Pages - Menu

Monday, 4 December 2017

தேம்பாவணியில் இயேசு பிறப்பு

தேம்பாவணியில்  இயேசு  பிறப்பு

 பேராசிரியர் முனைவர் ச.சாமிமுத்து, திருச்சி

கற்புக்கு அரசராகிய தூய வளனாரும் புண்ணியத்தின் திருவுருவான கன்னிமரியும் இடையறாது வேண்டிய வேண்டுதலைக் கேட்ட இறைவன் இப்பூவுலகில், தாம் ஆதாம் ஏவாளுக்கு வாக்களித்தவாறு மனிதனாகப் பிறக்க விருப்பம் கொண்டார். எனவே வளனாரையும் கன்னி மரியாவையும் திருமணத்தில் ஈடுபடுத்தி, பழுதில்லா வகையில் பாரில் பிறந்து மனுக்குலத்தின் பாவத்தைப் போக்கத் திருவுளம் கொண்டார். ஆகவே, கன்னிமரியிடத்துக் கபிரியேல் தேவ தூதரை அனுப்பி தம் திருவுளத் திட்டத்தை எடுத்துரைக்கச் சொன்னார். அத்தேவதூதரும் ஜெருசலேம் தேவாலயத்துள் விரைந்து நுழைந்து, கன்னிமரிக்கு காட்சியளித்து, கடவுள் திருவுளத் திட்டத்தை எடுத்துரைத்தார். அந்நிகழ்ச்சியை வீரமாமுனிவர் தம் தேம்பாவணிக் காப்பியத்தில் இனிய தம் பாடல் மூலம் நமக்கு எடுத்துரைக்கின்றார். அப்பாடல்,

“வான்செய்த சுடர்ஏய்க்கும் வடிவொடு
வானவன் சடுதி வந்தக் கன்னி
கான் செய்த மலர்ப்பதத்தைக் கண்டிறைஞ்சிக்
கடவுள் அருள் கருதுந் தன்மை
தான்செய்த ஏவலெனத் தவறாதோர்
மணத்து அமைதல் தருமம் என்னத் 
தேன்செய்த கனிச்சொல்லால்  சீர்த்தபல
உறுதிகளும் செப்பினானே”   (பாடல் 317)

என்று நம் செவியில் இன்பத்தேன் பாய்ச்சுகின்றது.

கன்னிமரியிடம் சென்ற கபிரியேல் வானவர் வானத்தை அலங்கரிப்பதற்குரிய சூரியனது வடிவைப்போல் விளங்கினார் என்றும் மரியின் மணம் வீசும் தாமரைத் திருவடிகளை வணங்கினார் என்றும் வீரமாமுனிவர் தம் பாடலில் இலக்கியச்சுவை சொட்டச் சொல்லு கிறார். அவ்வாறு சென்ற தேவதூதர், தேனைப் பொழியும் இன்பமான சொற்களினால் இறைவனுடைய கருத்துப்படி நீங்கள் திருமணம் புரிந்து கொள்ள ஒப்ப வேண்டும் என்றார்! மேலும் உறுதி பயக்கும் நல்லுரைகள் பலவற்றை நவின்றார்.

மணம் என்ற வார்த்தையைக் கேட்கும் முன்னே கன்னிமரியாவின் முகம் வாடிற்று! கண்களில் துன்பநீர் குளமாகப் பெருக வழிய ஆரம்பித்தது. கன்னிமரியோ மூன்று வயது  முற்றுப்பெறா முன்னமேயே திருமணம் புரியாது எப்பொழுதும் கன்னியாய் இருந்து இறைவனுக்குப் பணிபுரியத் தம்மையே ஒப்புக் கொடுத்தவர்கள்.  மனம் கலங்கிய கன்னிமரிக்கு அத்தேவதூதர் இறைவனின் திருவுளத் திட்டத்தை உறுதிபட எடுத்துக் கூறவே, மரியும் மனம் தேறி கல்லினும் வலிய தம் கன்னித் தன்மை என்றும் அழியாத அத்திருமணத்திற்கு இசைவளித்தார். உடனே அவ்வானவர், இறைவனுடைய கட்டளையின்மேல், சமயத் தலைவராக இருந்த சிமியோனுக்குக் காட்சியளித்து மரியயன்னும் பெயர்பூண்ட கன்னிக்குரிய துணைவரை மரியின் குலத்திலேயே தேடித் திருமணம் செய்விப்பாயாக என்றார். அவ்வாறே, தாவீது அரச குலத்தினராகிய இளைஞர் வளனாருக்கும் அதே குலத்து இளம் பெண் மரியாவுக்கும் சமய முறைப்படி திருமணம் நிறைவேறிற்று, எருசலேம் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த வியத்தகு இல்லற ‡ துறவற திருமண விழாவிற்கு வந்திருந்த அனைவரும் வழுவிலாக் கன்னிமரியாவையும் பழுதிலா வளனாரையும் பலவாறு புகழ்ந்து வாழ்த்தினார் என்று வீரமாமுனிவர் பாடிப் பரவுகின்றார். அறத்தின் -- வேதத்தின் - செல்வத்தின் வடிவங்களைப் போன்றவர்களே வாழக் கடவீர்! எங்கள் உயிரையும், உலகத்தின் உயிரையும், உயிர்களின் உயிர்களையும் போன்றவர்களே! வாழக் கடவீர் என்று வாழ்த்தியதை, 

“வாழி அறவுரு வாழி மறையுரு
  வாழி திருவுரு மானுவீர்
வாழி எமதுயிர் வாழி உலகுயிர்
வாழி உயிருயிர் போலுவீர்”

 என்று இசைக்கின்றார் வீரமாமுனிவர்.

திருமணம் நிறைவேறிய சில நாட்களுக்குப் பிறகு, சிமியோன் வளனாரை அழைத்து, உமது சொந்த ஊராகிய நாசரேத்திற்குச் செல்வீர் என்றார். இருவரும் இசைந்து இறைவனை வணங்கிப் புறப்பட்டார்கள்.

மரியம்மாள் மற்றைய கன்னி யர்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு, இல்லறத் துறவியாகிய வளனாருடன் நாசரேத்து நோக்கி நடந்தார். அச்சிற்றூருக்குச் சென்றபொழுது அங்கிருந்த அனைவரும் அன்புடன் அத்தெய்வ இணையரை வரவேற்றார்கள். அறம் தழைக்க, உலகமீட்பர் உதிக்க, இல்லறமாகிய நல்லறத்தை அக்கன்னியும் கற்பரசும் தொடங்கினர்!

இருவரும் இளமையிலேயே மேற்கொண்ட துறவற ஒழுக்கத்திற்குப் பழுது நேராவண்ணம் இல்லறத்தில் இணைக்கப்பட்டதால் இறைவனுடைய அருட்செயலை எண்ணி மகிழ்ந்தனர். கன்னிமரியின் கன்னித் தன்மை காப்பாற்றப்பட கற்பரசு காவலாயும், அவரின் கற்புக் காக்கப்பட கன்னியரசி காவலாகவும் அமைந்தார்கள் என்பதை வீரமாமுனிவர் கவின்மிக்க கவிதைகளில் பாடும் திறம் போற்றற்குரியது. துறவறம் மேற்கொண்டு இல்லறம் புரிந்த இருவரும் தூய வாழ்வு வாழ்ந்து வருங்கால், அவர்களின் உள்ளங்கள் பளிங்கிபோல் ஒளிர்ந்தன!. பொங்கி வழிந்த பேரார்வத்தால் வளனார் பலவாறு தந்தையாம் கடவுளை வணங்கி வாழ்த்திப் போற்றியதை,

“அறக்கடல் நீயே, அருட்கடல் நீயே,
அருங்கரு ணாகரன் நீயே,
திறக்கடல் நீயே, திருக்கடல் நீயே,
திருந்துளம் ஒளிபட ஞானம்
நிறக்கடல் நீயே, நிகர்கடந் துலகில்
நிலையும் நீ உயிரும் நீ, நிலை நான்
பெறக்கடல் நீயே, தாயும் நீ எனக்கு
பிதாவும் நீ யனைத்தும் நீ யன்றோ!”

என்னும் கன்னல் சுவைப்பாடலில் கவிஞர் பாடி இன்புறுகின்றார்.

இறைதிட்டம் ஈடேறும் நாள் நெருங்கிற்று. கன்னி மரியின் திருவயிற்றில் மீட்பர் கர்ப்பமாக உருப் பெற விரும்பி, அச்செய்தியைக் கன்னிமரியிடம் தெரிவிக்க கபிரியேல் தூதரை அனுப்பினார். வான் தூதரும் மாசில்லா மரியாவை அணுகி, தேவ வரங்கள் நிரம்ப பெற்றவர் என்றும் இறைவன் வாழும் எழில்மிக்க உளத்தை உடையவர் என்றும் பூவுலக மகளிர்களிலெல்லாம் அளவில்லாத இறையருளைப் பெற்றவர் என்றும் தேம்பாத் தெய்வீக அழகு பெற்றவர் என்றும் இன்னுரைகளால் அவரை வாழ்த்தினார். தேவதூதரின் புகழ்மொழிகளைக் கேட்ட பிதாமகள் நாணமுற்று சித்திரப்பாவை போல் தாழ்ச்சியுடன் இருந்த மாட்சி குறித்து வீரமாமுனிவர்

“தனக்கள வகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த
மனக்கள வுளைந்து நாணி வரைந்த ஓவியமே யயாத்தாள்”

என்று பாடுகின்றார்.

தேவதூதர் மீண்டும் எக்காலத்தும் கன்னித் தன்மை கெடாது விளங்கும் மாதே! இவ்வுலகத்தில் உள்ள பொதுவான முறையினின்று மாறுபட்டு, வியப்புற்குரிய வழியில் இறையருளால் ஒப்பற்ற ஒரு கர்ப்பத்தைத் தாங்கி, பொன்னொளியைப் பழிக்க கூடிய உடலழகுபடைத்த ஒரு மகனைப் பெற்றெடுத்து அம்மகனுக்கு இயேசு என்னும் பெயரிடுவாய் என்றார். அதைக் கேட்டு மரியா பெரிதும் மனம் கலங்கி அழியாத கன்னித் தன்மையுள்ள ஒரு பெண் எவ்வாறு ஒரு பிள்ளையைப் பெறுதல் கூடும் என்று ஐயத்துடன் வினவினார். அதனை,

“மய்யலற் றழிவில் கன்னி
மைந்தனைப் பெறுத லேதென்(று)
ஐய்யமுற் றிவள் வினாவ” 

என்று முனிவர் பாடுகின்றார்.

உள்ளத்தைத் தெரிவிக்க வேண்டி, இறைவனுடைய பேராற்றலைத் தேவதூதர்க்கு விளக்கிக் கூறினார். ஒன்றுமில்லாமையிலிருந்து  இவ்வுலகத் தையும், இவ்வுலகில் உள்ள பொருட்களையும் உண்டா க்கிய இறைவனுக்கு இச்செயல் செய்ய முடியாததோ என்றார். மேலும் கன்னியயாருவர் துன்பமில்லாமல் ஒரு மகனைப் பெறுவார் என்று  இசையாசு இறைவாக்கினர் முன்னுரைத்தது உண்மையாகப் போகிறதென்றும், தூய ஆவியாருடைய அருளால் கருவுற்ற இரண்டாம் ஆளாகிய உலக மீட்பரைப் பெற்றெடுப்பாயாக வென்றும் சொல்லி கன்னிமரியைக் கபிரியேல் தேவதூதர் வணங்கினார். 

நாட்கள் மாதங்களாகி நகர்ந்தன. வளனாருக்கு ஏற்பட்ட உள்ளக்கலக்கங்களையயல்லாம் இறைவன் வானதூதர் மூலம் அகற்றவே, வளனாரும் தம் துணைவி இறைவனையே மனிதனாகப் பெற்றெடுக்கும் மேலான  இறையருள் வரத்தை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்து இறைவனின் தாயை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி தாம் ஐயம் கொண்டவர்களாய் அழுது புலம்பினார்! அவருற்ற அளப்பரும் வேதனையைப் பல துன்பச் சுவைமிக்க பாடல்களில் பாடும் வீரமாமுனிவர் அன்னையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி வேண்டியதை, 

“எழுந்திரு அடியை வேண்டினான்.
தொழுந்திரு அடிமிசை மழைக்கண் தூவியே,” 

என்று பக்திச் சுவை  நனி சொட்டப் பாடுகின்றார்.

இறைமகன் பிறப்பதற்கு முன்பு, உரோமைப் பேரரசன் அகஸ்டசு சீசர் என்பவரின் ஆட்சிக் காலத்தில், அரசக் கட்டளை ஏற்றுக் குடிக்கணக்குத் தர நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணாகிய கன்னிமரியும் இறைவனின் வரபலன்களால் நிரம்பப்பெற்ற மாதவ முனிவராகிய வளனாரும் நாசரேத்தூரிலிருந்து பெத்தலேகம் என்னும் தாவீதரசனின் பேரூருக்குப் புறப்பட்டுப் பயணம் போனார்கள்.

இன்ப துன்பங்கள் நிறைந்த இடங்கள் பலவற்றையும் கடந்து, நாசரேத்தைவிட்டுப் புறப்பட்ட ஐந்தாம் நாள் மாலைப் பொழுதில் வளனாரும், கன்னிமரியும் பெத்லேகம் நகர்போய்ச் சேர்ந்தார்கள். இரவில் தங்குவதற்கு அத்தாவீதன் நகரத்தில் இறைவனைத் தம் மாணிக்கத் திருவயிற்றில் தாங்கிச் சுமந்த நம் தாய்க்கு அங்கு இடம் இல்லை! நம் தவமா முனிவராம் வளனாருக்கு அங்கு இடமில்லை. இந்நிலையில், பெத்லேகம் நகர்க்கு வெளியில் இருந்த மாட்டுத் தொழுவம் அமைந்த குகையில் இருவரும் சென்று தங்கினர். அக்குகையில்தான், மார்கழிமாதம் 25 ஆம் நாள் நடுச்சாம வேளையில், மூன்று உலகங்களிலும் தமக்கு ஒப்பு யாரும் இல்லாத, மூன்று காலங்களிலும் அழிவில்லாத கன்னிகை, வல்லமையில் அளவில்லாத மூன்று ஆட்களில் இரண்டாம் ஆளாகிய திருச்சுதனை, மூன்று சுடர்களைப் பார்க்கிலும் மிகுந்து விளங்குமாறு பெற்றெடுத்தார்கள் என்கிறார் வீரமாமுனிவர்.

பேரருள் பிறந்தது! பேய்கள் மறைந்தன! பேரின்பம் பூமியில் பெருக்கெடுத்து ஓடிற்று! தேவதூதர்கள் இசைமுழங்கி, மண்ணில் பிறந்த மாதேவக் கொழுந்தைத் தேவதாயின் கரத்திலிட்டு வணங்கினர். கன்னிமரி அன்னையோ தாம் பெற்றெடுத்த கடவுள் மகனைப் பேரன்போடு அரவணைத்து, முத்தமாரி பொழிந்து வாழ்த்தி வணங்கினார்கள். கற்புக்கரசராகிய தூய வளனாரும் பேரின்பப் பெருக்கில் தேவபாலனின் திருவடிகளை வணங்கினார். மரியன்னை, தேவாதி தேவனைத் தம் செந்தாமரைக் கரங்களிலே தூக்கி அரவணைத்த நேரத்தில் கன்னி அன்னையின் கரங்களையே தேன் துளிர்க்கும் மலர்ப்படுக்கையாகக் கருதி உயிர்களின் தலைவர் உறங்கினார். அப்போது தாளாத ஆசையால் வளனார் தாலாட்டிய காட்சியை வீரமுனிவர் பின்வரும் பாடலால் உணர்த்துகின்றார்.

“களித்த நாளில் அரும்பும்தென் காலே
இனிதீங் கரும்புதியே,
துளித்த நானம் தேனரும்பத்துணர் நாள்
மலர்காள் அரும்புதிரே,
விளித்த நாகு மாங்குயில்காள் விளைதேன் 
பாவை அரும்புதிரே
அளித்த நாதன் நான்கனிய அன்பு
துயிலாத் துயில்கின்றான்.”

இவ்வாறு வளனார் இனிமையாகத் தாலாட்டவும், எல்லாவற்றையும் கேட்டு இன்புற்றார்போல் தேவபாலன் தன் திருவிழி மலர்ந்து அவரைப் பார்க்க, அவரும் எல்லையற்ற இன்பக்கடலில் மூழ்கினாராம்!.

அமைதிக் காண உன்னையே நீ கண்டுக்கொள்.

அமைதிக் காண உன்னையே நீ கண்டுக்கொள்.

ஒரு முனிவரிடம் ஒருவர் சென்று ‘அமைதிக் காண என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அந்த முனிவர்,‘ மூன்று மலைகளைத் தாண்டி மலை உச்சியில் ஒரு கோவில் இருக்கிறது. அக்கோவிலில் ஒரு புத்தகம் இருக்கிறது. அப்புத்தகத்தைப்  படித்தால் அமைதியின் வழித் தெரியும்’ என்றார். அவரும் மூன்று மலைகளத் தாண்டி மலை உச்சியிலிருந்த  கோவிலுக்குச் சென்று, அங்கிருந்த புத்தகத்தையும் கண்டுபிடித்தார். புத்தகத்தைத் திறந்து பார்த்தால் எல்லா பக்கங்களும் முகம் பார்க்கும் கண்ணாடி. அதில் அவரின் முகம்தான் தெரிந்தது. கோபத்துடன் முனிவரிடம் திரும்பி வந்தார்.  ‘என்ன முகம் பார்க்கும் கண்ணாடிகள் உள்ள  புத்தகத்தை  பார்க்கவா அனுப்பி வைத்தீர்கள்?  என்றான். ‘உன்னையே நீ அறிந்துக்கொண்டால் அமைதியைக் காண்பாய் என்பதுதான் உன் பயணத்தின் பொருள்’ என்றார் முனிவர்.

காப்பாற்றும் கடவுள்

காப்பாற்றும் கடவுள்

முனிவர். ஓர் அரசன் வேட்டைக்குச் சென்றான். அப்போது ஒரு பெண்ணின் போராடும்  அழுகுரல் கேட்டது. அரசன் அங்கு ஓடினான். நான்கு முரடர்கள் அவளை கற்கழிக்க முயன்றுக் கொண்டிருந்தனர். அரசன் அவர்களை விரட்டியடித்து அப்பெண்ணைக் காப்பாற்றினான். பிறகு அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்து அழகிய ஆபரணங்களை உடுத்தினான். இப்போது அவள் மிக அழகாகத் தோன்றினாள். அரசருக்கே அவள் மீது கவர்ச்சி ஏற்பட்டுவிட்டது.  எனவே அரசன்‘நான் உன்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்றான். அதற்கு அவள் நான் ‘ஏன்  உங்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்’ என்றாள். ஆச்சரிய ப்பட்ட அரசன் ‘நான் விரும்புகிறேன் என்பதால் என்னைத் திருமணம் செய்துக்கொள்ள வேண்டாம். நான் உன்னைக் காப்பாற்றினேன் என்பற்காவது என்னைத் திருமணம் செய்துக்கொள்’ என்றான் அரசன். இறைவன் நம்மை பாவங்களி லிருந்து மன்னித்துக் காப்பாற்றுகிறவர்

புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர்  உலகம்  செய்வோம்

நல்லை இ. ஆனந்தன், வேதியர்

சென்ற மாதம் அன்பியக் கூட்டம் நடத்த ஒரு வீட்டிற்குச் சென்றேன். ஏற்கனவே அன்பிய ஆட்கள் வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வீட்டின் தலைவரும் தலைவியும் வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களின் ஒரே மகன் எழுந்து வெளியே கிளம்பினான். ‘தம்பி, அன்பியக் கூட்டம் துவங்கலாம். உட்காருங்கள்’ என்றேன். அதற்கு அவன் சொன்னது, ‘ஐ டோன்ட் லைக் அன்பியம்’.

அவனது அம்மா அவனுக்கு அன்பியம்னா பிடிக்காது என்று அதை தமிழில் மொழி பெயர்த்தார்கள். ஞாயிறு திருப்பலிக்கு, மறைக்கல்விக்கோ அவன் வருவதில்லை. எட்டாவது படிக்கிறான். வற்புறுத்த தயக்கமாயிருக்கிறது. கண்டிக்கவும் பயமாயிருக்கு. எங்களையே சில சமயம் மிரட்டுகிறான். ஏதாவது செய்து விடுவானோ என்று பயப்படுகிறோம். சில மாதங்களுக்கு முன் ஒர் ஆசிரியருடைய மகன் செல்போன் வாங்கித் தரலைன்னு தூக்குப் போட்டுக் கொண்டது உங்களுக்குத் தெரியுமல்லவா. எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. அவனை எப்படி கோவிலுக்குக் கூட்டி வருவது என்பதும் புரியவில்லை.

இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள், திருச்சபை எண்:41 / 5 இல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது.   ‘கிறிஸ்தவத் தம்பதிகளும், பெற்றோர்களும், தங்களுக்குரிய பாதையில் வழி நடந்து, உண்மையான அன்பினால், தங்கள் வாழ்நாள் முழுவதும், ஒருவரையயாருவர் அருளிலே ஆதரிக்க வேண்டும். இறைவனிடமிருந்து அன்புடன் பெற்றுக் கொண்ட தங்கள் குழந்தைகளுக்குக் கிறிஸ்துவ படிப்பினைகளையும், நற்செய்தியின் நற்பண்புகளையும்  ஊட்ட வேண்டும். ஏனெனில்  இவ்வாறு செய்வதால் அவர்கள் மனிதர் அனைவருக்கும் தளர்வற்ற,  தாராள அன்பின் மாதிரிகளாகத் திகழ்கின்றனர். சகோதர அன்பை வளர்ச்சியுறச் செய்கின்றனர். திருச்சபைத் தாயின் வளமைக்குச் சாட்சிகளாகவும், அவர்களோடு ஒத்துழைப்பவர்களாகவும் அமைகின்றனர்.’

பங்குத் தந்தை ஒருவர் வருத்தத்தோடு கூறியது,  ‘எனது பங்கில் நாலாயிரம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஞாயிறு திருப்பலிக்கு வருவது 200 பேர் மட்டுமே. நாள்தோறும் திருப்பலிக்கு வருவது ஐம்பதுபேர் கூட இருக்காது. தேர்த்திருவிழாவில் மட்டுமே ஆலயம் நிரம்பும். மற்ற நாட்களில் ஆலயத்தில் பாதி இடம் காலியாகத் தான் இருக்கும்.’

அருட்சகோதரி ஒருவர் ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டது,  ‘ஞாயிறு மறைக்கல்விக்கு பிள்ளைகள் வருவதேயில்லை. திருப்பலிக்கு முன் ஞாயிறு  மறைக்கல்வி வகுப்பு நடத்தியபோது தாமதமாகக் கடைசி நேரத்தில் வந்தார்கள். திருப்பலிக்குப் பின் வகுப்பை மாற்றியபோது பலர் நன்மை வாங்கியதுமே ஓடிப்போவார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.’ஏன் இந்த மாற்றம்? எப்படி பக்தியில் இந்த தளர்ச்சி ஏற்பட்டது? யாரால் இப்படி மாறியது? மறுமலர்ச்சிக்கு என்ன செய்வது? எங்கிருந்து தொடங்குவது? இப்படியே நடக்கட்டும் என்று விட்டுவிடக் கூடுமா? அல்லது ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சிக்க வேண்டாமா?

நாட்டையும், வீட்டையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கிற, விபரீத விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிற சில காரியங்களைப் பற்றி கடந்த மாதங்களில் சிந்தித்தோம். ஆனால், ஆன்மீக தளர்ச்சி, பக்தியில் வறட்சி என்ற நிலை உலகளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகிறது. 

  ‘ஒளியான  அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை’ (யோவா 1: 11) என்ற நற்செய்தி வசனம் இப்போதும் தொடர்ந்து நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

அயல்நாட்டில், யாருமே வராத ஓர் ஆலயத்தின் பொருட்களை, விற்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த சிலமணி நேரங்களில் அனைத்துப் பொருட்களும் விற்றுப் போய்விட்டன. இதைக் கூறிய குருவானவர் ஒருவர், அவர்கள் பொருட்களை மட்டுமல்ல ஆண்டவரையே ஆலயத்தை விட்டு வெளியேற்றி விட்டனர். சிக்கியிருந்தால் அவரையும் விற்றிருப்பார்கள் என்று வருந்தினார்.

இது கத்தோலிக்க மதத்தில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து மதங்களிலுமே இந்த ஆன்மீக வறட்சியும், பக்தியில் ஒரு தளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறார்கள்.

‘தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சியடை மாட்டார்கள். ஞானத்தின் பொருட்டு விழிப்பாய் இருப்போர் கவலையிலிருந்து விரைவில் விலகுவர் என்கிறது விவிலியம் (சாஞா 6: 12-16)

‘கடவுள் மேல் எனக்கு வெறுப்பு இல்லை. ஆனால் கடவுள் எனக்கு இப்போது தேவை இல்லை என்ற சித்தாந்தம் எல்லார் மனதிலும் அரும்பிக் கொண்டிருக்கிறதாகத் தெரிகிறது.

‘சீசருக்குரியதை சீசருக்கும் கடவுளுக் குரியதை கடவுளுக்கும் கொடுங்கள்’ என்றார் இயேசு. அரசுக்குரியதைக் கவனமாகக் கொடுத்துவிட்டு, ஆண்டவருக்குரியதை ஆண்டவருக்கு கொடுக்க தயங்கும், மறுக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவரும், வாழ்வில் அதற்கான கணக்கை கடவுளுக்கு கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.

ஆன்மீகத் தளர்ச்சிக்கு, பக்தியின் வறட்சி நிலைக்கு காரணங்களைப் பட்டியலிட ஆசைதான். ஆனால் கட்டுரை நீண்டு விடும் என்று கவலையாய் இருக்கிறது. ‘குறைகளைச் சொல்வதால் உறவு சிதைகிறது. நிறைகளைச் சொல்வதால் அன்பும் உறவும் வளர்கிறது’ என்ற முதுமொழிக்கு ஏற்ப இக்கட்டுரையில் அதை தவிர்த்து விடுகிறேன்.

எனவே உலக அளவில் பேராபத்தை ஏற்படுத்தப் போகிற இந்த ஆன்மீக வறட்சியைப் போக்கி, பக்தி வளம் பெருக நான் என்ன செய்ய  முடியும் என்று ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய அவசரமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

குருக்களும், துறவியரும் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்கள். அவரால் அபிசேகம் செய்யப்பட்டவர்கள். நற்செய்தி அறிவிப்பதே அவர்களின் முதன்மையான பணியாகும். சில விதிவிலக்குகளை விட்டுத் தள்ளிவிட்டுப் பார்த்தால் அவர்களின் உழைப்பு உன்னதமானது. அழைப்பு அற்புதமானது. திருச்சபையில் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட அவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய காலமாக இது திகழ்கிறது.

பொது நிலையினரும் திருஆட்சி நிலையின ரோடு ஒத்துழைப்பு கொடுத்து, அவர்களின் கடமை களையும் உரிமைகளையும் செயல்படுத்த முன் வருமாறு தாய் திருச்சபை அழைக்கிறது. 

புலருகின்ற புத்தாண்டில், புதியதோர் உலகம் மலர்வதற்கு, உழைக்க முற்படுவோம் என்று கைகூப்பி வேண்டிக்கொண்டு இக்கட்டுரைத் தொடரை நிறைவு செய்கிறேன்.

அனைவருக்கும், அனைத்திற்கும், பெரிய எழுத்துக்களில் நன்றி. கிறிஸ்மஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஒரு தாயின் தியாகப் பயணம் (நடந்த நிகழ்வு)

ஒரு தாயின் தியாகப் பயணம் (நடந்த நிகழ்வு)

- ஆரோக்கியமேரி , கல்லக்குடி.

பல ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பங்கள் பல குழந்தைகளுடன் எதிரொலிக்கும். அத்தகைய பெரிய குடும்பம் ஒன்றில் மூன்று ஆண்பிள்ளைகள், ஐந்து பெண்பிள்ளைகள்.  பெற்றோர்  மூன்று பையன்களுக்கும் நான்கு பெண்களுக்கும் திருமணம் முடித்தார்கள். கடைசி பெண்ணையாவது  படிக்க வைக்கலாம் என்று, அவளை  எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள். அப்பெண்ணுக்கும், பெற்றோருக்கும் அவள் ஓர் அருள்சகோதரி ஆக வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. மற்ற  சகோதர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே இரகசியமாக திருவையாறு மடத்தில் அவரைச் சேர்த்து வைத்து படிக்க வைத்தார்கள். ஆனால் அவளின் மூத்த சகோதரன் ஊர் நாட்டாண்மைக்காரர். தங்கையை கண்டுபிடித்து அழைத்து வந்து அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.

இங்குதான் ஆரம்பமானது,  இந்த பெண்ணின் தியாகப் பயணம். திருமணமானவுடன் முதலில் ஆண் குழந்தைப் பிறந்தது.  அடுத்து பெண் குழந்தை. இந்நேரத்தில்,  வளர்ந்து வந்த ஆண்குழந்தை மூளைக் காய்ச்சலால் இறந்து போக, சோகத்திலும் சோகமாக குடும்பம் நின்றது. அடுத்து கர்ப்பமாகி இரண்டாவது பெண் குழந்தையை ஈன்றாள். இந்நேரத்தில் கணவன் அடுத்து ஆண் குழந்தை வேண்டுமென்று பெரும் வேட்கைக் கொண்டான். ஆண்வாரிசிற்காக அவ்வளவு ஏக்கம். மனைவி கருவுற்றார். ஆண் குழந்தை பிறக்கும் என்று வேண்டுதல் வைத்து செபித்தார்கள். ஆனால் மீண்டும் பெண் குழந்தை. இதைப் பார்த்த கணவன் கவலைகளால்  எப்படி இந்த பெண் குழந்தைகளை வளர்ப்பது?  எப்படி மாப்பிள்ளை கண்டு பிடித்து வாழ்க்கையில் சேர்ப்பது?  என்ற நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இப்போது அந்த  சோகத்தில் விதவைத் தாய் மூன்று குழந்தையுடன் வாழ்க்கையில் போராடினாள். கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தாள். இதற்குமுன் கூலி வேலைக்கு சென்றதில்லை. பல நேரங்களில் பிள்ளைகள் பசியோடு உறங்க சென்று விடுவார்கள். அவர்களை எழுப்பி சோறு ஊட்டி விட்டு மீண்டும் படுக்க வைப்பாள். மூன்று பெண் பிள்ளைகளில் இரண்டு பேருக்கு எப்படியோ  திருமணம் செய்து வைத்து விட்டாள். அப்போது வரதட்சணைக் கொடுமை இப்போது இருப்பது போல் இல்லை. இந்நிலையில் கஷ்டப்பட்டு மூன்றாவது பெண்ணை ஆசிரியை வேலைக்கு படிக்க வைத்து விட்டாள். ஆனால் 12 ஆண்டுகளாக மகளுக்கு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. இந்நேரத்தில் பலவிதமாக பக்தி முயற்சிகளை மேற்கொண்டு மகளுக்கு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டுமென்று மன்றாடினார். விரதம் இருத்தல்,  மண்சோறு சாப்பிடுதல் போன்று மகளுக்காக மன்றாடினாள். அற்புதமாக திருச்சிலுவை சகோதரிகள் வீடு தேடி வந்து அவளின்  மகளை ஆசிரியை வேலைக்கு அழைத்துச் சென்றார்கள். அதிலிருந்து  அந்த தாயின்  சோக வாழ்க்கை  களைந்தது. ஆசிரியையான  மகள்,  திருமணம் செய்து கொள்ளாமல்  தன்  தாய் பட்ட துன்பங்களுக்கு எதிராக எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து பாதுகாத்தாள். தாய் இறந்த பிறகும், தாய், தங்களுக்காகப்பட்ட தியாகங்களை தினமும் நினைந்து நினைந்து உருகிப் போனாள் ஆசிரியையான மகள்.
ஆசைபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா?


பணிவு என்னும் இனிய பாதை, 18. அனைத்தும் இறைவனின் கொடைகளே!

பணிவு என்னும் இனிய பாதை
 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

18. அனைத்தும் இறைவனின் கொடைகளே!

அநேகமாக அனைத்துக் கலாச்சாரங்களிலும் நன்றி விழா இருப்பதை நாம் காணலாம். அதாங்க  நம் பொங்கல் விழா. நம் நாடு வெப்பம் மிகுந்த நாடு. எனவே மழைக்காலம், குளிர்காலம் முடிந்த பிறகு விவசாயம் நன்முறையில் நடைபெற்றதற்காக ஜனவரி மாதத்தில் பொங்கல் விழாவை விமரிசையாகக் கொண்டாடுகிறோம். அமெரிக்கா போன்ற குளிர் மிகுந்த நாடுகளில் குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நன்றிவிழாவை கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் நன்றிவிழா  (
Thanksgiving Day) நவம்பர் மாதத்தில் வரும் 4 வது வியாழக்கிழமை ஆகும். அந்த விழாவை கொண்டாடும் போது அவர்கள் விருந்தில் கட்டாயம் ஓர் உணவு வகை இருக்கும். வான்கோழி இல்லாமல் நன்றி விழா இருக்காது. அதற்கு ஒரு காரணத்தை அவர்கள் சொல்கிறார்கள். அதாவது ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறிய போது அவர்கள் உண்ணுவதற்கு பெரிதும் துணைபுரிந்தது காட்டு வான்கோழிகள் தானாம். எனவே அதற்கு ஒரு நன்றியாக நன்றி விழாவின் போது வான்கோழி கட்டாயம் இடம் பெறுகிறது.

நன்றி விழா உணவை உண்ணுவதற்கு முன்பு வழக்கமாக தொடக்க செபம் (Grace) செய்வது வழக்கம். அந்தக் குடும்பத்தில் அனைவரும் சாப்பிடுவதற்கு முன்பாக ஜான் என்ற 8 வயது சிறுபிள்ளை செபம் செய்ய சொல்லி பெரியவர்கள் சொன்னார்கள். சிறுவனுக்கு திடீரென எதுவும் மனதில் தோன்றவில்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தான். பிறகு சொன்னான். ‘ஆண்டவரே, என்னை இது போன்று ஒரு வான்கோழியாக படைக்காததற்காக உமக்கு நன்றி சொல்கிறேன். அல்லது நானும் இது போன்று இறந்திருப்பேன்’ என்று சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர். இறைவன் நமக்கு வழங்கியுள்ள முதன்மையான கொடை, முக்கியமான கொடை நம் வாழ்க்கை.  வாழ்க்கை என்பது இறைவனின் இனிய அழைப்பு. இன்னொரு விதத்தில் பார்த்தால் வாழ்க்கை என்பது இறைவனின் இலவசக் கொடை. நாம் வாழ்க்கையைக்  கொண்டாடும்போது அதனை பரிசாக வழங்கிய இறைவனையே கொண்டாடுகிறோம். நாம் வாழ்க்கையை  சிறப்பிக்கும்போது அதனை வழங்கிய இறைவனையே பெருமைப்படுத்துகிறோம். நம் வாழ்க்கை  மட்டுமல்ல, மற்றவர்கள் வாழ்க்கையும் இறைவனின் இனிய கொடைகளே! அவற்றை நாம் மதிக்கும் போது அதன் கொடையாளியாகிய இறைவனையே மகிமைப்படுத்துகிறோம். நமக்கு வாழ்க்கையை அளித்து அதனை பலரால், பல விதங்களில் சிறப்பாக்கிய இறைவனை நினைத்துப் பார்த்து அவருக்கு நன்றி சொல்வது நம் கடமையாகும். நன்றி என்னும் ராகம் இல்லாமல் உலகம் என்னும் பாடல் இனிமை பெறாது. நன்றி என்னும் வண்ணம் இல்லாமல் வாழ்க்கை என்னும் ஓவியம் நிறைவு பெறாது.
உங்களின் வாழ்க்கை வரவு செலவு அட்டவணையை (யழியிழிஐஉe றீஜுeeமி) கொஞ்சம் பார்ப்போமா? உங்கள் பிறப்பு தான் உங்களின் தொடக்க இருப்பு. (Balance Sheet) உங்களிடம் வந்து சேருபவை வரவு. உங்களிடம் இருந்து செல்பவை செலவு. உங்கள் இறப்பு இறுதி இருப்பு. உங்கள் நல்லப் பண்புகள் உங்களின் சொத்துக்கள். உங்களின் தீய பழக்க வழக்கங்கள் உங்களின் தேய்மானம். உங்கள் மகிழ்ச்சியே உங்களின் இலாபம். உங்கள் கவலைகளே உங்களின் நஷ்டம். உங்கள் நல் வாழ்வே உங்களின் மூலதனம். உங்கள் பணிவே நீங்கள் பெறுகின்ற வட்டி. உங்கள் ஆணவமே நீங்கள் செலுத்துகின்ற வட்டி. இறுதியில் நினைவில் கொள்ளுங்கள். இறைவனே உங்கள் தணிக்கையாளர் (Auditor).

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு என்பதையும் கவனித்தீர்களா? 15 வயது வரையில் பாராட்டையும், பராமரிப்பையும் அதிகமாக பெறுவீர்கள். 15 வயது முதல் 25 வயது வரை எல்லோருடைய கவனத்தையும் உற்சாகப்படுத்துதலையும் பெறுவீர்கள். 25 வயது முதல் 35 வயது வரை குடும்ப மகிழ்ச்சியையும், குழந்தை மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். 35 வயது முதல் 45 வயது வரை உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த ஆசானாய் சிறந்த தலைவராய்  (Hero)  தெரிவீர்கள். 45 வயது முதல் 60 வயது வரை பொறுப்பின் சிகரமாய், தியாகத்தின் உருவமாய் திகழ்வீர்கள். 60 வயதிற்கு மேல் மீண்டும் குழந்தையாய் ஆனால் சிறந்த மாதிரியாக  (Model) இருப்பீர்கள். எல்லா காலக்கட்டத்திலும் சில கஷ்டங்கள் இருக்கலாம். ஆனால் எல்லா  வயதிலும் பல சிறப்புகளை கொண்டிருப்பீர்கள். முடி கருப்பாக இருந்தால் அதற்கு சில மரியாதைகள் உண்டு. ஆனால் முடி வெள்ளையாகும் போதும் சில மரியாதைகள் உண்டு. தலை வழக்கையாக இருந்தால் வணக்கம் சொல்ல மட்டும்தான் தோன்றும். ஆனால் சில முகங்களுக்கு  தலை வழுக்கையாக இருந்தால் வணங்கி மகிழத் தோன்றும். எல்லா உருவங்களும், எல்லா வயதினரும், எல்லா நிறத்தினரும் சிறப்பு மிக்கவர்களே? நான் இளைஞனாக இருந்த போது கொஞ்சம் கலராக இருப்பேன். ஆனால் ஒல்லியாக இருப்பேன். இப்போது கலர் மங்கி விட்டது. ஆனால் சதை போட்டுவிட்டது. அந்தக் காலத்திலும் எனக்கு அன்பர்கள் இருந்தார்கள். இந்தக் காலத்திலும் எனக்கு அன்பர்கள்  இருக்கிறார்கள்.   

அன்பிற்கினியவர்களே! நாம் வாழ்வை நினைத்துப் பார்த்து மகிழ்வின் பாதையில் எப்போதும்  அதை அமைத்துக்கொள்ள முன் வர வேண்டும். ஒவ்வொரு பகலும் இனிய நாளாக அமைய இயலாது. ஆனால் ஒவ்வொரு நாளிலும் சில இனிய தருணங்களை நாம் ஏற்படுத்தலாம். ஒரு கடைக்கு எழுதுப்பொருட்கள் வாங்குவதற்காக சென்றேன். பேசிக்கொண்டிருக்கும் போது கடைக்காரர் சொன்னார். சார் ஒவ்வொரு நாளும்  சராசரியாக 200 பேர் என் கடைக்கு வருகிறார்கள். ஆனால் சராசரியாக இரண்டு பேராவது எனக்கு எரிச்சலூட்டும்படி நடந்து கொள்கிறார்கள். ஆனால் நான் அதனை பொருட்படுத்துவதில்லை. அந்த 198 பேரை நினைக்காமல்  வெறும் 2 பேரை மனதில் கொள்வது முட்டாள்தனம் என்றார். ஒவ்வொரு நாளும் நாம் பணிவோடு இறைவனுக்கு நன்றி செலுத்தும்போது வாழ்க்கைக் கணக்கில் மகிழ்ச்சி என்னும் சொத்து அதிகமாகும். நாம் தாழ்ச்சியோடு பிறருடைய குறைகளை பெரிதுபடுத்தாமல் இனிய தருணங்களை மனதில் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கைக் கணக்கில் வட்டியோடு நாம் பலன் பெறலாம்.

புனித அன்னை தெரசாவின் படத்தை போட்டு அதன் கீழே இந்த வசனங்கள் இருப்பதை நான் ஓரிரு இடங்களில் பார்த்திருக்கிறேன். ‘வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை’ அந்த வார்த்தைகள் அவருக்கு நூறு சதவீதம் பொருந்தும். நாம் வாழ்க்கை என்னும் கொடையை பயன்படுத்தி இறைவனை மகிமைப்படுத்த புலரும் புத்தாண்டில் உறுதி எடுப்போமா? (தொடரும்)

திருப்பலி விளக்கம், 22. சில சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்

திருப்பலி விளக்கம்

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

22.  சில சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்

முந்திய சிந்தனையில் பொது நற்கருணை மன்றாட்டுகள் நான்கும் தோன்றிய விதம், அவற்றின் அமைப்பு கூறுகள் அவற்றிக்குரித்தான சிறப்பு அம்சங்கள், காணும் சில குறைபாடுகள் பற்றி விளக்கம் கண்டோம்.  இப்பொழுது மற்றும் சில  சிறப்பு,  அதாவது குறிப்பிட்ட காலத்திற்கும், குறிப்பிட்ட நபர்களுக்கும், தேவைகளுக்கும் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ள நற்கருணை மன்றாட்டுகள் பற்றிய விளக்கம் காண்போம்.

பின்புலம்:

மூன்று புதிய நற்கருணை மன்றாட்டுகளை உருவாக்கி கொடுத்தபின் வேறு நற்கருணை மன்றாட்டுகளை வேறு யாரும் உருவாக்கக் கூடாது என்று திருவழிபாட்டு பேராயம் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி ஒரு சுற்று மடலை அகில உலக ஆயர்களுக்கு அனுப்பியது.  ஆனால் பல ஆயர்களின் பேரவையும், தனிப்பட்ட ஆயர்களும் கேட்டுக் கொண்டதின் பெரில் ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள் இரண்டும், சிறுவர்களுக்கான திருப்பலியில் பயன்படுத்த நற்கருணை மன்றாட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டு திருத்தந்தை ஆறாம் பாலினுடைய ஒப்புதல் பெற்று மூன்று ஆண்டுகளுக்குச் சோதனைக்காக  1974 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 26 ஆம் நாள் வெளியிடப்பட்டன. இவை 1977 ஆம் ஆண்டோடு முடிவடைந்திருக்க வேண்டும். இருந்தாலும் ஆயர்களின் பேரவைகள் பல கேட்டுக்கொண்டதின் பேரில் இவற்றை தொடர்ந்துப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. இவற்றை குறிப்பிட்ட காலத்திற்கும்,  நபர்களுக்குமன்றி மற்றநேரங்களிலும் பொது நற்கருணை மன்றாட்டுகள் போல் விரும்பும் போதெல்லாம் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பிறகு இவற்றைப் பயன்படுத்த கொடுக்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டது. என்றாலும் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த உரோமை திருப்பலி நூலின் மூன்றாவது மாதிரி படிவத்திலும், 2008 ஆம் ஆண்டு வெளி வந்த திருத்தப்பட்ட மறுபதிப்பிலும்  இந்த ஐந்து நற்கருணை மன்றாட்டுகளும் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தேவைகளுக்கென்று புதிதாக  நான்கு  நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இன்று சிறப்பு நற்கருணை மன்றாட்டுகளாக ஒன்பதை  நாம் பெற்றுள்ளோம்.

அ.ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுக்களை ஒப்புரவின் மறைபொருளை நம்பிக்கையாளர்களுக்குச் சிறப்பான விதத்தில் எடுத்துரைக்கப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக மானிடரிடையே நல்லிணக்கத்தை உருவாக்க, ஒப்புரவுக்காக, அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட, போர் கலகம் போன்ற காலங்களில் மன்னிப்புக்காக, அன்பின் வளர்ச்சிக்காக, திருச் சிலுவையின் மறைபொருள், தூய்மைமிகு நற்கருணை,  நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தம் ஆகிய திருப்பலிகளிலும், தவக்காலத் திருப்பலிகளிலும் பயன்படுத்தலாம். இந்த இரு நற்கருணை மன்றாட்டுகளின் அமைப்பும் பண்பு கூறுகளும் பொது நற்கருணை மன்றாட்டுகள் 2,3,4 இல் காணப்படுவது போலவே இருக்கின்றன.

 1. ஒப்புரவு ஒன்று

ஒப்புரவுக்கான முதல்  நற்கருணை மன்றாட்டு கடவுளோடு ஒப்புரவு ஆவதற்கு அழுத்தம் கொடுக்கிறது. நாம் மனந்திரும்பி அவரிடம் வர அழைக்கப்பட்டாலும், அதற்குரிய முயற்சியை எடுப்பவர் கடவுளே. இதற்காக அவர் புனித ஆண்டையும், வருகை, தவக் காலங்களையும் வாய்ப்பாக அமைத்து அளிக்கிறார். இம்மன்றாட்டின் சிறப்பு அம்சமாக பின்வருவதைக் கூறலாம். உடன்படிக்கையின் வழியாக புதியதொரு உறவால் மக்களைத்  தம்மோடு கடவுள் இறுக்கமாக பிணைத்துக் கொள்கிறார். அருள்மிகு காலத்தை வகுத்துக் கொடுத்து மக்கள் தம்மிடம் மனந்திரும்பி வரச் செய்கிறார். இத்தகைய சிறப்புரிமையை நமக்கு மட்டும்  அருளாமல் மாந்தர் அனைவருக்கும் நம் வழியாக அருளுகின்றார்.

நான்காவது நற்கருணை மன்றாட்டில் இருப்பது போல், ஆண்டவர் இயேசு கிறிஸ்து நற்கருணையை நிறுவியதை விவரிக்கும் பகுதிக்கு முன் இந்த நற்கருணை மன்றாட்டும், ஆண்டவர் தம்மை கடவுளுக்குக் கையளித்ததின் வழியாக இறைதந்தையின் அன்பு விளக்கமாகத் தெரியும்படி அமைந்துள்ளது. மேலும் இரசக்கிண்ணம் வசீகரத்துக்கு முன், “அவ்வண்ணமே, சிலுவையில் சிந்தப்படவிருந்த தமது இரத்தத்தால் அனைத்தும் தம்மில் ஒப்புரவாக்கப்படும் என்பதை அறிந்த அவர்” என்ற வார்த்தைகள்  புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதே போல் வசீகரங்களுக்கு அடுத்து வரும் நினைவாக்கத்தில் “எங்கள் பாஸ்காவும் உண்மையான அமைதியுமாகிய உம் திருமகன் இயேசுகிறிஸ்துவை நாங்கள் நினைவுகூர்ந்து” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

 2. ஒப்புரவு இரண்டு

இந்த நற்கருணை மன்றாட்டு மனிதன் தம்மோடு ஒப்புரவாக கடவுள் எடுக்கும் முதல் முயற்சிக்கும் பாவ மன்னிப்புக்கும் இடம் கொடுப்பதோடு மனிதர் ஒருவர் ஒருவரோடு ஒப்புரவு ஆவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.  

“பகைவர்கள் மீண்டும் ஒன்று கூடி வந்து உரையாடவும், எதிரிகள் கைகோர்த்து ஒன்று சேரவும், மக்களினங்கள் ஒருவர் மற்றவரைச் சந்திக்க தேடவும்... தூண்டுகின்றீர்” என தொடக்கவுரையில் வருவது இதை உறுதிப்படுத்துகிறது. இது மத்தேயு நற்செய்தி 6: 14 - 15 இன் அறிவுரையின் அடிப்படையில் அமைந்துள்ளது. 

மனிதர் ஒருவர் மற் றொருவருடன் ஒப்புரவாவது  தூய ஆவியாரின் செயலாகத் தொடக்கவுரையில் காட்டப்பட்டுள்ளது. கடவுள் மக்களைத்  தம்மோடு ஒப்புரவாக்கும் செயல்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் செயல்களால் நிறைவேறுவதாக வர்ணிக்கப்பட்டுள்ளது. 

வசீகரங்களுக்குப் பின்வரும் நினைவாக்கம், தூய ஆவியாரால் வரும் ஒருமைப்பாடு, பரிந்துரை மன்றாட்டுக்கள் அனைத்திலும் ஒப்புரவு பன்முகத்தில் அழுத்தம் பெறுகிறது. தூய ஆவியார் ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்துவதை அகற்றுவதின் வழியாக ஒப்புரவையும், ஒருமைபாட்டையும் செயலாக்கம் செய்கிறார்.

ஆ. சிறுவர் திருப்பலிகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

திருஅவை அன்புள்ள ஓர் அன்னையாகச் செயலாற்றுவதைச் சிறுவர்களுக்கான திருப்பலியில் சிறப்பாக நாம் காணலாம். புகுமுக அருள் அடையாளங்களால் கிறிஸ்தவ வாழ்வில் புகுத்தப்பட்ட சிறுவர் முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவராக மாறுவதற்கு மறைக்கல்வியுடன் வழிபாடு துணைபுரிய வேண்டும். பல்வேறு குழுவினரின் மனநிலைக்கு ஏற்றாற்போல் முறையான  வேறுபாடுகளைப் புகுத்தவும் தழுவி யமைக்கவும் கவனம் செலுத்த வேண்டுமென இரண்டாவது வத்திக்கான் சங்கம் தனது விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது (காண் தி.வ. 38,50)
.     
இதைத் தொடர் ந்து சிறுவர்களுக்கான திருப்பலி வழிகாட்டி என்ற ஆவணத்தைத் திருவழிபாட்டு பேராயத்தால் 1973 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி வெளியிடப்பட்டது. அடுத்து பல ஆயர்கள் பேரவையின் விண்ணப்பத்திற்கேற்ப சிறுவர்களுக்கான திருப்பலியில்  பயன்படுத்த மூன்று நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்டு 1975 இல் வெளியிடப்பட்டன.

1. இம்மன்றாட்டுகளின் நோக்கம்

இம்மன்றாட்டுகள் மிக எளிய நடையில் அமைக்கப்பட்டிருப்பதால், அதில் ஆக்கபூர்வமாக பங்குபெற்று  பயனடையப் பழகிக் கொண்டவர்கள், பிற்காலத்தில் பெரியோர்க்காக கொண்டாடப்படும் திருப்பலியில் பயனுள்ள முறையில் சுலபமாக பங்கு பெறும் தகுதியைப் பெற்றிருப்பார்கள் என்ற எதிர்நோக்கே இவற்றின் நோக்கமாகும்.

 2. இம்மன்றாட்டுகளின் சிறப்பியல்புகள்

சிறுவர்கள் வளர்ச்சியடைந்தபோது பங்கு பெறப்  போகும் திருப்பலியின் அமைப்பு அவர்களுக்கு வினோதமாகத் தோன்றக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சிறுவர்களுக்கான திருப்பலியின் நற்கருணை மன்றாட்டுக்களில் பெரும் மாற்றம் செய்யப்படவில்லை. ஏனெனில் இந்த நற்கருணை மன்றாட்டுகள் இவர்களைப் பொறுத்த மட்டில் தற்காலிகமானவை. எனவே பொது நற்கருணை மன்றாட்டுகளின் அடிப்படை அமைப்பு இவற்றிலும் பாதுக்காப்பட்டுள்ளது. வசீகரத்தில் அப்பத்தின் மீதும், இரசத்தின் மீதும் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதையும், கொண்டா ட்டத்தின் தொடர்ச்சியைத் தெளிவாகச் சிறுவர்களுக்கு எடுத்துரைக்கவும் “இதை என் நினைவாகச் செய்யுங்கள் ” என்ற வார்த்தைகளுக்கு முன், “பின் இயேசு அவர்களிடம் கூறியதாவது” என்ற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. 

நற்கருணை மன்றாட் டுகளின் மொழி எளிய நடையில் உள்ளது. அதனால் சிறுவர்கள் என்ன நடக்கிறது என்பதைச் சுலபமாகப் புரிந்து  கொள்வார்கள். இருந்தாலும் திருப்பலியின் மாண்பு சிதைந்திடா வண்ணம் சிறுப்பிள்ளைத்தனமான மொழியும் வார்த்தைகளும் (Childish Language) தவிர்க்கப்பட்டுள்ளன. 

சிறுவர்கள் செயல்முறையிலும் பொருளுள்ள விதத்திலும் பங்கு பெறும் விதமாக ‘ஆர்ப்பரிப்புகள்’ இந்த நற்கருணை மன்றாட்டுகளில்  அதிகமாக்க ப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நற்கருணை மன்றாட்டும் அதற்குரிய தனிப்பட்ட அமைப்பும் இயல்பும் உடையதாய் இருப்பதாலும், தொடக்கவுரையைக் கொண்டிருப்பதாலும் மற்றொரு தொடக்கவுரையோடு மாற்றிக் கொள்ள முடியாது. 
முதல் நற்கருணை மன்றாட்டில் வசீகரத்தின் இறுதியில் உள்ள நம்பிக்கையாளரின் ஆர்ப்பரிப்பு வழக்கத்தைவிடச் சில வரிகளுக்குப் பிறகு இடம் பெற்றுள்ளது. பயிற்றுவிக்கும் காரணங் களுக்காக  இது இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற  ஆண்டவரின் வார்த்தைகளுக்கும், அருள் பணியாளரால் சொல்லப் படும் நினைவுகூர்தல், அதன் பின்வரும் நினைவு ஆர்ப்பரிப்பு அல்லது மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு ஆகியவற்றிக்கும் இடையே உள்ளத்தொடர்பை சிறுவர் தெளிவாகப் புரிந்து கொள்வர். 

இந்த மன்றாட்டுகளில் நினைவு ஆர்ப் பரிப்பின் இடம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது இது நினைவுகூர்தல் மன்றாட்டுக்குப் பின் (புதுழிதுஐeவிஷ்வி) வருகிறது. “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற ஆண்டவரின் கட்டளைக்கும் அருள்பணியாளர் அதற்கு அடிபணிந்து சொல்லும் நினைவுகூர்தல் மன்றாட்டுக்குமிடையே உள்ள நெருக்கமானத் தொடர்பை சிறுவர் புரிந்துக்கொள்ள இம்மாற்றம் உதவுகிறது. சிறுவர்களுக்கான மூன்று நற்கருணை மன்றாட்டு களுக்குள் ஒவ்வொன்றுக்கும்  ஒரு சில சிறப்பியல்பு உண்டு. அவையாவன:

  முதல் நற்கருணை மன்றாட்டு எளிமையான நடையுடையது. ‘தூயவர்’ பகுதியில் சிறுவரைப் பழக்கப்படுத்தும் பொருட்டு இம்மன்றாட்டு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உன்னதங்களில் ஓசான்னா ஒரு பாடகரால் அல்லது சிறுவரை வழிநடத்தும் ஒருவரால் பாடப்படலாம். அல்லது சொல்லப்படலாம்.

இரண்டாவது நற்கருணை மன்றாட்டு சிறுவர்களின் ஈடுபாட்டிற்கு அதிக வாய்ப்பளித்துள்ளது. இதில் ‘தூயவர்’ பகுதியும் நினைவு ஆர்ப்பரிப்புகளும் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. அப்பத்தின் மீதும் இரசத்தின் மீதும் சொல்லப்படும் ஆண்டவரின் வார்த்தைக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள ஆர்ப்பரிப்புகள் நற்கருணை மறைபொருள் எனும் அடிப்படையில் பாடப்படலாம்.

மூன்றாவது நற்கருணை மன்றாட்டு   பாஸ்கா காலத்திற்குப் புறம்பே பயன்படுத்தத் தனியாகவும், பாஸ்கா காலத்தில் பயன்படுத்தத் தனியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. வசீகரத்திற்குப் பிறகு அதே ஆர்ப்பரிப்பு மூன்று முறையும் நடைபெறுகின்றது. இதனால் முழுமையான மன்றாட்டின் புகழ், நன்றி இவற்றின் இயல்பு சிறுவருக்கு வெளிப்படுத்தப்படும்.

 இ. பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

2002 ஆம் ஆண்டு வெளி வந்த உரோமை திருப்பலி நூலில் மூன்றாம் மாதிரி படிவத்தில் பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள் நான்கு வெளியிடப்பட்டன. அவை 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த திருத்தியமைக்கப்பட்ட உரோமை திருப்பலி நூலிலும் இடம் பெற்றுள்ளன. இவை  தமிழ்த்  திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றையும் நாம் இப்பொழுது பயன்படுத்தலாம்.

1. முதல் நற்கருணை மன்றாட்டு

“இது ஒற்றுமையை நோக்கி பயணிக்கும் திருஅவை” என்ற கருத்து கோள் கொண்டுள்ளது. இந்த நற்கருணை மன்றாட்டைத் திருஅவைக்காக, திருத்தந்தைக்காக, ஆயருக்காக, திருத்தந்தை ஆயர் தேர்வுக்காக, திருச்சங்கம், ஆயர் மாமன்றம் ஆகியவற்றிக்காக, அருள்பணியாளர்களுக்காக, அருள்பணியாளர் தமக்காக, திருஅவையின் பணியாளர் களுக்காக, ஆன்மீக அருள்பணிக் கூடுகை போன்ற வற்றிற்காக ஒப்புக் கொடுக்கப்படும் பலியில் பயன் படுத்தலாம்.

2. இரண்டாவது நற்கருணை மன்றாட்டு

இது “மீட்பின் வழியில் கடவுள் தமது திரு அவையை வழிநடத்துகின்றார்” என்ற கருத்துக்கோளைக் கொண்டுள்ளது. இதை திருஅவைக்காக, திருப்பட்டங்களுக்கான இறை அழைத்தலுக்காக, பொது நிலையினருக்காக, குடும்பங்களுக்காக, துறவுநிலை இறையழைத்தலுக்காக, அன்பின் வளர்ச்சிக்காக, உறவினர், நண்பர்களுக்காக, கடவுளுக்கு நன்றி செலுத்த ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

3. மூன்றாவது நற்கருணை மன்றாட்டு

இது “தந்தையை அடையும் வழி இயேசு” என்ற கருத்துக்கோள் கொண்டுள்ளது. இதை நற்செய்தி அறிவிக்க, நம்பிக்கையை முன்னிட்டு துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, நாடுக்களுக்காக, நாட்டை ஆள்வோருக்காக, புத்தாண்டு நாளில், மக்களின் முன்னேற்றத்துக்காக ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

4. நான்காவது நற்கருணை மன்றாட்டு

இது “நன்மை செய்யும் இயேசு” என்ற கருத்துக்கோள் கொண்டுள்ளது. இதை அகதிகள் மற்றும் நாடு கடத்தப்பட்டோருக்காக, பஞ்சம் பசியால் வாடுவோருக்காக, நம்மை துன்புறுத்துவோர், கைது செய்யப்பட்டோர், சிறையில் இருப்போர், நோயுற்றோர், இறக்கும் நிலையில் இருப்போர் ஆகியோருக்காகவும், நல்மரண அருளுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

இந்த நான்கு நற்கருணை மன்றாட்டுகளுக்கும் தனித்தனி சிறப்பு தொடக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. அர்ச்சிப்புக்குப் பின் வாழ்வோருக்காக சொல்லப்படும் மன்றாட்டு அந்தந்த கருத்துக்கோளுக்கு ஏற்றவாறு வெவ்வேறாக உள்ளது. இவைத்தவிர மற்ற எல்லா மன்றாட்டுகளும் ஒரே மாதிரியானவை.
( முற்றும்)

திருப்பலியைப் பற்றிய ஆழ்ந்த விளக்கங்களை வாசகர்களுக்கு அழகாகத் தந்த அருட்பணி. முனைவர் றீ.அருள்சாமி அவர்களுக்கு அன்னையின் அருட்சுடர் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது. தொடர்ந்து மற்ற திருவருட் சாதனங்களின்  விளக்கங்களைப்  பற்றியும் எழத இசைந்துள்ளார்.

Ads Inside Post