Pages - Menu

Monday 12 February 2018

பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு
11 - 02 - 2018
லேவி 13: 1-2, 44-46; 1 கொரி 10 : 31 - 11 : 1; மாற் 1: 40 - 45;

அலுவலகத்தில் தன்னுடன் பணி செய்த ஒரு பெண்ணை ஒருவர் காதலித்தார். அந்த பெண் மிக அழகானவள். அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் அவள் திருமணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இருப்பினும்  அவன் மிகவும் வற்புறுத்திக் கொண்டிருந்தான். எனவே அவள் அவனிடம், ‘ஒருநாள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள். பிறகு முடிவு செய்யுங்கள்’ என்றாள். எனவே ஆவலோடு அவள் வீட்டிற்குச் சென்றான்.  அங்கு சென்றதும் அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவளது தந்தை தொழுநோய் பிடித்தவர். அவளின் தாய் காப்பி கலக்கிக் கொண்டு வந்தார். அதை குடிக்கவே அவனுக்கு அருவருப்பாக இருந்தது. சீக்கிரமாக வீடு திரும்பி விட்டான். அவனுடைய காதலும் மறைந்து விட்டது.

தொழுநோய் மிகவும் கொடூரமான நோய். ஐரோப்பிய நாடுகளில் தொழுநோய் கண்டவர்களை தனியான தீவிற்கு அனுப்பி வைத்தார்கள். நம் நாட்டிலும் தொழுநோய் கண்டவர்களை வீட்டிலிருந்து துரத்தி விடுவதைப் பார்க்கிறோம். இப்போது நம் நாட்டில் தொழுநோய் இல்லை என்று அரசு தெரிவிக்கிறது.
 
இன்றைய நற்செய்திப் பகுதியில் தொழுநோய் பிடித்தவரை இயேசு தொட்டு குணமாக்கிய நிகழ்ச்சியை வாசிக்கக் கேட்கிறோம். அக்காலத்தில் சாதாரண சொரி சிரங்குக் கூட தொழுநோய் என்று கருதப்பட்டது. லேவியர் ஆகமம்,  தொழுநோய் கொண்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம்  13 ‡ 14 ஆம் இயலில் விளக்குகிறது. தொழுநோய் கொண்டவர் ஊருக்கு வெளியே வாழ வேண்டும். அவர் தீட்டுடையவர். மக்கள் அருகில் வந்தால், ‘தீட்டு, தீட்டு என்று கத்த வேண்டும் (லேவி 13: 45‡46). இத்தகையவர், இயேசுவின் அருகில் வந்து  நீர் விரும்பினால் எனது நோயை உம்மால் குணமாக்க முடியும் என்று  வேண்டுகிறான். அவன்மீது பரிவு கொண்டு, ‘விரும்புகிறேன்’  என்று தொட்டு குணமாக்குகிறார். குருக்களிடம் முறைப்படி காட்டி, அதற்குரிய காணிக்கையை செலுத்தி மக்களோடு இணைந்து கொள் என்கிறார். ‘மற்றவர்களுக்கு இதைப்பற்றி சொல்லாதே’ என்றும் கட்டளைக் கொடுக்கிறார். கண்டிப்பாகக் கூறி அனுப்பி விடுகிறார் என்பதில் கண்டிப்பாக என்பதற்கு கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை  (எம்பிரிமாவோமாய்) (சிதுணுrஷ்துழிலிதுழிஷ்) என்ற  வார்த்தை யாகும். இதனின் நேரடிபொருள் ‘எச்சரித்தல்’ அல்லது ‘உணர்வுபொங்க’ கோபத்துடன் என்பதாகும். 

இயேசுவின் ‘பரிவு’, ‘நோயாளரைத் தொடுதல்’, ‘உணர்வு பொங்க’ என்பவை இயேசுவின் மனிதநேய பாசப்பண்பை முன் நிறுத்துகின்றன. குணமடைந்த தொழுநோயாளர் இயேசு கொடுத்த கட்டளைக்கு எதிராக, ‘எங்கும் அறிவித்து பரப்பி வந்தார்’ என்று கூறப்பட்டுள்ளது. இயேசு கேட்டுக் கொண்டதற்கு எதிராக செயல்பட்டதாகத்  தெரிகிறது.
இரண்டாம் வாசகத்தில் ‘எதை செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்’ என்கிறார். ‘எனக்கு பயன் தருவதை  நாடாமல் பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்’ என்கிறார் பவுல், மற்றவர்களுக்காக வாழ்வதே இறைவனுக்கு மகிமை.

மற்றவர்களுக்காக வாழும் எண்ணம் நமக்கு எளிதாக வருவதில்லை. அவ்வாறு அந்த எண்ணம் நம்மில் எழுந்துவிட்டால் நம் வாழ்வு புதுமைகளின் கைகளாக  மாறும். அண்மையில் விழுப்புரம் அருகில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால்  அவ்வூரின் ஏரி உடைந்து விடும் ஆபத்து இருந்தது. ஒருவர் ஏரியின் கரைகளை பலப்படுத்த மற்றவர்களை அழைத்தார். யாரும் வரவில்லை. தானே மண்வெட்டியை எடுத்துச் சென்று மண்வெட்டி கரையை பலப்படுத்த  ஆரம்பித்தார். இதைப் பார்த்த மற்றவர்களும், ஊர் முழுவதும் சேர்ந்து கரையைப் பலப்படுத்தி, நீரை தேக்கினார்கள். இதனால் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் தண்ணீர் பாயும் வழி ஏற்பட்டது. மற்றவர்மீது கொள்ளும் பரிவு, ஆர்வம், புதுமைகளை செய்து தரும்.

No comments:

Post a Comment

Ads Inside Post