Pages - Menu

Tuesday, 29 November 2016

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,

பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

தோல்வி ... தோல்வி ... எனத்  தோல்விகளால்

மட்டுமே துரத்தி அடிக்கப்பட்டவரின் முதல் வெற்றியே ... கின்னஸ் சாதனை! டேனியல், சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் தொடர்ந்து 100 மணி நேரத்துக்கு மேல் நின்றுகொண்டே 7000 துணிகளுக்கும் அதிகமாக அயர்ன் மாரத்தான் செய்திருக்கிறார். இந்தச் சாதனையை செப்டம்பர் மாதம் 2016இல் நிகழ்த்தியிருக்கிறார். வெற்றி நாயகனின் வார்த்தைகளை வாசிப்போமா! “ஒண்ணுமே இல்லாத பய நான். தோத்தாங்குளினு சொல்வாங்க ... அப்படி வெறும் உடம்பை மட்டும் சுமந்துட்டு உலகத்துக்கு பாரமாத்தான் இருக்கேன்னு நினைப்பேன். சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். ரொம்ப ஏழ்மையான குடும்பம். பத்தாவது முடிச்சதும், வேலைக்குப்  போக வேண்டிய சூழல். மேஸ்திரி வேலை. துணி விற்கிறதுனு சில வேலைகள் செஞ்சேன். அப்பதான் துணிகளை அயர்ன் பண்ணும் சிலரை சந்திச்சேன்.

அயர்ன் தொழிலில், ஒரு நாளைக்குக் குறைந்தது 1000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்னு சொன்னாங்க. வழிப்போக்கனுக்கு எங்க ஒதுங்க இடம் கிடைச்சாலும் ஒதுங்குற மாதிரி ... நானும் இனி இதுதான் நம்ம வேலைன்னு ஒரு லாண்டரி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துட்டேன். 50 துணிகளைக் கொடுத்தாலும் சும்மா சட்டு சட்டுன்னு பக்காவா அயர்ன் செஞ்சுடுவேன். கம்பெனியில் குட்பாய்னு பேர் வாங்கினேன்.

எனக்கு தெரிஞ்சது அயர்ன். அதுல ஏதாவது ஒரு சாதனை செய்தால் எல்லோரும் திரும்பிப் பார்ப்பாங்க என்பதால் அயர்ன் செய்த சாதனையாளர்கள் லிஸ்ட்டை தேடினேன். லயன்ஸ் கிளப் உறுப்பினர், முரளி  என்பவர் கின்னஸ் சாதனை செய்ய வழிகாட்டினார். அவரிடம் சாதனையாளர்கள் லிஸ்ட் கொடுத்தேன். முதன் முதலில் 1999இல் சுவிட்சர்லாந்துக்காரர் 40 மணி நேரம் தொடர்ந்து அயர்ன் பண்ணினார். 2015ஆம் வருடம் இங்கிலாந்து நாட்டுக்காரர் றூழிreமிஜு றீழிஐderவி தொடர்ந்து 100 மணி நேரம் அயர்ன் செய்து 2000 துணிகளை அயர்ன் பண்ணினார். “அப்போ நீங்க இதையும் தாண்டி அயர்ன் பண்ணனும்னு” முரளி சார் சொன்னார். அவர் சில டெஸ்ட்கள் வச்சார். மூனுநாள் ஒரே இடத்துல உட்கார வச்சு அங்கேயே இருக்கேன்னு கேமரா வைச்சு டெஸ்ட் பண்ணினாங்க. மனசு முழுக்க கின்னஸ் வெறி இருக்கும் போது தூக்கம் எப்படி எட்டிப் பார்க்கும்?

கனவு நனவாகும் தருணம் கைகூடி வந்தது. 26 மணி நேரம் 30 நிமிடத்துலேயே 2,000 துணிகளை அயர்ன் பண்ணி முதல் சாதனை பண்ணிட்டேன். தொடர்ந்து மூன்று நாட்கள் என்னை உற்சாகம் செய்யும் விதமா இழுக்க ஆரம்பிச்சுடுச்சு. அசரலை. 90 மணி நேரமும் நெருங்கிட்டேன். எங்கே இருக்கேன்கிற உணர்வே இல்லை. அடுத்த 10 மணி நேரமும் கையில அயர்ன் பாக்ஸ் இருந்தது. ஆனா, ஒரு ரோபோ மாதிரி அயர்ன் பண்ணிட்டே இருந்தேன். முன்னாடி செஞ்ச சாதனையை முறியடிக்கும் விதமா 100 மணி நேரத்தைத் தாண்டிட்டேன். ஆனாலும் கூடுதலாக 2 மணி நேரம் அயர்ன் பண்ணச் சொன்னாங்க. கடைசி 26 நிமிடம் சுத்தமா முடியல. பசங்க என் மேல் தண்ணிய ஊத்தினாங்க. எப்படியோ நினைவு வந்து சரியாக 102 மணி நேரம் 30 நிமிடம் 7,104 துணிகளை அயர்ன் பண்ணி கின்னஸ் சாதனை பண்ணிட்டேன். வேகமாக அயர்ன் செய்தது. அதிக நேரம் அயர்ன் செய்தது என இரண்டு சாதனைகள். ஒரு தோத்தாங்குளிக்கு முதன் முதலில் வெற்றிப் பட்டம் கிடைச்சது. அங்க இருந்தவங்க என்னை தூக்கிக் கொண்டாடினாங்க. நிற்க கூட முடியாம கீழே விழும்போதுதான் தோனுச்சு, வாழ்க்கையில் வெற்றி எவ்வளவு முக்கியம்னு”. வெற்றி களிப்பில் கண் கலங்கியபடியே கைகுலுக்குகிறார் டேனியல்.

அன்பு குழந்தைகளே! பண்பான இளைஞர், இளம்பெண்களே! அருமை பெற்றோர்களே! பாசமுள்ள வாசகர்களே! உங்களைப் பார்த்து பலர் “நீங்கள் தோத்தாங்குளிகள், ஒன்றுக்கும் உதாவாதவர்கள், ஒன்றும் தெரியாதவர்கள், திறமையற்றவர்கள், தேவையற்றவர்கள், சாதிக்க முடியாதவர்கள், பயனற்றவர்கள், வாழத்தெரியாதவர்கள்” என்று பட்டியல் இடும்போது இதயத்தில் வெற்றி நெருப்பை பற்ற வைத்து வாழ்க்கை ஓட்டத்தில் சாதனையை கைவசப்படுத்தி கின்னஸில் இடம் பிடித்த அயர்ன் மேன் டேனியலை சற்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் சாதனைகள் புரிந்து வெற்றியாளராக ஜொலிக்கலாம். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! புதிய ஆண்டு வெற்றியின் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

“நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில்  ஏறு”

No comments:

Post a Comment

Ads Inside Post