இன்றைய கல்வியின் இலக்கு
- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்
கற்கை நன்றே, கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
எப்பாடு பட்டாவது கல்வி கற்றல்
வேண்டும் என்னும் ஒளவைப்
பாட்டியின் அமுத மொழிகள் இவை.
அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
‘
சமூகத்தில் செய்யப்படும் அனைத்துத் தர்மக் காரியங்களிலும் ஓர் ஏழைக்கு எழுத்தறி வித்தல் மாபெரும் புண்ணிய காரியமாகும். ஏழ்மையினால் ஒரு தமிழன் படிக்க இயலவில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும் என்கின்றார் பாரதி தாசன்.
கல்வி என்பது என்ன?
இவ்வுலகில் ஒருவர் பெறுகின்ற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற் றின் தொகுப்பே கல்வி. ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்புறச் செய்திட வழி வகுக்கின்றது.
கல்விக் களம் காண்போர்:
கல்வி பெறுவோர் யாவர் என்னும் கேள்வி எழுப்புகின்ற போது நமது நினைவுக்கு வருவோர் குழந்தைகளே. நலமான குழந்தைகள் நலமான சமூகம் படைத்திடுவர். இந்தியா போன்ற வளரும் நாடுகளிலேயே உலகின் மொத்தக் குழந்தைகளில் 82 விழுக்காடு உள்ளனர். 18 வயதுக்குட்பட்ட சுமார் 440 கோடி குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர். எனவே தான் 2030 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் கணித்துள்ளது. இவ்வாறு உலகின் இளமையான நாடாக இந்தியா திகழ்கின்றது.
விவிலியம் கூறும் ஞானம்:
கல்வி மூலம் கிடைப்பது ஞானம். ஞானம் ஒளிமிக்கது. மங்காதது. அதன்பால் அன்பு கூறுவோர் அதை எளிதில் கண்டு கொள்வார். அதைத் தேடுவோர் கண்டடைவர் (சாஞா 6:12). ஞானம் என்றுமுள ஒளியின் சுடர். கடவுளது செயல் திறனின் கறைபடியாக் கண்ணாடி. அவருடைய நன்மையின் சாயல் (சாஞா 7:26).
ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும். தன்னைத் தேடுவோர்க்குத் துணை நிற்கும் (சா.ஞா 4:11). மனித ஞானத்தை விட, கடவுளின் மடமை, ஞானம் மிக்கது. மனித வலிமையை விட இறை வலுவின்மை வலிமை மிக்கது (1கொரி 1:25). ஞானத்தின் எண்ணங்கள் கடலினும் பரந்தவை. அதன் அறிவுரைகள் படுகுழியை விட ஆழமானவை (சீரா 24:29). மண்ணுலகு சார்ந்தவை பற்றி மட்டும் போதிப்பது கல்வி அல்ல. விண்ணுலகு சார்ந்தவை பற்றியும் போதிப்பதே கல்வி (யோவா 3: 1-21)
திரு அவையின் போதனைகள், மரபுகள்:
இரண்டாம் வத்திக்கான் பேரவைக்கு முன் திருஅவையில் பெரும்பாலும் குழந்தைகளின் மறைக்கல்வி, திருவருட்சாதனங்களை பெறுவதற் கான முன் தயாரிப்புகள் சாரந்ததாகவே இருந்தது. வத்திக்கான் பேரவையின் 16 ஏடுகளில் பொது நிலையினரின் திருத்தூதுப்பணி. இன்றைய உலகில் திருச்சபை மற்றும் கிறிஸ்தவக் கல்வி போன்ற பகுதிகளில் கல்வி கற்கும் குழந்தைகளின் மாண்பு, மதிப்பு, உரிமைகள், இவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி ஆகிய கருத்துகள் இழையோடுகின்றன.
அ,ஆ,இ,ஈ அணுகு முறை: அது என்ன அ,ஆ,இ,ஈ?
அனுபவம்: அனுபவமே அனைத்துக்கும் அடித்தளம். குழந்தைகள் அனுபவிக்கும் அன்பு, பாசம், ஆற்றல், சாதனைகள், கசப்பான உணர்வுகள், சிக்கல்கள், அநீதிகள், வன்முறைகள் போன்றவை இனம் காணப்படல் வேண்டும்.
ஆய்வு: 60 வயசுக்கு மேலே அப்பா, அம்மா வேலைக்குப் போனா குழந்தைகள் சரியில்லன்னு அர்த்தம். 14 வயசுக்குக் கீழே பிள்ளைகள் வேலைக்கு போனா பெற்றோர் சரியில்லன்னு அர்த்தம். குழந்தைகளின் நல வாழ்வைப் பாதிக்கின்ற அனைத்து அனுபவங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படனும்.
இறையியல்: குழந்தைகளின் வாழ்வு அனுபவங் களின் பின்னணியில் மேற்கொள்ளும் பகுப்பாய்வு இறையியலாக்கம் புரிந்திட உதவிடும்.
ஈடுபாடு: குழந்தைச் செல்வங்களின் உரிமைகள், மாண்புகள் ஆகியவற்றினை ஈடுபாட்டோடு அணுகி இவர்களின் மதிப்புமிக்க கல்வியினுக்கு வழிகாட்டுதல் காலத்தின் கட்டாயமாகும்.
இந்தியக் கல்வி: பண்டைய இந்தியாவில் நாளந்தா பல்கலைக் கழகம் போன்ற கல்விக் கூடங்கள் செயல்பட்டதனை அறிகின்றோம். இவையனைத்தும் வர்ணா சிரம தர்மத்தின் அடிப்படையிலான குருக்குலக் கல்வி முறையில் உருவானவையாகும். அரசிளாங்குமாதர்கள் பெரும் செல்வத்தின் பிள்ளைகளே இங்கு பயின்று வந்தனர். வில், வேல் வித்தை போன்ற ஆயக்கலைகள் பதினாறும் கற்றுக் கொடுக்கப்பட்டன.
கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் நாடு பிடித்த வெள்ளையர்கள் தங்களின் எடுபிடிகளாக வேலை செய்வதற்காக லார்ட் மெக்காலே என்பவரால் கொண்டு வரப்பட்ட குமாஸ்தா வேலை செய்யும் கல்வி முறையே இன்னும் செயல்பட்டு வருகிறது.
விடுதலைக்குப் பின் 1950 ஆம் ஆண்டு 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகளுக்குள் கல்வி அளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அது கானல் நீராகிப் போனது. அதன்பின் சர்வசிக்ஷா அபியான் எனப்படும் ‘அனைவருக்கும் கல்வி’ முறை 1990 முதல் நடைமுறையில் உள்ளது. இம்முறையில் நேர் மறை விளைவுகளை விட எதிர் மறை விளைவுகளே அதிகம் உள்ளது.
தமிழ் வழிக் கல்வியைப் பின் தள்ளும் ஆங்கிலக் கல்வி மோகம்:
தாய் மொழிக் கல்வியே சிறப்பான கல்வி என்று ஆட்சியாளர்கள் பேசினாலும், செயல்பாட்டில் சுயநிதி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையினால் அரசியல்வாதிகளின் கறுப்புப் பணம் அனைத்தும் கல்வி நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. டை கட்டி சீருடையணிந்து, காலுக்கு ஒவ்வாத U அணிந்து தங்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது கண்டும். மம்மி, டாடி என்று ஆங்கில வார்த்தைகள் பேசுவதைக் கேட்டும், புளகாங்கிதம் அடைந்து, பெற்றோர்களின் மாயையயனும் சந்தோத்தில் மிதக்கின்றார்கள். ஆங்கிலமும் தெரியாது. தமிழும் தெரியாது. தமிங்கிளிஷ் பேசுகின்ற இந்தக் குழந்தைகளின் நிலையோ பரிதாபம்.
உண்மையான கல்வி வளர்ச்சி என்ன?
சமீபக் காலமாக 10,12 வகுப்புப் பொதுத் தேர்வு எழுதுவோரின் தேர்ச்சி எண்ணிக்கை பெருகி வருகிறது. மதிப்பெண்களும் அதிகம் பெற்று வருகின்றனர். அரசும் தனது அறிக்கையில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாகப் பீற்றிக் கொள்கிறது. எது பூஜ்ஜியம்? எண்ணிக்கையா? தரமா? Quantity? Quality? என்றால் தரமே முக்கியம்.
அதிக மதிப்பெண்கள் பெற்றோர் அனைவரும் அதிபுத்திசாலிகள் அல்ல. குறைந்த மதிப்பெண்கள் பெற்றோர் அனைவரும் அடி முட்டாள்களும் அல்ல. மதிப்பெண் என்பது ஓர் அளவுகோல். அவ்வளவுதான்.
முழு மனித ஆளுமை வளர்ச்சியை மையமாகக் கொண்டே கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். வாழ்வின் எதார்த்தங்களாகிய வெற்றி, தோல்விகளை திறந்த மனத்தோடு எதிர் கொண்டு சென்று வாழ்க்கையை எளிமையாக, இனிதாக வாழப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். வசதி படைத்தோர்க்கு மட்டுமே உயர்கல்வி. இல்லாதாருக்குக் கல்வி இல்லை என்ற ஏற்றத் தாழ்வு அறவே அகற்றப்படல் வேண்டும். இதுவே இன்றைய நாளின்
கல்வியின் இலக்காகிடல் வேண்டும்.
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிருவாள் அருஞ்சமம் முடுக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
- பொன்முடியார்.