Pages - Menu

Tuesday 13 February 2018

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
      25-02-18
தொநுV 22,1-2,9-13,15-18; உரோ 8,31-34; மாற் 9,2-10  
             
Fr.M. A. சூசைமாணிக்கம், திருஇருதய குருமடம்‡குடந்தை.

இயேசுவின் உருமாற்றம்:

இன்றைய உலகில் மனிதன் மகிழ்ச்சியைத் தேடி, மாற்றத்தை நாடி தன் வாழ்க்கையை ஒரு பயணமாக்குகிறான். இவற்றை அடைய பெருமுயற்சி செய்கிறான். இவைகளை அடைய முடியாதபோது குழப்பமும், துன்பமும், கண்ணீரும், வேதனையும் அடைகிறான். மாற்றம் என்பது வெளி அடையாளங்களில் அன்று, மாறாக நமது உள் உணர்வுகளில்தான் உள்ளது. உண்மையான மாற்றங்கள்

-  தீய குணங்களை நல்ல குணங்களாக மாற்றுவது.
-  மமதையாக இருப்போர் சமத்துவ குணாதிசயத்தை பெறுவது
-  பழிவாங்கும் குணம் விட்டுக்கொடுக்கும் குணமாக மாறுவது
-  காம உணர்வு கற்புநெறியாக மாறுவது
-  தீமைகளை நன்மைகளால் வெல்வது

இப்படிப்பட்ட நமது உள்ளுணர்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்போதுதான் நிலையான மகிழ்ச்சியை நாம் நம்மில் அனுபவிக்க இயலும்.

அன்று அப்போஸ்தலர்கள் அடைந்த தாபோர் மலை அனுபவம் மகிழ்ச்சியின் இரகசியம். இறைவனின் பிரசன்னத்தை நேரடியாக அவர்கள் உள்உணர்ந்து, மகிழ்ச்சியடைந்ததுபோல, நாமும் அந்த அனுபவத்தை பெற முயல வேண்டும். இயேசுவின் உருமாற்றத்தில் அவருடைய போதனையின் தொடர்ச்சியும், புதுமையின் தொடர்ச்சியும் கொடுமுடியாய் இருந்தது. இயேசுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியன் என்பது எலியா‡ மோசேயின் உரையாடலின் வழியாக உறுதி செய்யப்படுகிறது. யோர்தான் நதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இயேசு, இங்கே, “இவர்தான் நம்மை மீட்க வந்த இறைவன்” என உறுதி செய்யப்படுகிறார். வானத்திலிருந்து வந்த குரலொலி, இறைமகன் இயேசு, தமது தந்தை இறைவனால் மாட்சியும், மதிப்பும் பெறுகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. ( 2 பேது 1: 17-18). அதோடு இயேசுவிற்கு தமது தந்தை கடவுளின் அளவற்ற அன்பும் முத்திரையிடப்படுகிறது (லூக் 9:35).

இவை ஒருபுறமிருக்க இயேசுவின் இந்த நிலைப்பாட்டை (நிகழ்வை) சீடர்களால் புரிந்து  கொள்ள முடியவில்லை. ஆண்டவர் இயேசு எருசலேம் சென்று சிலுவையில் அறையுண்டு இறக்கப்போகிறார். தனது தந்தையின் விருப்பத்தை ஏற்று தன்னையே முழுமையாக கையளிக்கப் போகிறார். அதற்கான வெள்ளோட்டம்தான் இந்த தாபோர் மலை அனுபவம் என்பதை சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஆண்டவரின் மகிமையில் பங்குபெற துடிக்கிறார்கள். ஆனால் பாடுகளைப் பார்த்து பயப்படுகிறார்கள். சிறிது காலத்திற்குப் பிறகுதான் துன்பங்களின் வழியாக மீட்பு உண்டு என்பதை உணர்கிறார்கள். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும், துன்பமும் நிறைந்தது என்பதை கற்றுக்கொள்கிறார்கள்.

மனிதன் தன்னைத்தானே மகிழ்ச்சியற்ற வனாக மாற்றிக் கொள்கிறான். பாவத்தைப் போல் துன்பத்தையும், மரணத்தையும் தேடிக்கொள்கிறான். கடவுளால் நமது துன்பத்தை மகிழ்ச்சியானதாக மாற்ற முடியும். அத்துன்பத்தைக் கண்டு துவண்டுவிடக் கூடாது என்ற செய்தியைத் தான் இயேசுவின் உருமாற்றம் என்ற மகிழ்ச்சியான செய்தி நமக்கு இறை செய்தியாக இன்று கொடுக்கப்படுகிறது.

எனவே இத்தவக்காலத்தில் நம்முடைய துன்ப சிலுவைகளை ஏற்று, மகிமை என்னும் மகிழ்ச்சியின் உருமாற்றத்தைப் பெற செபிப்போம்.

“சிலுவைகளின்றி சிம்மாசனம் இல்லை”.

No comments:

Post a Comment

Ads Inside Post