நான் எழுத்தாளன் ஆனேன்
- திரு. லெயோ ஜோசப்
(திரு. லெயோ ஜோசப் சிறந்த பழம்பெரும் எழுத்தாளர். தற்போது அவருக்கு வயது 84. தனது வாழ்க்கை அனுபவங்களை இங்கு பகிர்ந்துக் கொள்கிறர் இது நான்காவது பகுதி)
சென்னையில் வசித்த என் அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன். சில மாதங்கள் அங்கு தங்கியிருந்தேன். அண்ணன் வீடு அயனாவரத்தில். குமுதம் அலுவலகம் கெல்ஸியில் இருந்தது. அதன் ஒரு பகுதியாகக் கல்கண்டு அலுவலகம் இருந்தது. நான் எப்போது கல்கண்டு அலுவலகத்துக்குப் போனாலும் தமிழ்வாணன் எனக்கு டிபன் வரவழைத்துத் தருவார்.
ஒரு சமயம் தமிழ்வாணனைப் பார்க்கப் போயிருந்தேன். டிபன் வரவழைத்துத் தந்தார். நான் சாப்பிட்டு முடித்த பின் அவர் சொன்னார் : ‘நீ இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.க்குப் பாடமாக இருக்கும் ஆங்கிலத்தில் இருந்து ஒரு கதையை தமிழாக்கம் செய்து கல்கண்டில் எழுதியிருக்கிறாய். ஏராளமான கடிதங்கள் அதுபற்றி வருகின்றன. வருத்தம் தெரிவிக்க வேண்டியுள்ளது. அதனால், 6 மாதத்துக்கு உன் கதையைப் போடமாட்டேன்’ என்றார்.
அதே போல் 6 மாதங்கள் என் கதை கல்கண்டில் வரவே இல்லை. அதன் பிறகுதான் என் கதை வந்தது. நான் எழுதிய கதைகளில் ஒன்று கூட திரும்பி வரவில்லை. எல்லாக் கதைகளையும் போடுவார். ஒரு சமயம் கிறிஸ்தவக் கதை ஒன்றை எழுதி அனுப்பினேன். அதையும் பிரசுரித்தார். சொன்னது போலவே என்னை உற்சாகப்படுத்தியவர் தமிழ்வாணன்தான்.
மீண்டும் திருச்சிக்கு வந்தேன். வழக்கம் போல் கல்கண்டில் கதைகள் எழுதி வந்தேன். ஒரு சமயம் பூஞ்சோலை என்ற குழந்தைகள் பத்திரிக்கைக்கு சிறுகதை ஒன்று எழுதினேன். அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. அவர் என் கதையை அட்டைப் படக் கதையாக வெளியிட்டார்.
அது குறித்து தமிழ்வாணனுக்கு பெருமையோடு ஒரு கடிதம் எழுதினேன். எப்போதும் நான் எழுதும் கடிதங்களுக்கு தமிழ்வாணன், தன் கைப்பட பதில் எழுதுவார். இந்த என் கடிதத்துக்கு தமிழ்வாணன் பதில் எழுதவில்லை. அவருக்குப் பதிலாக அந்த அலுவலகத்தில் பணியாற்றும் திரு. சண்முக சுந்தரம் (பெரிய பையன் என்ற பெயரில் கதைகள் எழுதுவார்) பதில் எழுதினார்.
அன்புள்ள தம்பிக்கு, கல்கண்டுக்கென்று பாரம்பரியம் ஒன்றுண்டு. அது பிற பத்திரிக்கைகளில் கதை எழுதுபவர்களைக் கல்கண்டில் எழுத அனுமதிக்காததுதான். நீ நெடுக வந்து போகும் பத்திரிக்கைகளில் எல்லாம் எழுத விரும்பினால் கல்கண்டில் எழுதுவதை நிறுத்திக் கொள்.
அதன் பிறகு நான் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதினேன். தொடர்ந்து கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாள் கழித்து, கல்கண்டில் அட்டை டு அட்டை தமிழ்வாணனே எழுதத் தொடங்கிய பிறகு நான் எழுதுவதை நிறுத்திக் கொண்டேன்.
இங்கே என் ஆருயிர் நண்பர் கவிஞர். அமலனைப் பற்றிக் கூறி விட வேண்டும். குடத்திலிட்ட விளக்காக இருந்த என்னை, குன்றின் மேல் ஏற்றி வைத்தவர் அவர். அவருக்கு கலைமகள் அலுவலகத்தில் நல்ல செல்வாக்கு இருந்தது. ‘கண்ணன்’ கலைமகளின் துணைப் பத்திரிக்கை. ஆர்வி (ஆர். வெங்கட்ராமன்) என்பவரை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட குழந்தைகள் பத்திரிக்கை அது.
அதில் ஆரம்ப எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம் வந்துக் கொண்டிருந்தது. கவிஞர் அமலன், என்னைப் பற்றிய அறிமுகம் வரச் செய்தார். அதுமுதல் கண்ணனில் நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன்.
No comments:
Post a Comment