ஞாயிறு தரும் இறைவார்த்தை
-அருட்பணி. கிருபாகரன்,
1 அர 17 : 17 ‡ 24, கலா 1 : 11 - 19 , லூக் 7 : 11 - 17 உதவி அதிபர், இளங்குருமடம்
இருவகையான மக்கள் கூட்டம், அதில் இருவகையான பயணங்கள், இருவகையான வேறுபட்ட, மாறுபட்ட இலக்கிற்காக பயணிக்கின்றார்கள். முதல் வகை இயேசுவோடு இணைந்து பயணித்தவர்கள். அவர்கள் அப்போதுதான் நூற்றுவர் தலைவனுடைய பணியாளன் பயன் பெற்றதை பார்த்து வியந்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து இருந்தவர்கள் (லூக் 7 : 1 ‡ 10). கடவுளுடைய மகிமையான வெளிப்பாடுகள், மனிதனுடைய துன்ப நேரங்களில் ஆசீர்வாதமாக பொழியப்படுவதை கண்டு களிகூர்ந்தவர்கள். வாழ்வு முழுவதும் ஆச்சரியம், அதிசயம், அருள் எப்போது வேண்டுமானாலும் வாழ்வை புரட்டி போடும் என்கின்ற நற்செய்தியை இயேசுவிடமிருந்து பெற்று, இயேசுவை சுற்றி பயணித்தவர்கள்.
இரண்டாவது மக்கள் கூட்டம், ஒரு விதவையின் கண்ணீரை சுற்றி பயணிக்கின்ற கூட்டம் (இன்றைய நற்செய்திப் பகுதி). தனக்கு மதிப்பு கொடுக்க கூடிய, வாழ்வின் அனைத்து விதமான காரணிகளையும் இழந்து தவிக்கின்ற பெண்மணியை சுற்றி பயணிக்கின்ற கூட்டம். முதலில் கணவனை இழந்தாள், இப்போது மரணம் அவளது மகனையும் கவ்வி கொண்டது. அவளின் இல்லாமையின் வலி அழுகையாகவும், ஒப்பாரியாகவும் இருக்கின்றது. அவளோடு இணைந்து அவள் துன்பத்தில் பங்கு கொண்டு கல்லறை நோக்கி நடப்பதை தவிர வேறு எதையும் விந்தையாக செய்யமுடியாத பயணம் இரண்டாவது பயணம்.
இந்த இரண்டு மக்கள் கூட்டம், தனது இருவகையான பயணங்களில் இரு மாறுபட்ட இலக்கை நோக்கி பயணித்தவர்கள், நயீன் என்னும் ஊருக்கு வெளியே சந்தித்து கொள்கிறார்கள். இதில் மிகவும் பரிதாபமாக லூக்கா நற்செய்தியாளரால் வர்ணிக்கப்படுபவர் அந்த விதவை. ஒரு ஆணாதிக்க சமுதாயத்தில் கணவன் என்ற துணையை இழந்து, மகன் என்ற வாழ்வின் ஆதாரத்தை இழந்து, வாரிசை இழந்து நிற்கின்ற பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் கைம்பெண்ணாக சித்தரிக்கப்படுகின்றாள். அந்த அபளை பெண்மீது இயேசு பரிவு கொள்கிறார். அப்பெண்மணி கேட்காமலேயே, அவளின் மகனை உயிர்ப்பிக்கிறார். இறைவன் நாம் கேட்காமலும், நமக்கு தேவையானதை கொடுக்க வல்லவர்.
மரணம் என்பது நமது நம்பிக்கையை குலைக்கக்கூடியது. பணம், அந்தஸ்து, பதவி இதில் மாறறம் ஏற்படுத்த போவதில்லை. சந்திப்புக்களும், அழைப்புகளும், இரக்கம் காட்டுகின்ற கடிதங்களும் மாற்றம் ஏற்படுத்த முடியாது. கோவில்கள், குருக்கள், ஆடம்பர மரண ஊர்வலங்கள் இதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
மாற்றம் ஏற்படுத்த முடியாத மரணத்திற்கு கூட முற்றுபுள்ளி வைத்து, மரணத்திற்கும் மாற்றத்தை கொடுக்கின்றார் இயேசு. இயேசுவினுடைய வார்த்தைகள் விந்தையானவை. அழாதீர்கள் என்று சொல்லி சவபெட்டியை தொட்டு இளைஞனே! எழுந்திரு என்கிறார். யூதரின் தீட்டு வழக்கத்தையும் கணக்கில் கொள்ளாத இயேசு இவ்வாறு செய்கிறார். எண் 19 : 11 - 16 இறந்தவரின் உடல் தீட்டானது. அதை தொடக்கூடாது என்ற சட்டம் இருந்தது.
இறுதி ஊர்வலம், தாயையும், பிள்ளையையும் இணைக்கின்ற இணைப்பு ஊர்வலமாக மாறுகின்றது.
இந்நிகழ்வில் நம்பிக்கை பற்றிய விளக்கம் இல்லை, செபங்கள் எழுப்பப்படவில்லை, விண்ணப்பங்கள் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இயேசு முன்சென்று உயிரிப்பிக்கின்றார். இயேசு சிறிய மக்களை பெரிய அளவில் ஆசீர்வதிக்கின்றார் என்பதுதான் லூக்கா நற்செய்தியாளரின் செய்தியாக இருக்கின்றது. கடவுளின் பரிவு பார்வைகள் நம்மீது வீசுகின்ற போது கலக்கம் கொள்ள தேவையில்லை.
மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டுமா?
பரிவு காட்டுங்கள்
நீங்கள் மகிழ்வாயிருக்க வேண்டுமா?
பரிவு காட்டுங்கள் - தலாய் லாமா.
பரிவு பண்பு நம் தீமைகளை மன்னிக்கும் வல்லமை வாய்ந்ததது. மற்றவர்களை கண்டனம் செய்யும் பண்பிற்கு இந்த வல்லமை கிடையாது - யஹன்றி வார்ட் பெக்கர்.
No comments:
Post a Comment