திருப்பலி விளக்கம்
14. நற்கருணை வழிபாடு (ii)
- அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானி இல்லம், கும்பகோணம்
அடையாள காணிக்கையும், பொது மன்றாட்டுகளும்
தமிழகத்தில் ஒரு புதிய பழக்கம் உருவாகியுள்ளது. அதாவது சில அடையாள காணிக்கைகளை காணிக்கையாக்கும்போது பொது மன்றாட்டுகளை அதற்கேற்றவாறு மாற்றி செபிப்பது. இது அறியாமையால் ஏற்படும் ஒரு குழப்பத்துக்குரிய செயல். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் பொது மன்றாட்டுகள் அதாவது விசுவாசிகளின் மன்றாட்டுகள் “வார்த்தை வழிபாட்டை” முடித்து வைக்கும் ஒரு செயல். காணிக்கைகளைப் பவனியாகப் பலிபீடத்திற்குக் கொண்டு வருதல் “நற்கருணை வழிபாட்டைச் சார்ந்த ஒரு தொடக்கச் செயல். காணிக்கைகளைத் தயார் செய்வதின் முதல்படியாகும். எனவே , இவற்றை இணைப்பது பொருத்தமற்றது.”
அடுத்து ‘அடையாள காணிக்கை’ என்ற சொற்களைச் சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். பலிபீடத்தில் இயேசுகிறிஸ்து கல்வாரி மலையில் ஒப்புக்கொடுத்த அதே பலி அப்பம்இரசம் என்ற அடையாளங்கள் வழியாக ஒப்புக் கொடுக்கப்படுகிறது என்பதில் உள்ள பொருள் செறிவை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். மேலே காணிக்கையின் இறையியல் சிந்தனையில் சொல்லப்பட்டது போல நாம் கிறிஸ்துவின் சிலுவைப்பலியோடு நம்மை ஒன்றிணைக்க வேண்டுமானால் நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்த மனப்பாங்கை செயலாக்கும் விதத்தில் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவே பயன்படுத்திய அப்பத்தையும், இரசத்தையும் காணிக்கையாக்குகிறோம். அதனால் நமது பலி அடையாளங்கள் வழியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்கிறோம்.
ஆனால் அப்பம்இ-ரசம் தவிர்த்து, நாம் கொண்டுவரும் மற்ற பொருள்களைக் காணிக்கைகளாகக் கொண்டு வரும்போது அவற்றின் நோக்கம் இருவித பயன்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும். ஒன்று திருப்பலியோடு தொடர்புடைய பயன்பாடாக இருக்க வேண்டும்: பீட துகில் வாங்க, மெழுகுவர்த்திகளும், அவற்றைத் தாங்கும் நிலைபேழை (Stands), தூபக் கலசம் போன்றவைகளை வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். அடுத்து உணவுப் பண்டங்கள், உடைகள் போன்றவை ஏழை மக்களுக்கு பகிர்வதற்காக இருக்க வேண்டும்.
இந்த இரண்டுவித பயன்பாடுகளைத் தவிர்த்து அடையாளங்களாக நாம் கொண்டுவரும், உலகம் முழுவதையும் குறித்துக் காட்டும் க்ளோபு (Globe), பேனா, புத்தகம், விவிலிய நூல், மண்வெட்டி, உப்பு, தண்ணீர், காய்ந்த (பட்ட) குச்சி, முள், சர்க்கரை, தேய்ந்து போன மிதியடி போன்றவைகளைக் காணிக்கையாகக் கொண்டு வந்து, அவை குறிக்கும் உண்மை - அதாவது உழைப்பு, அர்ப்பணம், கரைதல், எரிதல், வெறுமை, ஒன்றுமில்லாமை - பற்றி விளக்கங்களை வாசித்துவிட்டு, அவற்றை கொண்டு வந்தவர்களே எடுத்து போவது சரியன்று. இத்தகைய அடையாள காணிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். அடையாளம் என்ற பெயரில் சிறிதும் பொருத்தமே இல்லாத சடங்குகளும் இடம் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக தனது வெறுமையையும், ஒன்றுமில்லாமையையும் குறித்துக்காட்டும் விதமாக ஓர் அருள்சகோதரி பவனியாக வந்து குருவிடம் தமது காலியாக உள்ள இருகரங்களையும் இணைத்து அருள்பணியாளரிடம் விரித்துக் காட்டுவது கேலி கூத்தாகிவிடும். இதனால் யாருக்கு என்ன பயன்?
அப்ப - இரசத்தை ஒப்புக்கொடுத்தல்
அப்ப-இரசத்தைப் பெற்றுக் கொண்ட அருள்பணியாளர் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அதற்குரிய மன்றாட்டோடு இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார் (காண். மேலே). இரசத்தை ஒப்புக்கொடுக்கும்முன் அதனுள் சிறிதளவு தண்ணீர் சேர்க்கப்படுகிறது. இந்த செயல் யூதர்களின் பழக்கத்திலிருந்து வருகிறது. அதாவது யூதர்கள் எப்போதும் இரசத்தோடு சிறிதளவு தண்ணீர் கலந்தே பருகினர். இது கிறிஸ்துவுடன் நாம் ஒன்றாக கலந்து விடுவதைக் குறிக்கிறது என்கிறார் புனித சிப்ரியன். எனவே இன்று இரசத்தோடு தண்ணீரைக் கலக்கும்போது “இந்த தண்ணீர் இரசம் வழியாக நாமும் அவரது இறையியல்பில் பங்கு பெறுவோமாக” என்று செபிக்கிறார் அருள்பணியாளர். இந்த செபம் புனித பவுல், யோவான் ஆகியோர் தரும் போதனைகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதாவது இறைமகன் மனிதஉரு எடுத்து மனிதரானார். அவரை ஏற்றுக் கொள்வோருக்கு கடவுளின் பிள்ளைகளாகும் பேற்றினைத் தந்தார் என்கிறார்கள் (காண். கலா 4 : 6 - 7; உரோ 8 : 15 - 17; யோவா 1 : 12 -14).
பலியை நிகழ்த்தும் அ ருள்பணியாளர் அப்ப - இரசத்தை ஒப்புக்கொடுத்தப்பின், “ஆண்டவரே, தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் கொண்ட எங்களை ஏற்றருளும். ஆண்டவராகிய இறைவனே, நாங்கள் இன்று உமது திருமுன் ஒப்புக்கொடுக்கும் பலி உமக்கு உகந்தது ஆவதாக” என்று தாழ்ந்த குரலில் செபிக்கிறார். ஆனால் இச்செபம் பன்மையில் இருப்பதால் எல்லா மக்களுக்கும் கேட்கும்படி சப்தமாகத் தெளிவான குரலில் சொல்லலாம் என்பது எமது கருத்து. இதை அருள்பணியாளரின் தனி செபம் என்பது சரியானதாகத் தோன்றவில்லை.
அருள்பணியாளர் கைகளைக் கழுவுதல்
கைகழுவுதல், உடல் தூய்மை, ஆசார முழுக்கு ஆகியவற்றை ‘முன்னோர்’ பரம்பரை என யூத மக்கள் கருதினர். (காண். மத் 15 : 1,2,10 ‡ 20) கைகள் தூய்மையாவது போல் உள்ளமும் தூய்மையாக வேண்டும் என்பதைக் குறிக்கும் விதத்தில், ஆண்டவரே, எனது குற்றம் நிங்க என்னை கழுவியருளும்; என் பயத்திலிருந்து என்னைத் தூய்மையாக்கும் என அருள்பணியாளர் சொல்லிக் கொண்டு தமது கைகளைக் கழுவுகிறார். வெளிப்படையாக செய்யும் கைகளைக் கழுவும் செயல் உள்ளத்தூய்மைக்கு அடையாளமாக இருக்கிறது (காண் எபி 10 : 22). இதைத்தான் அப்பொழுது சொல்லப்படும் செபம் உணர்த்துகிறது.
அருள்பணியாளர் தமது கைகளைக் கழுவுவதற்கு வேறு ஒரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. அதாவது பலவித காணிக்கைப் பொருள்களைக் காணிக்கை பவனியின்போது அருள்பணியாளர் பெற்றதால், மாசுபட்ட கைகளின் கறையைப் போக்கவும் கைகள் கழுவப்படுகின்றன என்பது. அப்படியானால் இச்செயல் எப்போது இடம் பெற வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுகிறது. காணிக்கைகளை மக்களிடமிருந்து பெற்றவுடன், அப்ப ‡ இரசத்தை ஒப்புக்கொடுக்கும்முன் இச்செயல் நடந்தால் சரியாக இருக்கும் என்பது எமது கருத்து. மேலே குறிப்பிட்ட உள்ளத்தூய்மையைக் குறிக்கும் அடையாளம் கைகளைக் கழுவுவதில் இருக்கிறது என்ற விளக்கம்கூட காணிக்கைகளைப் பெற்றபின் கைகளைக் கழுவுவதோடு ஒத்துப் போகும் என்பதும் எமது கருத்து.
ஒப்புக்கொடுக்கப்பட்ட அப்ப இரசங்களுக்கு தூபம் காட்டுதல்
பாடல் திருப்பலிகளில் தூபம் பயன்படுத்துவது திருவழிபாட்டின் நீண்ட கால மரபு ஆகும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளிலும், பெருவிழாக்களிலும் பாடல் திருப்பலி நிகழ்த்தலாம். திருப்பலியில் நான்கு முறை தூபம் காட்டப்படுகிறது. முதல்முறை திருப்பலியின் தொடக்கத்தில் பலிபீடத்துக்கு வணக்கம் செலுத்தியபின் அருள்பணியாளர் பலிபீடத்திற்கும், பாடுபட்ட சுரூபமுடைய சிலுவைக்கும் தூபம் காட்டுகிறார். இரண்டாவது முறையாக நற்செய்தி பறைசாற்றும் முன் வாசக நூலுக்குத் தூபம் காட்டப்படுகிறது. அப்ப இரசத்தைக் காணிக்கையாக்கிய பின், காணிக்கைகளுக்கும் பலி பீடத்திற்கும், பாடுபட்ட சிலுவைக்கும், அருள்பணியாளர்களுக்குத் தூபம் காட்டப்படுகிறது. எழுந்தேற்றத்தின்போது கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறிய அப்பம் இரசக்கிண்ணத்திற்குத் தூபம் காட்டப்படுகிறது.
ஆனால் இச்செயலைச் செய்வதில் சில குறைபாடுகளைக் காணமுடிகிறது. பலிபீடம் கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருப்பதால் அதற்குத் தூபம் காட்டப்படுகிறது. ஆனால் பல முறைகளில் பீடத்திற்குத் தூபம் காட்டாமல் பீடத்தைச் சுற்றியுள்ள தரைக்கு (Floor) தூபம் காட்டப்படுவதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் கவனக்குறைவும், பீடத்தை சுற்றியுள்ள மலர் தொட்டிகளும் மெழுகுதிரி நிலை பேழைகளும் (ளீழிஐdயிe றீமிழிஐdவி) மற்றும் பீடத்திற்கு முன் வைக்கப்பட்டிருக்கும் காணிக்கைப் பொருள்களும் ஆகும். இக்குறையைத் தவிர்க்க வேண்டுமானால் அருள்பணியாளர்கள் கிறிஸ்துவை குறித்துக் காட்டுவது பலி பீடம் என்பதை உணரவேண்டும். அடுத்து பீடத்தைச் சுற்றி தூபம் காட்டிக் கொண்டு வரும்போது இடையூர்களாக உள்ளப் பொருள்கள் அகற்றப்பட வேண்டும்.
அடுத்துவரும் முக்கியமான காரியம், எவ்வாறு தூபம் காட்ட வேண்டும் என்பது நற்கருணைக்கும், பாடுபட்ட சுரூபமுடைய சிலுவைக்கும் மூன்று மூன்று வீச்சுகளாக மும்முறை காட்டவேண்டும். அருள்பணியாளர்களுக்கு இரண்டு வீச்சுகளாக மூன்று முறையும், புனிதர்களின் சுரூபத்திற்கும். திருக்குழுமத்திற்கும் ஒருவீச்சாக மூன்று முறையும் காட்டவேண்டும். திருப்பலிக்குத் தலைமைத் தாங்கி சடங்கை நிகழ்த்துபவருக்குத் தனியாக தூபம் காட்டவேண்டும். அதன்பின் அவரது வலது இடது புறம் இருக்கும் அருள்பணியாளர்களுக்குத் தனியாகவும் மற்ற கூட்டுப்பலி அருள்பணியாளர்களுக்குத் தனியாகவும் தூபம் காட்ட வேண்டும்.
காணிக்கை மீது மன்றாட்டு
காணிக்கை மீது மன்றாட்டைச் சொல்லுமுன் அருள்பணியாளர் ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளை, அதாவது அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் திருவுடலாகவும், திருஇரத்தமாகவும் மாற்றிடவும், அது கடவுளுக்கு உகந்தப் பலிபொருளாகவும் செபிக்க நம்பிக்கையாளர்களை பின்வரும் வார்த்தைகளினால் அழைக்கிறார் : “சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம்வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்”.
இதைச் சரியாக புரிந்துக் கொள்ளாமல் உயர் அதிகாரத்தில் இருக்கும் சிலரும், சில அருள்பணியாளர்களும் அன்றைய திருப்பலிக் கருத்துகளையும், வார்த்தைப்பாடு, ஜுபிலி விழாக்கள் கொண்டாடுபவர்களுக்காகவும் செபிக்க அழைக்கிறார்கள். இது தவறு. திருப்பலி அமைப்பின் அறியாமையின் வெளிபாடாகிறது.
இறுதியாக பீடத்தின்மீது காணிக்கையாக்கப்பட்டிருக்கும் பலிபொருளை ஏற்றுக்கொண்டு, கூடி வந்திருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு அருள், ஆசிர் வழங்கும்படி அருள்பணியாளர் செபிக்கிறார். இதோடு காணிக்கைகளை தயாரிக்கும் சடங்கு நிறைவு பெறுகிறது. (தொடரும்)