சோதனைகளைச் சாதனைகளாக்கிடப் பயிற்றுவிக்கும் தவக்காலம்
- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்
வசந்தத்தின் வாசல்:
ஆண்டுதோறும் நம்மைத் தொட்டுச் செல்லும் தவக்காலம் நமக்கு விட்டுச் செல்லும் அழைப்பும், சிந்தனையும் அற்புதமானவை. கால மாற்றத்தால் கறைபட்டும், குறையுற்றும், மாசுபட்டும் உள்ள மனித சிந்தனை யினையும், செயல்பாட்டினையும் மாற்றியமைக்கும் ஆன்மீகப் பண்புகளையும், விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதே இத்தவக்காலத்தின் மாண்பு. செல்லரித்துப் போன சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் செம்மைபடுத்தி சீர்மிகு வளமையும், மகிழ்ச்சியும் ஏற்பட வழிகளைத் திறந்து விடும் காலம் இது. அன்பும், இன்பமும் மேன்மையும் நிறைந்த இத்தவக்காலத்தினை வசந்தத்தின் வாசல் என்பது பொருத்தமானது தானே!
நெற்றியிலே சாம்பல் திலகமிட்டு:
புருவ நடுவே தியான நிலை, ஆன்ம பிரகாசம் உள்ளது என்பது இந்திய மரபு. இந்த இடத்தில் திருநீறு இடுதல் என்பது, மாசற்ற, சுத்த, சாந்த நிலையை அடைய எடுக்கும் முயற்சியின் அடையாளமாகும். மனிதர் மண்ணிலிருந்து வருபவர். மண்ணுக்கே திரும்பக் கூடியவர். மனிதன் மட்டுமல்ல அனைத்துக் கனிம வளங்களும் மண்ணிலிருந்து தானே தோண்டி எடுக்கப்படுகின்றன. இறுதியில் இவை அனைத்தும் திரும்பச் செல்வதும் மண்ணுக்குள் தானே.
எனவேதான் திருச்சபை ஆண்டு தோறும் திருநீறு அல்லது சாம்பல் பூசி தவக்காலத்தினை ஆரம்பிக்கின்றது. இந்த ஆண்டுக்கான இத்தவத்திருநாளே பிப்ரவரி 14. ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான இறைமை நிலையே. நெற்றியில் பூசப்படும் சாம்பல் அல்லது திருநீரு என்பது ஆழ்ந்த பொருளை வெளிபடுத்தும் அடையாளமாகும். ‘மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய்’ என்னும் சொற்களோடு நெற்றியில் சாம்பல் பூசப்படுகிறது. இது தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு, பாவ பரிகாரம் மேற்கொண்டு இறைவனோடும் மனிதரோடும் ஒப்புரவு கொண்டு வாழ வேண்டும் என்பதற்கான அழைப்பாகும்.
விவிலியம் கூறும் தவக்காலம்:
‘மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’ (மாற் 1:15) என்பதுவே தவக்காலச் செய்தி. தவக்கால நோன்பு பற்றிய செய்தி பழைய ஏற்பாட்டு நூல்களில் நிறைய காணக்கிடக்கின்றது. குறிப்பாக யோனா இறைவாக்கினர் அறிவித்த தூதுரையினை ஏற்று பாவப்பரிகார வாழ்வினை மேற்கொண்டனர் நினிவே நகர மக்கள். பாவத்தினால் விளையும் தண்டனையி லிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நினிவே நகர மக்கள் இறைவாக்கினரின் யோனா வின் வாக்கினுக்குச் செவிமடுக்கின்றார்கள். மன்னவன் முதல் மக்கள் வரை சாக்கு உடை அணிந்து கொண்டு சாம்பலில் அமர்ந்து தவத்தினை மேற் கொள்கின்றனர். இதன் விளைவாகக் கடவுள் அவர்களைத் தண்டிக்காது வருகின்றார்.
எசாயா 55:7 மூன்று முக்கிய பண்புகளை முன் வைக்கின்றது.
1.கொடியவர் தம் வழிமுறைகளையும், தீயவர் தம் தீய எண்ணங்களையும் விட்டு விடட்டும்.
2. ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்.
3. கடவுள் அவருக்கு இரக்கம் காட்டுவார். ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.
உண்மையான மனமாற்றம் என்பது ஒருவரின் சிந்தனை, உணர்வு, செயல்பாடு, உறவுமுறை இவற்றிலேயே அடங்கியுள்ளது.
- ‘மனம் மாறுங்கள். இறை அரசு நெருங்கி வந்து விட்டது.’ (மத் 3:2)
- ‘மனம் மாறாவிடில் நீங்கள் அழிவீர்கள்’. ( லூக் 13:3)
எனவே இத்தவக்காலத்தில் நாம் மேற்கொள்ள வேண்டியது மனமாற்றம்.
திருச்சபையின் வரலாற்றில் தவக்காலம்:
கி.பி 320இல், இன்றைய துருக்கியின் நிலப் பகுதியாக விளங்கும், நிசாயா என்னுமிடத்தில் திருச்சங்கம் கூடியது. இதில் திருச்சபையின் வாழ்வு முறைகள் பற்றிய முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிசேயா திருச்சங்கத்தின் கொள்கைத் திரட்டு 20 பிரிவுகளைக் கொண்டது. இதில் 5 ஆவது பிரிவு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவுக்கான தயாரிப்புக் காலம். ஏன் 40 நாட்கள். ஆண்டவர் இயேசு 40 நாட்கள் பாலைவனத்தில் சோதிக்கப்பட்டார் என்பதை பின்பற்றி எனலாம் (மத் 4:1,2). மேலும் நிசேயா திருசங்க கொள்கைத் தொகுப்பு 5 ஆம் பிரிவு பாவ மன்னிப்பு மற்றும் கிறிஸ்தவ மக்களின் ஒன்றிப்பு பற்றியும் எடுத்துரைக்கிறது. இக்கருத்தினை அனைத்து பிரிவினை சபைகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
ஆங்கிலிக்கன் திருச்சபை:
1563 ஆம் ஆண்டு இங்கிலாந்து திருச்சபை ஒன்று கூடி கருத்துப் பரிமாற்றம் புரிந்து 29 பகுதிகளைக் கொண்ட கொள்கைத் திரட்டினை வெளியிட்டது. இதில் 21 ஆவது பகுதி நிசேயா திருச்சங்கத்தின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. கிறிஸ்தவ சபைகள் தங்களுக்குள் பிளவுண்டு கிடப்பது வருத்தத்திற்குரியதே. இருப்பினும் நிசேயா திருச்சங்கத்தின் கருத்தினை ஏற்றுக் கொள்வதன் மூலம் தங்களின் ஒன்றிப்பு நிலையினை வெளிப்படுத்தியது ஆங்கிலிக்கன் திருச்சபை.
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம்:
நிசாயா திருச்சங்க கருத்தின் தொடர்ச்சியை வத்திகான் சங்க கொள்கைத் திரட்டில் காணமுடிகிறது. திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் எண் 109 மற்றும் 110 கீழ்க்கண்டவாறு தவக்காலத்தின் சிறப்பு பற்றிக் குறிப்பிடுகிறது.
எண் 109: தவக்காலம் இரு பண்புகளைக் கொண்டது.
- திருமுழுக்கினை நினைவில் கொண்டு செயல்படுதல் அல்லது இதற்கென மக்களைத் தயார் செய்தல்.
- ஒப்புரவாகுதல் - சமூகம் மற்றும் இறைவனுக்கெதிரான பாவநிலையினை உணர்ந்து மனம் வருந்தி மனம்மாறி இறைவனோடும் மனிதரோடும் ஒப்புரவாதல். எண் 110: தவக்கால முயற்சிகள் அகம் மற்றும் தனி, மனிதன் சார்ந்தவையாக மட்டுமல்லாது புறம் சார்ந்தவையாகவும், சமூகப் பண்புடையவையாகவும் இருத்தல் வேண்டும்.
தவக்காலத்தின் இருவகை பண்புகள்: மகிழ்ச்சியுடன் பாவப் பரிகாரங்கள் செய்து, திருமுழுக்கிற்கான தயாரிப்புக் காலமாகவும் இக்காலம் உள்ளது. இதனையே ‘உம்முடைய விசுவாசிகள் மனத்தூய்மை பெற்று ஆண்டுதோறும் பாஸ்கா விழாவின் மறைபொருளை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கச் செய்கின்றீர். இதனால் பக்தி முயற்சிகளிலும் அன்புச் செயல்களிலும் அவர்கள் மென்மேலும் ஈடுபட்டு தங்களுக்குப் புத்துயிர் அளித்த திருவருட்சாதனங்களில் அடிக்கடி புதுப்பிக்கப் பெற்று இறைமக்களுக்குரிய அருளை நிறைவாகப் பெறச் செய்கின்றீர்’ என்று திருச்சபை மன்றாடுகின்றது. தவக்காலத் தொடக்க உரை திருப்பலி புத்தகம் பக்கம் 270.
வாழ்வின் சோதனைகளைச் சாதனைகளாக்குவோம்:
மத் 4:1-11, லூக் 4: 1-13 போன்ற பகுதிகள் இயேசுவின் சோதனைகளைத் தெளிவாக விளக்குகின்றன. இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே அலகையினால் சோதிக்கப்பட பாலை நிலத்திற்குத் தூய ஆவியாரால் அழைத்துச் செல்லப்படுகின்றார். நாற்பது நாள்கள் இரவும், பகலும் கடும்நோன்பு அனுசரிக்கின்றார். இதன்பின் பசியுறுகின்றார். மூன்று வகையான சோதனைகளை எதிர்கொள்கின்றார்.
மூன்று முழுமையைக் குறிக்கின்றது. நம் தலைமைக்குரு நம்மைப் போல் எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டார். எனினும் பாவம் செய்யாதவர் (எபி 4:15)
முதல் சோதனை உணவு. இது உடல் ரீதியானது இறைவார்த்தையே உண்மையான உணவு எனச் சொல்லி இயேசு வெற்றிக் கொள்கின்றார்.
இரண்டாம் சோதனை அலகை இயேசுவை எருசலேம் ஆலய உச்சியிலிருந்து கீழே குதிக்கச் சொல்கிறது. இது பிறரின் கவனத்தை ஈர்க்கும் செயல். எல்லோரின் கவனம் என்மீது மட்டுமே இருக்க வேண்டும் என்ற உளவியல் ரீதியான சோதனை
மூன்றாம் சோதனை உலக அரசுகள் அனைத்தையும் காட்டி ஆசை, பதவி ஆசையை உண்டாக்குகிறது. நானே உலகின் அதிபதி. ஏகாதிபதி என்ற சர்வாதிகார உணர்வை ஏற்படுத்துகின்றது. ஆனால் மூன்று சோதனைகள் மீதும் வெற்றி கொள்கின்றார்.
சோதனைகளைச் சாதனைகளாக்க சிந்தையில் கொள்ள வேண்டியவை:
1. பாலை நிலம் - தனிமை - சோதனைக்காலம். கடவுளின் உடனிருப்பையும், இறை பராமரிப்பையும் உணரும் இடம்.
2. சோதனை வருவது பாவமல்ல. உணர்வு கொண்ட ஒவ்வொருவருக்கும் சோதனை நிச்சயம் உண்டு. விசுவாச உறுதிப்பாடு, பலமான பிரமாணிக்கமிக்க மனம் தேவை.
3. சோதிப்பவன் நம்மீது அக்கறை கொண்டவனாகவே காட்டிக் கொள்வான். இயேசு பசியோடிருப்பதைக் கண்டு
உண்ணத் தூண்டுகிறது.
4. ‘நீர் இறைமகன் என்றால்’ என்று இயேசுவுக்குச் சவால் விடுகிறது. இயேசுவின் வல்லமையைச் சுட்டிக்காட்டித் தனது சுய நலத்திற்காகப் பயன்படுத்த அழைக்கின்றது.
5.விவிலிய மேற்கோள்களை சாத்தான் சுட்டிக்காட்டுகிறது. விவிலியத்தை தனது தேவைக்காக யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சோதனை களை எவராலும் தவிர்க்க முடியாது. ஆனால் சோதனைகளுக்கான சூழல்களைத் தவிர்க்க முடியும்.
‘உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாம் எனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்’ ( 1 பேதுரு 5: 8-9).
‘உங்கள் மனம் ஆர்வமுடையதுதான். ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் மன்றாடுங்கள்’ (மத் 26: 31).