசகத்திலும் பவுலடியார் மிக அற்புதமாக அறிவித்தார். “பழையன கழிந்து புதியன புகுந்தன. இவை யாவும் கடவுளின் செயலே” என்று (2 கொரி 5 : 17)

நாம் எடுக்கும் முடிவுகள் சரியானவையாக இருக்க வேண்டும். தவறுகளை ஞாயப்படுத்தக் கூடாது. தவறு செய்வது இயற்கை. தவறு செய்வதே இயற்கை அல்ல. தவறு செய்வது செய்வது இயற்கை என்றால் திருந்துவதும் இயற்கையாக இருக்க வேண்டும். திருந்தும்போதுதான் பவுலடியார் 2ஆம் வாசகத்தில் குறிப்பிட்டது போல நாம் இறைவனோடும், பிறரோடும் ஒப்புரவாக முடியும். ஒப்புரவாவோம், உயர்வடைவோம்.

இரக்க ஆண்டில், ஒரு சுருக்கமான சிலுவைப் பாதை
- அ. ஜோசப்சாமி, கும்பகோணம்


1. இயேசுவுக்கு தீர்ப்பு :

தீர்ப்பளிக்க உரிமையுள்ள இயேசு - “என் தீர்ப்பு செல்லும் (யோ 8 : 16)” என கூறியவருக்கு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை, நீ போகலாம். இனி பாவம் செய்யாதே” என இரக்கம் காட்டியவருக்கு, இன்று தீர்ப்பளிக்க உரிமையற்ற மனிதன் தீர்ப்பளிக்கிறான். “என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது குற்றம் சுமத்த முடியுமா? (யோ 8 : 46)” எனக் கூறிய பரிசுத்தருக்கே அந்த தீர்ப்பு.

முன்சார்பு எண்ணங்கள், பிலாத்துவின் தீர்ப்பைப் போன்றதுதான். தவறான கண்ணோட்டம், உறவுகளை சிதைக்கிறது. மற்றவர்களின் நல்ல பண்புகளைக் கண்டு, பாராட்டி அவர்களை வளர செய்வோம். நம்மைப் பற்றி மற்றவர் முன்சார்பு எண்ணத்துடன் செயல்பட்டல், பொறுமையுடன் அவைகளை சந்திப்போம்.

2. இயேசுவின் தோளில் சிலுவை :

எருசலேம் கோவிலில் வியாபாரிகளை கயிறு பின்னி சாட்டையால் விரட்டிய நீதிமானுக்கு (யோ 3 : 14) இன்று சாட்டையடியும், அடிமையின் சின்னமான சிலுவையும் கிடைக்கின்றன. காரணமென்ன?  என்றும் நீதி அநீதியால் வதைக்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டவே அநீதியின் அடையாளத்தை தோளில் ஏற்கிறார்.
ஒரு புதுக்கவிதை :   என்னைச் சந்திப்பவர் வெற்றியடையாமல் போவதில்லை. 
- இப்படிக்கு தோல்வி

வலிகளை சந்தித்துதான் வலிமை பெறமுடியும். சிலுவைகள் தோளில் வரும்போது, சோர்வில் விழுந்திட வேண்டாம். சிலுவைகள் வலுவின் வேர்கள்.

3. முதல் முறை விழுதல் :

நாற்பது நாள் நோன்பிருந்தும் இயேசு உடல் சோர்வில் மயங்கிடவில்லை. “அகன்று போ சாத்தானே (மத் 4 : 10)” என வீரமாக சாத்தனை தள்ளியவர் இன்று தள்ளாடி விழுகிறார். சிலுவையின் பாரம், தீமைகள் கொடுமைகளின் அடையாளம். இயேசு சிலுவையின் பாரத்தால் வீழ்ந்தது, நாம் செய்யும் தீமைகளின் கொடூரத்தின் விளக்கம்.

தோல்வி சிலரைப் பதுக்கும், பலரை செதுக்கும். முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை. முடியுமா என்று சொல்வது அவநம்பிக்கை. முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை. வீழ்வது கொடுக்கும் பாடம் எழுவது. 

4. இரக்க பார்வைகளின் சந்திப்பு :

எருசலேம் ஆலயம். “மகனே ஏன் இப்படி செய்தாய்? (லூக் 2 : 48)” என்ற கேள்வி கேட்ட கண்களும், “தந்தைக்கு  பணிந்தவரே என் தாய் (லூக் 8 : 21)” என அவரை மகிமைப்படுத்திய கண்களும் சந்தித்தன. இருவரும் பேசவில்லை. காரணம் இது இறைசித்தம் என உணர்ந்த அர்ப்பண இரக்க உள்ளங்கள், உணர்வுகளில் ஒன்றிணைந்து நின்றன. இரண்டு இரக்க உருவங்களின் மீதும் நம் கண்களைக் பதிப்போம்.

ஓர் ஆணின் உடலிலிருந்து உயிரை பிரித்தெடுத்தால். அவன் பிணமாவான். ஒரு பெண் ஒருத்தியின் உடலிலிருந்து உயிரை பிரித்தெடுத்தால் அவள் தாயாவாள். அன்னை மரியா, இயேசுவை பெற்றெடுத்து நம் வாழ்வுக்கு வழியானாள். தாய்மையைப் போற்றுவோம். தாய்மைக்கு தலைவணங்குவோம்.

5. சீமோன் உதவி :

மனிதன் தான் இறைவனிடம் உதவி கேட்பார். இறைமகன் இயேசுவுக்கு சிலுவை சுமக்க உதவி தேவைப்பட்டது. நல்ல சமாரியன் உவமையில் இயேசு கூறிய ஒரு புறவினத்தான் போல் சீமோன் இயேசுவுக்கு உதவுகிறார். 

துயரத்தில் வருந்தும் அன்பர்கள் மீது நம் இரக்க கண்கள் விழட்டும், கரங்கள்   அழும்போது கண்ணீர் துடைப்பான். விழும்போது கைகொடுப்பவன். தோற்கும்போது ஊக்கம் கொடுப்பவன். வெல்லும்போது தட்டிக்கொடுப்பவன். சாகும்போது தூக்கி சுமப்பவன் நண்பன். நாம் செய்யும் உதவிகள் விண்ணகத்தைத் திறக்கும் சாவிகள்.

6. திருமுகம் துடைக்கும் பெண் :

ஆண் இனம் மட்டும் தான் நல்ல சமாரியன் ஆக முடியுமா? பெண் ஒருவரும் நல்ல சமாரியன் ஆகிறாள். இயேசுவுக்கு குடிக்க தண்ணீர் தந்து “வந்து பாருங்கள்” யோ 4 : 29) என்று இயேசுவை அறிவித்த சமாரிய பெண் போல இங்கே சிலுவைப் பாதையில் வெரோணிக்கா நிற்கிறாள். இவளின் இரக்கம் நமக்கு முன்மாதிரிகை. துயரப்படுவோரின் கண்ணீர் துடைக்க, மனித நேயம் நம்முள் பிறக்கட்டும்.

ஆறுதலை தருபவர் இறைவன்; அந்த ஆறுதலை மற்றவர்களுக்கு அளிக்கும்போது, தெய்வீக ஆறுதல் ஆற்றில் ஒன்றாகிறோம். ஒருவரின் உணர்வில் ஒன்றாக கலப்பதே ஆறுதலின் பண்பு. துயரங்களில் அயர்ந்து நிற்பவருக்கு அருகில் நிற்போம், நம் துயரங்கள் மாறும்.

7. இரண்டாம் முறை விழும் இயேசு :

இயேசு உவமையில் ஊதாரிமகன் தந்தையை விட்டு பிரிந்தான். ஆனால் மீள எழுந்து, தந்தையை நோக்கி திரும்பினான் (லூக் 15 : 19). இரக்கம் மிக்க தந்தை அவனை ஏற்றார். நாமும் பாவத்திலிருந்து எழ, வர இரண்டாம் முறை விழுந்தவர். எழுந்து நடந்து நமக்கு அடையாளமாகிறார். ஊதாரி மகனே, மகளே எழுந்து தந்தையை நோக்கி நட, இரக்க தந்தை நம்மை ஏற்பார்.
தம் இயலாமையை உணர்ந்தவரே வளர்ச்சியின் பாதையை கண்டுகொண்டவர் ஆவர். தீராத சிக்கல்கள் இல்லை, மறையாத மேகங்கள் இல்லை. யோசுவாவிற்கு இறைவன் சொன்ன வார்த்தைகள், சோர்ந்த நேரங்களில் நம் காதுகளில் ஒலிக்கட்டும். “வீறுகொள், துணிந்துநில், அஞ்சாதே, கவலைப்படாதே. ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும்இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்” (யோசுவா 1 : 9)

8. பெண்களுக்கு இயேசு அறிவுரை :

கனினேய பெண் நம்பிக்கையோடு விடாமல் இயேசுவை நோக்கி மன்றாடினார். பின்சென்றார். “தாவீதின் மகனே இரக்கம் காட்டும்” (மத் 15 : 22) என்றார். அவளின் வேண்டுதலின்படி அவளின் மகன் நலமடைந்து அருள்பெற்றார். இயேசுவின் இரக்க செயல், இங்கு, எருசலேம் பெண்களிடமும் காணப்படுகிறது. இயேசு, ஆறுதலையல்ல துன்புறுவோருக்கு அவர்களுக்கு ஆறுதலை மட்டும் தரவில்லை. இத்துயரநேரத்திலும், நற்செய்தி கூறுகிறார், எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும், உங்கள் உறவுகளின் துயர நிலைகளுக்காகவும் அழுங்கள் என்கிறார். ஆறுதல் தரும் பிறரன்பு, இங்கு நமக்கும் பாடமாகிறது.

வெரோணிக்கா, மற்றொரு சிமியோனாக, இயேசுவின் மனவலியை நீக்க உதவுகிறாள். முகம் அகத்தின் வெளிப்பாடு. இயேசுவின் முகத்தைத் துடைத்து தன் கனிவினை காட்டுகிறாள். மற்றவரின் மனப்புண்களை ஆற்றிடும் கனிவு கண்களாக மாறிட வெரோணிக்காவை போல முன்வருவோம்.

9. இயேசு மூன்றாம் முறை விழுதல் :

பலமுறை இயேசு விழுந்திருப்பார். நாம் சிலுவைப்பாதையில் மூன்றுமுறை மட்டுமே தியானிக்கிறோம். வாழ்நாள் முழுதும் அநீதி வாழ்வில் மூழ்கியிருந்த சக்கேயு மீள எழுந்தான் (லூக் 19 : 9). “இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று” என கூறினார் இயேசு. இந்த சக்கேயுவைப்  போல், இயேசுவைப் பார்க்க, வரவேற்க நாமும் எழவேண்டும். அப்போது நம் வீட்டுக்கும் மீட்பு கிடைக்கும்.

எல்லாம் முடிந்துவிட்டது என முடங்க வேண்டியதில்லை. அருகம் புல்லைப் போல, நம் வாழ்வு ஆழ்ந்த வேர் கொண்டது. ஏழுமுறையல்ல, எழுபது முறையும் மன்னிக்க தயாராயிருக்கிறார் கடவுள். தவறுகள், பாவங்கள்,  நம்மை இழக்கும் நேரங்கள். ஒப்புரவு அருள்சாதனத்தில் இறைவனின் கரத்தினால் மீண்டும் எழுவோம்.

10. இயேசு ஆடை கழற்றபடுதல் :

இயேசுவின் மேலுடையைத் தொட்ட பெண் குணமடைந்தார் (மத் 9 : 22). இதே மேலுடையை நாம் குணமடைய இயேசு இழக்கிறார். மனித இனமே உன் போர்வையான அகந்தை, ஆடம்பரம், பகை உணர்வு, காமம், பாவம் இவைகளை களைந்தால்தான் விண்ணரசுக்குத் தகுதிபெறுவோம். மேலுடையை தொட்ட பெண்ணின் நம்பிக்கை நம்முள் வளரட்டும்.

ஆடம்பரங்கள், தேவையற்ற பாதுகாப்புக்கள். மற்றவர்களின் உடைமைகளை ஆடையாக அணிவதுதான் ஆடம்பரம். நாற்றமெடுத்து அழியபோகும் நம் உடலுக்கு வீண் ஆடப்பரங்கள் தேவையா? என்று சிந்தித்து பார்ப்போம். ஆடம்பரத்திற்கு பதில் பகிர்வின் சிந்தித்து பார்ப்போம். ஆடம்பரத்திற்கு பதில் பகிர்வின் மகிழ்வை உடுத்திக் கொள்வோம்.

11. இயேசுவை சிலுவையில் அறைதல் :

நிலக்கிழார், குத்தகைகாரர்கள் தன் மகனை மதிப்பார்கள் என நினைத்து தன் மகனையே அவரை அனுப்பிய போது, இவன்தான் சொத்துக்கு உரியவன், கொன்று போடுவோம் (மத் 21 : 38 என்ற செயல்பாடு போல், இங்கு, நமக்காக தந்தை அனுப்பிய இயேசுவை கொன்று போட்டனர். நம்மை விண்ணக உரிமை மக்களாக்கவே இரக்கமிக்க இயேசு சிலுவை மரணம் ஏற்றார் (உரோ 5 : 10, எபி 11 : 39).

தன்நலம் பெரிய கொடும் வாள். மற்றவர்களை, குறைக்கும், அழிக்கும் அழிவின் பண்பு. அன்பினால், என்பும் உரியர் பிறர்க்கு, என்று நம் வாழ்வை சிலுவையில் அறைவோம். அதுதான் இயேசுவின் சிலுவை போல மற்றவர்களுக்கு வாழ்வு தரும்.

12. இயேசு சிலுவையில் உயிர்விடுதல் :

திருமுழுக்கு யோவான் நீதி கேட்டவர், அவர் தலை வெட்டப்பட்டார் (மத் 6 : 27). அவரால் வலிமை மிக்கவர் என அறிவிக்கப்பட்டவர் (மத் 3 : 11) இங்கு தம் வலிமையை தாழ்த்தி கொண்டு நமக்காக சிலுவையில் உயிர்விடுகிறார். இவர் உண்மையாகவே நேர்மையாளர் (லூக் 24 : 47) என சிலுவையில் அறைந்தவரே சாட்சியம் தருகிறார். இயேசுவே, எனக்காக நீர் இறந்தீர் என திருப்பலியில் அறிக்கையிடுவதை வாழ்வின் பொருளாக்குவோம்.

பிறருக்காக நம்மை குறைப்பதே சிலுவை மரணம். “இயேசுவே எனக்காக மரித்தீர், நான் மற்றவருக்காக வாழ்கிறேன்”. இதுதான் சிலுவை நமக்குத் தரும் பாடம்.

13. இயேசு திருஉடல் தாய் மடியில் :

குழந்தைçயை அதன் தாய் மரியா வைத்திருப்பதை மூன்று ஞானிகள் கண்டார்கள் (மத் 2 : 11). அதே தாய் மடியில், அதே இயேசு, இப்போது மாற்று சூழலில் அதே பாச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இயேசுவின் உயிரற்ற உடல் பெற்ற தாயின் மடியில். தன் சிலுவை சாவால் உலகிற்கு வாழ்வு தந்த இயேசுவை தன் தாயின் மடியில் ஏந்தி நிற்கும் வீரத்தாயாக நிற்கிறாள். இயேசுவின் தியாகத்தில் தோய்ந்து நிற்கிறாள்.

நான்காம் தலத்தில், சிலுவையின் வழியில் வந்தத்தாய், இங்கு சிலுவையின் நிழலில் நிற்கிறார். இறைவார்த்தையை மனதில் ஏற்று, எளிமையில் அதனை வாழ்ந்து, நம்பிக்கையின் சிகரத்தில் இப்போது நிற்கிறாள். “நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன்” (கலா 6 : 14). அன்னை மரியாவை போல் சிலுவையின் உண்மைகளை மனதில் இருத்தி சிந்திப்போம்.

14. இயேசுவின் அடக்கம் :

மனித வாழ்வின் இறுதிக்கட்டம், அவரின் பூத உடல் மண்ணில் அடக்கம் காண்பதாகும். இயேசுவின் வாழ்வு, அவரின் உடல் அடக்கத்தையும் தாண்டி உயிர்ப்புடன், உலகிற்கும் புத்துயிர் அளித்தது.

உடல் அடக்கத்தை நினைப்பவர் நிச்சயம் அடக்கத்துடனும், பணிவுடனும் வாழ்வார்.  ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப் கோடியும் அல்ல பல (குறள் 337) இயேசுவின் உடல் அடக்கம், அடக்கமுடைமையை நம்மில் பிறப்பிக்கட்டும்.

15. முடிவுரை : இயேசு உயிர்ப்பு 
:
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக வாழ்வோரின் கடவுள் (லூக் 20 : 38) என்ற இயேசுவின் கூற்று நிறைவேறியது. இயேசு இறப்பிலிருந்து உயிர்த்தார். இது இயேசுவின் பெரிய மறை உண்மை. அதே உயிர்ப்பு அவரின் சீடருக்கும் உண்டு. உயிர்ப்பு வெற்றியின் வெளிப்பாடு. சிலுவையில் ஒன்றித்தவர், இயேசுவின் உயிர்ப்பிலும் இடம் பெறுகிறார்.

மகிழ்வுடன் வாழாதவர் கிறிஸ்தவர் அல்லர் என்கிறார் அகுஸ்தினார். நம் முயற்சிகள், தோல்விகளிலும், எதிர்ப்புகளிலும் கலந்து ஓடி, இறுதியாக வெற்றியை சந்திக்கும். இயேசுவின் உயிர்ப்பு வெற்றியின் சின்னம். மேல்நோக்கி பார்த்து மேலான வாழ்வை அணிந்துக் கொள்வோம்.

திருப்பலியும், அருள்பணியாளர்களும் - அருள்பணி. எஸ். அருள்சாமி, பெத்தானி இல்லம், கும்பகோணம்.

திருப்பலியும், அருள்பணியாளர்களும்
- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்.


கிறிஸ்து திருப்பலியில் தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்து கடவுளை வழிபடுகிறார் என்று முந்திய சிந்தனையில் குறிப்பிட்டோம். அப்படியானால் திருப்பலியைக் கட்புலனாக பீடத்தில் ஒப்புக்கொடுக்கும் அருள்பணியாளர் என்ன செய்கிறார்? அவர் பலி ஒப்புக்கொடுக்கிறாரா? யாரை, யாருக்கு, பலியாக ஒப்புக்கொடுக்கிறார்? யாரை வழிபடுகிறார்? இது போன்ற கேள்விகள் எழுவது இயல்பானதாகும்.

திருப்பலி மூன்று அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, அது கிறிஸ்துவின் பலி, மற்றொன்று அது கிறிஸ்துவின் ஒரே குருத்துவத்தின் செயலாக்கம், இறுதியாக அது திருப்பலியைக் கொண்டாடும் திருக்குழுமத்தின் செயல். இத்திருக்குழுமத்தில் அருள்பணியாளர் முக்கிய இடம் வகிக்கிறார்.

அருள்பணியாளர் பணி :

கிறிஸ்து சிலுவையில் தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தார். இது மட்டுமே இறைவனுக்கு ஏற்புடையதாகும். “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (மத் 3 : 17). சிலுவையில் கிறிஸ்து நேரிடையாக தம்மை தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தார். அதே பலியை அருள் அடையாளங்கள் வழியாக அருள்பணியாளர் கிறிஸ்துவின் பெயரால் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறார். இவருடைய செயல் துணையாமையான செயல் (Ministerial function) இதன் வழியாக கிறிஸ்துவின் சிலுவைப்பலி புதிய ஏற்பாட்டின் ஒரே பலியாகச் செயலாக்கம் பெறுகிறது.

மேலும் அருள்பணியாளருடைய பணி, மக்கள் கொண்டுவரும் காணிக்கைகளை ஏற்று கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பதாகும். இவர் “நற்கருணை வழிபாட்டில், அதாவது திருப்பந்தியில் மிகச் சிறந்த முறையில் தமது திருப்பணியை ஆற்றுகின்றார். இவ்வழிபாட்டில் கிறிஸ்துவுக்குப் பதிலாகச் செயலாற்றி, அவரது மறை பொருளைப் பறைசாற்றி, நம்பிக்கை கொண்டோர் ஒப்புக் கொடுப்பவற்றை அவர்களின் தலைவரது பலியோடு இணைக்கின்றார். மாசற்ற பலி பொருளாக ஒரே முறை தம்மைத்தாமே தந்தைக்கு ஒப்புக் கொடுத்த (காண் எபி 9 : 11 ‡ 28) கிறிஸ்துவின் பலியாகிய புதிய ஏற்பாட்டின் ஒரே பலியை, ஆண்டவர் மீண்டும் வரும்வரை (காண் 1 கொரி 11 : 26) திருப்பலியில் புதுப்பித்துச் செயல்படுத்துகின்றார்”. (திருச்சபை 28).

வசீகரத்துக்குப் பின் பீடத்தில் அப்ப ‡ இரச அடையாளங்கள் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறி இருப்பதால் அருள்பணியாளர் கிறிஸ்துவையே கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கலாம். இதன் காரணமாக, அருள்பணியாளர் தொடக்கம் முதல் இறுதி வரை பிரசன்னமாக இருந்து செயல்பட வேண்டும் என்பது தெளிவு. அவருடைய பங்கு ஆக்கப் பூர்வமானதாகவும், ஈடுபாடுடையதாகவும் இருக்க வேண்டும். எனவே திருப்பலியை நிறைவேற்றும் அருள்பணியாளர் அதை நிறுத்திவிட்டு போட்டோ எடுப்பதும், அல்லது ஒலிபெருக்கியைச் சரிசெய்ய செல்வதும் தவிர்க்கப்பட வேண்டும். அவருடைய கவனமெல்லாம் தாம் ஆற்றும் திருச்செயலின் மேல் இருக்க வேண்டும்.

கூட்டுத்திருப்பலியும், அருள்பணியாளர்களும் :

குருத்துவம், திருப்பலி, இறைமக்கள் அனைவரின் ஒருமைப்பாட்டைக் கூட்டுத் திருப்பலிச் சடங்குமுறை வெளிப்படுத்துகின்றது. பல அருள்பணியாளர்கள் ஒருங்கிணைந்து ஒரே திருப்பலியை, அடையாளங்கள் வழியாக ஒரே நேரத்தில் கொண்டாடுவது கூட்டுத் திருப்பலி எனப்படுகிறது. இது, பல அருள்பணியாளர்கள் ஒன்று கூடி ஒரே சமயத்தில் தனித்தனியாகத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பதிலிருந்து  (Co - Celebration) வேறுபட்டது. கூட்டுத் திருப்பலியில் ஓர் அருள்பணியாளர் தலைமை ஏற்றுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தாலும், எல்லா அருள்பணியாளர்களும் அப்பலியை ஒப்புக் கொடுப்பவர்கள்தான். அதனால்தான் கூட்டுத் திருப்பலியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அருள்பணியாளரும் திருப்பலிக்காகத் தனித்தனியாக நன்கொடை (திருப்பலி கருத்து) பெற திருஅவை அனுமதிக்கிறது. ஆகவே திருப்பலியின் தொடக்கம் முதல் இறுதி வரை கூட்டுத் திருப்பலியில் பங்குபெறும் அருள்பணியாளர்களின் பிரசன்னம் அவசியமாகிறது. தியானக் காலங்களில் கூட்டுத் திருப்பலியில் பங்குபெறும் ஒரு சிலர் நற்கருணையை உட்கொண்டபின் திருவுடையை எடுத்து வைத்துவிட்டு வேறு வேலையைக் கவனிக்க வெளியேறுகிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.

அடுத்து காலதாமதமாக வரும் அருள்பணியாளர் சிலர், திருவுடையை அணிந்துக்கொண்டு மற்ற அருள்பணியாளர்களுடன் கலந்துக் கொள்கிறார்கள். இது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். அப்படி கலந்து கொள்பவர் முழு திருப்பலியை ஒப்புக் கொடுக்கிறார் என்று சொல்லமுடியாது. அவர்கள் திருப்பலிக்காக நன்கொடையை ஏற்க முடியாது. இது பற்றி உரோமைத் திருப்பலி நூலின் பொது படிப்பினை கூறுவது கவனிக்கத்தக்கது: “திருப்பலி தொடங்கிய பின் வருகின்ற அருள்பணியாளர்கள் ஒருபோதும் கூட்டுத் திருப்பலியாளர்களாகச் செயல்படக் கூடாது; அத்தகையோரை அனுமதிக்கவும் கூடாது (எண் 206)”.

கூட்டுத் திருப்பலியில் ஒவ்வொரு அருள்பணியாளரும் “முழுமையாகவும் (Full) உணர்ந்தும்  (Conscious) செயல்முறையிலும்”  (Active) ஈடுபடவேண்டும். எனவே கூட்டுத்திருப்பலியில் பங்குபெறும் அருள்பணியாளர்கள் தங்களுக்குள் வேறு காரியங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பது திருப்பலியை உணர்ந்து ஒப்புக்கொடுப்பதற்கு இடையூறாக இருக்கும். கூட்டுத் திருப்பலிக்குத் தலைமை ஏற்று நடத்தும் அருள்பணியாளரோடு உள்ளத்திலும், உடலளவிலும் இணைந்து அவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஆக்கப்பூர்வமாகப் பங்கு பெற்று, அவர் செபிக்கும் செபங்களோடு உள்ளத்தளவில் இணைந்து பலியை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
தலைமை ஏற்போர்க்கான சிறப்புப் பணிகள் :

கூட்டுத் திருப்பலிக்குத் தலைமை ஏற்று பலியை ஒப்புக் கொடுக்கும் அருள்பணியாளரின் சிறப்புப் பணிகளாக பின்வருபவற்றைக் குறிப்பிடலாம்.

- திருப்பலிக்கு வந்திருக்கும் திருக்குழுமத்தை வரவேற்று வாழ்த்துகிறார்;

- பாவத்துயர் சடங்கின் இறுதியில் அவர் மன்னிப்பு வேண்டலைச் சொல்லுகிறார்;

- திருப்பலியில் வரும் திருகுழும மன்றாட்டு, காணிக்கை மீது மன்றாட்டு, திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு ஆகிய மூன்றையும் அவர் மட்டுமே சொல்லுகிறார்;

- தாம் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தப் பலிபொருள்கள் இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபிக்க மக்களை அழைக்கிறார்;

- தொடக்கவுரைக்குமுன் (Preface) மக்களோடு உரையாடல் செய்கிறார்.

- தொடக்கவுரையை அவர் மட்டுமே பாடுகிறார், அல்லது சொல்லுகிறார். “கூட்டுத் திருப்பலிக்குத் தலைமை ஏற்கும் அருள்பணியாளர் மட்டுமே தொடக்கவுரையைப் பாடுவார் அல்லது சொல்வார்” (பொது படிப்பினை எண் 216).


- நற்கருணை மன்றாட்டில் மற்ற அருண்பணியாளர்களுக்கென குறிப்பிடப்பட்ட செபங்களைத் தவிர, மற்றனைத்தையும் அவரே சொல்லிச் செபிப்பார்;

- ஆண்டவர் கற்றுத் தந்த செபத்தின் முன்னுரையைச் சொல்லி மக்களைச் செபிக்க அழைப்பார்;

- இறுதி ஆசீரை அவர் மட்டுமே வழங்குவார்.

- கூட்டுத் திருப்பலியில் பங்குபெறும் நற்கருணை மன்றாட்டின் இறுதி புகழுரையை ஆர்ப்பரிப்பார்; மற்ற அருட்பணியாளர்களும் அவரோடு சேர்ந்து ஆர்ப்பரிக்கலாம். ஆனால் மக்கள் அவரோடு (அவர்களோடு) சேர்ந்து ஆர்ப்பரிக்கக்கூடாது. இவையனைத்தும் தலைமை ஏற்கும் அருள்பணியாளரின் சிறப்பு செயல்கள் (Presidential Function). இவற்றை மற்ற அருள்பணியாளர்களுடன் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது.

முடிவுரை :

மேல் விளக்கப்பட்டவற்றைச் சரியாகப் புரிந்துக் கொண்டு அருள்பணியாளர்கள் திருப்பலியைத் தனியாகவோ, கூட்டுத் திருப்பலியிலோ ஒப்புக்கொடுத்தால் திருப்பலி கொண்டாட்டம் பொருள் உள்ளதாகவும், பயன் உள்ளதாகவும், அழகானதொரு கொண்டாட்டமாகவும் அமையும்.
ccccதிருப்பலியும், அருள்பணியாளர்களும்

இறை இரக்கம் - அருள்பணி.அ. பிரான்சிஸ், பாபநாசம்

இறை இரக்கம்
- அருள்பணி.அ. பிரான்சிஸ்,  பாபநாசம்

உயிர்ப்பில் மலரும் இறை இரக்கம்

உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் சங்கமம் ஆவதே தமிழுக்கு அணங்கும், அழகுமாகும். உயிரோடிணைந்த உடலே வாழ்வுச் செயலாக்கம் பெறுகிறது. பாவ மாசகன்ற வாழ்வே ஆன்மாவினுக்கு அழகூட்டி மணம் கமழச் செய்கிறது. அகத்தூய்மை புறத்தூய்மை இரண்டுமே இறை இரக்க மனிதராக ஒருவரை மாற்றி இயேசுவின் உயிர்ப்பில் பங்கேற்கச் செய்கிறது. தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர் (லேவி 19 : 1). ஆண்டவரின் நியமங்கள் சரியானவை ; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை ; அவை கண்களை ஒளிர்விக்கின்றன (தி. பா. 19 : 8)

பாவத்தின் சம்பளம் மரணம். சாதலின் இன்னாத தில்லை (குறள் 230). அதாவது சாவை விடத் துன்பமானது எதுவும் இல்லை என்பதுவே வள்ளுவம் கூறும் வாழ்வியல் உண்மை. மரணமில்லாப் பெருவாழ்வினை நோக்கியே நாம் பயணிக்கிறோம். பாவத்தினின்றும், சாபத்தினின்றும், நோய், பிணியினின்றும் விடுவித்திட இயேசு பாவிகளையும், நோயாளர்களையும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்போரையும் தேடிச் சென்று உயிர்ப்பு வாழ்வு வாழச் செய்தார். பாவத்தினால் உருக்குலைந்த மனிதனை கிறிஸ்து தமது உயிர்ப்பினால் புத்துரு அளிக்கின்றார். இயேசுவின் உயிர்ப்பில் இணைந்து பங்கேற்றிட கீழ்க்காணும் கருத்துக்கள் செயலாக்கம் பெறட்டும்.
1. பாவ அறிக்கை : பாவத்தை வெறுத்துப் பாவிகளை அரவணைப்பவர் இறைவன். பாவத்தில் உழலும் மனிதன் பிளவுபட்ட மனப்பான்மை கொண்டு தான் வாழும் சமூகத்தைச் சீரழிக்கின்றான். எனவே பாவ நிலை அகற்றிப் பாவப் பரிகாரம் மேற்கொள்ள இத்தவக்காலம் நம்மை அழைக்கின்றது.

 ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கையிடுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமை மிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும் (யாக்கோபு 5 : 16). பாவம் பற்றிய உணர்வு மங்கிக் கொண்டே வந்து மருங்கிப் போன மனம் பெற்றவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. இந்த மனநிலை மாறி மனதிலே மகிழ்ச்சி நிறைந்திட பாவ அறிக்கை அவசியம் தேவைப்படுகிறது. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே ; நொறுங்கிய குற்றம் உணர்ந்த உள்ளத்தை இறைவன் அவமதிப்பதில்லை (தி. பா. 51 : 17).
எதற்காகக் பாவ அறிக்கை செய்ய வேண்டும்?

சமீபத்தில் உடல் எங்கும் வெட்டுக் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓர் இளைஞரைச் சந்தித்தேன். 25 வயதுடைய அவர் தாம் அதிகம் நேசித்த தனது அண்ணனால் வெட்டப்பட்டாள். காரணம் சொத்துத் தகராறு. பாகப் பிரிவினை. மனதிலே பழிவாங்க வேண்டும் என்ற பகையுணர்வு வளர்பிறையான காரணத்தினால் மிகச் சிறந்த மருந்து அளித்தும் வெட்டுக் காயங்கள் இந்த இளைஞரின் உடல் காயங்கள் ஆறாமலே இருந்தன. மன்னிக்கும் மனிதனே மாண்பு மிக்கவன். உள் மனக் காயங்கள் ஆறினால் தான் உடல் காயங்கள் ஆறும் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஆன்ம ஆலோசனை தந்தேன். அவர்கள் மனதில் மண்டிக்கிடந்த முட்புதர்களாகிய தீய குணங்களை கண்ணீரோடு வெளியேற்றினார். மன மகிழ்வு ததும்பும் பாவ அறிக்கை. அங்கே இறைவனின் குணப்படுத்தும் ஆசீர் நிரம்பியது. ஆன்மக் காயங்களை இயேசு குணப்படுத்தியதும், மருத்துவரின் மருந்துகளை அது வேகமாகச் செயல்பட்டு வெட்டுக் காயங்கள் மாயமாகிப் போனது. மருத்துவமனையை விட்டு வெளியேறியதும் நேராக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த தனது அண்ணனைச் சந்திக்கச் சொன்னார். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா! சொத்துக்கு ஆசைப்பட்டு சொந்த தம்பியையே கொல்ல முயன்ற பாவியல்லவா! சகோதரர்கள் இருவரும் கண்ணீர் ததும்பிட உணர்ச்சிப் பிரவாகமெடுத்து ஆரத் தழுவுகின்றனர். மன்னிப்பவரும், மன்னிப்புப் பெறுபவரும் தீய குணத்திற்கு மரித்து பாச, நேச உறவுக்கு உயிர்க்கின்றார்கள்.

புனித பாஸ்தீனம்மாளின் இறை இரக்கக் குறிப்பேட்டிலிருந்து ஒரு பகுதி : நான் ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்றவுடன் மற்ற சகோதரிகளின் கண்களுக்கெட்டாத தூரத்தில் தோட்டத்தில் அமர்ந்து கொள்வேன். அப்போது அளவிட முடியாத இறை மகிழ்ச்சி என் ஆன்மாவில் நிறைந்திருக்கும். மூவொரு இறைவனின் அருள் பிரசன்னம் எனது ஆன்மாவில் ஊடுருவிப் பாய்ந்து தெய்வீக இரக்கக் கடலில் நான் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருப்பேன். எனது ஒன்றுமில்லாமையில் இறை நெருக்கம் ஒன்றே போதும் என்று வாழ்கின்றேன்.

ஒப்புரவு அருள்சாதனம் :

1. இது இரக்கம்மிகு இறைவனின் கொடை தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா (யோவான் 20 : 22, 23)
2. புனித மதர் தெரசா : தாழ்ச்சியின் செயலாக்கம் ஒப்புரவு அருள்சாதனம். இது பாவப் பரிகாரம் அல்ல. இதுவே அன்பின் அருள்சாதனம்.
3. மனதின் குப்பைகளை வெளியேற்று.
4. ஆன்மத் தூய்மை உலகோரையும் தூய்மையாக்கும்.
5. புனிதமிகு ஆன்மாவில் இறை இரக்கத்தின் அருள் அதிகமாகப் பொழியப்படுகிறது.
ஒப்புரவு, திருப்பலி, செபம் ஆகியவற்றில் அடிக்கடி பங்கேற்போர் கடந்த காலத் தவறுகளைக் களைந்தால், தற்காலப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பர். ஆண்டவர் இயேசுவுக்கும் அவர்தம் திருச்சபையினுக்கும் தம்மையே அர்ப்பணிப்பர்.

இயேசுவின் உயிர்ப்பு : ஓர் வரலாற்று நிகழ்வு.. காலம் கடந்த நிகழ்வு. இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றாகத் திகழ்வது வெற்றுக் கல்லறை. இந்த வெற்றுக் கல்லறையும் இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று. வெறுமையில் கடவுளின் முழுமை வெளிப்படுகிறது. அழிவுக்குரிய உடல் அழிவுக்குட்படுத்தப்படாதவாறு உயிர்பெற்றெழுந்து இறைத்தன்மையின் நிறைவினை உலகுக்குணர்த்தியது. இந்த வெற்றுக் கல்லறையே. உயிரற்ற உடல்களைத் தாங்கும் ஒவ்வொரு கல்லறையும் உயிர்ப்புக் கட்டியதாகக் கூறுகிறது.

உயிர்ப்புச் செயல்பாடுகள் : கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது ஏதோ ஒரு முடிந்து விட்ட செயல் அல்ல. கிறிஸ்துவோடு இந்த உயிர்ப்பு அடங்கிவிடக்கூடியதும் அல்ல. உயிர்ப்பு என்பது ஒரு தொடர் பயணம். இயேசுவின் உயிர்ப்பின் பண்புக் கூறுகள் பல உள்ளன. பாவத்தை அறிக்கையிட்டுப் பாவப் பரிகாரம் மேற்கொண்டு ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுதல். ஒப்புரவின் தேவையினை உணர்ந்து அடிக்கடி பாவ அறிக்கை செய்து இறை ‡ மனித ஒப்புரவினைப் பலப்படுத்திக் கொள்ளுதல். அடிமையாக்கும் பாவச் சக்தியினின்றெழுந்து நற்செயல்கள் மூலம் புனித வாழ்வில் இணைந்திருக்க முயல்தல். எல்லாவற்றுக்கும் மேலாக உயிர்ப்பு வாழ்வினை வாழ்வாக்குதல் எப்படி? உயிர்ப்புச் செயல்பாடுதான் அவ்வப்போது செய்திகள் வழியாக நம்மை நோக்கி வந்து கொண்டுதானிருக்கின்றன. உடல் உறுப்பு தானமும் ஓர் உயிர்ப்புச் செயல்பாடே. மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு தேவைப்படுவோருக்கு வழங்குவது மிகவும் உன்னதமான உயிர்ப்புச் செயலாகும்.

பெங்களூரில் நடந்த உண்மையான உயிர்ப்புச் செய்தி :

ஹரீஷ் 24 வயது இளைஞர். பிப்ரவரி 16 அன்று தனது கிராமத்திலிருந்து பெங்களூரு நகரில் பைக்கில் பயணிக்கின்றார். எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி பைக் மீது மோதுகிறது. ஹரீ´ன் உடல் இரு துண்டுகளாகின்றது. தன் உயிர் பிரியும் நேரத்திலும் நான் சாவது திண்ணம். இதோ நல்ல நிலையில் உள்ள எனது இரு கண்களையும் எடுத்து தேவைப்படுவோருக்கு அளியுங்கள் என்று கூறி உயிர் துறக்கின்றார். அவரின் இரு கண்களும் நேத்ராலாயா மருத்துவ டாக்டர்களால் எடுத்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

நெஞ்சை உலுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளும் உயிர்ப்பின் செயல் வடிவங்கள் தானே! எனவே நாமும் உயிர்ப்பினை வாழ்வாக்கும் செயல்களில் ஈடுபட்டு உழைப்போம். இறை இரக்க அழகு உனது ஆன்மாவை அலங்கரிக்க வேண்டுமா? இதயத்தை மூடியிருக்கும் அழுக்கை அகற்று. புண்ணிய நற்பேறுகளால் உனது ஆன்மாவை நிரப்பு என்று நீசா நகர் புனித கிரகோரி கூறுகின்றார். உயிர்த்த ஆண்டவரின் இறை இரக்க அழகு நமது ஆன்மாவினுக்கு அழகூட்டி உயிர்ப்பின் மக்களாக வாழ வழிகாட்டட்டும்.   

வளர்ச்சியை சொல்லும் மொழி, கல்வி


வளர்ச்சியை சொல்லும் மொழி, கல்வி

     நம் மக்கள் மத்தியில் நிறைய விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது. பிள்ளைகளின் கல்வியை கண்ணென நினைத்து, எவ்வித தியாகம் செய்தும் பிள்ளைகளை கல்விக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். அரசினர் பள்ளிக்கூடங்களைத் தவிர, தனியார் பள்ளிகள் எங்கும் பூத்துக்குலுங்குகின்றன. கூலி வேலைக்குப் போனாலும், தன் பிள்ளைகளுக்கு டைகட்டி, U போட்டு, பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்து, மக்கள் அழகுப் பார்க்கிறார்கள். அரசும், கல்வியின் தரத்தை உயர்த்த பல நெருக்கடிகளை பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தருகிறார்கள். நெறிகெட்ட வாழ்விற்கும், நம் நாட்டின் வறுமைக்கும் காரணம், தகுந்த கல்வியில்லாமைத்தான் என்று சொல்லலாம். மது அருந்தும் மாணவர்கள், பிஞ்சிலே பழுப்பதைப் போன்று, மாணவர்களின் காதல் தப்புத் தாளங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவை நாம் இன்று சந்திக்கின்ற சவால்கள்.

சி. எஸ். லெவிஸ் என்பவர் கூறுகிறார், ‘சரியான பண்புகளை, மதிப்பீடுகளை கற்பிக்காத கல்வி, திறமையான பேய்களையும், சாத்தான்களையும் தான் உருவாக்கும்’ என்கிறார். ‘நல் அறிவு, நல் மனித பண்புகளை மாணவரிடத்தே உருவாக்குவதே கல்வியின் நோக்கம்’ என்கிறார் மார்ட்டின் லூத்தர் கிங் என்பவர். ‘மாணவர்கள் எதை சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதல்ல, மாறாக எப்படி சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதே கல்வி’ என்கிறார் மார்கிரேட் மெட்.

இம்மாதம் மார்ச் மாதம், புனித சூசையப்பரை சிறப்பாக நினைவு கூறுகிற மாதம். கல்வியின் பாதுகாவலர் என்று அவர் அழைக்கப்படுகிறார். சில பள்ளிகளில் மார்ச் மாதத்தின் புதன் கிழமைகளில் சூசையப்பருக்கு தனி வணக்கம் செலுத்தி வழிபாடு செய்வார்கள். விரைவில் அரசு பொதுத் தேர்வுகள் வர இருக்கின்றன. மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகும் நேரம் இது. மாணவர்களின் மனஉலைச்சலைவிட பெற்றோர்கள், ஆசிரியர்களின் மன உலைச்சல் அதிகம்.

பெரும்பாலான பிள்ளைகள், இளம் வயதின் தாக்கத்தினால், வருங்காலத்தைப் பற்றி கவலையின்றி வழக்கமாக பள்ளிக்குச் சென்று வருவர். பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் வருங்காலத்தை, தங்களின் வருங்காலத்தைப் போலக் கருதி, பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் வாங்குவதைப் பற்றி நினைவுப்படுத்தி, பிள்ளைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவர். பெற்றோர்களும் ஆசிரியர்களும், பிள்ளைகளின் இயல்பான மன ஓட்டங்களைப் புரிந்துக் கொண்டு, அதற்கேற்றார்போல் கற்பிக்க வேண்டும். முக்கியமாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களின் பிள்ளைகளை வடித்தெடுக்கும் சிற்பிகள் என்றுணர்ந்து தங்களின் வாழ்வை நல்ல பண்புகளால் வடித்தெடுக்க வேண்டும். யூதர்களின் பிள்ளைகளை எப்படி கருவிலிருந்தே கவனமாக வளர்த்து உயர்ந்தவர்களாக்குகிறார்கள் என்று ஒரு கட்டுரை இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது. மனிதர்களை தரமானவர்களாக வளர்ப்பது கல்வி. எனவே தரமான கல்வியை பிள்ளைகளுக்குத் தருவதில் ஆர்வம் காட்டவேண்டும்.
கல்வி என்பது மனிதரை செதுக்கும் உளி - அது
வாழ்விற்கு வெளிச்சம் தரும் ஒளி - அதுவே
வளர்ச்சியை சொல்லும் மொழி.

குடந்தையில் மகாமகம் என்ற மகா நிகழ்ச்சி பிப்ரவரி 13 முதல் 22 வரை நடைபெற்றது. பத்து நாள்களும் மக்கள் அலை அலையாக மகாமக குளத்தை சந்தித்து, அங்கிருந்து 20 தீர்த்தங்களை தலையில் ஊற்றிக் கொண்டு சென்றார்கள். இந்நிகழ்ச்சியில் இரண்டு செய்திகளை நான் கவனித்தேன். கங்கை. யமுனா, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, தாமிரபரணி  போன்ற ஆறுகள் மகாமகத்தன்று மகாமககுளத்தில் இணைகின்றன என்பது நம்பிக்கை. எனவே இந்தியாவின் ஆறுகளை இணைத்தல் என்பது புனித செயல் என்ற கருத்து இங்கு வெளிப்படுகிறது. இரண்டாவது, மகாமக குளத்தில் குளிப்பதால், தாங்கள் செய்த பாவ அழுக்கு மறைந்து போகிறது என்பதும் மக்களின் நம்பிக்கை. தாங்கள் செய்த தீமைகள், அழுக்கானவை அழிவை தருகின்றவை என்ற எண்ணமும் மக்களிடம் மறைந்திருக்கிறது. மேற்கண்ட நல் எண்ணங்கள் மக்கள் மனதில் தோன்றினவா? என்பது கேள்விக்குறி! வழக்கம், வாடிக்கை என்ற கொண்டாட்டமாகத்தான் மகாமகம் மக்கள் மனதில் உண்டாயிருக்கும். வழக்கங்களிலும் வாழ்வின் பொருளை இணைத்துப் பார்த்தால் உயர்வும், சிறப்பும் உண்டாகும்.

அமெரிக்கக் கடிதம், இ. சவேரியார், M.Sc, கேரி, அமெரிக்கா.

அமெரிக்கக் கடிதம்
இ. சவேரியார், M.Sc, 
கேரி, அமெரிக்கா. 

     நமது கிராமம் ஒன்றில், ஒரு குடிமகன் வாதிட்டார். அமெரிக்கா சூப்பர் பவராக மாறினதற்குக் காரணம், அங்கு மக்கள் நிறைய மது அருந்துவதுதான் என்றார். ஆனால், இந்தியா முன்னேறாததற்குக் காரணம், இந்தியாவில் மக்கள் அதிகமாக மது அருந்துவதில்லை. அதுதான் காரணம் என்றார். குடிமகன் போட்ட நல்ல நகைச்சுவை. அமெரிக்காவில் வட கரலோனினா மாவட்டத்தில் கெரி என்ற நகரில் கணிணி துறையில் பணிசெய்துவரும் திரு.இ.சவேரியார் அவர்கள் மேல்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணத்தை தன் அனுபவத்திலிருந்து காட்டுகிறார்.

அன்புள்ள என் இனிய தமிழ் மக்களே, நான் கடந்த இருபது வருடங்களாக அமெரிக்க நாட்டில் வாழ்கிறேன். இங்குள்ள நல்ல பழக்க வழக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பகிர்வு உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

அமெரிக்கர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் நல்லப் பழக்கம், ‘காலம் தவறாமை’. அவர்கள் தாமதமாக வந்து அடுத்தவர்களின் நேரத்தை வீணடிப்பதை ஒரு துளியும் விரும்புவது இல்லை.

எல்லாக் கூட்டங்களும், விழாக்களும், சந்திப்புகளும் இங்கு குறித்த நேரத்தில் தொடங்கி விடும். குறித்த நேரத்தில் தொடங்குவதால் வரும் நன்மைகள் பல. எடுத்துக்காட்டாக ஒரு கூட்டம் அரை மணி நேரம் தாமதமாக தொடங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் அரை மணி நேரம் அதிகமா செலவிட வேண்டியுள்ளது. அந்தக் கூட்டத்தில் 1000 பேர் கலந்து கொள்வதாக வைத்துக் கொண்டால் அரை மணி நேர கால தாமதம், 500 மனித மணி நேரத்தை வீணடித்து விட்டது எல்லோரும் 500 மணி நேரத்தை ஆக்கப் பூர்வமாக செலவழித்திருக்கலாம். ஆனால் நமது நாட்டில் கூட்டத்திற்கு சரியான நேரத்தில் வருபவர்கள் முட்டாள்களாகவும், தாமதமாக வருபவர்கள் அறிவாளிகளாகவும் கருதப்படுகிறார்கள். முக்கியமாக நம் அரசியல்வாதிகள் இந்த கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் நாம் தாமதமாக வரும்போது, சரியான நேரத்தை கடை பிடிப்பவர்களையும் தாமதமாக வரத் தூண்டுவதாக அமைந்துவிடும்.

என்னுடன் வேலை பார்க்கும் நண்பர் காலை 6.30 மணிக்கெல்லாம் வேலைக்கு வந்து விடுவார். அவர் வரும் நேரத்தை வைத்து உங்கள் கடிகாரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம். சரியாக மாலை 3.00 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விடுவார். அவரிடம் ஏன் இவ்வளவு சீக்கிரமாக வருகிறீர்கள் என்று காரணம் கேட்டேன். அவர் நான் அலுவலகத்திற்கு காலை 8 மணிக்கு வந்தால் எல்லா traffic  நெருச்சலில் சிக்கி, traffic light  ல் நின்று வருவதற்கு 45 நிமிடம் ஆகிறது. அதுவே காலை 6 மணிக்கு கிளம்பினால் 25 நிமிடம் ஆகிறது. அதுவே மாலை நேரத்திலும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு கிளம்பினால் traffic அதிகம். 3 மணிக்கு கிளம்பினால் மிrழிக்ஷூக்ஷூஷ்உ இல்லை. இவ்வாறு நான் தினமும் போக்குவரத்து நெரிசலில் தப்பித்து 40 நிமிடம் சேமிக்கிறேன். இந்த 40 நிமிடத்தை என் குடும்ப வேலைக்குப் பயன்படுத்துகிறேன். தினமும் 40 நிமிடம், வாரத்திற்கு 3 மணி நேரம், மாதத்திற்கு 20 மணி நேரம், வருடத்திற்கு 173 மணி நேரம் (21 வேலை நாள்) சேமிக்கிறார். எனக்கு உண்மை அப்போது புரிந்தது.

எனவே, நேரம் பணத்தை விட மேலானது. கால தாமதமாக வந்து அடுத்தவர்கள் நேரத்தை வீணடிப்பதை தவிர்ப்போம். சரியான நேரத்தில் எங்கும் சென்று நமது நேரத்தையும், அடுத்தவர்கள் நேரத்தையும் காப்போம். அப்போது நாமும் முன்னேறுவோம், நமது நாடும் முன்னேறும். நம் நாடு வல்லரசாக மாற வேண்டுமென்றால், இந்த நல்லப் பழக்கம் வலிமையான ஆயுதம்.

Monday, 22 February 2016

விவிலிய விடுகதைகள், எண்ணிக்கை புத்தகம்

 விவிலிய விடுகதைகள்
எண்ணிக்கை புத்தகம்

எட்டப்பகை என்ற மொழியின்படி இக்கும்பல் துரத்திவிடும் என்று கூறியது யார்? யாரை?
14. வாயில்லா ஜீவனது ; வாகனத்திற்கு பயன்படுத்துவது ; அதுவோ வானத் தூதருக்கு வழிவிட்டது.அது எது? வாகனமாய் பயன்படுத்தியது யார்?
15. நன்மையைத்தான் செய்தேனப்பா ; நாளெல்லாம் உழைத்தேனப்பா; நன்றியில்லையா உமக்கு; மூன்று முறை என்னை அடித்து வாட்டுவது ஏனப்பா ; என வாய்விட்டு கதறி பேசியது எது என்று நீ சொல்லப்பா, யாரை நோக்கியப்பா? கூறுங்கப்பா?
16. வருங்காலத்தைக் கேட்க ;நிகழ்காலத்தில் நடத்த ; சபிக்கும்படி சொல்ல ;நான்கெழுத்துக்காரர்கள் ;இரு எழுத்து சொல்வதற்கு ; கட்டணத்தைக் கையில் எடுத்துப் போயினர்; யார் நான்கெழுத்துக்காரர்கள். எதற்கு?
17. அபயத்திற்கு ஆறிடங்கள், ஆபத்திற்கு உதவும்; தஞ்சம் என வந்தோர்க்கு; தயவுக் காட்டும். தப்பிக்க வைக்கும்.தலையையும் காக்கும். அது என்ன? எத்தனை இடம்?
18. சிந்தனை, வந்தனை, நிபந்தனை, தந்தனை, இருந்தனை, பொருத்தனை ஆக இவற்றில் ஒன்றை இறைவனுக்கு செய்வது, நேர்ந்துக் கொள்வது எது?
19. ஒரு கொடியில் இருப்போம். ஒன்றாய் இருப்போம். இணைந்த கரங்களோடு இணைந்திருப்போம். எங்களை பெண்களின் கண்களுக்கு ஒப்பிடுவர்; இனிப்பாய் இருப்போம் சுவைத்தருவோம்; எங்கள் செழிப்பினைக் கண்டு; ஒற்றர்கள் எங்கள் கிளைகளை அறுத்து, தடியில் கட்டி;இருவர் சுமந்தனர்.
நாங்கள் யார்? எங்கே?
20. பார்த்தா பனைமரம் பார்வைக்கு பயங்கரம்; ஆனாக்கின் அரக்கப் புதல்வர்கள் அவர்கள் ;நாங்களோ அவர்களுக்கு முன்பு வெட்டுக்கிளி போல் ;காணப்பட்டோம். நாங்கள் யார்? கொஞ்சம், அளவுக்கு மீறி டூப் விட்டோம்.சொல்லுங்கள் பார்க்கலாம்.
21. அவர்கள் அன்னப் பறவைக்கு ஒப்பானவர்கள்.என் பணிக்கே உரியவர்கள், உரிமையுடையவர்கள். திருவுறைவிடத்தின் பணி இவர்களதே; குருத்துவப் பொறுப்பும் இவர்களதே; இவர்களுக்கு கொடுத்தப் பெயர் நான்கெழுத்தில் உள்ளது.யார் இவர்கள்?
22. உரிமை சொத்தைப் பெற; உடைமை நாட்டை ஆள;குலுக்கி எடுத்துப் பெற்றது.சண்டையின்றி, விவாதமின்றி பெற்றது எவை? எப்படி?1. என் தங்கையின் பெயர் இரண்டெழுத்து. என் இயற்பெயர் மூன்றெழுத்து. எனக்குப் பெயர் வைத்தவர் இரண்டெழுத்து ‡ இவர் வைத்தப் பெயர் மூன்றெழுத்து
சொல்லுங்கப் பார்ப்போம்.
2. தேனாறு ஓடுகிறது; பாலாறு ஓடுகிறது ; செல்வம் செழித்துள்ளது; கண்டோம், கேட்டோம், சுவைத்தோம். வெற்றிக்கிட்டும் நமக்கு அங்கே அருள்பவர் ஆண்டவரே. வெஞ்சினம் படைக்காதீர், அஞ்சாதீர் எனக் கூறும் ஒற்றர்கள் யார்?
3. எகிப்திலும் கண்டனர், பாலையிலும் கண்டனர், அருஞ்செயலைக் கண்டனர். என்னை பத்துத் தடவை சோதித்தனர். பொறுத்தது போதுமடா, புயல் போல் எழுவேனடா. வாக்களித்த நாட்டை இவர்களில் எவனும் காணமாட்டாண்டா; என்று தன் சோகக் கதையை யாரிடம் முறையிட்டு சொன்ன சீமான் யார்?
4. என் நண்பேண்டா, என் வீடு அவனுக்கு சொந்தம் ; என் உருவைக் காண்பவன்; என் நம்பிக்கைக்குரியவன்;
நான் நேர்முகமாக பேசுவேன் ; அவனும் என்னுடன் சுதந்திரமாய் பேசுவான்; சொன்னவர் யார்? யாரை? யாரிடம்?
5. பொல்லாங்குப் பேசி;  பொல்லாங்கை விலைக்கு வாங்கிய மங்கை யார்? பெற்ற தண்டனை யாது? யார், யாரை, பெற்றது?
6. கெஞ்சினார் இரண்டெழுத்துக்காரர்; இரகுவேலின் மகன் இரண்டெழுத்துக்காரர் ; பிகு பண்ணிக் கொண்டு பேசினார். கெஞ்சி பேசியவர் வாக்களிப்பேன் என்றார்.
யார்? யார்? எப்படி? எதற்கு?
7. சந்தனப் பேழைக்குள்ளே வைத்தது பன்னிரு கோல்கள். ; அதில் ஒன்று மட்டும் துளிர்த்தது, பூவும் பூத்தது, பழமும் பழுத்தது.யாருடைய கோல்? என்னப் பழம்?
8. உயிருக்குயிரானத் தோழன் ; தோளோடு தோள் கொடுத்தவன் ; தோழனை விட்டுப் பிரிந்தான், மூன்றெழுத்துக்காரன்; அவரின் கட்டளையை மீறினான் மெரிபாவின் தண்ணீர் அருகில். விளைவு, பெரு வாய்ப்பை நழுவ விட்டான். யார்? எப்படி?
9. உயிருள்ள பாம்பு உடம்புக்கு வி­ம் கொடுத்து கொன்றது. உயிரற்ற பாம்போ உடம்புக்கு வி­ம் நீக்கி உயிர் பிழைக்க வைத்தது. எது? எது? எப்படி?
10. படையலிலே இரண்டுப் படையல். அது என்ன படையல்?
11. அவர்கள் கண்களைக் குத்தும் கூராணிகள். விலாவைக் கீரும் முட்கள். அவர்களை விட்டு வைத்தால் நஷ்டப்படுவீர்கள், கஷ்டப்படுவீர்கள். யார் அவர்கள்? சொன்னது யார்? எப்படி?
12. சீட்டிலேயே சீட்டு பெருஞ்சீட்டு. அது என்ன சீட்டு?
13. மாடு வயல் வெளிப்புல்லை வேரற மேய்ந்து விடும்.
கிடுக்கிப் பிடியுள் மாட்டிக் கொண்டோம். கிட்டப் போனால் 

Ads Inside Post