Pages - Menu

Friday, 2 March 2018

இலக்கியம் சமுதாயத்தின் சுயசரிதை

இலக்கியம் சமுதாயத்தின் சுயசரிதை

 ( இலக்கியம்  என்பதை  இரத்தின  சுருக்கமாக  விளக்கும்  கட்டுரை )

சகோ. விமலிFIHM. இதயா கல்லுVரி, குடந்தை

இலக்கியம் என்பது ஒரு சமுதாயப் படைப்பு. இலக்கியம்
சமுதாயத்திலிருந்து தோன்றுகிறது. அதுவும் சமுதாயத்திற்காகவே தோன்றுகிறது. சமுதாயப் பிரதிபலிப்பாக மட்டுமின்று அதனை மேம்படுத்துவ தாகவும் இலக்கியம் அமைகின்றது. உயர்ந்த எண்ணங்கள்தான் சிறந்த இலக்கியமாக உருக்கொள்கின்றன. சிறப்பானப் பண்புடையது. ஆழமானது. அழகுடையது. இவற்றின் முழுவடிவம்தான் இலக்கியம் “ஸிஷ்மிerழிமிற்re ஷ்வி மிஜுe reஉலிrd லிக்ஷூ ணுeவிமி மிஜுலிற்ஆஜுமிவி”   என்கிறார் எமர்சன். இன வேறுபாட்டாலும், கால வேறுபாட்டாலும் அழியக் கூடாத நிலைத்த இலக்கியமே உயர்ந்த இலக்கியம். எல்லாக் காலத்திலும் படித்து ரசிக்கக்கூடிய கூறுகள் அதில் இருக்க வேண்டும். இலக்கியத்தின் தன்மை நிலைபேறுடையதாக இருக்க வேண்டும்.

இலக்கியம் வாழ்க்கையின் வெளிப்பாடு

வாழ்க்கையில் நம்மால் காணமுடியாத, காணாமல் விட்ட, கண்டும் காண இயலாத, காண விரும்பாத, காண மறுத்த உண்மைகளை விளக்குபவன் கலைஞன். மறைந்த, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உணர்ச்சிகள் கவிஞனால் வெளிக் கொணரப்படுகின்றன. வாழ்க்கையின் விளக்கம் கவிஞனால் நமக்கு இலக்கியத்தின் வாயிலாக  கிடைக்கிறது.

இலக்கியம் வாழ்க்கையின் விமர்சனம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்களையும் அதன் காரணங் களையும் இலக்கியம் விமர்சனம் செய்கிறது. அந்த விமர்சனங்களை திறந்த மனதுடன் சந்திக்கும் சமூகம் இன்று உலகுக்குத் தேவையாக உள்ளது.

இலக்கியம் வாழ்க்கைக்கு வழிகாட்டி

மனிதன் வாழ்க்கையில் கவனிக்கப்படாத சிறு நிகழ்ச்சியையும் இலக்கியம் தனதாக்கிக் காட்டுகிறது. இலக்கியம் உணர்வைத் தொட்டு உள்ளத்தைத் தன்வயப்படுத்திப் பண்படுத்தும் இயல்புடையது. இயற்கையான வாழ்க்கையும், உணர்வுகளும் மனித உள்ளத்தை விரிவுப்படுத்துவதைவிடக் கற்பனை உணர்ச்சிகள் மனித உள்ளத்தைப் பண்படுத்துகின்றன. வாழ்க்கையின் கூறுபாடுகளில் இலக்கியத்தில் பளிச்சிடுவதால் இலக்கியம் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும்.

 இலக்கியம் சமுதாய ஆவணம்

மனிதன் படைக்கும் இலக்கியம் சமுதாயத்தைத் தவிர்த்த ஒன்றில்லை. மனிதர்கள், தான் பிறந்து, வளர்ந்து, வாழ்கின்ற இச்சமுதாயத்தை எந்நிலையிலும் விட்டு விலகி இலக்கியம் படைத்திட இயலாது. ஒரு கலைஞன் படைக்கும் இலக்கியங்கள் சமுதாயத்தில் காலந்தோறும் நடைபெறும் பல நிகழ்வுகளையும், அந்நிகழ்வுகள் படைப்பாளியிடம் ஏற்படுத்திய தாக்கங்களையும் வெளிப்படுத்தும் சாதனங்களாகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் இடையே யான உறவுகளைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கும் சமுதாய நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றை அறிய உதவும் ஒரு சமுதாய ஆவணமாக இலக்கியம் அமைந்துள்ளது.

இலக்கியத்தில் பொதிந்துள்ள கருத்துக்கள் காலம் கடந்தும்  மக்களுக்குப் பயன்படும் அளவிற்கு அதன் வாழ்நாள் வளர்கிறது. இலக்கியம் என்பது கவிதை, நாடகம், காவியம், புதினம், சிறுகதை, மடல், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பலவுமாகும். இலக்கியத்திற்குக் கலைத் தன்மையை அளிப்பன  அழகியல், கற்பனை, உணர்ச்சி, வடிவம் என்பனவாகும்.
 முடிவாக
ஒருவர் தான் அனுபவித்த ஒன்றை மற்றவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற மனிதப் பண்பே இலக்கியத் தோற்றத்திற்குக் காரணமாகின்றது. ஒருவர் ஒரு பொருளிலோ, நிகழ்ச்சியிலோ கண்ட உண்மையைப் பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று இயல்பாக எழும் ஆசையே இலக்கியம் தோன்றியதற்கானக் காரணம் எனலாம். ஆழ்ந்த அனுபவித்த உண்மையைக் கூறுவதே இலக்கியம். வாழ்க்கையில் எங்கோ, எப்போதோ தோன்றிய ஒரு நினைவு, ஒரு நிகழ்ச்சி இலக்கியம் பிறக்கக் காரணமாகியுள்ளது. நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இலக்கியம் தோன்றுவதற்கான வித்து ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. அதை புரிந்து கொள்வோம். நாமும் சிறந்த இலக்கியப் படைப்பாளியாகிடுவோம். இனிமையான, ஏற்றமிகு இலக்கியம் படைத்தளிப்போம். அதுவே இன்றைய சமூகத்திற்கான உயரிய வாழ்க்கை சாதனமாகட்டும்.

Thursday, 1 March 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

 19. தம்மை நீதிமான்களாக எண்ணுவோர்......

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

அவர் அடிப்படையில் நல்லவர். ஆனால் அவர் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. அவருடைய மனைவி அவரை புரிந்து கொள்ளவில்லை. அவருடைய பிள்ளைகள் அவரை மதிப்பதில்லை. அவருடைய பேச்சை யாரும் கேட்பதில்லை. அவருக்கு உலக வாழ்வே வெறுத்துவிட்டது. அந்த  ஊரில் மிகவும் புகழ் வாய்ந்த  முனிவர் ஒருவர் இருந்தார். நல்லவர் அந்த முனிவரிடம் சென்று, “முனிவரே, எனக்கு இந்த உலகம் வெறுத்துவிட்டது. நான் மோட்சத்திற்கு செல்ல வேண்டும். இப்போதே நான் மோட்சத்திற்கு செல்லும் வழியைக் காட்டுங்கள்” என்றார். முனிவரும், “கவலைப்படாதீர்கள் நண்பரே, இந்த வழியாக எங்கும் நிற்காமல் 100 நாட்கள் செல்லுங்கள். ஓர் ஓலைக்குடிசை இருக்கும். அங்கே இரவு தங்கி விட்டு மீண்டும் 100 நாட்கள் செல்லுங்கள். மோட்சத்தை அடைந்து விடுவீர்கள்”  என்றார். மகிழ்ச்சியோடு அந்த நல்லவரும் புறப்பட்டார். முனிவர் சொன்னதைப் போலவே 100 நாட்கள் நடந்தார். 

ஓலைக்குடிசையும் வந்தது. அதில் உறங்குவதற்கு முன்பு தாம் செல்லும் வழியை மாற்றிவிடக் கூடாது என்பதற்காக தன் காலணிகளை செல்லும் வழிநோக்கி வைத்தார். முனிவரின் சீடர் ஒருவர் அந்த ஊரில் இருந்தார். அவர் அந்த நல்லவர் நன்கு உறங்கிக் கொண்டிருந்த போது காலணிகளின் திசையை மாற்றி எதிர்திசையில் வைத்துவிட்டார். காலையில் எழுந்த நல்லவர் மீண்டும் உத்வேகத்துடன் நடக்கத் தொடங்கினார். 100 வது நாளில் ஓர் ஊரை அடைந்தார். அதுதான் மோட்சம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். அந்த ஊர் தம் சொந்த ஊரைப் போலவே இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அவர் ஒரு வீட்டிற்குச் சென்றார். அந்த வீடும் அவர் சொந்த வீட்டைப் போலவே இருந்தது. அந்த வீட்டில் ஒரு பெண்மணியும், சில பிள்ளைகளும் இருந்தனர். அவர்கள் மோட்சத்தில் இருப்பதால் நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவர்களிடம் அன்பாக பேசினார். அவர்களும் தன் கணவர் திரும்பி விட்டார். தம் தந்தை திரும்பி வந்துவிட்டார் என்று மகிழ்வோடு உறவாடினார். அந்த இடமே மோட்சமாக அவர்களுக்கு மாறியது. மகிழ்ச்சியை நாம் கைகொள்வதற்கு ஒரு சிறந்த வழி நாம் பார்வைகளை
 (Attitudes)  பரிசீலிப்பதாகும். நாம் உண்மையான பார்வைகளைப் பெறுவதற்கு ஒரு பெரும் தடையாக இருப்பது நான் நீதிமான் என்ற எண்ணம்.  (Self righteous attitude). ஆண்டவர்  இயேசு கிறிஸ்து தம்மை நீதிமான்களாக நினைத்துக் கொண்டு சாதாரண மக்களை குறைசொல்லி வாழ்ந்து வந்த பரிசேயர், மறைநூல் அறிஞர்களை கடுமையாகச் சாடுகிறார். இயேசுவின் காலத்திலும், ஏன் இப்பொழுதும் இறைநம்பிக்கை கொண்டோர் எளிதாக இந்த “நான் மட்டுமே நீதிமான்” என்ற எண்ணத்தில் வாழ்ந்துவிடுவதைப் பார்க்கிறோம். இறைநம்பிக்கை உடையவர்கள் மத்தியில் மட்டுமல்ல இறைநம்பிக்கை இல்லாத உலகைச் சார்ந்த மக்கள் கூட நான் இறைநம்பிக்கை உடையவர்களைப் போல வெளிவேடக்காரன் இல்லை” என்று நினைக்கலாம். 

சமய நல்லிணக்கத்தின் தொடக்கம் நாம் இந்த “நான் நீதிமான் பார்வையை” அகற்றுவதாகும். நம் மதத்தின் பெருமையை நாம் உரைப்பதில் தவறில்லை. மற்ற மதத்தினர் மனத்தைப் புண்படுத்தும்படியாக பேசுவது சமய உரையாடலுக்கு இட்டுச் செல்லாது. சில தேசியவாதிகள், பிரிவினை வாதிகள் நம் அழகிய இந்திய தேசியத்தின் அமைதியை குலைக்கின்றனர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் மற்ற மதத்தினரின் உணர்வுப்பூர்வமான நம்பிக்கைகளை நாம் குறைசொல்வதால் சமய நல்லிணக்கம் குலைவதற்கு நாமும் துணை போகிறோமோ என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்
.
நீங்கள் செய்தித்தாளை படிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தற்போது உள்ள பத்திரிக்கைகளில் சமூகத்தில் உள்ள அவலங்கள் தான் பிரதானமாக பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும்போது உங்கள் கருத்து என்ன? அந்த இடத்தில், அந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் எப்படி நல்விதத்தில் நடந்து இருப்பீர்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். உங்களுக்கு ஓர் இரகசியம் சொல்கிறேன். உங்கள் இடத்தில், உங்கள் சூழ்நிலையில் உங்களைவிட சிறப்பாக செயல்படமுடியும் என்று எத்தனை பேர் நினைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்படி நினைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இயேசு தாம் நீதிமான்கள் என எண்ணியோரை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார். இறைவேண்டல் புரியச் சென்ற இருவருள் இறை ஆசீர் பெற்று வீடு திரும்பியவர் தாழ்ச்சி மிகுந்த ஆயக்காரரே அன்றி “ தான் நீதிமான்”  என நினைத்த பரிசேயர் அல்ல என்று நிரூபித்தார். மத்தேயு நற்செய்தி 23 ஆம் இயலில் பரிசேயர், மறைநூல் அறிஞரின் “நீதிமான்கள் மனப்பான்மையை”  சாடுகின்றார். அவர் வாழ்வு முழுவதும் பரிசேயர், மறைநூல் அறிஞரின்“நான் நீதிமான்”  எண்ணத்தை எதிர்த்து போர் புரிகிறார் என்பதை நாம் காணமுடியும்.

நம் அன்றாட வாழ்வில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை நாம் உணரலாம். நம் தனிப்பட்ட வாழ்வில் கூட நன்மைக்கும், தீமைக்கும் போராட்டம் நடைபெறுவதையும் அதில் எதற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோமோ அவ்வாறே நம் வாழ்வும் அமையும் என்பதையும் நாம் அறிவோம். அது சரிங்க, அதே வேளையில் நம் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதாவது பிறர் தவறு செய்யும்போது நாம் அதை தவறு என்று எடுத்துச் சொல்வது நம் கடமைதானே. அந்த சமயத்தில் நாம் குற்றப்படுத் தலாமா? என்று எண்ணலாம்.  பிறர் தவறு செய்யும்போது அந்த குறையை அந்தக் குற்றத்தின் கடுமைக்கேற்ப நாம் சுட்டிக்காட்ட வேண்டும். அந்தக் குற்றத்தை சுட்டிக்காட்ட வேண்டும். அந்த குற்றத்தை சுட்டிக்காட்டும்போது நாம் என்னவோ தவறே செய்ய இயலாத புனிதர் போலவும் அவர் மட்டும் தான் குற்றம் செய்கிறார் என்பதை போலவும் நினைக்கக் கூடாது. மாறாக அவருடைய உண்மையான முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.

சரிங்க, உங்களுக்கு “நான் நீதிமான்”  என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? நீங்கள் எந்த அளவிற்கு பிறரைப் பற்றி பிறருக்கு பின்னால் பேசுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு “நான் நீதிமான்”  என்ற எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணத்தை புதிய ஆண்டில் தவிர்க்க புறணி பேசுவதை தவிர்ப்போம்.
இயேசு நம்மைப் பார்த்து கூறுகிறார்:

“தம்மை நீதிமான்களாக எண்ணுவோருக்கு ஐயோ கேடு. அவர்கள் அழிவை விரைவில்  காண்பார்கள். ஏனெனில் அழிவுக்கு முந்தியது அகந்தை”

தவக்காலம் 4 ஆம் வாரம்

தவக்காலம் 4 ஆம் வாரம்
 11 - 3- 2018
2 குறி 36: 14-16.19-23; எபே 2: 4-10; யோவா 3: 14-21

  நம்பிக்கை வாழ்வைத் தரும், வெற்றியைத் தரும். ஆனால் நம்பிக்கை என்பது என்ன? என்பது பற்றி இன்றைய வாசகங்கள் விளக்குகின்றன. இன்றைய நற்செய்தி பகுதி, நிக்கோதேமுஸ் என்ற யூதருடன் இயேசு உரையாடிய பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. தன் அன்பை வெளிப்படுத்த தன் மகனையே  இறைவன் நம்பிக்கையாளருக்கு அளிக்கிறார். இதனால் நம்பிக்கையாளர்கள் அழிவதில்லை. ஆபிரகாம் தன் மகனை இறைவனுக்குப் பலியிட முன் வருகிறார் (தொ.நூ 22: 1-13) ஆனால் இறைமகன் தன் மகனான இயேசுவின் தியாகத்தினால் தன்மீது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு அன்புக் காட்டுகிறார்.

இறைவனின் தியாக அன்பை புரிந்து ஏற்றுக் கொள்ளாதவர்கள் தீர்ப்பு பெற்று விட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அன்பிலும் தியாகத்திலும் நம்பிக்கை வைக்காதோர் அழிவை சந்திக்கின்றனர். முதல் வாசகத்திலும் இஸ்ரயேல் மக்கள் உண்மையற்ற வர்களாய், இறைவனின் வார்த்தைகளைப் புறக்கணித்து வாழ்ந்தார்கள் என்றும், இதனால் ஆண்டவரின் சினம் அவர்கள் மேல் வீழ்ந்ததென்றும், அதற்கு தண்டணையாக பாபிலோனுக்கு அடிமைகளாக எடுத்துச் செல்லப்பட்டார்கள் என்றும் விவரிக்கப் பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாரசீக அரசன் சைரசீன் வழியாக அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். எனவே அவர்களின் நம்பிக்கையின்மைக்கு தண்டனையும், இறைவன் இரக்கத்தினால் அவர்களுக்கு விடுதலையும் கிடைக்கிறது.

இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் கடவுளின் கருணையினால் மக்கள் வாழ்வு பெறுகின்றனர் என்கிறார். ‘நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே’ (எபே 2:8) என்கிறார். அதே நேரத்தில் இறைவனின் அருளையும் நம்பிக்கையையும் இணைத்துக் கூறுகிறார் பவுல் அடிகளார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப் பட்டுள்ளீர்கள் (எபே 2:8 ). 
இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் ஓர் அருமையான வாக்கியம் வருகிறது, ‘நற்செயல்  புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப் பட்டிருக்கிறோம்’ ( எபே 2:  10)
இத்தவக்காலத்தில் சோதனைகள் மீது வெற்றி கொண்டு புது மனிதர்களாக மாற்றம் பெற்று, இப்போது நமது நம்பிக்கையில் உறுதி பெற வேண்டும். தியாகம் செய்யும் அன்பினால் நம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம்.

தியாகம் செய்யும் மனது மனிதருக்கு எளிதாக வருவதில்லை. மற்றவர்கள் நமக்காக தியாகம் செய்வதை விரும்புகிறார்கள். ஒருவர் சற்று வசதியுடையவர். அடிக்கடி சுற்றுலா செல்வார். வெளிநாடுகளுக்குக் கூட பெரும் செலவழித்து சுற்றுலா செல்வார். அவர்களின் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர், பிள்ளைகள் அமர பெஞ்ச் செய்து தரும்படி அவரிடம் கேட்டார். எங்களுக்கு வசதியில்லை என்று பதிலளித்தார். அந்த சற்று வசதியுள்ளவர். பிள்ளைகளின் படிப்புக்காக சற்று தியாகம் செய்ய முன் வரவில்லை அவர்.

தண்டாமல் ஈவது தாளாண்மை தண்டி 
அடுத்தக்கால் ஈவது வண்மை அடுத்தடுத்துப்
பின்சென்றால் ஈவது கால்கூலி பின்சென்றும்
ஈயான் எச்சம் போல் அறு.        - ஒளவையார்.

கேட்கமால் கொடுப்பது பெருமை, கேட்டுக் கொடுப்பது குறைந்த பெருமை. பலமுறைக் கேட்டு கொடுப்பது தர்மத்தின் கால்பகுதி, கேட்டும் கொடுக்காதவர், கழிவினை போன்றவர் என்று அவர் உறவை விட்டு விடுக என்கிறார்  ஒளவையார். நம்பிக்கையால் தியாகம் நம் வாழ்வில் துளிர்விடும்

தவக்காலம் மூன்றாம் வாரம்

தவக்காலம் மூன்றாம் வாரம்
 4- 03 - 2018
வி.ப 20: 1-7;  1 கொரி 1: 22-25;  யோவா 2: 13-25;

கெடாத பால் நமக்கு நலம் தரும். திரிந்த பால் கெடுதல் தரும். வழிபாடுகளை முறையுடன் செய்வது, கடவுளுடன் நாம் கொள்ளும் உண்மை, உறவின் வெளிப்பாடு. வழிபாடுகளை வணிக முறையில் செய்தால் இறைவனின் அன்பிற்கு எதிரான நிலையாகும். ஒருவர் பெந்தகோஸ்தே சபையினரை, பரிசுத்த ஆவியாரின் வியாபாரிகள் என்று குறிப்பிட்டார்.

இத்தவக்காலத்தில் நம் நம்பிக்கையைத் தூய்மை செய்ய வேண்டும். நம்பிக்கையில் அழுக்கு பிடிப்பது உண்டு. அந்த அழுக்குகளை அகற்ற வேண்டும். இன்றைய நற்செய்திப் பகுதியில், இயேசு எருசலேம் ஆலயத்தில் வியாபாரிகளை விரட்டியடிக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கிறோம்.

ஒத்தமைப்பு நற்செய்திகளில் இயேசு எருசலேமில் வெற்றி வீரராக நுழைந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இயேசு எருசலேம் ஆலயத்திலிருந்து வியாபாரிகளை விரட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆனால் யோவான் நற்செய்தியில், இயேசுவின் பணி துவக்கத்திலேயே அது நடைபெறுகிறது. காணாவூர் திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு இடம் பெறுகிறது. இயேசு ஆடுமாடுகளையயல்லாம் விரட்டினார் என்று யோவான் நற்செய்தியில் மட்டும்தான் தரப்பட்டுள்ளது.

கோவிலை பராமரிக்க நிதி தேவைப்பட்டது. அதற்காக கோவில் வரிகூட வசூலித்தார்கள். ஆனால் மக்களின் பக்தியை பயன்படுத்திக் கொண்டு, பொருள்கள் விற்பனை செய்து வியாபாரச் சூழலை சில இடங்களில் ஏற்படுத்தி விடுகிறார்கள். நம் திருத்தலங்களிலும், மற்ற சமய திருத்தலங்களிலும் இந்த வியாபாரச் சூழலை இப்போதும் காண முடிகிறது.

முதல் வாசகத்தில் விடுதலைப் பயணத்தின்போது மக்களுக்கு, மோசே அளித்த பத்து கட்டளைகளைப் பற்றி பார்க்கிறோம். ‘என்மீது அன்பு கூர்ந்து என் விதிமுறைகளை கடைபிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கு அன்பு காட்டுவேன்’ என்று இறைவன் கூறுகிறார். அதே நேரத்தில், ‘என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

தவக்காலம், கடவுளின் அன்பில் உயர்கிற, உறுதி பெறுகின்ற காலம். வழிபாடுகள், ஆலயங்கள் இறை அன்பில் வளர்க்கின்ற கருவிகளாக விளங்க வேண்டும். புனிதத்தை வளர்க்கும் வழிகள் திரிந்து போக விடக் கூடாது. இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், ‘சிலுவை கடவுளின் ஞானமும் வல்லமையுமாயுள்ளது’ என்கிறார். வழிபாடுகளை முறையாகப் பயன்படுத்தினால், விண்ணக வழி நமக்குத்  திறக்கும்

தமிழகத்தில் வீசும் வெற்றிடம்

தமிழகத்தில் வீசும் வெற்றிடம்

கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

2016 டிசம்பரில் தொடங்கிய குழப்பத்திலிருந்து தமிழ்நாடு இன்று வரை மீண்டு வரமுடியவில்லை. பிரேக்கிங் நீயூஸ்களால் வீயூP யூழிமிe  உயர்த்திக் கொண்டிருந்த தொலைக்காட்சி சேனல்கள் சற்று அமைதியாக இருந்தாலும் ஆர்.கே நகர்  தேர்தல் தமிழ்நாட்டையே புரட்டிப்போட்டுவிட்டது.

‘பணம் ஆறாக ஓடுகிறது’ என்று ஆளும் கட்சி, எதிர்கட்சி, தொலைக்காட்சி, வாட்ஸ்அப், பேஸ் புக், இருபது ரூபாய் நோட்டு விளையாடுகிறது என்று அலரினாலும் ஜம்மென்று தேர்தல் வெற்றியுடன் முடிந்தது என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது வெட்கக் கேடானது. துணை ராணுவம், தேர்தல் பார்வையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வெளிப்படையாக பணம் வென்றது  என்று எல்லோரும் பேசுவது வெட்கத்துக்குரிய செயல் இல்லையா? தமிழ்நாடு, வெட்கி தலைக்குனிய வேண்டும் . தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பது தேசிய அளவில் தமிழ்நாட்டுக்கு ஒரு தலை குணிவு இல்லையா? பணத்தால், வென்றவர்கள் தர்மம் நியாயம் பற்றி பேசுவது ‘சாத்தான் வேதம் ஓதுவது’ போன்று இல்லையா? வீரந்தமிழன், தன்மானத் தமிழன் தரம் தாழ்ந்து விட்டானா? வறுமையிலும் கையேந்த வைத்தது  யார்? திரும்ப வாங்கினால் என்ன தவறு? என்பது எந்த விதத்தில் நியாயம்? 

வறுமையை சுட்டிக்காட்டி விலை பேசுவதும், வாங்குவதும் குற்றமில்லையா? ஜனநாயகத்தில் பணம் எப்படி விளையாடியது? லஞ்சம் தமிழகத்தில் தலைவிடுத்தாடுகிறது என்பது உண்மை என்றாலும், ஆட்சியையே பணயம் வைக்கும் லஞ்சம், சமுதாயத்தை எங்கோ கொண்டு நிறுத்திவிடும். மனிதம் மரித்து போகும். வாழ்வியல் வகையற்றுபோகும். வந்தாரை வாழ வைத்த தமிழகம் இன்று வாழ்வுரிமை தேடி அலைகிறது.

தமிழகம் இவ்வளவு கேவலமான நிலைக்கு போனதற்கு காரணம் 2016 டிசம்பர் 5 இல் ஏற்பட்ட பேரிழப்புதான் காரணம் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டை தன் கண் அசைப்பில் வைத்திருந்த அந்த ஆளுமை மறைந்தபின் ஏற்பட்ட வெற்றிடம் ‘தலைக்குத் தலை நாட்டாமையாக ஆடவைத்திருக்கிறது’ என்று கருத்து பரவலாக வைரஸ்சாக பரப்பப்படுகிறது.

இரும்பு கரம் கொண்டு எல்லோரையும் அடக்கி ஆண்ட அந்த இரும்பு மனுசி வெற்றியாளர்களை உருவாக்கவில்லçயா? நெஞ்சுரம் கொண்ட வீரப்பெண். தன்னைப்போலவே நெஞ்சுரமிக்கவர்களாக அவரது அரசியல் பெண் வாரிசுகளை உருவாக்கவில்லையா? அவரை சுற்றியுள்ள மந்திரிகளும் எம்.எல்.ஏக்களும் கோழைகளா? தலைவியின் ஆளுமையும் வீரமும், அரசியல் லவாகமும் அவர்களிடம் இல்லையா? இல்லை அவர்கள் அப்படி வளர்ந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அடக்கி வைக்கப்பட்டவர்களா?

அரசியல் வெற்றிடம் என்பது ஒரு மாயை. ஓர்  ஆளுமை மறைந்தால் மற்றொரு ஆளுமை நிரப்பும். அதை நாம் இனங்கண்டு கொள்ளாமல் இருப்பது நமது தவறு. கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே இரு பெரும் ஆளுமைகள். இன்றைய அரசியல் களத்தில் ஒருவர் மறைந்துவிட்டார். மற்றொருவர் செயலிழந்து இருக்கிறார் என்றாலும், அவரது வாரிசு ஆளுமை இல்லாதவர் என்று சொல்ல முடியாதே. ஜெயலலிதாவுக்கு வாரிசு அவரது தொண்டர்கள். ஒன்னரை கோடி தொண்டர்களை கொண்டிருக்கும் அவரது கட்சி ஆளுமைமிக்கது. கட்சியிடையே பிளவும், சண்டையும் ஏற்பட்டாலும் மற்ற கட்சிக்கு தாவாத தொண்டர்களை கொண்ட கட்சி. அது இரு பெரும் திராவிட கட்சிகளும் தொண்டர்கள் வி­யத்தில் பலம் பொருந்தியது. இது எப்படி மறைந்து போகும்?. காவிக்கு எப்போதும் வழிவகுக்காது.

ஜெயலலிதாவுக்கு முன்பு எம்.ஜி.ஆரை ஆளுமையாக கொண்டாடிய தொண்டர்கள் பிற்காலத்தில் ஜெயலலிதாவை ஆளுமையாக ஏற்றுக்கொள்ள வில்லையா? அண்ணாவுக்கு பின் கலைஞரை ஏற்றுக்கொள்ளவில்லையா? தமிழ்நாடு எப்போதும் திராவிடத்தன்மையை கொண்டது. திராவிட கட்சிகளால் இப்போது தமிழ்நாட்டுக்கு ஏற்படும் இழிவு தமிழ் மக்களைத்தானே சாரும்.

ஆளுமையின் மறைவுக்குப் பிறகு அந்த அரசியல் அமைப்பில் இருந்த பலகீனங்கள் இப்போது வெளிப்படுகிறது. பலகீனங்களையும், அரசியலமைப்பின் கோளாறுகளையும் வெல்பவர்களே ஆளுவார்கள். ஆளப்போகிறார்கள்.  பொறுத்திருந்து பார்ப்போம் !!!

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில்
வெற்றியைக் கொண்டாடுவோம்.

 அருட்திரு. எஸ்.  ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவையை ரசிக்காதோர் யாரும் இல்லை. அப்படி அனைவரும் ரசித்த ஒரு நகைச்சுவையை சொல்கிறேன். வடிவேலு போய்க்கொண்டிருப்பார். சிங்கமுத்துவும், மற்றொரு நடிகரும், வடிவேலைப் பார்த்து பேசிக்கொள்வார்கள். ‘அண்ணே! இவன் சரியா வருவானாண்ணே’ என்று ஒரு நடிகர் சொல்ல அதற்கு சிங்கமுத்து ‘யாரு? இவன் சரியா வரமாட்டான்டா’ என்று சொல்லுவார். வடிவேலு ‘யோவ் எதுக்குயா நான் சரியா வரமாட்டேன்’, சொல்லுயா என்பார். சிங்கமுத்து, ‘நான் நினைக்கிற மேட்டருக்கு நீ சரியா வரமாட்டடா போடா’ என்று சொல்லுவார். காலையில் வடிவேலு சிங்கமுத்து வீட்டின் முன் நின்று, ‘மெட்ராசுக்கு போறேன். அதுக்கு முன்னாடி ஒரு டவுட்ட கிளியர் பண்ணிட்டு போலாம்ன்னு வந்தேன். அன்னைக்கு நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு சொன்னீங்க, நான் எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு சொல்லுங்க’ என்பார். சிங்கமுத்து ‘நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டடா என்று கோபத்தோடு சொல்லுவார்’. மனைவியும் ‘நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட’ என்பார். கடைசியில் வடிவேலுவின் அப்பாவும் இணைந்து நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட என்பார். வடிவேலு ‘கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேன்கிறாங்களே, எப்ப அடிச்சாலும் அதுக்கு ஒரு காரணத்த சொல்லி அடிப்பாங்க. அது மனசுக்கு ஒரு ஆறுதலா இருந்துச்சு. இப்ப அடிச்சதுக்கு காரணமே சொல்லாம அனுப்புறாங்களே. நான் எப்படிடா ஊருல போய் பொழப்ப நடத்துறது. எந்நேரமும் மனசு உருத்துமே, எதுக்குடா நான் சரிபட்டு வரமாட்டேன் சொல்லுங்கடா,’ என்று கூறுவார். இந்த ஜோக்கை பல முறை பார்த்து பார்த்து சிரிச்சிருப்பீங்களே. 

நண்பர்களே! வடிவேலு  அவர் எதற்கு சரிபட்டு வரமாட்டார் என்பதை அறிய என்ன பாடுபடுகிறார் பாருங்கள். ஆனால்,‘உனக்கு கணக்கு வராது, ஆங்கிலம் வராது, அறிவியல் வராது, பெயிலாத்தான் போவ, மாடு மேய்க்கத்தான் லாயக்கு, பேசத்  தெரியாது, பாடத்  தெரியாது, எழுதத் தெரியாது, உனக்கு எதுவும் வராது. நீ எதுக்கும் சரிப்பட்டு வரமாட்ட’ என்று மற்றவர்கள் நம்மைப் பார்த்து சொல்லும்போது நம்மில் பலர் ஏற்றுக்கொள்கிறோம். வடிவேலைப் போல் நான் ஏன் சரிப்பட்டு வரமாட்டேன்னு கேட்க, சிந்திக்கத் துணிவதில்லை. அதற்கும் மேலாக நமது தோல்விகளைக் கொண்டாடியும் வருகிறோம். ஆம் சில இளைஞர்கள், ‘மாப்ள எனக்கு 4 அரியர்ஸ் இருக்கு, ஆங்கிலம் வராது, எங்களுக்கு எதுவுமே வராதுப்பா’ என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். சிலர், ‘எனக்கு படிப்பு வராது, படிச்சாலும் மனசுல ஏறாது, அப்படியே படிச்சாலும் பரீச்சை அன்னைக்கு மறந்திடும். எல்லாமே கஷ்டமான கேள்வியா வரும்’ என்று சொல்வார்கள். ஒரு சிலர், ‘எனக்கு எந்த நல்லதும் நடக்காது. எப்பவும் என் வாழ்க்கை கஷ்டம்தான். எனக்குன்னு யாருமில்லை. எதுவுமில்லை. எது செஞ்சாலும் தோல்வியில்தான் முடியும்’ என்று சொல்வார்கள். இவ்வாறு பேசி பலர் தங்களது தோல்விகளைக் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் தங்களின் இயலாமையை ஏற்றுக்கொண்டு அந்தத் தடைகளை உடைத்து வெளியே வருவதற்கு பயந்து, தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி தோல்விகளை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் தான் தோல்விகளைக் கொண்டாடப் பார்க்கிறார்கள். தோல்விகளைப் பற்றி ஒரு சமூகம் கைத்தட்டினால் அந்தச் சமூகம் தோற்றுவிடும். ‘தோல்விகளைக் கொண்டாடுதல்’ என்ற மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும். நமது வெற்றியை நாம் எப்பொழுதும் கொண்டாட வேண்டும். எனக்கு ஆங்கிலம், பேசத்தெரியாதுன்னு சொன்னா, எனக்கு படிப்பு வராதுன்னு சொன்னா, உடனே கைத்தட்டுகிற பழக்கம் சமூகத்தில் புரையோடிக்கிடக்கிறது. இந்த மனப்பாங்கு மிக மிக தவறானது. எனக்கு வராது, வராது என்று சொல்லி தோல்விகளை ஏற்றுக்கொண்டு தப்பிக்கும் மனப்பாங்கை உடைக்க வேண்டும். அதிலிருந்து மீண்டு வரவேண்டும். ‘ஏன் எனக்கு வராது, ஏன் நான் அதற்கு சரிப்பட்டு வரமாட்டேன், ஏன் நான் அதுக்கு செட்டாகமாட்டேன் ’ என்று கேள்விகளை எழுப்புகிறவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும்.  வரலாற்றில் இடம் பிடித்த வெற்றியாளர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லோருமே தங்கள் தோல்விகளைக் கொண்டாடவில்லை. அவர்கள் அவைகளை எதிர்த்துப் போராடியவர்கள். அந்தத் தடைக்கற்களை உடைத்தெறிந்தவர்கள்.  மற்றும் தோல்விகளை படி கற்களாக மாற்றியவர்கள். ஆகவேதான் அவர்களின் வெற்றியை அவர்களால் கொண்டாட முடிந்தது. அன்பு வாசகர்களே! இனி யார் உங்களைப் பார்த்து ‘இது வராது, அது வராது, இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட, அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட’ என்று சொல்லும்போது ‘நான் ஏன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்’. நான் ஏன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று கேள்விகளை எழுப்பி ‘எனக்கு எல்லாம் வரும், எல்லாவற்றிற்கும் சரிப்பட்டு வருவேன்’ என்ற மனப்பாங்கை வளர்த்து, தோல்விகளைக் கொண்டாடாமல் வெற்றிகளைக் கொண்டாட வாழ்த்துகிறேன். 

Don't Celebrate failures, Celebrate success

ஒருவர்  உன்னை தாழ்த்தி  பேசும்போது ஊமையாயிரு.  புகழ்ந்து  பேசும்போது செவிடனாய் இரு, எளிதில் வெற்றி பெறலாம்.     

கிறிஸ்தவ வாழ்வும் அருள் அடையாளங்களும்

கிறிஸ்தவ வாழ்வும் அருள் அடையாளங்களும்
 அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

முன் குறிப்பு

  கடந்த இரு ஆண்டுகளாகத் திருப்பலிக்கடுத்த  அடிப்படை உண்மைகள் பற்றியும், அதன் அமைப்புக் கூறுகள் பற்றியும் விளக்கம் எழுதிக் கொண்டிருந்தேன். இது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களோடு முடிவடைந்தது. அதோடு முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் இவ்விதழின் ஆசிரியர் தொடர்ந்து ஒப்புரவு அருள் அடையாளம் பற்றி எழுதும்படிக் கேட்டார். வேறு சிலர் அருள் அடையாளங்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதலாமே என்ற ஆலோசனை கொடுத்தார்கள்.

முதலில் சற்று தயங்கினேன். பிறகு சரி எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒவ்வொரு அருள் அடையாளங்கள் பற்றி எழுதும் முன்பு அருள் அடையாளங்கள் பற்றிய அடிப்படை புரிதல் அவசியம் எனத் தோன்றிற்று. எனவே “கிறிஸ்தவ வாழ்வும் அருள் அடையாளங்களும்”  என்ற தலைப்பில் எனது விளக்கத்தைத்  தொடங்குகிறேன்.

முன்னுரை

கிறிஸ்தவ வாழ்வு அருள் அடையாளங்களைப் பின்புலமாக வைத்து உருவெடுத்து வளர்ந்து வளமையை நோக்கி நகர்வது என்று சொல்லலாம். அருள் அடையாளங்களைப் பெறுவதும் கொண்டாடுவதும் இறையனுபவத்திற்கு இட்டு செல்ல வேண்டும். அப்போதுதான் கிறிஸ்தவ வாழ்வு வளரவும், வளமையை நோக்கி நகரவும் முடியும். எனவே  அனுபவம் பற்றியும், அருள் அடையாளம் பற்றியும் உண்மையான புரிதல் வேண்டும். முதலில் இவை பற்றிய புரிதலைக் காண்போம்.

1. அனுபவம் என்றால் என்ன?

நமது கட்டுப்பாட்டிற்கும் செல்வாக்கிற்கும் அப்பாலுள்ள ஒரு பொருளையோ, ஆளையோ, நிகழ்வையோ  அகபுற புலன்களால் நேருக்கு நேராக துய்த்துணர்ந்து, அதனால் விளையும்  பயனை, அதாவது இன்ப துன்பங்களை நுகருவதைப் பொதுவாக அனுபவம் (Experience) என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக தொலைகாட்சிகளில் பல பொருள்கள் பற்றிய (சோப்பு, தைலம், உணவுப்பொருள்கள்) விளம்பரத்தைப் பார்க்கிறோம். அவை இப்பொழுது  நம் கையில் இல்லை. அவற்றில் ஒன்று - சாக்லேட்டை -  வாங்கி வாயில் போட்டவுடன் நீர் வாயில் சுரக்கிறது, ருசியை உணர முடிகிறது. அதனால் ஒருவித இன்ப உணர்வு ஏற்படுகிறது. சப்கொட்டி, ஆகா! என்ன ருசி! என்கிறோம். இது புறபுலனின் அனுபவம். சில சமயங்களில் நாம் தவறுதல்களைச் செய்து விடுகிறோம். அதனால் நஷ்டம் ஏற்படுகிறது. நிறுவன அதிகாரி என்ன சொல்ல போகிறாரோ, என்ன தண்டனையை அளிப்பாரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அவரைச் சந்திக்கவும் பயம் உண்டாகிறது. கடைசியில் சந்திக்கும் நேரம் வருகிறது. கூனி குருகி, ஐயா, நான் செய்தது தவறுதான், வருந்துகிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் எனக் கெஞ்சிக் குழைக்கிறோம். அவரும் பெருந்தன்மையோடு நம்மை மன்னித்து விடுகிறார். இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார். அப்போது நம் உள்ளத்தில் ஒரு நிம்மதி பிறக்கிறதல்லாவா? அது ஒரு அனுபவம். அகபுலனால் உணரப்படுவது இந்த அனுபவம்.
   
2. இறையனுபவம்

கட்புலனாகாத இறைவனைக் கட்புலனாகும் பொருள்கள் வழியாகவும், எ.கா. தண்ணீர், எண்ணெய், அப்பம், இரசம், ஆள் வழியாகவும், (இயேசு கிறிஸ்து வழியாக) நிகழ்வு வழியாகவும்  எ.கா. பாவ மன்னிப்பு செயல் - மனிதன் இறைவனைச் சந்திப்பது இறையனுபவம் ஆகும். இச்சந்திப்பினால் விளையும் பயனைத் துய்த்துணர்கிறோம். இதிலிருந்து மனிதப் புலன்களுக்குட்பட்டவைகள் வழியாகதான் அறிவையும், அனுபவத்தையும் நாம் அடைகிறோம் என்பது தெளிவாகிறது.

3. இறையனுபவத்தில் உருவானதே இஸ்ரயேல் மக்கள் வாழ்வு

மனிதர் எவ்வாறு இறைவனைச் சந்தித்து அனுபவித்து வாழ்ந்துள்ளனர் என்பதற்கு மீட்பின் வரலாறு சான்றாக உள்ளது. இஸ்ரயேல் மக்களை அழைத்து தம் மக்களாக்கிக் கொண்ட இறைவன் அவர்களது அன்றாட வாழ்வில் நுழைந்து  ஈடுபாடு கொண்டார். அவர்களது பதிலையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்தார். அவர்களோடு உரையாடினார். புதியதோர் நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக வாக்களித்தார். அது நடைபெறும் என்பதை எவ்வாறு அறிவது என்று அவர்கள் கேட்டபோது அவர்களுடன் உடன்படிக்கை செய்து பதிலளித்தார். எகிப்திலிருந்து அவர்களை விடுவிக்கவும், தாம் உடன்படிக்கையின் வழியாக அவர்களோடு என்றும் ஒன்றித்து இருப்பதை உணர்த்தவும் கடவுள் பல அரும்பெரும் செயல்களைப் புரிந்தார். பின் சீனாய் மலையில் மேகங்கள் நடுவில் அவர்களுக்குத் தோன்றினார். பல அடையாளச் செயல்கள் வழியாக உடன்படிக்கைக்கு உடன்பட அவர்களை அழைத்தார் (காண் விப .19) பாலைவன பயணத்தின் போதும் இன்னும் பல மகத்தான செயல்களைப் புரிந்தார். பிற்காலத்தில் இறைவாக் கினர்கள் வழியாக அடையாளச் செயல்கள் பல செய்தார். இச்செயல்கள் வழியாக வரவிருந்த  துன்பங்களையும், தண்டனைகளையும் நல்வாழ்வையும் சுட்டிக் காட்டினார்.
இவ்வாறு பலமுறை பலசெயல்கள் வழியாக இஸ்ரயேல் மக்கள் கடவுளைச் சந்திக்கவும், அவரது பாதுகாவலை அனுபவிக்கவும் முடிந்தது. அத்தகையை அனுபவங் களின் தொகுப்பே இறைமக்களுடைய வாழ்வாக அமைந்திருந்தது. 

4. கிறிஸ்தவ மக்களின் இறை அனுபவத்திற்கும் வாழ்வுக்கும் அடிப்படை இயேசு கிறிஸ்து

இறுதியாக இந்த இறை அனுபவம் மனிதராகி நம்மிடையே குடிகொண்ட இயேசுகிறிஸ்துவில் நிறைவெய்தியது. ஏனெனில் “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்” (யோவா 3:16) என்பதிலிருந்து கடவுள் யார் என்றும், அவரது அன்பு எத்தகையது என்றும் உணர முடிகின்றது. இந்த இயேசுவோ தந்தையின் நெஞ்சுக்கு நெருக்கமானவர்.. இந்த ஒரே மகனே அவரை வெளிப்படுத்தினார் (காண் யோவா 1:18). அவர் வழியாக கடவுள் இறுதியில் நம்மோடு பேசினார் (காண் யோவா 1:18).  உறவுக் கொண்டார். மனிதரும் இயேசுவைக் கண்டதால் இறைவனைக் காண முடிகிறது (யோவா 14:9). 

இவற்றிக்கெல்லாம் மேலாக இயேசுகிறிஸ்து வினுடைய பாஸ்கா மறைபொருளின் அதாவது, அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றின் வழியாக இந்த இறையனுபவம் உச்சநிலையை அடைந்தது. “கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்துக் கொண்டோம்” (1 யோவா 3:16). இயேசு கிறிஸ்துவை அறிவதின் வழியாக இறைவனை அறிய முடிகின்றது (யோவா 14:7). இவ்வாறு கிறிஸ்தவன் மனிதராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறை அனுபவம் பெறுகிறான்.

இயேசுகிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருள் தங்களுக்கு இறை அனுபவம் கொடுத்தது என்றும், அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்காமல் தங்களால் இருக்க முடியவில்லை என்றும் திருத்தூதர்கள் துணிச்சலோடு கூறுவதை நாம் திருத்தூதர் பணியில் வாசிக்கிறோம். “நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக் காமலிருக்க எங்களால் முடியாது” (தி.ப 4:20). “தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம், கண்ணால் கண்டோம்... கையால் தொட்டுணர்ந்தோம்... அதற்குச் சான்று பகர்கிறோம்... தந்தையுடனும், அவருடைய மகன்  இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவா 1:1-3)  என்று திருத்தூதர் யோவான் கூறுவது  எந்த அளவு அவர்களுடைய இறையனுபவம் அவர்களது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைக் காட்டுகிறது.

திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவ மக்கள் புதிய இஸ்ரயேல் ஆவர். இவர்களும் இந்த இறை அனுபவத்தை அடைய வேண்டுமல்லவா? இயேசுகிறிஸ்துவின் வாழ்விலும், அவரது பாஸ்கா மறைபொருளிலும் இறைவனைச் சந்தித்து தந்தையோடும் இயேசு கிறிஸ்துவோடும் நட்புறவு கொண்டத் திருத்தூதர்களைப் போல் கிறிஸ்தவர்களும் நட்புறவு கொள்ள வேண்டு மல்லவா? இன்று இவர்கள் இதை எவ்வாறு அடைவது? அருள் அடையாளங்களைப் பெற்று, அவை அளிக்கும் அருள்கொடைகளில் பங்கு பெறுவதின் வழியாக இதை அடையாளம். அப்படியானால், 

5. அடையாளங்கள் என்றால் என்ன?

அடையாளம் (Symbol) அல்லது குறியீடு  (Sign) என்பது மற்றொன்றிக்காக நின்று எதைக் குறிக்கிறதோ, அதைச் சுட்டிக்காட்டுவதாகும் அல்லது உணர்த் துவதாகும். 
“சைகை” தான் மனிதர் முதன் முதலில் பயன்படுத்திய அடையாளம். காலபோக்கில் இதுவே பேச்சு என்ற அடையாளமாகவும், மொழி என்ற அடையாளமாகவும் மாறியது. அதே  போல் குறியீடு என்பது ஏதோ ஒன்றின் மீது ஒரு குறிப்பிட்ட பொருளை ஏற்றிக் கூறுவதாகும். உதாரணமாக, தங்க பதக்கம் வெற்றி, திறமையின் அடையாளம். சாலைக் குறியீடுகள் ( சிவப்பு, பச்சை) போக்குவரத்து அடையாளங்கள்.

  இதே போன்று சமய சார்ந்த அடையாளங்கள் உள்ளன. சிறப்பாக இவற்றை சமய வழிபாடுகளில் காண்கிறோம். இந்து சமயத்தில் ஒரு இளைஞன் பூநூலை அணிவது அவன் பிரமசாரி நிலையை அடைந்துள்ளான் என்பதற்கு அடையாளமாக அமைகிறது. இது “சம்ஸ்காரா” என்று அழைக்கப்படுகின்றது.

விவிலியத்தில் இது போன்ற அடையாளங்கள் இருப்பதைக் காண்கிறோம். வானவில் கடவுளுக்கும், நோவாவுக்கும் இடையே செய்யப்பட்ட உடன்படிக்கையின் அடையாளமாக இருந்தது. வீட்டு நிலைகளில் பூசப்பட்டிருந்த ஆட்டின் இரத்தம் அது யூதர்களின் வீடு என்பதற்கும், தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பு, விடுதலைக்கும் அடையாளமாக இருந்தது.

6. இயேசு கிறிஸ்து முதன்மையான அருள் அடையாளம்

மனிதரான இறைவார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவே ஒரு மாபெரும்  அரும் அடையாளமாகத் திகழ்ந்தார். “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிக்கொண்டார்” (யோவா 1:14). அதாவது நாசரேத்து ஊர் இயேசுவில் இறைவன் மனிதர் ஆனார். எனவேதான் என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்( யோவா 14:9) என்றார். கட்புலனாகும் இயேசுவில் கட்புலனாகாத இறைவன் இருக்கிறார். “நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறோம்” என்று இயேசு கூறியது இயேசுவும் இறைவன்தான் என்பதைக் குறிக்கிறது (காண் யோவா 14:10).

இதனால் அவர் இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே ஓர் ஒப்பற்ற, நிகரற்ற இணைப்பாளராகத் திகழ்கின்றார். “கடவுளையும் மனிதரையும் இணைப்பவர் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்”  (1 திமோ 2:5) என்று பவுல் குறிப்பிடுகிறார். மேலும் இவர் கட்புலனாகா கடவுளின் சாயல் என்றும், இறை இரக்கத்தின் அருள் உருவம் என்றும், இறை மீட்பின் திருவெளிப்பாடு என்றும் (காண் கொலோ 1:15) சொல்கிறார். இதேபோல் இவர் கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுபதிவாகவும் விளங்குகிறார் என்று எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் வாசிக்கிறோம் (எபி1:3).

இவ்வாறாக இயேசு கிறிஸ்து இறை-மனித சந்திப்பின் இணைப்பின், ஒன்றிப்பின் காணக் கூடிய அடையாளமாகத் திகழ்கிறார்; அருள் பொழியும் அடையாளமாக விளங்குகின்றார். எனவே அவரே முதன்மையான அருள் அடையாளமாவார் (Primordial Scrament).

7. திருஅவை அடிப்படை அருள் அடையாளம்

உலகம் முடியும் வரை தம் பணியைத் தொடர்ந்தாற்ற இயேசு கிறிஸ்து திருஅவை ஏற்படுத்தினார். இன்று நாம் கிறிஸ்துவை கண்ணால் காணாவிட்டாலும், அவரது மறை உடலாகிய திருஅவையைக் காண்கிறோம். திருஅவை கிறிஸ்துவின் உடல், எல்லா வகையிலும் எப்பொழுதும் இறைவனால் நிறைவாக்கப் பெறும் கிறிஸ்துவின் நிறைவே அத்திருஅவை (காண் கொலோ 1:18).
இத்திருஅவை எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும், தமது சொல், செயல் அடையாளங்கள் வழியாக கிறிஸ்துவை உடனிருக்கச் செய்கிறது. இதனுடைய செயல்கள் ஏழு அருள் அடையாளங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே திருஅவை ஓர் அடிப்படை அருள் அடையாளம் (Fundamental Sacrament)  எனப்படுகிறது.  

8. ஏழு அருள் அடையாளங்கள்

இவ்வுலகு சார் முறையில் மனித வாழ்வு பல்வேறு பருவங்களால் ஆனது. ஒவ்வொரு பருவ நிலைக்கேற்றவாறு  ஒரு மனிதர் பேணிக்காக்கப் படுகிறார். அதேபோல் ஒரு  மனிதருடைய ஆன்மீக வாழ்விலும் பலவித படிநிலைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் புனிதப்படுத்த திருஅவை பயன்படுத்தும் மீட்பளிக்கும் செயல்களே அருள் அடையாளங்கள் எனப்படுகின்றன. இவை ஏழு படிநிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதல் மூன்று அருள் அடையாளங்கள் (திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை) உருவாகும் இறைவாழ்வு, வளர்ச்சி வளமை நிலைகளைச் சார்ந்தவையாகும். அடுத்து இரு அருள் அடையாளங்கள் (ஒப்புரவு, நோயில் பூசுதல்) ஆன்மீக வாழ்வில் உண்டாகும் தடுமாற்றங்களுக்கு ஈடு செய்யும் மருந்தாக அமைந்துள்ளன. கடைசி இரு அருள் அடையாளங்களும் (குருத்துவம், திருமணம்) சமூக கண்நோக்கும், பணியைச் சார்ந்தவைகளாக அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ஏழு அருள் அடையாளங்களும் கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளில் இருந்தே மீட்பளிக்கும் தம் ஆற்றலைப் பெறுகின்றன. அதே நேரத்தில் இவை இறைவனை வழிபடும் செயல்களாகவும் அமைந்துள்ள ( காண் தி.வ 7:1-2; திரு அவை 11). எனவே இவற்றை திருவழிபாட்டு அருள் அடையாளங்கள் என்றும்  சொல்லலாம். இனி இவ்வருள் அடையாளங்கள் ஒவ்வொன்றையும் பற்றியும் விளக்கம் காண்போம்.
                                                                                                                                                        தொடரும்...

Ads Inside Post