Pages - Menu

Tuesday, 15 March 2016

ஆலோசனை நேரம் வேதியரிடம் கேளுங்கள் - 9 நல்லை . இ . ஆனந்தன்

ஆலோசனை நேரம்
வேதியரிடம் கேளுங்கள் - 9
நல்லை . இ . ஆனந்தன்

1. தற்போதுள்ள அரசியலைப் பற்றி விமர்சிக்கவும் :
திருமதி. பவுலின் மேரி, திருச்சி

அதுசரி! அரசியல்பற்றி தற்சமயம் விமர்சிப்பது நல்லதல்ல என்பதை பட்டிமன்ற பேச்சாளர்களும், நகைச்சுவை நடிகர்களும் உணர்த்தும் நேரம் இது. சின்னக் கதை சொல்கிறேன். கேளுங்கள். மரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள் வருத்தத்தில் இருந்தன. சிட்டுக்குருவி ஒன்று காரணம் கேட்டது. ஒரு மனிதன் வந்தான். மரத்தில் ஏறி எங்கள் அனைவரின் உழைப்பையும், உணவையும், சேமிப்பையும் சுரண்டிக் கொண்டு ஓடிவிட்டான். அவனால் எங்கள் தேனை மட்டும்தான் திருடமுடியும். ஆனால் மலர்களில் இருந்து தேன் சேகரிக்கும் எங்கள் திறமையை ஒருபோதும் திருடவே முடியாது. மறுபடி கடினமாக உழைத்து, கூடு அமைத்து, தேன் சேர்க்க எங்களால் நிச்சயம் முடியும் என்றன தேனீக்கள். ஆகவே ... என் உயிரினும் மேலான அன்பான வாக்காளர் பெருமக்களே ...........

ஜாக்கிரதை, ஓட்டுக்களை விற்க வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு அடிமையாக வேண்டாம்.

2. உயிர்ப்பு என்றால் என்ன?
செல்வி. நான்சி, காரைக்குடி 

விதை புதைக்கப்படுகிறது. தளிர்விட்டு எழுகிறது. சூம்பிய விதைகளை மண் தின்றுவிடுகிறது. வீரிய விதைகள் மண்ணைத் தின்று கொண்டே வீறு கொண்டு எழுந்து செடியாக, மரமாக மாறுகிறது. செடியும், மரமும் அழிவை உணர்த்துகின்றன. தன் உயிர்சக்தியை வாழும் நாட்களில் விதைக்குள் சேமிக்கின்றன. கடின ஓட்டினால் கவனமாக வைத்திருக்கின்றன. உங்கள் ஆன்மாவும் அவ்வாறே. வீரியமுள்ள விதையாக இருப்பின் மண்ணைப் பிளந்து முளைப்பீர்கள். அதாவது உயிர்ப்பீர்கள். (காண் 1 கொரி 15 : 35 ‡ 38).

3. சென்னை இன்னொரு பெருமழையைத் தாங்கமா?
திரு. ஆல்பர்ட், குரோம்பேட்.

நிச்சயம் தாங்கும். ஏனெனில் மழை தோற்றுப் போய் மனிதம் இந்த ஆண்டு வெற்றி பெற்றதை நீங்கள் அறிவீர்கள். இனி மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள். புதுவருட காலண்டர்களை வீடுகளுக்கு வினியோகிக்கச் சென்றேன். ஒரு வீட்டில் சோகம், காரணம், பிழைப்பதற்காக சென்னைக்குச் சென்ற வீட்டுத் தலைவன் நாற்பது நாட்களாக வீடு திரும்பவில்லை. அவரைப் பற்றிய தகவல் ஏதும் இல்லை. மழை, சென்னையில் வாழ்ந்த மக்களை மட்டுமல்ல, வாழ வந்த உயிர்களையும் அழித்தது. என் கணவர் வருவாரா? என்ற அந்த வீட்டுத் தலைவியின் வினாவிற்கு பதில் கூற முடியாமல் பேச்சற்று நின்றேன்.

4. நவநாகரீக காலத்தில் பாஸ்கா நாடகங்கள் தேவையா?
திரு. மனோகர், திண்டுக்கல்.

ஆண்டவரே... தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகிறோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம் என்று நாம் வார்த்தைகளில் சொல்கிறோம். அவர்கள் செயலில் செய்கிறார்கள். எனவே மனதாரப் பாராட்டுவோம்.

5. நான் கடவுளை நம்புவதால் எனக்கு என்ன லாபம்? நம்பாவிட்டால் என்ன நட்டம்?

திரு. செல்வநாதன், வேடசந்தூர்.
ஆத்திகம்பற்றி அமெரிக்காவில் நடந்த சமீபத்திய ஆய்வை நெட்டில் பார்க்கவும். கடவுளை நம்புகிறவர்களின் வாழ்நாள் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் அதிகமாய் உள்ளன. கடவுளை நம்புவதால் கவலைகள் பாதிப்பதில்லை. கவலை, பயம் இல்லாததால் கொடிய நோய்கள் தாக்குவதில்லை. அவர்கள் முகத்தில் தெளிவும், அழகும் மிளிரும். ஆனால் இறைநம்பிக்கை இல்லாதோர் அச்சத்திலே இருப்பர். ஆயுளும் குறைவு. கவலை நோயை உருவாக்குகிறது. நோய் பயத்தை மிகுதியாக்குகிறது. முகமும் தன் பொலிவை இழக்கிறது. இருள் சூழ்ந்திருப்பதை அவர்களைப் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம்.

6. மகா கோபக்காரியான நான் மனம்மாற வழிகாட்டவும்?
திருமதி. தமிழரசி, நத்தம்

கோபத்தில் செய்கின்ற காரியங்கள் எல்லாம் ஆபத்தில் முடியும். கோபத்தைக் கட்டுப்படுத்தபழகிக் கொள்ளுங்கள். உங்களால் முடியும்.

7. தீமையும், பாவமும், சாத்தானும், சோதனையும் நிறைந்த இந்த உலகத்தில் நான் எப்படி நல்லவராக வாழ முடியும்?
திரு. மலர்மன்னன், பாண்டிச்சேரி.

சேறும், சகதியும் நிறைந்த குளத்தில்தான் தாமரைப்பூ நிற்கிறது. ஆனால் எதுவுமே தன்னை ஒட்டாமல் தூய்மையின் உருவாகக் கிடக்கிறது. தாமரைப்பூ சூரிய ஒளி கண்டு விரிகிறது. இருள் வருவதைக் கண்டு குவிகின்றது. ஒளியாம் இறைவனைக் கண்டு விரிந்துக் கொள்ளவும் (ஜெபம்). இருள் வரும்போது குவிந்துக் கொள்ளவும் (தவம்) தெரிந்தால் போதும், பாவம் நிறைந்த இவ்வுலகில் நாம் பரிசுத்தமாகவும் வாழ முடியும். தவக்காலம் உணர்த்திய செய்தியும் இதுதான். ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Ads Inside Post