Pages - Menu

Tuesday, 28 March 2017

உயிர்ப்பு ஆன்மீகம்

உயிர்ப்பு ஆன்மீகம்

 இயேசுவின் உயிர்ப்பை ஆன்மீக அனுபவமாகத்தான் நற்செய்திகள் விவரிக்கின்றன. வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் பெண்கள் சந்தித்தது காலியான கல்லறை. பிறகு உயிர்த்த இயேசுவின் காட்சிகளாக இடம் பெறுகின்றன. அன்னை தெரசா கூறுவார்,   “இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தை மறக்கும் போதுதான் வாழ்க்கைத் துன்பங்கள் பாரசுமையாக மாறுகின்றன” என்கிறார். ஆன்ட்ரு முரே என்பவர்  “இயேசுவின் இறப்பு தியாகத்தை மனதில் இருத்தி அனைத்தையும் செய்யும் போது, உயிர்த்த இயேசு நமக்காக அனைத்தையும் செய்வார்” என்கிறார். புதிய வாழ்வு, புதிய திருப்பம், புத்துணர்ச்சி ஆகியவை உயிர்ப்பு  வாழ்வின் மறுபெயர் எனலாம். 
                                      இயேசுவின் உயிர்ப்பை, உணர்வுடன் இணைந்துக் கொண்டாடத்தான் நாற்பது நாள்களின் தவக்காலம். அண்மையில் சில கிராமங்களில் வீடுகளை சந்தித்தேன். அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்  ஒருவருக்கு, அதே  மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர், ஒரு மருந்தினை சோதனை முறையில் கொடுத்திருக்கிறார். அதனால் தோல் வியாதினால் பாதிக்கப்பட்டு  உடல் எரிச்சலுடன் படுத்த படுக்கையாய் இருக்கிறார். அவ்வியாதியிலிருந்து விடுதலை வேண்டுகிறார். மருத்துவரின் செயலால் வாழ்வை கசந்து வாழும்  அவர்,  உயிர்ப்பின்  அனுபவத்தை  எதிர் நோக்கியிருக்கிறார். 

   ஒரு அம்மையாருக்கு ஒரே மகன்  9 வயதில் வீட்டை விட்டு ஓடியவன். இருபத்தெட்டு ஆண்டுகள் ஆகியும் வீட்டிற்கு  வரவில்லை. செல்பேசியில் பேசுவான். நேரடியாக வரவில்லை. பெற்ற மகனை நேரில் பார்க்க தாய் ஆசைமேல் ஆசையாயிருக்கிறார். தனது மகன் நேரில் வரும் உயிர்ப்பு நிகழ்ச்சியை  எதிர் நோக்கி  இருக்கிறார். 
                                       

 துன்பங்களை ஏற்கும்போதுதான் உயிர்ப்பு மலர் அங்கு  மலர்கிறது. இயேசுவின் பிரச்சன்னத்தை ஆழ்ந்து  உணர்வதுதான் உயிர்ப்பின்  அனுபவம். “துன்பங்கள்  என்ற ஒளியின் மூலம்தான் ஞானம் நம்மில் நுழைகியது” என்கிறார் ஓர் அறிஞர்.          உயிர்த்த இயேசுவின் புதுமை அனுபவம் நம் அனைவருக்கும் விடியாலாக கிடைக்க வாழ்த்துகிறேன்.
                                          தமிழகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.  தமிழகம் தன்னை வழிநடத்தும் நல்ல தலைவரை தேடிவருகிறது.  அநீதிகளுக்கு எதிராக  மக்கள் ஒன்றுதிரண்டு துணிவுடன் குரல் கொடுத்து வருவது நம்பிக்கையைத் தருகிறது.  மெரினா போராட்டத்திற்கு பிறகு நெடுவாசல் போராட்டம் தொடர்கிறது.  விழிப்புணர்வு தான் இயேசுவின் உயிர்ப்பின்  கனி.  

                                             சென்ற மார்ச் 11, சனிக்கிழமை, அன்னையின் அருட்சுடர் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர்குழுக் கூட்டம் நடந்தது. 20 பேர் அதில் கலந்துக் கொண்டனர். அன்னையின் அருட்சுடரின் வளர்ச்சிக்கான சில வழிகளை அவர்கள் முன் வைத்தனர்.  தற்போது  
அருட்சுடர் கண்டிருக்கும் வளர்ச்சியினைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். இன்னும் அரசியல், பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் அன்னையின் அருட்சுடரில் இடம் பெறலாம் என்றனர்.  அன்னையின் அருட்சுடர்  பொருளாதார  தன் நிறைவு  பெற சந்தா தொகையை ரூ 130/‡ ஆக உயர்த்தலாம்  என்ற கருத்தையும்  முன் வைத்தனர்.  சந்தா தொகை அனுப்பாதவர்களுக்கு நினைவூட்டல்   அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் காட்டும் ஆதரவிற்கு நன்றி! தொடர்ந்து புதிய வாசகர்களை அறிமுகப்படுத்துவதாலும், விளம்பரங்கள் பெற்று தருவதாலும் உதவலாம். அன்னையின் அருட்சுடரின் பொன்விழாவினை எளிமையாக கொண்டாடவும் திட்டம் தீட்டி வருகிறோம். கவிதை போட்டி, கட்டுரைகள் போட்டிகள் நடத்தவும் திட்டம் உள்ளது. மீண்டும் உயிர்த்த  இயேசுவின் மகிழ்வின் வாழ்த்துகள்....              

No comments:

Post a Comment

Ads Inside Post