தவக்காலம் முதல் ஞாயிறு
18-2-18
நல்லவர்களையும் இறைவன் சோதிப்பர்
தொநூ 9: 8-15; 1 பேதுரு 3 : 18-22; மாற் 1 : 12-15
அருட்திரு.I. மரிய அந்தோணி ஜேம்ஸ், குடந்தை.
அழகான ஆறு. ஆற்றோரத்தில் ஒரு குரு குடிசைப் போட்டு வாழ்ந்து வந்தார். அருகே ஓர் இளைஞன். அவனும் குடிசை போட்டு வாழ்ந்து வந்தான். நல்லதை மட்டுமே செய்பவர் குரு. கெட்டத்தை மட்டும் செய்பவன் இளைஞர். ஆனாலும் இருவரும் நண்பர்கள். ஒரு நாள் நள்ளிரவிலே, அடித்த பெரும் புயல் காற்றால், அவர்களின் குடிசைகள் வீசி எறியப்பட்டன. அடுத்த நாள், அந்த இளைஞன், அந்தக் குருவைப் பார்த்து ஏளனமாக, ‘என் குடிசை அழிய என்ன காரணம் என்னவென்று உங்களைக் கேட்டால், நான் செய்கின்ற தீமையே காரணம் என்பீர்கள். ஆனால் நல்லதே செய்கின்ற உங்களது குடிசையும் அழிந்துவிட்டதே’ என்று ஏளனப் புன்னகை செய்தான் அந்த இளைஞன்.
தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, சோதனைகளின் போதும் கடவுள் நம்மை வழிநடத்துகிறார் என்ற சிந்தனை நமக்குத் தரப்படுகிறது. சோதனைகளுக்கு அனைவருமே உள்ளாக்கப்படுவது உண்மைதான். ஆனால் அந்த சோதனை தீய வழிகளுக்கே நம்மை அழைத்துச் செல்வதை உணர்ந்திருக்கலாம். சோதனைகள் என்றாலே அது சாத்தானிடமிருந்து வருகின்றன என்ற போதிலும், அச்சோதனைகளின் வழி, கடவுள் நம் வாழ்க்கையைப் புடமிடுகிறார் என்பதே உண்மையாகும். அதனைத்தான் யோபு புத்தகத்தில், அவரது வாழ்விலிருந்து நாம் தெரிந்துக் கொள்கிறோம். சாத்தான், கடவுளின் அனுமதி பெற்று யோபுவை சோதிக்கிறான். நமது வாழ்விலும் புனித நிலைப்பாட்டை உறுதி செய்ய, நம் வாழ்வின் பயணங்களில் பல்வேறு சோதனைகளை அனுபவிக்கலாம்.
யாக் 1:12-15இல் வாசிக்கின்ற போது, ‘மனித தீயநாட்டங்களிலிருந்தே சோதனைக்குட்படுத்தப் படுகிறோம்’ என்பது வெளிப்படுகிறது. ஒவ்வொரு சோதனையிலும் நமது தெளிவான தீர்மானத்தை எழுப்புவதற்கு நமக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. நமது ஆதிப்பெற்றோர்களின் பாவப் பின்னணியிலும் இத்தகைய நிலைப்பாடு இருந்ததை நாம் அறியலாம். அனைத்து சோதனைகளுக்கும் நான்கு அடிப்படை காரணிகள் உள்ளன எல்லாம். அனைத்திற்கும் ஊற்றாக முதற்காரணியாக இருப்பது ஆசை. ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று புத்தர் கூறுகின்றார். அதுபோல ஆதிப்பெற்றோரை ஆசையே பாவ வலைக்குள் இழுக்கிறது. இந்த கனியை உண்டால் கடவுளாக மாறிவிடலாம் என்ற ஆசை அவர்களை சோதனைக்குட்படுத்துகிறது. இரண்டாவதாக அசட்டுத் துணிச்சல், என்ற துணைக்காரணி நுழைந்து ‘அதனை உண்டால்தான் என்ன?’ என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி பாவச் செயலுக்குத் தூண்டுகிறது.
மூன்றாவதாக ஏமாற்ற அனுபவம். மற்றவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் இனி ஏன் நல்வழியில் செல்ல வேண்டும் என்ற தவறான முடிவுக்கும் வரலாம். நான்காவதாக, கீழ்படியாமை என்ற திமிர் எண்ணம், இதனால் நன்மைகளை விட்டு தங்களை ஒதுக்கிக் கொள்கிறார்கள். முடிவு இறை நல் உறவிலிருந்து அவர்கள் தங்களை துண்டித்துக் கொள்கிறார்கள். இந்த நான்கு காரணிகளின் தலைவனாக இருந்து நம்மை சோதிப்பது சாத்தான். ஆனால் சாத்தானுடன் நெருங்கிப் பார்ப்பதற்கும் நமக்கும் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் போது நாம் தெரிந்தே பாவத்தை செய்கிறோம்.
இன்றைய நற்செய்திப் பகுதயில் இறைமகன் இயேசுவும் சோதனைக்குட்படுத்தப்பட்டார் என்பதை படிக்கிறோம். ஆனால் தகுந்த, தெளிவான தீர்மானத்தால், மனஉறுதியால், இறைவார்த்தை துணைக் கொண்டு, சாத்தானின் சோதனைகளை இயேசு முறியடித்தார். அதே வேளையில் தனது நற்செய்திப் பணியின் மையமாக ‘மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள், காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது’, என்று பறைசாற்றுகிறது.
தவக்காலத்தின் முதல் ஞாயிற்றில், இறைவன் நமக்குக் கூறுவது இச்சோதனைகளின் வழியாக வெற்றியும் பெறலாம் என்பதாகும். செக் 13:9 மற்றும் 1 பேதுரு 1:7 இல் ‘பொன் நெருப்பினால் புடமிடப்படுகின்றது’ என்று கூறப்பட்டுள்ளது. தூய பவுலடிகளார் கூறுவதும் இதுவே 1கொரி 10:13 ‘நமது வலிமைக்கு மேல் கடவுள் நம்மை சோதிக்கப் போவதில்லை’. ஆகவேதான் இயேசு கெஸ்தமணி தோட்டத்தில் திருத்தூதர்களைப் போல, ‘சோதனைக்குட்படாதவாறு மன்றாடுங்கள்’ (லூக் 22:40) என நம்மையும் கேட்கின்றார். அவ்வாறே முதல் வாசகத்திலும் கடவுள் தனது உடனிருப்பை எப்போதும் நமக்குத் தருகிறார் என்பதை, மேகத்தின் மேல் தோன்றும் வானவில்லின் அடையாளம் கொண்டு எடுத்துக் கூறுகின்றார். நாம் சோதனைக்குட்படுகின்ற போதும் நம்மோடு இருந்து வழிநடத்துகிறவர் நம் இறைவன். மேலும் சோதனையின் போது தீயநாட்டத்தோடு செயல்படாமல் நல்ல தீர்மானத்தை தேர்ந்தெடுப்பதன் வழியாக சோதனைகளை வென்று கடவுளின் வழியில் உறுதி பெறுகிறோம். இதனை இன்றைய இரண்டாம் வாசகம் (1 பேதுரு 3:17) நமக்கு தெளிவுப்படுத்துகிறது. ஆக சோதனை என்பது அனைவருக்கும் உண்டு. அது மதில்மேல் பூனைப்போல் நாம் உறுதியாயிருந்தால் சோதனைகளின் நேரத்திலும் இறைவன் நம் உடனிருந்து வழிநடத்துகிறார். இத்தவக்காலத்தில் நமக்கு வரும் சோதனைகளை இயேசுவைப் போல சந்தித்து, வெற்றியும் உறுதியும் பெறுவோம்.
No comments:
Post a Comment