Pages - Menu

Tuesday, 15 March 2016

ஆசிரியர் பேனா, வளர்ச்சியை சொல்லும் மொழி, கல்வி


ஆசிரியர் பேனா
வளர்ச்சியை சொல்லும் மொழி, கல்வி

நம் மக்கள் மத்தியில் நிறைய விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது பிள்ளைகளின் கல்வியை கண்ணென நினைத்து, எவ்வித தியாகம் செய்தும் பிள்ளைகளை கல்விக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். அரசினர் பள்ளிக்கூடங்களைத் தவிர, தனியார் பள்ளிகள் எங்கும் பூத்துக்குலுங்குகின்றன. கூலி வேலைக்குப் போனாலும், தன் பிள்ளைகளுக்கு டைகட்டி, U போட்டு, பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்து, மக்கள் அழகுப் பார்க்கிறார்கள். அரசும், கல்வியின் தரத்தை உயர்த்த பல நெருக்கடிகளை பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தருகிறார்கள். நெறிகெட்ட வாழ்விற்கும், நம் நாட்டின் வறுமைக்கும் காரணம், தகுந்த கல்வியில்லாமைத்தான் என்று சொல்லலாம். மது அருந்தும் மாணவர்கள், பிஞ்சிலே பழுப்பதைப் போன்று, மாணவர்களின் காதல் தப்புத் தாளங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவை நாம் இன்று சந்திக்கின்ற சவால்கள்.

சி. எஸ். லெவிஸ் என்பவர் கூறுகிறார், ‘சரியான பண்புகளை, மதிப்பீடுகளை கற்பிக்காத கல்வி, திறமையான பேய்களையும், சாத்தான்களையும் தான் உருவாக்கும்’ என்கிறார். ‘நல் அறிவு, நல் மனித பண்புகளை மாணவரிடத்தே உருவாக்குவதே கல்வியின் நோக்கம்’ என்கிறார் மார்ட்டின் லூத்தர் கிங் என்பவர். ‘மாணவர்கள் எதை சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதல்ல, மாறாக எப்படி சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதே கல்வி’ என்கிறார் மார்கிரேட் மெட்.

இம்மாதம் மார்ச் மாதம், புனித சூசையப்பரை சிறப்பாக நினைவு கூறுகிற மாதம். கல்வியின் பாதுகாவலர் என்று அவர் அழைக்கப்படுகிறார். சில பள்ளிகளில் மார்ச் மாதத்தின் புதன் கிழமைகளில் சூசையப்பருக்கு தனி வணக்கம் செலுத்தி வழிபாடு செய்வார்கள். விரைவில் அரசு பொதுத் தேர்வுகள் வர இருக்கின்றன. மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகும் நேரம் இது. மாணவர்களின் மனஉலைச்சலைவிட பெற்றோர்கள், ஆசிரியர்களின் மன உலைச்சல் அதிகம்.

பெரும்பாலான பிள்ளைகள், இளம் வயதின் தாக்கத்தினால், வருங்காலத்தைப் பற்றி கவலையின்றி வழக்கமாக பள்ளிக்குச் சென்று வருவர். பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் வருங்காலத்தை, தங்களின் வருங்காலத்தைப் போலக் கருதி, பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் வாங்குவதைப் பற்றி நினைவுப்படுத்தி, பிள்ளைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவர். பெற்றோர்களும் ஆசிரியர்களும், பிள்ளைகளின் இயல்பான மன ஓட்டங்களைப் புரிந்துக் கொண்டு, அதற்கேற்றார்போல் கற்பிக்க வேண்டும். முக்கியமாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களின் பிள்ளைகளை வடித்தெடுக்கும் சிற்பிகள் என்றுணர்ந்து தங்களின் வாழ்வை நல்ல பண்புகளால் வடித்தெடுக்க வேண்டும். யூதர்களின் பிள்ளைகளை எப்படி கருவிலிருந்தே கவனமாக வளர்த்து உயர்ந்தவர்களாக்குகிறார்கள் என்று ஒரு கட்டுரை இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது. மனிதர்களை தரமானவர்களாக வளர்ப்பது கல்வி. எனவே தரமான கல்வியை பிள்ளைகளுக்குத் தருவதில் ஆர்வம் காட்டவேண்டும்.
கல்வி என்பது மனிதரை செதுக்கும் உளி - அது
வாழ்விற்கு வெளிச்சம் தரும் ஒளி - அதுவே
வளர்ச்சியை சொல்லும் மொழி.

குடந்தையில் மகாமகம் என்ற மகா நிகழ்ச்சி பிப்ரவரி 13 முதல் 22 வரை நடைபெற்றது. பத்து நாள்களும் மக்கள் அலை அலையாக மகாமக குளத்தை சந்தித்து, அங்கிருந்து 20 தீர்த்தங்களை தலையில் ஊற்றிக் கொண்டு சென்றார்கள். இந்நிகழ்ச்சியில் இரண்டு செய்திகளை நான் கவனித்தேன். கங்கை. யமுனா, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, தாமிரபரணி  போன்ற ஆறுகள் மகாமகத்தன்று மகாமககுளத்தில் இணைகின்றன என்பது நம்பிக்கை. எனவே இந்தியாவின் ஆறுகளை இணைத்தல் என்பது புனித செயல் என்ற கருத்து இங்கு வெளிப்படுகிறது. இரண்டாவது, மகாமக குளத்தில் குளிப்பதால், தாங்கள் செய்த பாவ அழுக்கு மறைந்து போகிறது என்பதும் மக்களின் நம்பிக்கை. தாங்கள் செய்த தீமைகள், அழுக்கானவை அழிவை தருகின்றவை என்ற எண்ணமும் மக்களிடம் மறைந்திருக்கிறது. மேற்கண்ட நல் எண்ணங்கள் மக்கள் மனதில் தோன்றினவா? என்பது கேள்விக்குறி! வழக்கம், வாடிக்கை என்ற கொண்டாட்டமாகத்தான் மகாமகம் மக்கள் மனதில் உண்டாயிருக்கும். வழக்கங்களிலும் வாழ்வின் பொருளை இணைத்துப் பார்த்தால் உயர்வும், சிறப்பும் உண்டாகும்.

No comments:

Post a Comment

Ads Inside Post