Pages - Menu

Thursday, 3 December 2015

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்
- எம். சி. குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., விரகாலூர்.

சாயர் மி­ன் கலாசாலைத் தலைவர் அவர்கள் வித்துவான் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளையிடம் காட்டிய அன்பு இவருடைய நெஞ்சைத்தைத் தொட்டது. வித்துவானுக்குக் கிறிஸ்துவ மார்க்கத்தைப் பற்றி பல செய்திகளைச் சொல்லி வைத்தார். அவர் விருப்பத்தோடும், அன்போடும் போதிக்கிற அருமையான வார்த்தைகள் தொடக்கத்தில் வித்துவானுக்கு வெறுப்பாகவும், கசப்பாகவும் இருந்தாலும் நாளடைவில் அவர் காட்டிய நற்குண செய்கைகள் மனத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது வயதுவரை வைணவ நெறியில் பிடிவாதமுடைய கொடிய வைணவராக இருந்தார்.
கிறிஸ்துவ புனித நூலான விவிலியத்தை பெற்று அதை வாசிக்க ஆரம்பித்தார். விவிலியம் கிறிஸ்தவர்களின் முக்கியமான நூல் என்பதை அறியாமல், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் முதல் இருபது அதிகாரங்களை வாசித்து, உலக படைப்பு, பாவ வருகை, கடுமையான நீர்ப்பெருக்கு முதலியவைகளை கற்று அறிந்தார். அக்கால கட்டத்தில் வித்துவானுக்கு கிறிஸ்தவர்களிடம் பழக்க வழக்கங்கள் அதிகமானது. வேத அறிவையும் மிகுதியாக அறிந்தார் வைணவ மதத்தில் இருந்த ஆழ்ந்த வைராக்கியம், கோட்பாடுகள், விரதங்கள் ஆகியவை குறையத் தொடங்கின.
பின்பு இவருடைய மனமானது ஒரு நிலையில் நில்லாமல் வாடிச் சோர்வடைந்தது. அக்காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உயர்குலத்தோர், கல்வி, அறிவு ஒழுக்கங்களில் சிறந்தோருமாகிய அநேக இந்துக்கள் தன் மதத்தைத் துறந்து கிறித்துவ சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டனர். இதே சமயத்தில் சிருட்டிணப் பிள்ளையின் உடன் பிறந்தவரான முத்தையாப்பிள்ளையும் கிறித்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு 1857ஆம் ஆண்டு ஞானதீட்சை (திருமுழுக்கு) பெற்றார். தம்பி கிறித்தவனானதைக் கேள்விப்பட்ட கிருட்டிணப்பிள்ளை மனத்தில் குழப்பமடைந்து கிறித்துவ மதத்தை ஆழ்ந்து நினைக்கலாயினார்.
இதன்பின் கிருட்டிணப்பிள்ளையிடத்தில் பலர், கிறித்ததுவைப் பற்றி நினைக்கவும், கிறித்துவ அறிவை ஊட்டவும் முயற்சி செய்தனர். அக்காலத்தில் முதிர்ந்த அறிவும், தீர்க்க புத்தியும் உடைய ஸ்ரீமான் தனகோடிராஜி என்பவர் கிறித்துவ மறைக்கு மாறினார். நற்குண நல்லொழுக்கங்களில் சிறந்து மிகப் பெரிய பதவியில் இருந்தவர். இவருடைய வார்த்தைகளும் அனுபவ சாட்சியும் வித்துவானுடைய மனத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. இதே காலத்தில் பாளையங்கோட்டையிலிருந்த மறைப்பரப்பு குழுவினர் சிலர் இவர் வி­யத்தில் அதிக முயற்சியயடுத்து வந்தனர். வித்துவான் இந்நாட்களில்,
“இருதலைக் கொள்ளி யுற்ற எறும்பென ஒரு மார்க்கம்
ஒருதலை யானுங் காணா துணங்கி”
கலங்கி, யாது செய்வதெனத் தெரியாது காற்றில் அடிப்பட்ட சருகு போலச் சூழல்வராயினார். இவ்வாறு வித்துவானுடைய மனம் ஒரு வழி நில்லாமல் உழன்று கொண்டிருக்கையில் ஒருநாள் ஸ்ரீமான் தனகோடிராஜி வித்துவானுடைய ஆன்மீக நிலையை அவருக்கு எடுத்துக்காட்டி, இளமை பக்தி, ஆத்தும விசாரம் தீர்தல், இருதயக் காவல், மோட்சப் பிரயாணம் என்னும் நாலு புத்தகங்களை கொடுத்து படித்து கிரகிக்கும்படி அவருக்குப் புத்தி கூறி அனுப்பினார். அவற்றை வித்துவான் படித்தபொழுது அவற்றின்கண் அடங்கிய ஆன்மீகக் கருத்துக்களை காந்தம் ஊசியைக் கவருவது போல அவருடைய நெஞ்சத்தைக் கவர்ந்தன. மோட்சப் பிரயாணம் என்ற அந்த நூல் அவருடைய இருதயத்தைத் தொட்டு உணர்த்தியது. பின்பு தம் நண்பராகிய தனக்கோடி ராஜியின் ஆலோசனையின்படி வித்துவான் நாலு சுவிசேசங்களையும் ஒழுங்காய் வாசிக்கவும் தம் இருதயக் கண்கள் திறக்கும்படி மன்றாடவும் தொடங்கினார். ஒரு நாளிரவு கிருட்டிணப்பிள்ளையும், சீமான் தனக்கோடி ராஜி ஆகிய இருவரும் நீண்ட நேரம் கிறித்தவ மறையைப் பற்றி பேசலாயினர். வெகு நாளாகத் தமக்கு விளங்காத விசயங்களை வித்துவான் கேட்டறிந்தார். தம் ஐயங்கள் நீங்கியதும், பயம் அகன்றது.
அந்த நிமிடமே இயேசு கிறிஸ்துவை வித்துவான் தமது இருதயத்தில் ஏற்று கொண்டார். இந்நள்ளிரவைப் பற்றி வித்துவான் கூறியது,
“அன்றே கிறிஸ்து நாதரை அறிந்தேன். அன்றே அவர்; திருநாமத்தை முன்னிட்டு செபம் செய்ய துணிந்தேன். அன்றே வெகு நாட்களாக மதுரமாக இருந்த பாவகாரியங்கள் யாவும் கசப்பாக மாறின. அன்றே ஸ்ரீகிறிஸ்துவை வழிபட தீர்மானித்தேன். அன்றைக்கே ஞாபகர்த்தமாக ஒரு செய்யுள் எழுதி வைத்தேன். அன்றே, தெய்வம் என் இதயத்தையும் அவரைத் துதிக்க என் வாயையும் திறந்தார்”.
என வித்துவான் கூறியிருக்கின்றார். அந்த நள்ளிரவில் வித்துவான் எழுதி வைத்த செய்யுளாவது,
“கருணையங் கடலே அந்த காரமாம் வினையைப் போக்கும்
அருணனே அடியேற்காக ஆருயிர் விடுத்த தேவே
பொருணயந் தெரியாத தீய புல்லிய ளெ னையாட் கொள்ளத்
தருணமென் னிதய நிற்கே சமர்ப்பணந் தரும மூர்த்தி”
கருணை சமுத்திரமே பாவமாகிய இருளைநீக்கும் ஞான சூரியனே! அடியேனுக்காக அருமையான ஜீவனையும் விட்ட தெய்வமே! உண்மைப் பொருளையும் அதன் நலத்தையும் அறியாத தீமை நிறைந்த ஈனனாகிய என்னை ஆட்கொண்டருளுவதற்கு இதுவே ஏற்ற தருணம். தருமமூர்த்தியே! என் இதயத்தை உமக்கே தேவார்ப்பணமாகக் கொடுக்கிறேன்.
கிருட்டிணப்பிள்ளையின் இருதயமானது நம் பெருமானுடைய திருவடிகளுக்கு ஆட்பட்டுவிட்டது. ஆயினும் இவ்விசயத்தில் உலகறியுமாறு வெளியிடுவதற்கு அவருக்கு மனம் ஒத்து வரவில்லை. மனநிலையை தனக்குள்ளே அடக்கிச் சில நாள்கள் செலவிட்டார். ஆயினும் வைணவ மதச் சடங்குகளில் ஊக்கம் குறைந்து வருவதை இவருடைய வீட்டார் கவனித்தனர். இதனால் இவர் இரவில் இரகசியமாகவே ஜெபித்து வந்தார். இதைக் கண்ட இவர் மனைவிக்கும் இவரைப் பற்றிய சந்தேகம் அதிகரித்தது. ஒருநாள் தம் மனைவியை அழைத்து கிறித்துவ மார்க்கத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். இதைக் கேட்டவுடன் அவர் மனைவி கலங்கித் திகைத்துத் தேம்பி அழுது, அந்நிமிடமே உயிர் துறப்பதாக கூறினார். அக்காலத்தில் வித்துவானுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். இவரது தாயாரும் இவருடனே இருந்தார். தாம் மட்டும் கிறிஸ்தவரானால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகுமென்று இவர் சஞ்சலப்பட்டார். கிறிஸ்தவனாகாமல் இருக்கவும் இவருக்கு மனமில்லை. குடும்பத்தார் எல்லாரையும் தள்ளிவிட்டுத் தாம் மட்டும் தனியே கிறித்தவராகவும் துணிவில்லை. (தொடரும்)

அரசியல் களம் என்ன செய்யப் போகிறோம்?

அரசியல் களம்
என்ன செய்யப் போகிறோம்?
- குறிஞ்சி
அண்மையில் என்னுடைய கல்லூரிக் கால நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் நிகழ்ந்த சந்திப்பு. மனம் விட்டு உரையாடினோம். நண்பருடைய அனுபவ பகிர்வில் இருந்து ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். நண்பரின் அனுபவப் பகிர்வை இனி அவரது சொற்களிலேயே கேட்போம், வாருங்கள்.
நான்ஆசிரியராகப் பணி செய்தாலும் (மெட்ரிக்குலேசன் பள்ளியில்) என்னுடைய தந்தையார் விட்டுச் சென்ற ஒரு ஏக்கர் விவசாயத்தை விடமுடியாதவனாகவே இருக்கிறேன். காரணம் என்னுடைய தந்தையாரின் மறைவுக்குப் பிறகு என்னுடைய தாயாரை இயக்கிக் கொண்டிருப்பது உயிர்த் துடிப்போடு வைத்திருப்பது அந்த நிலம்தான். எழுபது வயதிலும் அவர் எல்லா வேலைகளையும் செய்வதற்கு அந்த நிலம்தான் காரணம். மகனும், மகளும், பேரக் குழந்தைகளும் 
விளம்பரங்களுக்கு இடையே வரும் தொலைக்காட்சித் தொடர்களைப் போல வந்து போய்க் கொண்டிருந்தாலும், அந்த நிலமும் ‡ விவசாயமும் அவரை உயிர்த் துடிப்போடு பாதுகாத்து வைத்திருக்கின்றன என்றால் மிகையல்ல. எனவே என்னுடைய தாயாருக்காக நானும் விவசாயத்தோடு தொடர்புடையவனாகவே இருக்கிறேன்.
எனது கிராமத்தில் இருந்து எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நகரமே இப்போது என் இருப்பிடம். விடுமுறை நாட்களில் விவசாயப் பணிக்காக கிராமத்தை நோக்கிய பயணம் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது.
கடந்த ஞாயிறு அன்று எப்படியாவது வயல் நடவை முடித்து விட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அடுத்த வாரம் என்னால் கிராமத்திற்கு வரமுடியாது. பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சிறப்பு வகுப்பு அன்றைக்கு இருக்கிறது. மேலும் வயல் நடவு முடிந்தால் தான் என்னுடைய தாயாரும் கொஞ்சமாவது ஓய்வு எடுப்பார். நானும் 
நிம்மதியாக என் வேலையைப் பார்க்க முடியும்.
ஆனால், கிராமத்து நிலைமைபோல நேர்மாறாக இருந்தது. தமிழ்நாடு முழுவதும் கொட்டித் தீர்க்கும் மழை நம் கிராமத்தை மட்டும் விட்டு வைக்குமா என்ன? கடும் மழைக்கு இடையிலும் சனிக்கிழமை இரவே கிராமத்திற்குச் சென்று விட்டேன். என்னுடைய தாயார் ஏற்கனவே வேலையாட்களிடம் சொல்லி வைத்திருந்தார். இருந்தாலும் நானும் ஒருமுறை அவர்களைப் பார்த்து அடுத்த நாள் வேலைக்கு உறுதி செய்துக் கொண்டேன்.
ஞாயிறு பொழுது புலர்ந்தது. இரவில் பெய்த கனமழை காலையில் குறைந்திருந்தது. இலேசான தூறல்தான். எப்படியும் நடவு வேலையை முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு வேலையாட்களைப் பார்த்தேன். அவர்களும் “வாத்தியார் வேலையை முடிச்சிருவோம், வாங்க” என்று கிளம்பினர். நடவும் நடந்தது; தூறலும் தொடர்ந்தது. இடைஇடையே வேகமான மழை. ஆனாலும் வேலையை முடித்து விட்டுத்தான் கரையேற வேண்டும் என்பதில் வேலையாட்கள் உறுதியாக இருந்தனர்.
இடையில் ஒருவரை தேநீர்க் கடைக்கு அனுப்பினோம். மழைக் குளிருக்கு இதமாக சூடான தேநீரும், பலகாரங்களும் வாங்கி வருவதற்காக போனவரும் பொருட்களைவாங்கி வந்தார். ஆனால் வந்தவரைக் கண்டதும் எனக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. ஏனெனில், கொதிக்கின்ற தேநீர் பாலிதீன் பையில் மாற்றப்பட்டிருக்கிறது. அவர் கையில் பிடித்துக் கொண்டு வருகிறார். பலகாரங்கள் ஒரு பாலிதீன் பையில். குடிப்பதற்கான குவளைகளும் பாலிதீன் குவளைகளே. அவரிடம் “வழக்கமாக என் தாயாரிடம் சென்று பாத்திரங்களும், டம்ளர்களும் வாங்கிச் செல்வீர்களே இன்றைக்கு ஏன் வாங்கவில்லை?” என்றேன் நான். இதற்கு அவர், “வாத்தியாரே நம்ம ஊரு கடையிலயும் இப்ப இது மாதிரி கொடுக்கிறாங்க. அப்புறம் எதுக்கு நாம பாத்திரமெல்லாம் தூக்கிக்கிட்டு” என்று மகிழ்ச்சியோடு கூறினார். அவரது அறியாமையை நினைத்து எனக்கு அனுதாபம்தான் வந்தது. சரி, சொல்லி புரிய வைப்போம் என்று நினைத்துக் கொண்டே “முதலில் தேநீரை ஊற்றிக் குடியுங்கள்; சூடு ஆறிப் போகும். பின்னர் பலகாரங்களைச் சாப்பிடுவோம்” என்றேன் நான். வந்ததை அனைவரும் பகிரத் தொடங்கினோம்.
தேநீரை அனைவருக்கும் ஊற்றிக் கொடுத்த செந்தாமரை அக்கா “எங்க சுய உதவி குழுவுல இந்த பாலிதீன், பிளாஸ்டிக் பத்தியயல்லாம் ஒருநாள் பேசுனாங்க. இதெல்லாம் மண்ணுல விழுந்தா மக்காதாம். மக்குலன்னா காலப் போக்குல மண்ணே பாலிதீன், பிளாஸ்டிக்கா ஆயிடுமாம். அப்புறம் இந்த மண்ணுல எதுவுமே முளைக்காதாம். படிப்படியா எல்லா உசுரும் அழிஞ்சு போயிருமாம். எங்க குழுவுல சொன்னாங்க” என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்தார். நானும், “நீங்க சொன்னது சரிதான், நான் சொல்லனும்னு நினைச்சத நீங்களே சொல்லிட்டீங்க” என்றேன். அவர் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. உடனே நானும் பாலிதீன், பிளாஸ்டிக்கினால ஏற்படும் கெடுதல்களைப் பத்தி கொஞ்சம் எடுத்துச் சொன்னேன். “இப்போது ஏற்பட்டுள்ள கன மழை பாதிப்புல வடிகால் வாய்க்கால்களை நீர் நிலைகளை நாசமாக்குவதில் இந்த பாலிதீன், பிளாஸ்டிக்குக்குப் பெரும்பங்கு இருக்கு. அதனால இந்த வி­யத்துல நாம பழைய காலத்துக்குத் திரும்பனும். பாலிதீன், பிளாஸ்டிக்குக்குப் பதிலா பாத்திரங்களதான் பயன்படுத்தனும்” என்று நான் சொன்ன போது எல்லோரும் ‘இது சரிதான்’ என்ற உணர்வோடு தலையாட்டினர்.
அப்போது, மகனைப் பார்க்க சென்னைக்குப் போய் வந்த (கன மழைக்கு முன்பு) அம்மாக்கண்ணு “ஏம்பா நீ என்னமோ எங்கள மாதிரி படிக்காதவங்கதான் இந்த மண்ணைக் கெடுக்கிறதா நினைச்சு பேசிக்கிட்டு இருக்க. ஆனா மெட்ராசுக்கு போயிட்டு வந்தப்ப பார்த்தேன். அத்தனை வடிகால் வாய்க்காலும் பாலிதீன் குப்பையால நிறஞ்சுக் கெடக்கு. பத்தாததுக்கு வயக்காடு வயக்காடா வூட்ட கட்டி வச்சிருக்கீங்க. எங்க பார்த்தாலும் பிளாட் போட்டு கெடக்கு. ஆமா தண்ணி வர்ற வழியில வூட்ட கட்டி வச்சுக்கிட்டு வெள்ளம் வருது, வெள்ளம் வருதுன்னு சொல்லுறீங்க. வடிகால், வாய்க்கால் எல்லாம் தூர் வாராம மெட்ராசே மெதக்குதுன்னா, மெதக்காம என்ன பண்ணும்? சரி... எனக்கு தோனுற இந்த வி­யமெல்லாம் உங்க மந்திரிங்களுக்கும், ஆபீசருங்களுக்கும் தெரியாதாப்பா? எல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்களாச்சே!” என்று பொரிந்து தள்ளினார்.
அவரது பேச்சைக் கேட்ட பாப்பம்மா “அக்கா எல்லாம் நம்ம வாத்தியாரு மாதிரி படிச்சவங்க தான். இலஞ்சம் குடுத்தும், வாங்கியும் இந்த மண்ண இப்படி கெடுத்து வச்சிருக்காங்க. அதனால வந்த கேடுதான் இவ்வளவும்” என்று ஒரே போடாகப் போட்டார். பாப்பம்மா தனது பேச்சின் ஊடே என்னையும் படித்து இலஞ்சம் வாங்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாய் மாற்றியிருந்தார். கேட்பதற்குச் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனாலும் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி ‡ கிராமங்களுக்குள்ளும் விழிப்புணர்வின் வெளிச்சம் படரத் தொடங்கியிருப்பதை நினைத்து மனம் மகிழ்ச்சியில் திளைத்த போது ஒரு குரல், “வாத்தியாரே! வயக்காட்டில கனவு காணாதீங்க. நடவு முடிஞ்சுருச்சில்ல கரையேறுவோம், வாங்க” என்றார் ஒருவர். நம்பிக்கையோடு எல்லோரும் கரையேறினோம்.
மேற்கண்ட நண்பரின் அனுபவ பகிர்வு சுகமான சுமையாக என் மனத்தில் இருந்தது. இறக்கி வைத்துவிட்டேன். பகிர்தல்தானே வாழ்க்கை.
$$$$$$

ஆத்தாவும், தாத்தாவும் வாயாடி வண்ணக்கிளி

ஆத்தாவும், தாத்தாவும்
வாயாடி வண்ணக்கிளி
என்னடியம்மா தலையயல்லாம்விரிச்சு போட்டுக்கிட்டு இப்படி வந்து நிக்கிற? என்ன ஆச்சு உனக்கு? அதிகமா பேசினீங்க, உங்கள உரிச்சு போட்டுவேன். இப்பல்லாம் மனு­னுக்கு காலமில்ல, பேய்க்குத்தான் காலம்.
அடியம்மா, பேயா வந்திருக்க, உனக்கு என்ன வேணும்? சொல்லி தொலை. நாலு பேய் படம் வேணும். இப்பத்தான் பக்கத்து வீட்டில ஒரு பேய் படம் பார்த்திட்டு வரேன். பேய்னா, நல்லா ஜாலி!
எத்தனை பேயயல்லாம் பார்த்திருக்கிறேன். இந்த வே­ம் போடாமலேயே நீ, பல நேரத்தில பேயாட்டம் ஆடியிருக்கிறியே!
ம்... உடனே போய் நாலு பேய் படம் சிடி வாங்கிட்டு வா. இல்லைனா உன்ன “செஞ்சிடுவேன்”.
என்னடி, புது வார்த்தையா இருக்கு. செஞ்சிடுவேன்னா என்னா அர்த்தம்?
பெறந்த சின்ன பிள்ளைக்குக்கூட இந்த வார்த்தை தெரியுது. உங்களுக்கு தெரியலையா? செஞ்சிடுவேனா, உங்கள முடிச்சிடுவேன்னு அர்த்தம்.
அடி பாவி, இந்த அளவுக்கு வந்திட்டியா? இப்பவே போன் போட்டு நீ கேக்கிறத வாங்கிட்டு வரச்சொல்றேன்.
ஏன்டியம்மா, ஊரெல்லாம் மழைபேஞ்சு, மக்கள் தண்ணியில மிதக்கிறாங்க. அதபத்தியயல்லாம் உனக்கு °ன்டியம்மா, ஊரெல்லாம் மழைபேஞ்சு, மக்கள் தண்ணியில மிதக்கிறாங்க. அதபத்தியயல்லாம் உனக்கு கவலையில்லையா?
வயித்தெரிச்சல கொட்டிக்காதேயா?
கடவுள் கொடுக்கிற மழைய தேக்கி வைக்க கதியில்லாம போயிருச்சு. இலவசம் இலவசம்னு அரசாங்கம் மக்களுக்கு அல்வா கொடுத்துகிட்டு இருக்கு.
ஆமாடியம்மா, பேனு, மிக்சியயல்லாம் பேருக்கு தானாம். ஓட்டை ஒடசலா இருக்காம். கேரளா அரசாங்கத்தில வேலை செஞ்ச ஒரு அதிகாரி சொன்னாராம். தமிழ்நாட்டில வேண்டிய ஏரி, குளம் வெட்டி, இருக்கிற ஏரிகளெல்லாம் பல்லகாட்டி, தண்ணிய பிச்சை வாங்க வேண்டியதில்லைனு சொன்னாராம்.
ஆந்திராவில சந்திரபாபு நாயுடு 2000 கோடி செலவு செய்து கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளை இணைச்சிருக்காராம். இந்த மழையில, 5 டிஎம்சி தண்ணீர் சென்னையில மட்டும் கடலில் கலந்திருக்காம்.
இதுமாதிரி ஆக்கபூர்வமான ஐடியால்லாம் நம்ம ஆளுகளுக்கு தோணாது. விஜய், அஜய்ன்னாத்தான் பைத்தியமாயிடு வாங்க.
டெல்லியில, கேரளா அரசு பங்களாவில, மாட்டுக்கறி சமைச்சாங்கன்னு, போலீஸ் ரெயிடு போச்சுதாம். கேரளாகாரங்க சும்மா விடுவாங்களா? தர்ணா நடத்தினாங்க. மத்திய அரசு ஆடிபோயிடுச்சாம். மாட்டுக்கறி, பசுவதைன்னு கொடி பிடிக்கிறவங்க, நதிகளை இணைச்சு நாட்டின் வளத்தை பெருக்கக் காணாம்.
சத்தம் போட்டு பேசாதீங்க, எலி கடவுளின் வாகனம். எலியை அடிக்கக் கூடாது. கொசுவும் பசுவை போல. கொசுவைக் கூட அடிக்கக் கூடாதானு சொன்னாலும் சொல்லுவாங்க.  துவரம் பருப்ப, துயரம் பருப்புனு சொல்ல வைச்சிருக்கே. தெரியுமாடியம்மா, தமிழ்நாடு, நாட்டின் வளர்ச்சியல 20வது மாநிலமா இருக்குதாம்.
அம்மா ஆட்சியில எது நடந்தாலும், மக்கள் கண்டுக்க மாட்டாங்க. மக்களுக்கு அவ்வளவு விழிப்புணர்வு.. பீகார் தேர்தல மோடி தன்மாய வித்தையயல்லாம் காண்பித்தாரு. ஒன்னும் எடுபடல. மக்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறாங்க.
சரிடியம்மா, வெள்ளத்தில குதிச்சு, ஒரு அலசு அலசியதுபோல, ஒரு அலசு அலசிட்டோம். இந்தா பேய் சிடி வந்திருச்சு.
போய் பேயோடு உல்லாசம் இடு.
பேய்க்குத்தான் காலம். அடுத்த வாரம் ஒரு கலக்கு கலக்குவோம்.

Wednesday, 2 December 2015

இயற்கை மூலிகை மருத்துவம்

இயற்கை மூலிகை மருத்துவம்

மூலிகையின் மாமணியாம்  கண்ணே
முன்னோர்கள் மருத்துவத்தை
அருட்பணி.ஆயர் அந்தோனிசாமி பெயர் சொல்லி
ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்திலிருந்து எழுதுகிறேன் - கண்ணே

உப்பு அதிகம் சேர்த்தால் - கண்ணே
உன் முடி நரைக்கும்
புளி அதிகம் சேர்த்தால் - கண்ணே
உன் மேனியில் திரை (தோல் சுருக்கம்) உண்டாகும்

உடல் மெலிந்து தூக்கமின்மையால் அங்கம் எரிகிறதா?
உன் ஆத்தாள் நான் இருக்கேன் - கண்ணே
ஆவாரை பஞ்ச சூரணம் தரட்டுமா? (இலை, பூ, காய், வேர், பட்டை)

சுடுகாட்டில் உன் உடல் வேக நாளாகுமென்று
வெண் சுருட்டில் (சிகரெட்) வெந்து போக விரும்புகிறாயா - கண்ணே
நுரையீரல் நொந்து போகும் நரம்புகள் தளர்ந்து போகும்

ஆண்மையும் குறைந்து போகும் - கண்ணே
வெட்டைநோய் உன்னை விளம்பரப்படுத்தும்
வேண்டாமே இந்த சிகரெட்.

பசியைத் தூண்ட இலந்தை பழம் தரட்டுமா?
புண்களை அகற்ற வாழைப்பழம் தரட்டுமா?
காசத்துக்கு மாதுளம் பழமும் - கண்ணே
கண்ணொளிக்கு முந்திரிப் பழமும் தரட்டுமா?



சத்தான மூலிகையைச் சுருக்கி சுத்தி செய்து சாப்பிட்டால்
மண்டலம்தான் கண்ணே
மத்தான மன்மதன் போல் மேனியாகும்
மாசற்று வாழ்வாய்

முள்ளங்கி சாப்பிட்டால் - கண்ணே
வாயுத் தொல்லை நீங்கும், வாய் நாற்றம் போகும்
கல்லீரல் வீக்கம் கரையும் ‡ கண்ணே
காமாலைக்கு நல்லது, சிறுநீர் அடைப்பு அகலும்

காதில் சீழ் வடிகிறதா - கண்ணே
மூன்று கிராம் உப்பு, 12 கிராம் தேன் கலந்து துணியால்
திரியாக்கி தினமும் இருவேளை காதுக்குள் வைக்க
இருநாளில் நன்றாக குணமாகும்

வெண்குஷ்டமா? வேதனைப் படாதே - கண்ணே
வறுத்த கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி
வடித்த கஞ்சியில் கலந்து களிம்பாக்கி
வெண்புள்ளிகள் மீது நான்கு மாதம் தடவிவர குணமாகும்

கருஞ்சீரகத்தை பொடியாக்கி தேனில் கலந்து - கண்ணே
இருவேளை ஒரு டீஸ்பூன் அளவு தினமும் சாப்பிட
ஓரிரு மாதங்களில் வெண்குஷ்டம்
இருந்த இடம் தெரியாமல் நிரந்தரமாகக் குணமாகும்

இரண்டு கிராம் சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் - கண்ணே
கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால்
தடைப்பட்ட மாதவிலக்கு வெளியேறும்
பித்தப்பை, சிறுநீரகப்பை கற்களையும் கரைக்கும்

நூறு கிராம் கருஞ்சீரகத் தூளை அரை லிட்டர் நல்லெண்ணெய் - கண்ணே
கொதிக்க வைத்து வடிகட்டி இடுப்பு வலி, மூட்டு வலி,
மூட்டு வாதம், கை, கால் குடைச்சலுக்குத் தடவ குணமாகும்.

இரத்தத்தை சுத்தம் செய்து வீக்கங்கள் கரைய - கண்ணே
தோல் வியாதிகளும் நீங்கி பசியின்மையைப் போக்கி
செயலிழந்த சிறுநீரகங்களை செயல்படச் செய்ய
நிலவேம்பு சூரணம் அரை ஸ்பூன் சாப்பிடலாம்

அடிக்கடி நோய் வருகிறதா? - கண்ணே
நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா?
அருகம்புல் சாறை காலையில் வெறும் வயிற்றில்
அரை அவுன்ஸ் சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி கூடும் - கண்ணே

ஆறா புண்கள், சொறி, சிரங்கு ஆற - கண்ணே
அரசன் பட்டையை வறுத்து கரியாக்கிய பொடியை
தேங்காயயண்ணையில் குழைத்துப் போட
ஆறே நாளில் ஆறி விடும்.


முக்கி மலம் கழிக்கிறாயா - கண்ணே
மூல நோய் வந்து விட்டதா?
முள்ளங்கி கலந்து ஒரு டீஸ்புன் இருவேளை கொடுக்கட்டுமா?
மூலநோய் குணமாகும்

Tuesday, 1 December 2015

தீட்டினால் நிறைய வெட்டும், அவசரப்பட்டு சொல்லக்கூடாது, இன்னும் உள்ளே போ!

தீட்டினால் நிறைய வெட்டும்
ஒரு விறகு வெட்டி புதிய கோடாரி வாங்கினான். அதனால் முதல்நாள் ஒன்பது மரங்கள் வெட்டினான். அடுத்தநாள் எட்டு மரங்கள் வெட்டினான். அதற்கு அடுத்த நாள் ஏழு மரங்கள் வெட்டினான். இவ்வாறாக குறைந்து கொண்டே போனது. ஒரு பெரியவரிடம் அவன் கேட்டான் “ஒரே கோடாரியால் தான் வெட்டுகிறேன். ஏன் நாளுக்கு நாள் அதன் பலம் குறைந்து கொண்டு போகிறது” என்றான். பெரியவர் கேட்டார் “அதே கோடறிதான். ஆனால் அதை தீட்டினாயா?” என்றார்.

 அவசரப்பட்டு சொல்லக்கூடாது
இரயில் பெட்டியில் ஒரு சில பிள்ளைகள் சப்தம்போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் “பிள்ளையை அடக்கி வைக்கக் கூடாதா” என்றார்கள். அதற்கு பிள்ளையுடன் இருந்தவர்கள் கூறினர் “அந்த பிள்ளையின் தாய் இறந்துவிட்டாள். அவளின் அடக்க சடங்கிற்காகத்தான் அந்த பிள்ளையை அழைத்து செல்கிறேன். இது அவளுக்குத் தெரியாது. அங்கு சென்ற பிறகு சோகத்தில் மூழ்கிவிடுவாள். அதுவரை மகிழ்ச்சியாய் இருக்கட்டும்” என்றார்.
 இன்னும் உள்ளே போ!
ஒருவர் விறகு வெட்ட காட்டிற்குச் சென்றார். காட்டில் ஒரு முனிவர் தவம் செய்துக் கொண்டிருந்தார். அவரை விறகு வெட்டி வணங்கினான். அவர் கூறினார், “காட்டின் உள்ளே போ, ஒரு வாரத்திற்கான வருமானம் கிடைக்கும்” என்றார். அதுபோல் தேக்குமரம் கிடைத்தது. சில நாள்கள் கழித்து முனிவரிடம் சென்றான். “இன்னும் சற்று காட்டின் உள்ளே போ” என்றார். அப்படியே செய்தான் தாமிரம் கிடைத்தது. மீண்டும் பல நாள்கள் கழித்து முனிவரிடம் சென்றான். “இன்னும் சற்று காட்டின் உள்ளே போ” என்றார். அவ்வாறே செய்தான். தங்கம் கிடைத்தது. இன்னும் சிலநாள்கள் சென்று துறவியிடம் சென்றபோது அதேபோல், “இன்னும் சற்று உள்ளே செல்” என்றார். வைரம் கிடைத்தது. கடைசியாக விறகு வெட்டி முனிவரிடம் கேட்டான் “நீர் இவ்வளவு தெரிந்திருந்தும், ஏன் பொருள்களை எடுத்து வாழவில்லை?” என்றான். “அவை எனக்கு மகிழ்ச்சியை தருபவை அல்ல. தியானம்தான் மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.
திருவருகைக்காலம் 4ஆம் ஞாயிறு
20/12/2015
மிக் 5 : 2 - 5
எபி 10 : 5 - 10
லூக் 1 : 39 - 45
மரியன்னையின் பெருமை

அவர்களுக்குத் திருமணம் நிகழ்ந்தது. பல ஆண்டுகள் உருண்டோடின. குழந்தைச் செல்வம் அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. இறைவனிடம் வேண்டினர். ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர். அவனைச் செல்வம் என்றே அழைத்தனர். காரணம் அவர்கள் வறுமைக் கோட்டின் வாரிசுகள். வாழ்வில் காணாத செல்வத்தை பெயரிலாவது காண விழைந்தனர். எனவே அவனைச் செல்லமாக அழைத்தனர். ஆனால் அவனின் வாழ்வு குறுகியது. மூளைக்காய்ச்சலில் முடிந்து போனது. பாவம் அந்தப் பெற்றோர்கள். ‘கடவுளே கொடுக்காமலேயே இருந்திருக்கலாமே! கொடுத்துப் பறித்துக் கொண்டாயே!’ எனப் பதறினர். கதறி அழுதனர். இறைவன் அவர்களின் குமுறலைக் கேட்டார். ஒரு நாள் காட்சிக் கொடுத்தார். ‘ஒன்று மட்டும் கேளுங்கள். உங்களுக்கு அருள்வேன்’ என்றார்.

அவர்கள் சோதனை வலையில் சிக்கினர். வாழ்வுக்கு வசதியைக் கேட்பதா? அல்லது இறந்த தம் மகனைக் கேட்பதா? இரண்டையும் பெற எண்ணினர். எனவே எங்களுக்கு செல்வம் வேண்டும் என்றனர். இறைவன் முதலில் தமிழ் மொழியைத்தான் படைத்தார் போலும். அவர்களின் தமிழ் இதயங்களைப் புரிந்துக் கொண்டார். அவர்கள் கேட்ட இரண்டையும் கொடுத்தார். பெற்ற வாய்ப்பை நன்கு பயன்படுத்தினர். புத்திசாலித் தம்பதிகள் அல்லவா அவர்கள்!

நற்செய்திக்கு வருவோம். இங்கே எலிசபெத்துக்கு (எலிசு) கிடைத்த வாய்ப்பைப் படிப்போம். “என் ஆண்டவருடையத் தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி (லூக் 1 : 43)” என மகிழ்ந்தாள். மணமானவள் மகவுப் பெற்றப்பின்னரேத் “தாய்” என்ற பட்டத்தைப் பெறுவாள். இங்கே எலிசு, மரியாவுக்கு மகன் பிறக்குமுன்னரே “இறைவனின் தாய்” என்றப் பட்டத்தை அளித்து மரியாவைப் பெருமைப்படுத்தினாள்.

இறைவன் மலடிக்கு ஒரு மகனைக் கொடுத்தார். மரியாவுக்குத் தன் மகனையேக் கொடுத்தார். கடும் பாறையை நீரோடையாக மாற்றினார். நீர்த்திரளை நெடுஞ்சுவராக்கினார். நத்தைச் சிரித்தது. முத்துப் பிறந்தது. மேலும் சிரித்தது.  மரியா சிரித்தாள். இறைவனின் தாயானாள். இறைவன் மனிதராகப் பிறந்தது. மனுக்குலத்துக்கேப் பெருமை. மரியா வழியாகப் பிறந்தது மகளிர் குலத்துக்கேப் பெருமை. மரியாவை கடவுளின் தாயாகப் பார்ப்பது நமக்கெல்லாம் பெருமை.

அவர் எங்கிருந்துப் பிறப்பார்?

பெத்லகேமிலிருந்து என முதல் வாசகம் மொழிந்தது. 1. இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற (2ஆம் வாசகம் எபி 10 : 7), 2. கடவுளின் மந்தையை மேய்க்க (மிக்கா 5 : 4), 3. அவணிக்கு அமைதியை அருள (மிக்கா 5 : 5). எலிசைப் போன்று உறவை வளர்ப்போம். உறவு உறுதியுற மக்களைச் சந்திப்போம். மக்கள் நலம்பெற கடவுளைச் சந்திப்போம். சிந்திப்போம், செயல்படுவோம்.
திருவருகைக்காலம் 3ஆம் ஞாயிறு
13/12/2015
செப் 3 : 14 - 17
பிலிப் 4 : 4 - 7
லூக் 3 : 10 -18
மகிழ்விப்போம் மகிழ்வோம்
‘சந்தோ­ம் பொங்குதே, சந்தோ­ம் பொங்குதே, சந்தோ­ம் என்னில் பொங்குதே’ என்ற பாடலை நண்பர் ஒருவர் இசைத்துக் கொண்டிருந்தார். அவருடைய பெயர் மகிழ்வரசன். பெயரில் மட்டும்தான் மகிழ்ச்சி. வாழ்வில் அவருக்கு எப்போதும் வியாகுலம்தான். எனவே அவருடைய நண்பர்கள் அவருக்கு செப் 15இல் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள். ஏனெனில் அன்றுதான் வியாகுல அன்னையின் திருநாள்.

அவரைச் சிரிக்க வைப்பது மிகவும் கடினமான செயல். ஆனாலும், அவர் ஒருநாள் கலகலப்பாக இருந்தார். அவருடைய முகம் மலர்ந்திருந்தது. மேலே காணும் பாடல் வரிகளை மனதுக்குள்ளே அவர் ரம்மியமாக்கிக் கொண்டு இருந்தார். அதைக்காண நேர்ந்த அவருடைய நண்பருக்கு ஒரே வியப்பு. அவரிடம் என்ன இன்றைக்கு ஒரு வினோதமான காட்சியைக் காணுகின்றேனே. இன்று மகிழ்வின் ஞாயிறு என்பதாலா? மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாய்? என்று கேட்டார். முன்னவர் சொன்ன காரணம் நண்பரை மகிழ்வில் ஆழ்த்தியது. அவர், நான் எவருக்கும் சாதாரணமாக கடன் கொடுப்பதில்லை. ஒரு நபர் என்னிடம் கடனாக ஒரு தொகையை கேட்டார். என்னை மிகவும் வற்புறுத்தினார். குறிப்பிட்ட நாளில் திருப்பிக் கொடுத்து விடுவதாக வாக்குக் கொடுத்தார். அவர் வரவா போகிறார்? திருப்பித் தரவாப் போகிறார்? என்ற சந்தேகம் எழுந்தது. எனவே அவர் கேட்டதில் நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து அவரை அப்புறப்படுத்தி விட்டேன். ஆனால் என்ன ஆச்சரியம்? என்ன அற்புதம்? அவர் சொன்னது போலவே இன்று மகிழ்வின் ஞாயிறன்று கொண்டுவந்து முழுத்தொகையையும் மொத்தமாகக் கொடுத்து ஏமாந்து போனத் தொகையயல்லாம் சேர்ந்து வந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. எனவே எனக்கு மகிழ்ச்சி பொங்காமலா இருக்கும்? என்று பதிலுரைத்தார். அவரவர் வாய்மையாக வாழ்ந்தால் பிறருக்கு எவ்வளவு மகிழ்ச்சிப் பார்த்தீர்களா? நேர்மையாக நடந்துக் கொண்டால் பிறர் முகத்தில் மகிழ்ச்சி நடனம் புரிவதைக் கண்டீர்களா?

இந்த நேர்மையையும் வாய்மையையும் இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் வலியுறுத்துகிறார். திருநூல் மகிழ்வின் நூல். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் செப்போனியா யூதா நாட்டு மக்களை மகிழ்வுறச் சொன்னார். காரணம் சமாரியாவுக்கு வந்த வீழ்ச்சி, கி.மு 722இல் இஸ்ரயேல் தலைநகர் சமாரியா அசீரியரின் கையில் வீழ்ந்தது அது யூதாவுக்கு நேரிடவில்லை. ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளி வைத்து விட்டார். பகைவர்களை அப்புறப்படுத்தி விட்டார். அவர் உன் நடுவில் இருக்கிறார். எனவே மகிழ்ச்சியால் ஆர்ப்பரி (செப் 3 : 14 ‡ 17) என்று மகிழ்வின் விதைகளை இறைவாக்கினர் தூவினார். இறைவனோடு இணைந்து என்றும் மகிழ்ந்திருங்கள் என்று இரண்டாம் வாசகத்தில் பிலிப்பியருக்கு ஊக்க மருந்துக் கொடுத்தார் பவுலடியார்.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானின் போதனையைக் கேட்ட மக்கள் மனமாறினர். மனமாற்றம் மகிழ்வின் செய்தியாக நற்செய்தி  நூல் நவில்கிறது. மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து இறைவனின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும். (லூக் 15 : 10)
மனமாற்றத்தின் அடையாளங்களாக யோவான் அறிவித்த செயல்முறைகள் :

1. பகிர்வு : இரண்டு அங்கி வைத்திருப்பவர் இல்லாதவரோடு பகிரட்டும். உணவு உடையவரும் அவ்வாறே செய்யட்டும் (லூக் 3 : 11).

2. நேர்மை : குறிப்பிட்ட தொகைக்கு மேல் எதையும் தண்டாதீர்கள்.  இது வரிதண்டுவோருக்கு வழங்கப்பட்ட செய்தி. எவரையும் பயமுறுத்திப் பணம் பறிக்க வேண்டாம். இது படைவீரருக்கான எச்சரிக்கை (லுக் 3 : 12,14).

3. மீட்பரின் வருகை : மீட்பரின் வருகைதான் மகிழ்ச்சிக்கு எல்லாம் மகிழ்வான செய்தி. மீட்பர் வருவார். மீட்பைத் தருவார். மீட்பரின் செயல்கள் நீதியும் நேர்மையும் நிறைந்தவை. மீட்பைப் பெற்ற மக்களனைவரும் மகிழ்ச்சியின் மக்களே. நாம் மீட்பைப் பெற்றுள்ளோம். எனவே மகிழ்வாக வாழ்வோம். பிறரை மகிழ்ச்சிப்படுத்தி வாழ்வோம்.

Ads Inside Post